ரஷ்ய தொலைக்காட்சியில் இடைப்புகுந்து போருக்கு எதிர்ப்புத் தெரிவித்த நிகழ்ச்சித் தொகுப்பாளர்

ரஷ்யாவின் அரச கட்டுப்பாட்டில் இயங்கும் தொலைக்காட்சியான ‘சனல் 1’ இன் திங்கள் காலை ஒளிபரப்பின்போது நிகழ்ச்சி அறிவிப்பாளரின் பின்னால் போருக்கு எதிரான வாசகங்களைக் கொண்ட பதாகை ஒன்றைப் பிடித்தபடி தனது எதிர்ப்பை அந் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் (editor) தெரிவித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

“போர் வேண்டாம், போரை நிறுத்துங்கள், இவர்களது பிரச்சாரங்களை நம்பாதீர்கள். இவர்கள் இங்கு உங்களுக்குப் பொய் கூறுகின்றார்கள்” என்ற வாசகங்களைத் தாங்கிய பதாகையை நிகழ்ச்சி வழங்குபவரின் பின்னால் நின்று பிடித்துக்கொண்டு ஒரு பெண் நிற்பதைக் காட்டும் படத்துடன் இச செய்தியை பி.பி.சி. செய்தி நிறுவனம் பிரசுரித்திருக்கிறது. இப் பெண்ணின் பெயர் மரீனா ஒவ்ஸ்யனிக்கோவா எனவும், அவர் இத் தொலைக்காட்சி நிறுவனத்தில் தொகுப்பாளாராகப் பணிபுரிந்து வருவதாகவும் பி.பி.சி. தெரிவிக்கிறது.

தனது எதிர்ப்பைத் தெரிவிப்பதற்கு முன்னர் “யூக்கிரெய்னில் நடைபெறும் சம்பவங்கள் ஒரு குற்றச்செயல் எனவும், கிரெம்ளினின் பிரச்சாரங்களை முன்னெடுப்பதற்காகத் தான் பணிபுரிய வேண்டி ஏற்பட்டதற்காகவும் ரஷ்ய மக்களை முண்டங்களாக்குவதற்குத் தான் காரணமாகவிருப்பது குறித்தும் தான் வெட்கமுறுவதாகவும் தெரிவிக்கும் ஒரு காணொளியொன்றை அவர் பதிவு செய்து வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. போருக்கு எதிராக ரஷ்ய மக்கள் தமது எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டுமென்றும் அவர்களால் மட்டுமே போரை நிறுத்த முடியுமெனவும் அவர் தனது காணொளி மூலம் ரஷ்ய மக்களைக் கேட்டுள்ளார்.

அரச கட்டுப்பாட்டில் இயங்கும் ஊடகங்கள் யூக்கிரெய்ன் மீதான படையெடுப்பை ‘விசேட இராணுவ நடவடிக்கை’ என அழைத்தும், நாஜிகளால் ஆளப்படும் யூக்கிரெய்ன் தான் பிரச்சினையின் மூலகாரணம் எனக்கூறியும் வருகின்றன.

பொலிசாரினால் கைதுசெய்யப்பட்ட மரீனா ஒவ்ஸ்யனிக்கோவா விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளாரென பி.பி.சி. மேலும் தெரிவிக்கிறது. (பி.பி.சி.)