ராஜபக்சக்களின் கனவுக்கு கோவிட்-19 ஆப்பு வைக்குமா?
மாயமான்
நாடு அல்லோலகல்லோலப்படும் நிலைமையைப் பார்த்தால் ஆகஸ்ட் பாராளுமன்றத் தேர்தல்கள் பின்போடப்படலாமெனவே தெரிகிறது. இதனால் ராஜபக்சக்களின் மூன்றில் இரண்டு கனவு தகர்க்கப்படுவது மட்டுமல்ல மகாராஜா தரத்துக்கு உயர்த்தப்பட்டிருக்கும் கோதாபயவின் புகழும் சரிவதற்கான வாய்ப்புண்டு.
உலக அரங்கில் கோவிட்-19 நோய்த் தொற்றை வெற்றிகரமாகக் கட்டுக்குள் கொண்டுவந்த நாடென இலங்கையை, உலக சுகாதார நிறுவனம் முதல் சீனா, ரஸ்யா, இந்தியா எல்லாம் புகழ்ந்து தள்ளியிருந்தன. சீனாவைப் பின்பற்றி நோய்த் தொற்றுத் தொடர்பான தனது உண்மையான நிலையை இலங்கை மறைத்துவந்ததுவே இதற்குக் காரணம். ஆனால் கடந்த வாரம் பிரித்தானியாவும், ஐரோப்பிய ஒன்றியமும் தமது ‘அபாயகரமான நாடுகளின்’ பட்டியலிலிருந்து இலங்கையை நீக்காதது முதல், ரஸ்யா அவசரம் அவசரமாகத் தனது விமான ஓட்டங்களை ஆரம்பிக்கிறோம் என அறிவித்தது வரை இலங்கையின் உண்மை முகம் மீதான சந்தேகங்கள் வலுத்திருந்தன.
போதாதற்கு, இலங்கையின் தேசிய பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஜயவர்த்தனபுர பலகலைக்கழகம் தான் இனிமேல் கோவிட்-19 பரிசோதனைகளைச் செய்யப்போவதில்லை என அரசாங்கத்திற்குக் கூறிவிட்டது. அதற்குக் காரணம், அங்கு நடைபெற்ற பரிசோதனைகளின்போது உறுதி செய்யப்பட்ட நோயாளிகளுக்கு, நோய்த் தொற்று இல்லை எனக்கூறி, அரசாங்கத்தின் நோயாளர் எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை என்பதைப் பல்கலைக்கழக்ம் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து அரசாங்கத்தின் கபடம் வெளித்தெரிந்து விட்டது.
தற்போது, இலங்கை மருத்துவர்களின் சங்கமும் இவ்வெண்ணிக்கைகள் தொடர்பாகக் கேள்விகளை எழுப்பி வருகிறது. சுகாதார அமைச்சின் அறிக்கைகளுக்கும், இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வாவின் அறிக்கைகளுக்கும் முரண்பாடுகள் தெரிகின்றன. கண்டக்காடு சிகிச்சை நிலையத்தில் நோய்ப்பரவல் கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருக்கிறது. அங்கு பணிபுரிபவர்கள் பலர் தொற்றுக்குள்ளாகி வருகின்றார்கள். கம்பஹா மாவட்டத்தில் கோவிட்டின் இரண்டாவது வருகை தற்போது தலைகாட்டியுள்ளது.
இதற்கிடையில், PCR எனப்படும் கோவிட் பரிசோதனைகளைப் பரவலாகப் பொதுமக்களிடத்தே அரசாங்கம் செய்யவில்லை என மருத்துவர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளமை, மக்களிடையே அரசாங்கத்தின் மீதான சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. அரசாங்கம் அறிவிக்கும் பரிசோதனைகள் பல ஏற்கெனவே தொற்றுப் பரவியுள்ள கடற்படையினர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்திறங்கியவர்கள் , அரசாங்கம், இராணுவத்தினருக்கு நெருக்கமானவர்களுக்குத் தான் செய்யப்படுகிறது என்றொரு குற்றச்சாட்டும் உணடு.
இந்த நிலையில், கோவிட்-19 பரவல் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது என்பதை அரசாங்கமும் ராணுவமும், அறிவித்து வருவது மக்களிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இதன் ஒரு வெளிப்பாடாக, பொதுமக்கள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு தேர்தலைப் பின்போடும்படி தேர்தல் ஆணையத்தைக் கேட்டுள்ளது.
எதிர்க் கட்சிகளான ஐ.தே.கட்சியும், ஜனபல வேகய கடசியும் தேர்தல்களைப் பின்போடும்படி வலியுறுத்தியுள்ளன. மக்களின் மீதான அக்கறையைவிட தமக்கிடையேயான போட்டிகளால் மக்களின் ஆதரவை இரு தரப்பும் இழந்து வருவதும், தேர்தல் பின்போடப்படுவதன் மூலம் இரண்டு தரப்பும் மீண்டும் ஒன்று சேரக்கூடிய வாய்ப்பு ஏற்படலாமெனவும் சிலர் கருதுகின்றனர். ஐ.தே.கட்சியிலிருந்து சஜித் பக்கம் தாவிய பலர் அதிருப்திக்குள்ளாகியிருப்பதும், சிலர் தேர்தலிலிருந்து பின்வாங்கியிருப்பதும் ரணில் தரப்புக்கு மகிழ்ச்சி தரும் விடயங்கள். எனவே தேர்தல் பின்போடப்படுவது இருவருக்குமே சாதகமாகவிருக்கும்.
கோவிட்-19 உலக மகா சக்திகளையே புரட்டிப்போட்டுக்கொண்டுவரும் இந்த வேளையில், சவூதி அரேபியா, குவைத் போன்ற நாடுகளில் பணிபுரியப்போன பல வறிய குடும்பத்தவர் நாடு திரும்புவதற்குப் பல மாதங்களாக முயன்றுகொண்டிருக்கின்றனர். அவர்கள் வாழும் நாடுகளும் அவர்களைக் கைவிட்டு விட்ட நிலையில் அவர்களது உறவினர்கள் இலங்கை அரசின்மீது கடுமையான விமர்சனத்தை முனவைத்துவருகின்றனர். இப்படியாக முடக்கப்பட்ட பலர் நோய்த் தொற்றுக்குள்ளாகியிருப்பதால் அவர்களை நாட்டுக்குள் கொண்டுவருவதிலும் பல சிக்கல்கள் உள்ளன. இதனால் அவர்களைத் திருப்பி அழைப்பதை அரசு தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
வெளிநாடுகளில் பணிபுரியச் சென்ற பல்லாயிரக் கணக்கானவர்களை அந்நாடுகள் பணிநீக்கம் செய்ததனால் அவர்களும் அவர்களது குடும்பங்களும் மிக மோசமாக வறுமையில் தள்ளப்பட்டுள்ளமை அரசாங்கத்தின் ‘கோவிட் கட்டுப்பாட்டுத்’ தற்பெருமைக்கு பெரும் சவாலைக் கொடுத்து வருகின்றது. ராஜபக்சக்களின் மிகப்பெரிய வாக்குவங்கி இந்த வறிய மக்களிடமே தான் இருக்கிறது.
கிராமப்புற மக்களை மிக மோசமாகப் பாதித்து வரும் இன்னுமொரு விடயம் அடிப்படைப் பொருட்களின் விலையேற்றம். கோவிட்டினால் அதல பாதாளத்துக்கு விழுந்த எரிபொருள் விலையினால் பெற்ற இலாபங்களை வியாபாரிகள் பொதுமக்களோடு பகிர்ந்துகொள்ளவில்லை என்பது இன்னுமொரு விடயம். கமக்காரர்களுக்கு உரங்களின் விலையைக் குறைப்பேன், மலையகத் தொழிலாளிகளுக்கு 1000 ரூ சம்பள அதிகரிப்பை வழங்குவேன் என ஜனாதிபதி கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் ராஜபக்சக்களின் கிராமிய வாக்கு வங்கிகளில் தளம்பல் நிலை ஏற்பட்டுள்ளது.
நகர்ப்புற மக்களில் பலர் மின்சாரம், தண்ணீர் விலைகள் அதிகரிப்பு விடயத்தில் அரசாங்கத்தில் அதிருப்தியைத் தெரிவித்து வர்கின்றனர். ஜனாதிபதி எத்தனை ஊடக அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும் நாட்டின் பொருளாதார நிலையும், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் தமது தேர்தல் வேலகளிலும், கோவிட் கட்டுப்பாட்டு வேலைகளிலும் காலம் கழிப்பதால் காரியங்கள் மிக மந்தமாகவே நடைபெறுகின்றன. அநேகமான அமைச்சுகளும், திணைக்களங்களும் இராணுவ அதிகாரிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் அனுபவஸ்தர்கள் ஒதுக்கப்பட்டுள்ளார்கள்.
இளைய தலைமுறையினர் பெரும்பாலும் சமூக வலைத்தளங்களினூடாக உண்மையான நிலவரத்தை அறிந்துகொண்டுள்ளதால் அரசாங்கத்தின் மீது அவர்களும் அதிருப்தியைக் கொண்டுள்ளார்கள். இலங்கையில் 30% மான வாக்காளர்கள் இளம் தலைமுறையினர் என ஒரு புள்ளிவிபரம் சொல்கிறது.
இதற்கிடையில், அத்துரலிய ரத்தன தேரர் தலைமை தாங்கும் ஜன பல பக்ஷய கட்சி, யாழ்ப்பாணம் உள்ளிட்ட, 18 தேர்தல் மாவட்டங்களில் போட்டியிடுவது ராஜபக்சக்களுக்கு பெருத்த தலையிடியைக் கொடுத்து வரும் ஒரு விடயம். முஸ்லிம்கள் தொடர்பாக அவர் எடுத்துவரும் நிலைப்பாடு மக்களிடத்தில் பலத்த ஆதரவைப் பெற்று வருகிறது. ஜூன் மாதத்தில், நாடு தழுவிய ரீதியில் அவர் மேற்கொண்ட கறுப்புக் கொடிப் போராட்டம் பெருத்த வெற்றிய அளித்திருந்தது. அவரது கட்சிக்காரர் பெருந்தொகையாக வெற்றி பெற்றால், இஸ்ரேலிய அரசாங்கத்தில் தீவிர கடும்போக்காள மதக் கட்சியினர் (orthodox) காட்டுவதைப் போல், அரசாங்கத்தை ஆட்டிப்படைக்கும் பலம் அவர்களுக்கு கிடைக்க வழியுண்டு. இதுவரை இப்படியான் ஒரு நிலைமை தமக்குக் கிடைக்குமென்ற நிலைப்பாட்டில் த.தே.கூ. இருந்துவருகிறது. அத்துரலிய தேரர் கூட்டமைப்பை விடப் பலமாக இருப்பாரானால் கூட்டமைப்பின் கனவும் தகர்க்கப்படும் என்பது இன்னுமொரு விடயம்.
ராஜபக்ச தரப்புக்கு வந்துள்ள இன்னுமொரு தலையிடி கருணா. 2000-3000 இராணுவத்தினரைக் கொன்றோம் எனக் கூறிய கருணாவின் சமீபத்திய பேட்டி தொடர்பாக, அவரைக் கைது செய்யும்படி சிங்களக் கடும்போக்காளர்கள் முதல் ஐ.நா. மனித உரிமைகள் சபை வரை வலியுறுத்தி வருகின்றனர். ராஜபக்ச தரப்பினருக்கு ஆதரவாக கருணா பிரசாரம் செய்து வருவது கடும்போக்காளரை மேலும் அதிருப்திக்குள்ளாக்கி வருவதாகத் தெரிய வருகிறது.
நாட்டின் பொருளாதார நிலைமை மிக மோசமாகப் போய்க்கொண்டிருக்கும் நிலையில், வெளிநாட்டுப் பணியாளர்களினால் கிடைத்து வந்த வருமானம் தடைப்பட்டுள்ள நிலையில், உடனடி நிவாரணத்தை வழங்க முடியாது அரசாங்கம் திண்டாடி வருகிறது. இந்த நிலைமையில், அமெரிக்கா வழங்கவிருந்த (MCC ) 480 மில்லியன் டாலர்களுக்கான ஒப்பந்தத்தில் அரசாங்கம் கையெழுத்து வைக்கக்கூடாதென ஜே.வி.பி. முதல் சீனாவை முன்னணிப்படுத்தும் பல தரப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. அமெரிக்கா பெருந்தன்மையாக அதைத் தேர்தல் முடிந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம் எனக் கூறியிருப்பதும், இது தொடர்பாக அர்சாங்கத்தின் உறுதியான மறுப்பு வராமையும் கடும்போக்காளர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.
கொழும்புத் துறைமுகத்தில் இந்திய / சீன / யப்பானிய போட்டிகளின் மத்தியில் அரசாங்கம் முடிவுகள் எடுக்கமுடியாமல் திணறுகிறது. அப்படியான நிலையில், இந்தியாவில் இந்த வருடம் திறக்கப்படவிருக்கும் புதிய துறைக்கு சர்வதேச கப்பல்கள் பண்டங்களை இறக்கவாரம்பிக்கும். இதனால் நாட்டிற்கு பெரும் வருமானத்தை ஈட்டித் தரும் ஒரு பணப்பசுவை இழக்கும் நிலையும் ஏற்படும்.
இந்த நிலமையில், ஜனாதிபதிக்குள்ள ஒரே வழி, தேர்தலைப் பின்போட்டு கோவிட்டை ஒரளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து வறிய மக்களுக்கு உடனடி நிவாரணத்தை வழங்குவது தான். எதிர்க் கட்சிகள் தமக்குள் உடன்பாடொன்றைச் செய்து அரசாங்கத்தின் பலவீனங்களை வெளிக்கொணர்வது அவர்களுக்குள்ள ஒரே வழி. இவர்கள் இருவரையும் மடக்கி மக்களிடையே ஆப்பு வைத்துப் புதியதொரு சக்தியை உருவாக்குவது கோவிட்-19 இற்குள்ள ஒரே வழி.
-மாயமான்