World

ரஸ்யா: பிரிகோஜின் ‘அம்மானின்’ பிளவு

மாயமான்

ரஸ்யாவில் கத்தியின்றி, ரத்தமின்றி நடைபெற்று முடிந்த உள்வீட்டு யுத்தத்தில் பிரிகோஜின் அம்மான் படுதோல்வியடைந்திருக்கிறார். வாக்னர் குழுத் தலைவர் பிரிகோஜினை ‘அம்மான்’ என்றழைத்த காரணம் இப்போது உங்களுக்குப் புரிந்திருக்குமென்று நினைக்கிறேன்.

விடுதலைப் புலிகளையோ அல்லது கருணா அம்மானையோ இங்கு நான் துணைக்கு அழைக்கவில்லையாயினும் ரஸ்யாவில் நடந்து முடிந்த சம்பவமும் கருணா அம்மானின் பிரிவும் ஏற்படுத்திய அதிர்ச்சியின் அளவு ஏறத்தாழ ஒன்றுதான். ஆனால் சம்பவத்தை விடுதலைப் புலிகள் கையாண்ட விதமும் புட்டின் கையாண்டிருக்கும் விதமும் வித்தியாசமானது. அதனால் முடிவும் வித்தியாசமாக அமைந்துவிட்டது.

கருணா அம்மானைப் போலவே பிரிகோஜினும் தலைமைக்கு மிக நெருக்கமாக இருந்தவர். இயக்கத்தின் சில தலைவர்கள் கருணா மீது கொண்டிருந்த கசப்புணர்வைப் போலவே புட்டிநின் முக்கிய படைத் தலவர்கள் பிரிகோஜினின் நடவடிக்கைகள் மீது கசப்பு கொண்டிருந்தார்கள். பஹ்முட் போன்ற முக்கிய ஆனால் மிகவும் கஷ்டமான களங்களில் வாக்னர் படை அர்ப்பணிப்போடு போராடி வெற்றியை ஈட்டிக் கொடுத்தது. ஆனால் அவர்களுக்கு தேவையான தருணங்களில் தேவையான ஆயுத தளபாடங்களைத் தந்துதவ இராணுவத் தலைமை முன்வரவில்லை. கருணாவின் படையணியும் சில களங்களில் இப்படியான வெற்றிகளைத் தேடிக்கொடுத்திருந்தது.

பிரிகோஜினின் பஹ்முட் வெற்றிக்குப்பின் ரஸ்ய மக்கள் அவரை ஒரு வீரராக வரவேற்றுக் கொண்டாட வைத்தது. ஆனால் புட்டினின் இராணுவத் தலைமை மக்களைப் போலல்லாமல் பொறாமையுணர்வோடுதான் பிரிகோஜினைப் பார்த்தார்கள். அதனால் தான் ரஸ்யாவுக்கு மீண்டு வந்துகொண்டிருந்த பிரிகோஜினின் படைகள் மீது இராணுவத் தலைமை ஹெலிகொப்டர் தாக்குதல்களைத் தொடுத்தது. அப்படியிருந்தும் மக்கள் அவர்களை வரவேற்றுக் கொண்டாடினார்கள். இது நடைபெற்ற பின்னரும் பிரிகோஜின் -கருணாவைப் போலவே-‘தலைவரைக்’ குற்றம் சாட்டவில்லை. ‘பொட்டர்கள்’ மீதே அவரது கோபம் இருந்தது.

பிரிகோஜின் தனது தரப்பில் 25,000 படைகள் இருந்ததாக அறிக்கை விட்டிருந்தார். போதுமான கனரக வாகனங்கள் இருந்ததெனினும் ஆயுதங்கள் இருந்தனவெனக் கூறமுடியாது. இருப்பினும் அவர் கூறியது போல – அல்லது எதிர்பார்த்தது போல – பல படைப்பிரிவுகள் இறுதிநேரத்தில் காலை வாரிவிட்டன. அதற்கு ‘ரஸ்ய தேசியம்’ பெரும் பங்கு வகித்திருக்கலாம். கருணா அம்மானின் தரப்பிலும் இப்படியான குழப்ப நிலைகள் இறுதி நேரத்தில் இருந்தது. எனவே பிரிகோஜினின் ‘மொஸ்கோ படையெடுப்பு’ நகர்வு ஆரம்பத்திலேயே தளம்பத் தொடங்கி விட்டது. இதில் புட்டினின் வெருட்டல் பின்னணியில் இருந்திருக்குமோ தெரியாது. பிரிகோஜினின் படைகள் றொஸ்டோவ்-ஒன்-டொன் நகருக்குள் தம்மை முடக்கிக் கொண்டிருந்தன. அவருடன் சேர மறுத்த படையணிகள் அங்கு இருக்கவில்லை. மொஸ்கோவுகுப் போகும் அனைத்து நெடுஞ்சாலைகளும் மூடப்பட்ட நிலையில் றொஸ்டோவ்-ஒன் -டொன்னில் இரத்தக்களரி ஒன்று ஏற்ப்டப்போகிறது என்பதற்கு அந்த நகர முதல்வர் சைகை காட்டிவிட்டார். ஆனாலும் புட்டின் அதை விரும்பாமல் பிரேமதாச (சீனியர்) வழியைக் கையாண்டார் (என்று நினைக்கிறேன்). தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்துக்கு தயாராகும்போது ஜனாதிபதி பிரேமதாச அத் தலைவர்களை ஒவ்வொருவராகத் தனிப்பட்ட சந்திப்புக்கு அழைப்பாராம். வந்தவர் முன்னால் இரண்டு பொருள்கள் வைக்கப்படுமாம். ஒன்று பணப் பொதி மற்றது கைத்துப்பாக்கி. உமக்கு எது வேண்டும் என்பது மட்டுமே கேள்வியாக இருக்குமாம். பிரேமதாச காலத்தில் வேலை நிறுத்தங்கள் அதிகமிருக்கவில்லை.

பெலாறுஸ் அதிபர் புட்டினின் நண்பர். அவரைக் கொண்டு இந்த ‘பிரேமதாச டீல்’ கையாளப்பட்டிருக்கலாம். என்ன இருந்தாலும் பிரிகோஜினும் ஒரு காலத்தில் ‘தலைவருக்கு’ நம்பிக்கைக்குரிய ஒருவராக இருந்தவர். புட்டினின் உணவை அவரே தயாரித்து வழங்கியவர். எனவே அவர் தப்பியோட ஒரு பாதையைத் திறந்துவிட்டது மிகச்சிறந்த சாணக்கியம். இதில் மொஸ்கோ மீது குண்டுமழை பொழியப்போகிறது என வீணிவடித்துக்கொண்டிருந்த சிலருக்குப் பலத்த ஏமாற்றம் என்பது வேறு. இப்போது புட்டினின் தலைமை ஆட்டம்கண்டுவிட்டது என ‘விழுந்தாலும் மீசை’ வசனங்கள் பேசப்படுகிறது. ஆனால் நிலைமையைப் புட்டின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த விதம் மிகவும் மெச்சத் தக்கது.

பிரிகோஜினுக்கு பெலாறுஸ் அடைக்கலம் தருவது, அவரது படைகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவது அவரோடு இணைய மறுத்த அவரது படைகளுக்கு தொடர்ந்து போராடுவதற்கான ஒப்பந்தங்களை வழங்குவது போன்ற விடயங்கள் தற்காலிகமாகவேனும் மிகவும் சாணக்கியமான நகர்வுகள். இனி வரும் காலங்களில் பிரிகோஜின் மாடியொன்றின் யன்னலால் பாய்ந்து அல்லது நச்சு மருந்தை எடுத்து ‘தற்கொலை’ செய்துகொள்ளலாம். ஆனால் அது உடனடியாக நடைபெறுவது சாத்தியமில்லை. அதற்குக் காரணம் வாக்னர் படைகளின் வெற்றிகள் இன்னும் ரஸ்ய மக்களின் மனங்களில் இருக்கின்றன. அவர்களின் பங்களிப்பு ரஸ்யாவுக்கு வெற்றியைத் தேடிக்கொடுக்கவிடினும் தோல்வியைப் பெற்றுக்கொடுக்கவில்லை. மக்கள் பிரிகோஜினை இன்னும் வெறுக்க ஆரம்பிக்கவில்லை. இந்த விடயத்தில் தான் கருணா அம்மான் விடயம் கிளை பிரிகிறது. பிரிகோஜினைத் தமது பக்கம் இழுக்க அமெரிக்கா முயன்றிருந்தாலும் அது வெற்றியளிக்கவில்லை எனவே கூறப்படுகிறது.

கருணா அம்மானின் பிரிவைப் போலவே பிரிகோஜினின் பிரிவும் புட்டினுக்குப் பலத்த இழப்பு. ஆனால் இப்பிரிவை புட்டின் வித்தியாசமாகக் கையாண்டிருக்கிறார் என்பதனால் முடிவும் வித்தியாசமாக இருக்குமென்பதே எனது அனுமானம். (Image Credit:BBC)