ராக்கெட்றி: நம்பி விளைவு (Rocketry: The Nambi Effect)
திரை விமர்சனம்
மாயமான்
‘அட்டா… என்ன படம், என்ன இயக்கம், எப்படியான வசனங்கள், பாத்திரத் தேர்வு, படத் தொகுப்பு, எல்லாவற்றுக்கும் மேலாக நடிப்பு’. மாதவனிடம் சரக்கு இருக்கிறது என்பதை அவர் தனது வேறு படங்களில் காட்டியிருந்தாலும் இது அவர் இயக்கிய முதல் படம். தனது சொந்தப் படத்தில் தனது இயக்கத்தில் நடிக்கும்போது அவரது கைகளும், கால்களும், வாயும், மொழியும், கண்களும் ஒவ்வொன்றும் தனித்தனியாக நடித்தன. அவருக்குச் சவாலாக இல்லாவிடினும் நம்ம சிம்ரான் கண்ணு, நடுத்தர வயதில் anorexia nervosa வுக்கு மாடல் செய்வது போல வந்து போனாலும் இணைந்து நடித்திருக்கிறார். ஒருவரின் இயல்பில் ஒளிந்திருக்கும் நடிப்பைத் தோண்டி எடுப்பது நடிகர்களின் பொறுப்பல்ல இயக்குனர்களின் பொறுப்பு என்பதை ‘ராக்கெட்றி’ மீண்டும் நிரூபித்திருக்கிறது.
கதை நிஜமானது. இந்தியாவின் மேதைகள், மூளைசாலிகள் அசிங்கமான, குரூரமான பொறாமை, சாதி, இன, மத வெறிகொண்ட நாயகர்களால் எப்படி ஒதுக்கப்படுகிறார்கள் என்ற வழமையான உள்ளொளி பாய்ச்சலின் ஒரு அங்கம். பயோபிக் என்ற தனிமனித வரலாறுகள் திரைகளை அலங்கரிக்கும் இக் காலத்தில் ‘இந்திய தேசியத்தால்’ கட்டி வளர்க்கும் ‘ஆர்.எஸ்.எஸ்’ பிராண்ட் அரசியலும், box office நிரம்பி வழிவதைக் கனவாகக் கொண்ட ‘ரஜினி பிராண்ட்’ அரசியலும் சேர்ந்த கலவையாக ‘றொக்கெட்றி’ வந்து சேர்ந்திருக்கிறது. கமலஹாசனின் ‘விக்ரம்’ படத்தால் மனம் நொந்துபோயிருக்கும் இந்திய ரசிகர்களுக்கு இது நிச்சயம் ஒரு ஒளடதமாகவே இருக்கும்.
தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் தயாரிக்கப்பட்ட இப் படத்தில் விஞ்ஞானி நம்பி நாராயனை பிரபல திரைப்பட நடிகர் ஒருவர் நேர்காணல் செய்வதாகக் கதை சொல்லப்பட்டிருக்கிறது. தமிழில் அந்த நடிகர் சூர்யா. இந்தியிலிலும் ஆங்கிலத்திலும் அது ஷாருக் கான். இந்திப் பதிப்பைப் பார்க்கவில்லை. சூர்யாவைவிட ஷாருக் கான் நன்றாகச் செய்திருக்கிறார் என்கிறார்கள். சூர்யாவுக்குப் பதிலாக கமல் ஹாசன் அல்லது பிரகாஷ் ராஜ் போன்றவர்கள் இப் பாத்திரத்தை நன்றாகச் செய்திருப்பார்கள்.
கதைச் சுருக்கம்
பிரபஞ்ச ஆராய்வில் இந்தியாவின் முன்னோடிகளில் ஒருவரான விஞ்ஞானி நம்பி நாராயன் அதி செயற்திறன் வாய்ந்த எறிகணை இயந்திரமொன்றை (rocket) உருவாக்குவதில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். வானத்தைத் துளைப்பதில் போட்டியில் நிற்கும் இதர வல்லரசுகளையும் மீறி ஒரு தரமான, பின்நாளில் ‘விகாஸ்’ எனப் பெயரிடப்பட்ட திரவ எரிபொருளில் இயங்கும் இயந்திரத்தை உருவாக்குவதற்காக விஞ்ஞானி நம்பி பட்ட பாடு சொல்லி மாளாது. அதற்காக அவர் தேசப் பற்று ஒந்றைத் தவிர அனைத்தையும் இழக்கத் தயாராக இருந்தவர். ஆனால் அவரை ஒரு தேசத்துரோகி ஆக்கி அழித்துவிட ஒரு கும்பல் தீவிரமாக இயங்குகிறது. கதைக்காக அல்லாவிட்டாலும் இக் காரியம் இந்தியாவிலோ நம் நாடுகளிலோ இலகுவாக மேற்கொள்ளப்படக்கூடிய ஒன்று. “ஒரு நாயைக் கொல்லவேண்டுமானால் அது ஒரு வெறிநாய் என்று பொய்யொன்றைச் சொல்லிவிட்டால் போதும்” என்றொரு வசனம் இப்படத்தில் வருகிறது. நம்பி ஒரு தேசத்துரோகி என்ற பொய்யை ஒருவர் அவிழ்த்துவிட அதை விபச்சார ஊடகங்கள் கூவிக் கூவி விற்க அதை வாங்கிக்கொண்டு இந்தியர்கள் நம்பியையும் அவரது குடும்பத்தினரையும், அவரிடமிருந்த அற்ப சொத்துக்களையும் துவம்சம் செய்கிறார்கள். வழக்கம் போலவே சர்வ லோக அசிங்கங்களான காவல் துறையும் இதில் நுழைந்து கொள்கிறது. பிறகென்ன? மீதிய நான் சொன்னால் நீங்களும் கற்களை எடுத்துவிடுவீர்கள். வேண்டாம், படத்தைப் பார்த்துவிட்டு நாலு பேருக்குச் சொல்லுங்கள். இதில் யார் வில்லன் என்பதை இறுதிவரை ஊகிப்பது சிரமமாகவிருக்கும். அதைப் பகிரங்கமாக்க மாதவனோ அல்லது நம்பி நாராயனோ விரும்பவும் மாட்டார்கள்; குறியீடாக மட்டுமே காட்டப்படுகிறது. படத்தைப் பாருங்கள் புரியும்.
மாதவன்
நடிகர் மாதவன் மீது எனக்கு ஒரு காலத்தில் கொஞ்சம் மதிப்பு இருந்தது. ஒரு அயல் வீட்டுத் தம்பி போன்ற உருவம். நிச்சயம் விஜய் அல்லது சேதுபதி ஆகியவர்களைப் போல் கண்டவுடன் கோபம் வரும் தோற்றமில்லை. ஆனால் சில வருடங்களுக்கு முன்னர் மாதவனைக் கனடாவிலுள்ள சில வியாபாரி நண்பர்கள் அழைத்து ஊர்வலம் கொண்டு சென்றார்கள். அப்போது கசிந்த பல தகவல்களால் மாதவன் மீது எனக்கிருந்த மதிப்பு வற்றிப் போய்விட்டது. ‘றொக்கெட்றி’ அதையெல்லாம் தகர்த்து ‘பெடியனிடம் சரக்கு இருக்கிறது’ என்று நிரூபித்திருக்கிறது.
பல தசாப்தங்களைக் கடந்து செல்லும் இக் கதைக்கு ஏற்றவாறு மாதவனின் தோற்றங்கள் நிறைய மாட்றுபடுகின்றன. களிமண்ணில் எப்படியான் பொம்மைகளையும் உருவாக்கலாம் என்பதைப் போல மாதவனின் முகமும் தலையும் ஒரு ‘மேக்கப்’ காரனுக்கு / காரிக்கு கிடைத்த அதிர்ஷ்டம். அவர் வெளிநாட்டில் வாழ்ந்து பெற்ற அனுபவமும் பக்குவமும், வெள்ளைக்காரரைக் கண்டு நெளியாத தன்மையும் (very assertive) படத்துக்கு இயலுமானவரை நிஜத்தன்மையைக் கொடுக்கின்றன. குறிப்பாக அவர் அமெரிக்க பிறின்ஸ்டன் பல்கலைக்கழகப் பேராசிரியருடன் நடந்துகொள்ளும் முறை.
இயக்கம்
மாதவன் கனடாவில் பொறியியல் கல்வியை முடித்தவர் என்கிறார்கள். யாராவது தெரிந்தால் சொல்லுங்கள். அவரது முதல் இயக்கம் இப் படம். இயந்திரம், தொழில்நுட்பம், விஞ்ஞானம் எல்லாவற்றிலும் கைதேர்ந்த ஒருவரினாலேயே இப்படியான பிரமாண்டமான ஒரு படத்தை எடுக்க முடியும். எவ்வளவு தூரத்துக்கு கிராஃபிக்ஸ் இப் படத்தில் விளையாடியிருக்கிறது என்பதை விற்பன்னர்களால் கூட அறிந்துகொள்ள முடியாது. வெளிக்களக் காட்சிகள் நிஜமான இடங்களிலேயே எடுக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (ISRO) ஓரளவு ஒத்துழைத்திருக்கிறது போலத் தெரிகிறது. நிறைய ஆய்வுகளைச் செய்திருக்கிறார். குறிப்பாகப் பாத்திரத் தெரிவில் பேராசிரியர் கொறோக்கா (வின்செண்ட் றியோட்டா) என்பவர் ஒரு இத்தாலிய பூவீகத்தைக் கொண்டவர். அதே போல ஆங்கிலேய தமபதிகளாக நடிப்பவர்களது (றொண் டொனாச்சீ, ஃபிலிஸ் லோகன்) மொழி ஆங்கிலேயரது மொழியாக இருக்கிறது; ரஷ்யர்களின் பாத்திரத்தில் ரஷ்ய மொழிக்கான accent தெரிகிறது. பல காட்சிகள் பிரான்ஸ், அமெரிக்கா, ரஷ்யாவில் படமாக்கபட்டிருப்பது போலத் தெரிகிறது. அனைத்துக் களக் காட்சிகளும் அந்தந்த நாடுகளைப் பிரதிபலிப்பதோடு பாத்திரத் தேர்வுகளும் மிகவும் நேர்த்தியாகச் செய்யப்பட்டிருக்கின்றன. நன்கைந்து தசாப்தங்களுக்கு முன்னைய காட்சிகளை மீள உருவாக்கும்போது அவற்றில் பாவிக்கப்படும் தொலைபேசிகள், வாகனங்கள் ஆடைகள் (fashion) அனைத்தும் அக்காலகட்டத்தைப் பிரதிபலிக்கவேண்டும் என்பதில் மாதவன் அதீத கவனம் எடுத்திருக்கிறார். அவருடையது மட்டுமல்ல பலருடைய சட்டைக் காலர்கள் 1960 களை ஞாபகப்படுத்தியது.
இப்படம் கொஞ்சம் உயரிய விஞ்ஞான / தொழில்நுட்பச் சொற்பிரயோகங்களைக் கொண்டிருந்தாலும் அவைதான் இப்படத்தின் கதையின் உண்மைத்தன்மையை எடுத்துவருகின்றன. வேண்டுமென்றே சொருகப்பட்ட காட்சிகள் என்றோ அல்லது திணிக்கப்பட்ட வசனங்களென்றோ எதுவும் இல்லை. பாகுபலி, RRR போன்ற பிரமாண்டங்கள் ரசிகர்களைப் பிரமைகளால் மயக்கி அழகியலில் முக்கி எடுத்து விடுவதால் படத்தில் இருக்கக்கூடிய ‘தவறுகளை’ ரசிகர்கள் கண்டுகொள்ள சந்தர்ப்பம் கிட்டுவதில்லை. ‘றொக்கெட்றி’, அந்த விடயத்தில் ரசிகர்களுக்கு அறிவூட்டும் விதத்தில் அமைவதாகவும் இருக்கிறது. படத்தைப் பார்க்கும்போது இது இந்தியாவில் தான் எடுக்கப்பட்டதா என்றொரு ஐயம் அடிக்கடி வந்து போனது. உன்னி பாத்திரம் மூலம் ஒரு சோகக் காட்சி புகுத்தப்பட்டது திடீரென்று ரசிகர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவது விதி விலக்கு. ஆனாலும் பின்னர் அப்பாத்திரத்தின் மூலம் இந்திய தேசிய உணர்வைப் பலமடங்கு ஊட்டுவதன் மூலம் அது வெறும் ‘தமிழ்ப்படக் காட்சியில்லை’ என்று மாதவன் நிரூபித்துவிட்டார். மாதவன், சிம்ரான், ராகவேந்திரா (விக்ரம் சாராபாய்) ஆகியவர்களோடு உன்னி பாத்திரத்தில் நடித்த சாம் மோஹனும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக emotions என்று வரும்போது கொஞ்சம் மிகையாக நடிப்பது வழக்கம். இப்படத்தில் பல காட்சிகள் மகிழ்ச்சியானதும், துன்பமானவையும் இருக்கின்றன. எல்லாமே மிகையற்ற நடிப்புடையவை. நகைச்சுவை? சில இடங்களில் வாய்விட்டுச் சிரிக்க முடிகிறது. அனைத்துமே மாதவனின் வசனங்களாலேயே சாத்தியமாகிறது.
250 மில்லியன் இந்திய ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இப்படத்தின் தயாரிப்பாளர்கள் ஆர். மாதவன், சரிதா மாதவன், வார்கீஸ் மூலன், விஜே மூலன் ஆகியோர்.
மொத்தத்தில் இப் படத்தைப் பார்க்காமல் விடுவது வாழ்க்கையில் பெரிய பாவம் ஒன்றைச் செய்வதற்கு ஒப்பானது.