World

ரஸ்யாவில் வாக்னர் குழு புரட்சி? – புட்டின் தலைமைக்கு ஆபத்து?

ரஸ்யாவின் கூலிப்படையான வாக்னர் குழுவின் தலைவர் ரஸ்ய இராணுவத் தலைமையை அகற்றுவேன் எனச் சூளுரைத்து சிலமணி நேரங்களில் வாக்னரின் படைகள் ரஸ்ய இராணுவத்தின் தென்பிராந்திய தலைமைமுகாமை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாக சில காணொளிச் செய்திகள் தெரிவிக்கின்றன. அதே வேளை வோரொணெ பிராந்திய பவ்லோஸ்க் மாவட்டத்தில் இரு தரப்பினரிடையேயும் மோதல்கள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

ரஸ்ய பாதுகாப்பு அமைச்சர் சேர்கே சொய்குவை அகற்றும்படி வாக்னர் குழுவின் தலைவர் யெவ்கெனி பிரிகோஜின் சமீபத்தில் அறைகூவல் விட்டிருந்ததைத் தொடர்ந்து ரஸ்ய இராணுவத்திற்கும் வாக்னர் குழுவிற்குமிடையே முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது . வாக்னரின் படைகள் இம்முயற்சியில் வெற்றிபெறுமானால் புட்டினின் தலைமைக்கு ஆபத்து வரக்கூடிய சாத்தியங்கள் உண்டு. புட்டினின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதைக் காரணம் காட்டி மேற்குலக ஊடகங்கள் நிலவரம் மோசமாகலாம் என ஊகம் தெரிவித்துள்ளன.

யூக்கிரெய்னில் சமராடிக்கொண்டிருந்த பிரிகோஜின் படைகள் கடந்த சனியன்று ரஸ்யாவிற்குத் திரும்பியபோது அங்கு எல்லைக் காவலில் நின்ற இளம் வீரர்கள் எதிர்ப்பெதையும் தெரிவிக்கவில்லை எனவும் இதற்கு “நாம் குழந்தைகளுக்கெதிராகப் போரிடுபவர்களல்ல ஆனால் வேறெவராவது எம்மை நிறுத்த முயன்றால் அவர்களை நாம் அழித்துவிடுவோம். நாம் இறுதிவரை சென்றே தீருவோம் ” என பிரிகோஜின் ஒலி, ஒளி வடிவங்களில் தனது அறிவிப்புக்களை வெளியிட்டுள்ளதாக இவ்வூடகங்கள் தெரிவித்துள்ளன.

“தற்போது எம்மிடம் 25,000 படைகள் உள்ளனர். இராணுவத் தலைமையை அகற்றுவதற்காக அவர்கள் தம்முயிரைத் தியாகம் செய்யக் காத்திருக்கின்றனர். ரஸ்ய மக்களுக்காக நாம் செத்துக்கொண்டிருக்கிறோம்” என பிரிகோஜினுடைய அறிவிப்புகளில் ஒன்று கூறுகிறது. இதே வேளை புட்டினுக்கு எதிராவரெனக் கருதப்படும் மிக்கெயில் கோடோர்கோவ்ஸ்கி, ரஸ்ய மக்களை வாக்னர் குழுவிற்கு ஆதரவு தரும்படி கேட்டுள்ளார்.

வாக்னரின் மனமாற்றம்

ரஸ்ய-யூக்கிரெய்ன் போரில் மிக முக்கிய பங்கை வகித்தது வாக்னர் குழு. மிக நீண்டகாலத்திற்கு நடைபெற்றதும், மிகவும் மோசமான இரத்தக்களரியைக் கண்டதுமான பாஹ்முட் சண்டையில் ரஸ்ய தரப்பிற்கு வெற்றியை ஈட்டிக் கொடுத்தது இப் படைகள். இப்போர் முடிந்ததும் கடந்த வெள்ளியன்று வாக்னரின் படைகள் ரஸ்ய பொதுமக்களுடன் வாகனங்களில் பயணம் செய்துகொண்டிருந்தபோது ரஸ்ய இராணுவத் தளபதி வலெறி ஜெறாசிமோவ் வாக்னரின் அணி மீது விமானத் தாக்குதல்களைச் செய்வித்தார் என பிரிகோஜின் குற்றம் சுமத்தியிருந்தார். இத்தாக்குதலின் போது ரஸ்ய ஹெலிகொப்டர் ஒன்றை வாக்னரின் படைகள் சுட்டு வீழ்த்தியிருந்தன.

62 வயதுடைய பிரிகோஜினுக்கும் ரஸ்ய அதிபர் புட்டினுக்குமிடையில் மிகநீண்டகாலப் பழக்கமிருக்கிறது. இருவரும் லெனின்கிராட்டில் பிறந்தவர்கள். கிரெம்ளின் மாளிகைக்கு வழங்கப்படும் உணவு பிரிகோஜினது உணவகங்களினாலேயே தயாரிக்கப்படுவது வழக்கம். இதனால் புட்டினின் நம்பிக்கைக்குரிய சமையல்காரனாக பிரிகோஜின் இருந்துவந்தார். இந்த நம்பிக்கையின் தொடர்ச்சியாக யூக்கிரெய்ன் போர் தொடங்கியதும் வாக்னரின் தலைமையின் கீழ் கூலிப்படையொன்றை உருவாக்கி புட்டின் பஹ்முட் பிரதேசக் களநடவடிக்கைகளை வாக்னரின் பொறுப்பில் விட்டுவைத்தார். இது ரஸ்ய இராணுவத் தலைமைக்கு உவப்பாக இருக்கவில்லை. அவ்வப்போது வாக்னர் படைகளுக்கும் ரஸ்ய படைகளுக்குமிடையே முறுகல்கள் இருந்துவந்தன. பாஹ்முட் போரில் வாக்னர் வெற்றியீட்டியதும் அவர்களைத் திரும்பி ரஸ்யா வராது தடுப்பதற்காக ரஸ்யப் படைகள் முயன்றன. இதனால் படைத் தலைவர்களையும் பாதுகாப்பு அமைச்சரையும் அகற்றும்படி அவர் பகிரங்க அறைகூவலை விடுத்திருந்தார். இது புட்டினுக்கு இப்போது தலையிடியைக் கொண்டு வந்திருக்கிறது.

இப்பலப் பரீட்சையில் பிரிகோஜின் வெற்றி பெறுவாரானால் புட்டினின் தலைமைக்கு ஆபத்து ஏற்படலாம். ஆனாலும் பெரும்பாலான ரஸ்ய மக்கள் புட்டின் பக்கமே இருப்பதாகவும் இதில் வாக்னர் குழு தோற்கடிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் உண்டெனவும் சமூக வலைத்தளச் செய்திகள் தெரிவிக்கின்றன. (Image Credit -AP)