ரஸ்யா மீதான பொருளாதாரத் தடையால் ஐரோப்பா தன்னைத் தானே அழித்துக்கொள்கிறது – ஹங்கேரிய பிரதமர் விக்டர் ஓர்பான்

ஐரோப்பா எதிர்கொள்ளும் மோசமான பொருளாதாரப் பிரச்சினைக்கு அது ரஸ்யா மீது விதித்த பொருளாதாரத் தடையே காரணம் என ஹங்கேரிய பிரதமர் விக்டர் ஓபான் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகள் தமது எரிபொருட் தேவைகளுக்கு ரஸ்யாவையே பெரும்பாலும் நம்பியிருந்தன. யூக்கிரெய்ன் போரினைத் தொடர்ந்து அமெரிக்க-நேட்டோ பணிப்பின் காரணமாக ஐரோப்பிய நாடுகள் ரஸ்யாவிடமிருந்து பண்டங்களை வாங்காமல் தவிர்த்துக்கொண்டன. இதனால் ஐரோப்பாவுக்கு வழங்கிவந்த எரிவாயுவை ரஸ்யா கணிசமாகக் குறைத்துவிட்டது. இதனால் ஐரோப்பா எங்கும் பண்டங்களின் விலை அதிகரிப்பு, பண வீக்கம் என்று பொருளாதாரம் மிக மோசமான நிலைக்குச் சென்றுவிட்டது. பல நாடுகளில் பொதுமக்கள் தமது அரசுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் ஹங்கேரிய பிரதமர் விக்டர் ஓர்பான் ஐரோப்பிய மக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறார். வருட முடிவுக்குள் ரஸ்யா மீதான பொருளாதாரத்தடை நீக்கப்படவேண்டுமெனவும் ஐரோப்பா எதிர்பார்த்தபடி இத் தடை ரஸ்யாவை எவ்விதத்திலும் பாதிக்கவேயில்லை எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். இப் போர் ஒரு நீண்ட காலப் போர். அது முடிவதற்குள் ஐரோப்பிய மக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்படப் போகிறார்கள். இதற்கு ஐரோப்பாவே காரணம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதி வலதுசாரியான விக்டர் ஓர்பான் மக்களிடத்தே மிகவும் பிரபலமானவர். நான்காவது தடவையாக அவர் அதிகப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்திருக்கிறார். ஐரோப்பிய தலைமையைக் கடுமையாக விமர்சிக்கும் அவர் யூக்கிரெய்னுக்கு உதவிசெய்வதற்காக இதர ஐரோப்பிய மக்கள் துன்பங்களை அனுபவிக்கவேண்டியிருக்கிறது எனப் பகிரங்கமாகவும் வெளிப்படையாகவும் பேசிவருகிறார். முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ட்றம்ப் மற்றும் ரெக்ஸாஸ், ஃபுளோறிடா ஆளுனர்களுடன் மிக நெருக்கமான உறவைப் பேணிவரும் ஓர்பான் ஹங்கேரிக்குள் குடியேறிகள் வருவதைத் தீவிரமாக எதிர்ப்பவர். இதனால் ஹங்கேரிய ஒரு ஜனநாயக நாடாக மதிக்க முடியாது என சென்ற மாதம் ஐரோப்பிய ஒன்றியம் விமர்சித்திருந்தது. இந் நிலையில் அவரது ரஸ்ய சார்பு நிலைப்பாடு விரைவில் ஹங்கேரியை ஒன்றியத்திலிருந்து பிரித்துவிடலாமென்ற அச்சமும் எழுந்துள்ளது.

சிலநாட்களின் முன் நடந்துமுடிந்த தேர்தலில் இத்தாலியில் முதல் தடவையாக ஒரு தீவிர வலதுசாரிப் பெண்ணான ஜியோர்ஜியா மெலோனி வெற்ரிபெற்றுப் பிரதமராகிறார். அவர்து கட்சியான ‘பிரதர்ஸ் ஒஃப் இத்தாலி’ என்ற கட்சி முசோலினியின் பாசிசக் கொள்கைகளைப் பின்பற்றும் ஒன்று. ஓர்பானைப் போலவே இவரும் குடியேறிகளுக்கு எதிரானவர். ரஸ்யா விடயத்தில் இவர்கள் எல்லாம் ஒன்றிணைந்து பொருளாதாரத் தடையை நீக்கும்படி வலியுறுத்தலாமென் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் ஐரோப்பாவுக்கு யூக்கிரெயினூடாக எரிவாயுவை வழங்கிவரும் ‘நோர்ட்ஸ்றீம்-1’ என்ற வழங்கல் குழாயை யாரோ திட்டமிட்டுச் சிதைத்துவிட்டதனால் வாயு அதிலிருந்து தப்பிவிடுகிறது எனத் தற்போது தெரியவந்துள்ளது. எனவே வரப்போகும் குளிர் காலத்தில் பெரும்பாலான ஐரோப்பிய மக்கள் குளிரில் வாடுவதற்கான சாத்தியங்கள் உண்டு. இது தொடருமானால் ஓர்பான், மெலோனியைப் போல் மேலும் பல வலதுசாரித் தலைவர்கள் ஐரோப்பாவில் ஆட்சிகளைப் பிடிக்கலாம்.