சிவதாசன்

ராஜபக்சக்களின் அடுத்த வியூகம்…?

சிவதாசன்

ஜனாதிபதி தேர்தலின் வெற்றி கோதபாயவின் வெற்றி என்பதைவிட ராஜபக்சக்கள் மதியூகத்தினதும், அவர்களை இன்னமும் புரிந்துகொள்ளாத எதிரணியின் முட்டாள்த்தனத்தினதும் கலவையின் வெற்றியெனக் கொள்ளலாம்.

ராஜபக்ச சகோதரர்கள் மூவரில், மகிந்த சாமர்த்தியமாக, வசீகரமாகப் பேசும் ஒரு டீல் மேக்கர். பசில் சிறந்த திட்டங்களைத் தீட்ட வல்லவர், ஆனால் மஹிந்தவைப் போலப் பேச்சாற்றல் இல்லாதவர். கோதாபய ஒரு முரடர், கொடுத்த காரியத்தை எந்த வகையிலும் முடித்துவைப்பவர். இலங்கையின் வரலாற்றில் இப்படி ஒரு கூட்டு எப்போதும் இருந்ததில்லை.

இறுதிப் போரின்போது இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா ஒரு தொழில்நேர்த்தியுள்ள இராணுவ வீரர். அவரது தலைமையில் சில குறுக்கு வழிகளைக் கையாளமுடியாத படைத்தளபதிகளது விரக்தியைப் புரிந்துகொண்ட கோதாபய சரத் பொன்சேகாவை ஓரங்கட்டிவிட்டுத் தான் பொறுப்பை ஏற்கிறார். படைத்தளபதிகளுக்கு ‘விருப்பப்படி செய்யுங்கள்’ என்ற அளவுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது. சர்வதேச அழுத்தங்கள் எதையும் சட்டை செய்யாது எத்தனை உயிரழிவு வந்தாலும் போரை முடிக்கும்படி அவர் கட்டளையிட்டதாக ‘நந்திக்கடலுக்கான பாதை’ என்ற நூலில் 53வது பிரிவின் படைத்தளபதி கமல் குணரத்ன கூறுகிறார். அதுதான் கோதாபய. அவரது அத்தகைய குணாம்சத்தின் வெற்றிகரமான அறுவடைதான் தேர்தல் வெற்றி.

மஹிந்த ராஜபக்ச இனிமையாகப் பேசி எவரையும் தன் வலைக்குள் விழுத்தக்கூடியவர். மடக்க முடியாதவர் மீது ஏதாவது வலைகளை வீசி, அல்லது அவர்களை ஏதாவது இலஞ்சம் போன்ற குற்றச் செயல்களில் மாட்டித் தன் பக்கம் இழுத்துக்கொள்ளும் ஒரு அசாதாரண திறமையுள்ளவர். சூழலுக்கேற்பத் தன் நிறத்தை மாற்றிக்கொள்ளும் உயிரினங்களைப் போன்றவர். பிற கட்சிகளையும், கூட்டுக்களையும் உடைத்துத் தகர்க்க வல்லவர். ஒரு தடவை அனுரா பண்டாரநாயக்கா சுகவீனமாக இருந்தபோது அவரது வீட்டிற்கு தன் மகன் நாமலையும் அழைத்துப்போய் சுகம் விசாரித்தது மட்டுமல்லாது ‘சூப்’ வைத்துக் கொடுத்ததாகவும் அது நடந்து சில நாட்களில் அனுரா தன் சகோதரிக்கு எதிராக, மஹிந்தவுக்கு ஆதரவாக அறிக்கை விட்டதும் அப்போது பேசப்பட்ட கதை.

நல்லாட்சி அரசை உடைப்பதற்கும், அவர் பதவி, பண ஆசை மிகுதியான மைத்திரிபால சிறிசேனவைக் கைக்குள் போட்டுக்கொண்டார். அதன் வெளிப்பாடுதான் அக்டோபர் 2018 புரட்சி. தேர்தலுக்கு முன் சிறிசேனவுடன் பல இரகசிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் ஒன்று சர்வதேச பொறிக்குள் அகப்படவிருந்த சவேந்திர சில்வாவின் பதவி உயர்வு. விக்கிரமசிங்கவிற்கும் சிறீசேனவிற்குமிடையிலான பனிப் போர் ராஜபக்சக்களின் திட்டங்களின் வெற்றிகளிலொன்றுதான்.

பசில் ராஜபக்ச வியூகம் வகுப்பதில் சிறந்தவர். சிறிசேனவின் சுதந்திரக்கட்சியில் இருந்து அங்கத்தவர்களைப் பிரித்து புதிய கட்சியை உருவாக்கியதன் சூத்திரதாரியே அவர் தான். அவருக்குப் பதவியை விடப் பணம் தான் குறி. மஹிந்தவின் ஆட்சியில் பல தென்னந்தோட்டங்களுட்படப் பல கோடி சொத்துக்களைத் சேர்த்திருக்கிறார் என்று தகவல்களுண்டு.

ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ச தரப்புக்குப் பணம் பிரச்சினையாக இருக்கவில்லை. சீனாவின் கொள்கை வகுப்பாளர்களும் பின்னணியில் இருந்தார்கள். அதைவிட, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றிபெறுவதற்கு எப்படிச் சமூக ஊடகங்களைப் பாவித்தார்களோ அதன் பின்னணியிலிருந்த கேம்பிறிட்ஜ் அனாலிற்றிக்கா என்ற நிறுவனத்தையும் ராஜபக்ச தரப்பு பாவித்ததாகத் தகவல்கள் கசிந்திருந்தன.

ராஜபக்சக்களின் வாக்கு வங்கி பெரும்பாலும் கிராமிய மக்கள் மத்தியில் இருந்ததனால் அவர்களைக் கையாளும் புத்த பிக்குகளை ராஜபக்சக்கள் உண்மையாகவோ போலியாகவோ ‘கொண்டாடினார்கள்’. பிக்குகள் தினமும் வானொலிகளில் மகாவம்சத்தையும், துட்டகைமுனுவையும், இஸ்லாமிய பயங்கரவாதத்தால் சிங்கள மக்களின் இருப்புக்கு வந்திருக்கும் அச்சுறுத்தல் பற்றியும் ஓதினார்கள். போதாததற்கு வாக்குச் சாவடிகளின் வெளியே நின்று வாக்களிக்க வருபவர்களுக்கு கட்சியின் சின்னமான தாமரை மொட்டுக்களைக் கொடுத்தார்கள். ‘நாணயம் மிக்க’ தேர்தல் ஆணையாளர் இதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை. கைத்தொலைபேசி கொண்டுபோக முடியாது என்பதை மட்டும் மிக இறுக்கமாகக் கடைப்பிடிக்கும்படி அறிவுறுத்தினார். மத-சிறுபான்மையினரால் சிங்கள-பெளத்த இலங்கைக்கு வரவிருக்கும் ஆபத்திலிருந்து பாதுகாக்க வல்ல ஒரே ஒருவர் புலிகளிடமிருந்து தம்மைக் காப்பாற்றிய கோதாபய மட்டுமே என்பதை பிக்குகளின் மூலம் இலகுவாக விற்றது பசில் ராஜபக்சதான்.

இப்படியாக ஜனாதிபதி பதவியைக் கைப்பற்றிய ராஜபக்சக்களின் அடுத்த வியூகம் பாராளுமன்றத்தையும் கைப்பற்றி அரசியலமைப்பை மாற்றி மீண்டும் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி பதவியைத் தமது குடும்பத்தின் அடுத்த தலைமுறைக்குக் கொடுப்பது. அதற்கான திட்டமிடல் இன்னும் மிகவும் திறமையாக வடிவமைக்கப்படுகிறது.

இதைப் புரிந்துகொள்ளச் சமீபத்தில் நடந்துவரும் சில சம்பவங்களைக் கவனிக்கலாம். ஒன்று: சம்பிக்க ரணவக்க மீதான பழைய வழக்கைக் கிண்டி எடுத்தமை.

சம்பிக்க ரணவக்க ஒரு முன்னாள் பொறியியலாளர். மாசு படியாத கரங்களைக் கொண்டவர். அவரது கட்சியான ஜாதிக ஹெல உறுமய ஒரு வகையில் சிங்கள – பெளத்த தேசீய அலைவரிசையில் இயங்கும் கட்சி. கிராமிய மக்கள் மத்தியில் அவர் மிகவும் செல்வாக்குள்ளவர். அதே வேளை படித்த நகர்வாழ் சிங்களவர் மத்தியிலும் செல்வாக்குள்ளவர். அவர் இப்போது ஐ.தே.கட்சியில் இணைந்துவிட்டார்.

ஐ.தே.கட்சியின் தேர்தல் தோல்விக்கான ஆய்வில் கண்டறியப்பட்ட சில விடயங்களில் ஒன்று – அது கிராமிய மக்களுடனும், புத்த பிக்குகளின் மகாசங்கங்களுடனும் நெருங்கிய தொடர்புகளைப் பேணவில்லை என்பது. சாதாரண மொழியில் சொன்னால் ஐ.தே.க. தன் இனவாத சிங்கள-பெளத்த வாக்கு வங்கியுடன் தொடர்புகளைப் பேணவில்லை; இரண்டாவது – முஸ்லிம் தலைவர்களுடன் மிக நெருக்கமாக இருந்தமை (தேர்தல் காலத்தில் சஜித் பிரேமதாசாவைப் பொக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டு திரிந்த முஸ்லிம் தலைவர்கள் பற்றி மனோ கணேசனே ஆதங்கப்பட்டிருந்தார்).

ஐ.தே.கட்சியின் தற்போதுள்ள புடுங்குப்பாடு இன்னும் முற்றிப் போகவே சாத்தியங்களுண்டு என்ற நிலையில் சம்பிக்க ரணவக்க கட்சியைப் பிடித்து மீண்டுமொரு சிங்கள-பெளத்த தேசியக் கட்சியாக மாற்றினால் பொதுஜன பெரமுனவுக்கும், ராஜபக்சக்களுக்கும் அரசியல் களத்தில் ஆபத்து ஏற்படலாம்.

இல்லாவிட்டால், சில வருடங்களுக்கு முன்னர் நடந்த வீதி விபத்தில் சம்பந்தப்பட்டுக் குற்றம் ஏதும் சாட்டப்படாத சம்பிக்க ரணவக்கவின் சாரதியின் மனைவியையும் கைக்குழந்தையையும் மாமியாரையும் அதிகாலை 12 மணிக்குக் கடத்திக்கொண்டு வந்துவிட்டு அவர்கள் தாமாகவே பொலிஸ் வாகனத்தில் ஏறினார்கள் என்று யாராவது சொல்வார்களா?

சம்பிக்க மீது வலை விரிக்கப்பட்டுவிட்டது. அவ்வளவுதான்.

இன்னுமொரு விடயம், ஐ.தே.கட்சி ஊழலுக்குப் பெயர் போனது. மத்திய வங்கி ஊழல் மீதான அறிக்கை தயாராகிப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருந்த தருணத்தில் ஜனாதிபதி ஏன் பாராளுமன்றத்தை ஒத்திவைத்தார்?

பாராளுமன்றத் தேர்தலில் ராஜபக்சக்கள் எதிர்பார்க்கும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் அதை ‘உருவாக்குவதற்குப்’ பல ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர்களை ‘வாங்க வேண்டி’ ஏற்படும். லஞ்ச ஊழலிலும், மோசடி, குற்றமிழைத்தல் போன்ற விடயங்களில் சிக்கியும் – சிக்காமலுமென்று பல ஐ.தே.க. பேர்வழிகள் உலவுகின்றார்கள். அவர்களை இப்போது சட்டத்திற்கு முன் கொண்டுவருவதைவிடப் பாராளுமன்றத்தில் கட்சி தாவ வைப்பது அதிக பலனளிக்கும். ஊழலை ஒழிப்பேன் என்று சூழுரைத்து வந்தவர் ஊழல் பேர்வழிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் பாராளுமன்றத்தைக் கலைத்ததற்கு வேறு என்ன காரணமிருக்கலாம்?

ஐ.தே.கட்சி, தேர்தலுக்கு முன்னரும், இப்போதும் பலவீனமானவர்களின் கட்சிதான். ரணில் அதை ஒரு மேற்குலக நாட்டின் கட்சியாக நினைத்துப் பராமரித்தும் வருகிறார். சஜித் பிரேமதாசவுக்கு கிராமிய மக்களிடமும் ஆதரவில்லை நகர மக்களின் பொலிவும் (sophistication) அவரிடமில்லை. பாராளுமன்றத் தேர்தலுக்கு முன் அக்கட்சி தன்னைச் சரியான இடத்திற்கு நகர்த்திக்கொள்ளுமென்ற நம்பிக்கையில்லை. அதைச் செய்யக்கூடிய ஒருவர் சம்பிக்க ரணவக்க தான்.அதற்கு முன் அவர் ராஜபக்ச விரித்த வலையிலிருந்து தப்பியாக வேண்டும்.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி நிக்சனின் நிர்வாகத்தில் அவரது பேச்சுக்களை எழுதிக் கொடுப்பவர்களில் ஒருவர் பற் புக்கானன். அவர் நிக்சனுக்கு வழங்கிய புத்திமதிகளிலொன்று ‘தேர்தலை வெல்வதற்கு நீங்கள் ஒரு கொள்கை நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். வென்ற பின் எது மக்களுக்குச் சரியானதோ அதையே செய்ய வேண்டும். அது உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றத்தையும் தரலாம்”

அது தான் அரசியல்.