ரஷ்ய எரிவாயுவை வாங்குபவர்கள் ‘ரூபிளில்’ பணம் செலுத்த வேண்டும் – புட்டின் கட்டளை
பிரான்ஸ், ஜேர்மனி பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்படலாம்?
ரஷ்ய-யூக்கிரெய்ன் போரின் இரண்டாம் கட்டம் இப்போது ஆரம்பித்திருக்கிறது. இப் போரின் விளைவாக அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் ரஷ்யா மீது விதித்த பொருளாதாரத் தடை இன்னும் ரஷ்யாவைப் பூரணமாகப் பாதிக்க ஆரம்பிக்காத நிலையில் ரஷ்யா தனது இரண்டாவது கட்டத்தை ஆர்ம்பிக்கிறது. இதன்படி, ரஷ்ய எரிவாயுவில் தங்கியிருக்கும் ஐரோப்பிய நாடுகள் தமது மாற்று வழிகளுக்குத் தயார் செய்வதற்கு முன்னரே அந்நாடுகள் மீது இன்னுமொரு செருக்கடியைக் கொண்டுவருகிறார்.
அமெரிக்கா தலைமையிலான ஜி.7. நாடுகள் ரஷ்யா மீது விதித்திருக்கும் பொருளாதாரத் தடையின் நோக்கம் ரஷ்யாவின் இறக்குமதிகளுக்குத் தேவையான ‘டொலர் நாணயம்’ அதற்குக் கிடைக்காமல் செய்வதே. இதுவரை ரஷ்ய ஏற்றுமதிகளுக்கான பணம், பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளால், டொலர் அல்லது யூரோவில் தான் இருக்க வேண்டுமென ஒப்பந்தங்களில் எழுதப்பட்டிருக்கிறது. இவற்றில் ஜேர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் ரஷ்ய எரிவாயு மற்றுன் எண்ணையில் பெருமளவு தங்கியுள்ளதால் இப் பொருளாதாரத் தடைகளில் இவ்விரு நாடுகளும் உட்படச் சிலவற்றுக்கு விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜேர்மனியைப் பொறுத்தவரை சுமார் 50% மான எரிவாயுவையும் 30% மான எண்ணையையும் ரஷ்யாவிடமிருந்தே வாங்குகிறது. பிரான்ஸ் சுமார் 30% மான எரிவாயுவையும், 10% மான எண்ணையையும் ரஷ்யாவிடமிருந்து வாங்குகிறது. இதற்கான பணத்தைப் பெறும் ரஷ்ய வங்கியான Gazprombank மீது மேற்கு நாடுகள் தடையை விதிக்கவில்லை. இதனால் இவ்விரு நாடுகளுக்கும் புட்டின் விசேட சலுகைகளைச் செய்வதாக உறுதியளித்திருக்கிறார்.
இது தொடர்பாக ஜேர்மனி அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ் மற்றும் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்றோன் ஆகியோருடன் புதனன்று (30) புட்டின் தொலைபேசியில் பேசியபோது இவ்விரு நாடுகளும் தமது பணத்தை யூரோவில் தரலாமென்றும் ‘காஸ்புறொம்’ வங்கி அதை ரூபிளில் மாற்றித் தமக்குத் தருமென்றும் கூறியிருந்தார். ஆனாலும் ஜெர்மனியின் பொருளாதார அமைச்சர் றொபேர்ட் ஹபெக் மற்றும் பிரெஞ்சு நிதியமைச்சர் புரூணோ லு மறீ ஆகியோர் வியாழனன்று வெளியிட்ட அறிக்கையில் “புட்டினின் கட்டளைக்குத் தாம் அடிபணியப் போவதில்லை எனவும் ஒப்பந்தங்களின்படி எமது பணத்தை நாம் டொலர் அல்லது யூரோவில் தருவதாகவே இணங்கியிருந்தோம், சட்டங்களை அவர் மதிக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தனர்.
அதே வேளை “ரஷ்யாவுடன் நட்பை விரும்பாத நாடுகள் சட்டங்களை மதிக்காமல் ரஷ்யாவின் மத்திய வங்கி மீது தடைகளை விதித்தபடியால் அதற்கு மாற்றீடான வழிகளை ரஷ்யா எடுத்தாக் வேண்டும். ரூபிளில் பணத்தைச் செலுத்த முடியாத நாடுகளுக்கு நாம் எரிவாயுவை வழங்குவதை நிறுத்தி விடுவோம்” என புட்டின் எச்சரித்திருக்கிறார். ஆனால் எப்பாடியாகிலும் ரூபிளில் நாணயமாற்றுச் செய்வதனால் அது ரஷ்ய மத்திய வங்கியுடன் வியாபாரம் செய்வதாகவே கருதப்படும் எனக்கூறி இதர ஐரோப்பிய தலைவர்கள் ரஷ்யாவின் இச் சலுகைக்கு பிரான்ஸ், ஜேர்மனி நாடுகள் இண்ணங்கக்கூடாது என வற்புறுத்தி வருகின்றனர். எரிபொருள் வாங்குவதற்கு மார்று வழிகள் ஏதும் இதுவரை இல்லாத நிலையில் ஜேர்மனியும் பிரான்ஸும் அமெரிக்கா வைத்த பொறியில் மாட்டிக்கொண்டிருப்பதாகவே பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவின் கட்டளைக்கு உடன்படமுடியாத பட்சத்தில் ரஷ்ய எரிவாயு விநியோக நிறுவனமான ‘காஸ்புறொம்’ ஐரோப்பாவுக்கு எரிவாயு வழங்குவதை உடநடியாக நிறுத்துவதற்குத் தயாராகவுள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகும் என அந்நாடுகளின் ஊடகங்கள் எச்சரித்து வருகின்றன.