ரஷ்யா vs நேட்டோ: வெல்லப்போவது யார்?
சிவதாசன்
பிரித்தானிய பிரதமர் கியர் ஸ்ரார்மர் இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு அவசரமான பாதுகாப்பு உச்சி மாநாட்டை நடத்தியிருந்தார். பிரித்தானியாவுடன் பெரும்பாலான ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இதில் பங்குபற்றியிருந்தன. அமெரிக்காவால் அவமானப்படுத்தப்பட்ட யூக்கிரெய்னை அரவணைத்து ‘அஞ்சற்க நாம் இருக்கிறோம்’ என ஆறுதல் கூறியதோடு யூக்கிரெய்ன் மண்ணில் ஐரோப்பிய படைகள் நிலைகொள்ளவைக்கும் திட்டமொன்றையும் உறுதி செய்திருக்கிறார். ‘Coalition of the willing’ என்ற புஷ்ஷின் வாக்கியம் மீண்டும் பிரபலம் பெறுகிறது. இப்போது எதிரி நாடு ஈராக் அல்ல ரஷ்யா என்பதை ஐரோப்பா இலகுவாக எடுத்திருக்கிறது. இதில் பிரித்தானியாவும் ஃபிரான்ஸும் மும்முரமாக இருக்கின்றன. கனடிய் பிரதமர் ட்றூடோ தனது படைகளையும் அனுப்புவதெனக் கூறியிருக்கிறார். ஜேர்மனியின் புதிய அதிபரும் ‘நான் ஒருவருக்கும் சளைத்தவனல்ல’ என்ற கணக்கில் உலகே வெறுக்கும் நெட்டன்யாஹுவை அழைத்துக் கெளரவித்திருக்கிறார். இப்போது பார்த்தால் உலகில் மூன்றவது துருவமொன்றும் தோன்றியிருக்கிறது. ட்றம்பை ஒருவாறு தன்பக்கம் இழுத்துவிட்டேன் என்ற இறுமாப்போடு இருந்த புட்டினுக்கு இப்போது ஐரோப்பா புதிய தலையிடியைத் தோற்றுவித்திருக்கிறது. “ஐ.நா. சமபந்தப்படாமல் எடுக்கப்படும் இந்நடவடிக்கையை நாம் எமது நாட்டுக்கு எதிரான ஆக்கிரமிப்பு நடவடிக்கையாகவே நாம் கருதுவோம்” என ரஷ்யா எச்சரித்திருக்கிறது. இத் திட்டத்தை ஐரோப்பா நிறைவேற்றினால் அது மூன்றாம் உலக யுத்தத்திற்கு வழி கோலும்.
நேட்டோவின் வரலாறு
நேட்டோ 1949 இல் உருவாக்கப்பட்டது. அப்போது கையெழுத்திட்ட வட அத்லாந்திக் ஒப்பந்தத்தின் 5 ஆவது சரத்து இப்படிக் கூறுகிறது: “நேட்டோ அங்கத்துவ நாடுகளில் ஏதாவது ஒன்றின் மீது தாக்குதல் நடத்தபடுமேயானால் அது அனைத்து நேட்டோ அங்கத்தவர்கள் மீது ம் நடத்தப்படும் தாக்குதலாகவே கருதப்பட்டு எதிர்வினையாற்றப்படும்”. ஏப்றில் 2023 இல் இணைந்த ஃபிந்லாந்து, மார்ஷ் 2024 இல் இணைந்த சுவீடன் ஆகியவற்றுடன் தற்போது 32 நாடுகள் நேட்டோவில் அங்கம் வகிக்கின்றன. அங்கத்துவ நாடுகள் ஒவ்வொன்றும் தமது உற்பத்தியின் (GDP) 2% த்தை நேட்டோவின் செலவீனங்களுக்கெனப் பங்களிக்க வேண்டும். ஆனாலும் அமெரிக்காவே இச்செலவீனத்தில் பெரும்பங்கை இதுவரை ஏற்று வருகிறது. 2013 இல் அமெரிக்காவின் நேட்டோ செலவீனம் $916 பில்லியன். இது மொத்த செலவீனத்தின் 40%. இவ்வருடத்தில் பிரித்தானியாவின் பங்கு $75 பில்லியன். ட்றம்ப் தனது முதலாவது தவணையின்போதே நேட்டோ நாடுகள் தமது பங்கைச் செலுத்த வேண்டும் என வாய் கிழியக் கத்தி வருகிறார்.
படைகளின் வலிமை
நேட்டோவில் சமீபத்தில் இணைந்த ஃபின்லாந்து மற்றும் சுவீடன் போன்ற நாடுகள் இராணுவத் தளபாட உற்பத்தியில் நவீன மயப்படுத்தப்பட்டதும் முன்னணித் தரம் வாய்ந்தவையாகவும் இருப்பவை. ஐரோப்பாவின் பூகோள சூழலுக்கேற்ற வகையில் திட்டமிடப்பட்டுத் தயாரிக்கப்பட்டவை. ஆனாலும் நேட்டோவிடம் போதுமான வெடி மருந்துகள் இல்லை. அதற்கு அமெரிக்கா தான் கைகொடுக்க வேண்டும்.
| படை வலிமை | ரஷ்யா | நேட்டோ |
|---|---|---|
| போர் விமானங்கள் | 4814 | 22,308 |
| போர்க் கப்பல்கள் | 781 | 2258 |
| தாங்கிகள் | 14,777 | 11,390 |
| கவச வாகனங்கள் | 161,382 | 849,801 |
| அணுவாயுத ஏவுகணைகள் | 5,889 | 5,759 |
| காலாட் படைகள் | 1.32 மில்லியன் | 3,42 மில்லியன் |
யூக்கிரெய்ன் விடயத்தில் அமெரிக்காவைத் தனிமைப்படுத்துவதன் மூலம் மட்டுமே ரஸ்யாவினால் வெற்றியீட்ட முடியும். அதையே புட்டின், இதுவரை வெற்றிகரமாகச் செய்து வருகிறார். ஆனாலும் ட்றம்பையும் மீறி ஒரு பலம் வாய்ந்த மர்ம விசை இயங்குகிறது. அதை அவரால் மீற முடியாது. எனவே போர் தொடங்கியதன் பிறகு அமெரிக்கா அதில் பங்கெடுக்க நிர்ப்பந்திக்கப்படும். அமெரிக்கா இப்படி பின்னடிப்பது இது தான் முதல் தடவையல்ல.
இரண்டாம் உலகப் போரில் ஜேர்மனியைத் தடுத்து நிறுத்த சேர்ச்சில் போட்ட திட்டத்தின் பிரகாரம் ஒதுங்கியிருந்த அமெரிக்காவும், சோவியத் குடியரசும் உள் இழுக்கப்பட்டு அப்போதும் ஒரு coalition of the willing நடைமுறைப்படுத்தப்பட்டது. சுமார் 20 மில்லியன் சோவியத் படையினர் கொல்லப்பட்டபின் தமது காரியம் முடிந்தவுடன் சோவியத் குடியரசு இந்த coalition இலிருந்து விலத்தப்பட்டதுமல்லாது உடனடியாகவே எதிரியாக்கப்பட்டது. யப்பானிய குண்டு வீச்சு திட்டம் பற்றி ஸ்டாலினுக்கு சொல்லப்படவேயில்லை. இரண்டாவது தடவையாக கோர்பச்சேவ் தந்திரமாக உள்வாங்கப்பட்டு, பல உறுதி மொழிகள் கொடுக்கப்பட்டு சோவியத் குடியரசு உடைக்கப்பட்டது. நேட்டோ பேர்லினுக்கு கிழக்காக ஒரு அங்குலமும் நகரமாட்டாது என உறுதி மொழி கொடுக்கப்பட்டு இப்போது ரஸ்ய எல்லைகளில் நேட்டோ முகாமிட்டுவிட்டது. அப்படியிருந்தும் புட்டின் ஆட்சிக்கு வந்ததும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய விருப்பம் தெரிவித்தார். அது மறுக்கப்பட்டபின் தான் அவர் ரஷ்யாவைக் கட்டி எழுப்பினார். குழாய்கள் ஐரோப்பாவிற்கு இயற்கை வாயு போன்ற எரிவலு மூலங்களை வழங்கியதன் மூலம் அதன் பொருளாதாரத்தை ஓரளவு தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயற்சித்தார். எரிவலுக் குழாய்களைக் குண்டுவைத்துத் தகர்த்து பைடன் அரசு ஐரோப்பாவிற்கு அதிக விலையில் எரிவாயு (LNG) வழங்கும் திட்டத்தைப் பரிந்துரைத்தது. இச்சதுரங்க விளையாட்டில் ஒரு அங்கமே யூக்கிரெய்ன்.
நேட்டோவின் பலம் அமெரிக்காவின் பலமென்பதை புட்டின் நன்றாகவே அறிவார். எனவே தான் அமெரிக்காவைத் தனிமைப்படுத்த ட்றம்பின் மூலம் முயற்சி செய்தார். முதலாவது தடவை அமெரிக்காவில் ட்றம்பின் ஆட்சியைக் கொண்டுவருவதில் ரஷ்யா பின்னணியில் இருந்ததென்றொரு குற்றச்சாட்டும் இருந்தது. ட்றம்ப் மூலம் தனக்குச் சாதகமான மாற்றங்களை உலகில் ஏற்படுத்தலாம் எனப் புட்டின் நினைக்கலாம். இப்படியான soft power முடுக்கிகள் மூலம் அமெரிக்கா உலக நாடுகளில் தனக்குச் சாதகமான மாற்றங்களைக் கொண்டு வருவது வழக்கம். ஆனால் ட்றம்ப் அந்தளவிற்கு ஒரு விவேகமான ஆளில்லை. அவருடைய நோக்கங்கள் சரியானவையாக இருந்தாலும் பாதைகள் பெரும்பாலும் தவறானவை (unconventional). புட்டினுக்கு இது வாய்ப்பாகப் போய்விட்டது. யூக்கிரெய்னில் சமாதானம் புட்டினின் முதல் படி. இதன் மூலம் அமெரிக்க – ஐரோப்பிய உறவை உடைக்க முடியுமானால் அது புட்டினின் பாரிய வெற்றி. அதற்கு அமெரிக்க மக்களின் ஆதரவு வேண்டும். மக்களாதரவு இல்லாத படியால் தான் வியட்நாமில் அமெரிக்கா தோற்க நேரிட்டது. இதன் பன்னர் தான் இந்த மர்ம விசை மக்கள் மனங்களை மாற்றும் நடவடிக்கைகளில் முனைப்பாகச் செயற்படுகிறது.
முதலாம், இரண்டாம் உலகப் போர்களிலும், வளைகுடாப் போர்களிலும் அமெரிக்காவின் தலையீட்டை அமெரிக்க மக்கள் விரும்பாமல் இருந்தபோது அவர்களின் அபிப்பிராயத்தை மாற்ற சில நடவடிக்கைகளை அமெரிக்கா செய்தது. முதலாவது போரின் போது ஜேர்மானிய ‘யூ போட்டுகள்’ அமெரிக்க பயணிகள் கப்பலைத் தாக்கியதென ஒரு சம்பவத்தைச் சிருஷ்டித்து தமது ஊதுகுழல் ஊடகங்கள் மூலம் மக்களின் மனநிலை மற்றப்பட்டது. இரண்டாம் போரின்போது யப்பானிய விமானங்கள் பேர்ள் துறைமுகத்தை தாக்க வருகின்றன என்பததை அறிந்திருந்தும் அவற்றை எதிர்கொண்டு தடுத்து நிறுத்த முயற்சிக்காமல் துறைமுகத் தாக்குதல் நிறைவேற அனுமதித்தமை மூலம் மக்களின் மனநிலை மாற்றப்பட்டது. வளைகுடாப் போரின்போது அமெரிக்காவின் நண்பனான சதாம் ஹுசெய்னின் படைகள் மருத்துவமனையிலிருந்து குழந்தைகளை எடுத்துக் கொன்றார்கள் என்ற பச்சைப் பொய்யை அவிழ்த்துவிட்டு ஈராக் மீது அமெரிக்க வெறுப்பை விதைத்துக்கொண்டார்கள். இரட்டைக் கோபுரத் தாக்குதல்களுக்கும் இப்படியொரு காரணமுண்டு. இதன் தொடர்ச்சியாக இந்த தடவை ட்றம்ப்பையும் மீறி அமெரிக்க மக்கள் மனங்களில் ரஷ்ய வெறுப்பை உருவாக்க இந்த மர்ம விசை ஏதாவதொரு திட்டத்தை இப்போது தயாரித்துக்கொண்டிருக்கலாம்.
நேட்டோவைப் போல் ரஷ்யாவும் தனித்தனி நாடுகளுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்திருந்தாலும் இந்தியா, ஈரான் போன்ற நாடுகளைவிட ஏனையவை சிறிய நாடுகள். நேட்டோவின் 5 ஆவது சரத்து போன்று இங்கு எதுவுமில்லை. எனவே யூக்கிரெய்ன் – ரஷ்யா போர் மூண்டால் இதில் ரஷ்யா பெரும்பாலும் தனியாகவே போரிட நேரிடும். 2022 இல் ஆரம்பித்த இப்போரை ரஷ்யா முடித்துக்கொள்ள விரும்புவதற்கு காரணம் அதன் படை வலிமை போதாது. ஆனால் அமெரிக்கா இப்போரில் பங்குபற்றாமலிருந்தால் சில வேளைகளில் தந்திரோபாய அணுவாயுதப் பாவனை மூலம் ரஸ்யா வெல்வதற்கான சாத்தியங்களுண்டு. இல்லாது போனால் ரஸ்யா முழுமையான தோல்வியைத் தழுவ நேரிடும்.
பைடன் காலத்தில் யூக்கிரெய்ன் விடயத்தில் புட்டின் அதி பொறுமையைக் கடைப்பிடித்தார். காலாட் படைகளை விட கருவிப் போர்களிலேயே அவர் அதிக கவனத்தைச் செலுத்தி வருகிறார். அத்தோடு மத்திய கிழக்கு போன்ற பிரதேசங்களில் மூக்கை நுழைக்காமற் பார்த்துக்கொண்டார். இந்த விடயத்தில் சிரியா போன்ற நட்பு நாடுகளைத் தாரைவார்த்துக் கொடுக்குமளவுக்கு ஒரு சுயநலப் போக்குள்ளவராக இருந்துவந்துள்ளார். அமெரிக்கா தலைமையில் ஐரோப்பா பொருளாதாரத் தடைகளை விதித்ததும் பிரிக்ஸ் அமைப்பை உருவாக்கி அப் பொருளாதாரத் தடையால் ரஷ்யா எவ்விதத்திலும் பாதிக்கப்படாமலிருக்கப் பார்த்துக்கொண்டார். இந்நிலையில் போரொன்றை ஆரம்பிப்பதை விட புட்டினைப் பலவீனப்படுத்த ஐரோப்பாவிற்கு வேறு வழியில்லை. போரொன்று ஆரம்பித்தால் வேறு வழியின்றி ட்றம்ப் ஐரோப்பாவுடன் இணையவேண்டி ஏற்படும்.
ரஷ்ய – ஐரோப்பிய போர் ஒன்று ஆரம்பித்தால் அணுவாயுதங்கள் சரளமாகப் பாவிக்கப்படும். இவை சிறிய, தந்திரோபாய இலக்குகளாகவும் மக்கள் அழிவைத் தவிர்ப்பதாகவும் இருக்கும். ஒப்பீட்டளவில் அதி வேக ஹைப்பெர்சோனிக் விமானங்கள், ஏவுகணைகள், ட்றோன்கள் போன்ற , ரஷ்யாவிடம் இருக்கும் நவீன ஆயுதங்கள் களப்பரீட்சை செய்யப்படும். லண்டன் மாநகரைத் தாக்கக்கூடிய வீச்செல்லைகள் வரை ரஷ்ய ஆயுதங்கள் பலம் வாய்ந்தவை என்கிறார்கள்.
இதே வேளை ரஷ்யாவும் யூக்கிரெய்னைத் தநது எல்லைப் பாதுகாப்பிற்காகப் பாவிக்க முற்படுகிறது என்பதில் சந்தேகமில்லை. யூக்கிரெய்னில் அரைவாசி நிலம் ரஷ்யாவினால் நட்பிற்காகத் தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டது. இப்பிரதேச மக்கள் ரஷ்ய மொழி பேசுபவர்கள். இவர்கள் மீது யூக்கிரெய்ன் அரசு மேற்கொண்ட ஒடுக்குமுறை ரஷ்ய படையெடுப்புக்கு ஒரு காரணம் எனினும் நேட்டோ விரிவாக்கத்தை நிறுத்துவதுதான் ரஷ்ய படையெடுப்புக்கு முக்கிய காரணம். இதுவரை மேற்கொண்ட எந்தவொரு வாக்குறுதியையும் அமெரிக்க / ஐரோப்பிய நாடுகள் காப்பாற்றவில்லை. எனவே ரஷ்யா இவ்விடயத்தில் தன் பலத்தைக் காட்ட முயற்சிப்பதில் தவறில்லை.
துர்ப்பாக்கியமாக ட்றம்பின் அமெரிக்க மைய வாதம் அவரது நட்பு வட்டத்தைக் குறுக்கி வருகிறது. இதனால் உலகத் தலைமையை அமெரிக்காவிடமிருந்து ஐரோப்பாவுக்கு மாற்ற தீவிர முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. இதற்கு எதிராக இன்னுமொரு துருவம் சீன-ரஷ்ய தலைமையில் உருவாகுவதை மேற்கு விரும்பாவிடினும் மேற்கில் இருக்கும் அளவுக்கு மறு துருவத்தில் ஒற்ருமை காணப்படவில்லை. இதற்காக உருவாக்கப்பட்ட பிறிக்ஸ் அமைப்பிடையே பூசல்கள் அதிகம் காணப்படுகின்றன. பிறிக்ஸைப் பலவீனப்படுத்துவதில் ட்றம்பும் ஒரு கண் வைத்திருக்கிறார். வளர்ந்து வரும் சீனாவே அவரது முதல் எதிரி. அதற்காகவே புட்டினுடனும், மோடியுடனும் அவர் குழைகிறார் போலத் தெரிகிறது.
ரஷ்ய – யூக்கிரெய்ன் சமாதான முயற்சிகளில் ட்றம்ப் தோல்வியுறுவது நிச்சயம் போலப் படுகிறது. ஐரோப்பிய / நேட்டோ நடவடிக்கைகள் அப்படித்தான் சொல்கின்றன. எனவே போரொன்றுக்கு உலகம் தயாராகிக்கொள்வது அவசியம். (Image Credit: CNN)
