ரஷ்யா மேலும் 1,000 படையினரை யூக்கிரெய்ன் எல்லயில் குவிக்கிறது

போர் தவிர்ப்பிற்கு இன்னும் சந்தர்ப்பமிருக்கிறது – அமெரிக்கா

யூக்கிரெய்ன் எல்லையை நோக்கி ரஷ்யா மேலும் 1,000 படையினரை அனுப்புவதன் மூலம் தனது வெற்றிய உறுதிசெய்ய அதிபர் புட்டின் தயாராகவுள்ளதாகவும், இதற்காக இப்பிரச்சினை இன்னும் சிலகாலத்துக்கு இழுபட் நேரிடுவதற்கான சாத்தியங்கள் உண்டு எனவும் கூறப்படுகிறது.

இப் புதிய படை நகர்வின்போது 14 படையணிகளை (battalions) ரஷ்யா அனுப்பியுள்ளதாகவும் ஒவ்வொரு படையணியிலும் 800 படையினர் அங்கம் வகிப்பார்கள் எனவும் தெரியவருகிறது. யூக்கிரெய்னைச் சுற்றி மூன்று திசைகளிலும் ரஷ்யாவின் 100 படையணிகள் ஏற்கெனவே நிலைகொண்டுள்ளன. தற்போதைய படை நகர்வுடன் ரஷ்யப் படைகளின் எண்ணிக்கை 150,000 த்தைத் தாண்டும் எனக்கூறப்படுகிறது. ஒரு படையெடுப்புக்குப் போதுமான அளவில் இப்படையெண்ணிக்கை இருக்கிறதென அவதானிகள் கருதுகிறார்கள்.

இருப்பினும் யூக்கிரெய்ன் மீது படையெடுப்பை மேற்கொள்ள ரஷ்யா இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும் யூக்கிரெய்ன் நேட்டோவில் இணையும் எண்ணத்தைக் கைவிடும் வரை ரஷ்யாவின் இந்நெருக்கடி தொடருமென அதிபர் புட்டின் தீர்மானித்துள்ளதாகவும் அவரோடு இதுவரை பேசிய மேற்குநாடுகளின் தலைவர்களிடம் அவர் தெரிவித்துள்ளதாகவும் தெரிகிறது.

திங்கள் (14) இரவு அமெரிக்க அதிபர் பைடன் மற்றும் பிரித்தானிய பிரதமர் ஜோன்சன் ஆகியோர் இது குறிந்து நடத்திய அவசர பேச்சுவார்த்தையின்போது “பேச்சுவார்த்தையின் மூலம் இப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர இன்னும் சாத்தியங்களுண்டு” என இருவரும் கருதுவதாகக் தெரியவருகிறது. ஆனால் யூக்கிரெய்னுக்குத் தமது படைகளை அனுப்புவதற்கு இருவரும் தாயாரகவில்லை எனவும் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளைத் தீவிரப்படுத்தவும் அதை இதர உலகநாடுகளிடமிருந்து தனிமைப்படுத்தவும் அமெரிக்கா விரும்புவதாகவும் கூறப்படுகிறது.

இதே வேளை, புதிய போர்த்தவிர்ப்பு முயற்சிகளுடன் ஜேர்மன் அதிபர் ஓலாஃப் ஷொல்ஸ் இன்று (15) ரஷ்ய அதிபரைச் சந்திக்க விரைகிறார். ரஷ்யா இவ்விடயத்தில் யூஈக்கிரெய்ன் எல்லையிலிருந்து படைகளைத் திரும்பப்பெறாவிட்டால் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் தீவிரப்படுத்தப்படுமென ஷொல்ஸ் எச்சரிக்கவுள்ளாரென எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று ஐரோப்பிய ஒன்றியத்துக்கு விடுத்த எச்சரிக்கையில் ” எங்களை நிர்ப்பந்திக்காதவரைக்கும் நாங்கள் யூக்கிரெய்ன் மீது படையெடுக்கப் போவதில்லை. அதே வேளை ரஷ்யாவுக்கு எதிராக யூக்கிரெய்ன் தாக்குதல்களைத் தொடுத்தாலோ அல்லது யூக்கிரெயினிலோ அல்லது எங்கேனுமோ ரஷ்யர் ஒருவர் கொல்லப்பட்டால் நாம் திருப்பித் தாக்கினால் ஆச்சரியப்பட வேண்டாம்” ஐரோப்பிய ஒன்றியத்துக்கான ரஷ்ய தூதுவர் எச்சரித்துள்ளார்.