ரஷ்யாவுடனான உறவு தொடர்பாக மேற்கு தவறுகளை இழைத்துவிட்டது – ஐரோப்பிய ஒன்றியம்

“நாங்கள் விட்ட பல தவறுகளால் ரஷ்யாவுடன் நெருக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சந்தர்ப்பத்தை நாம் இழந்துவிட்டோம்” என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவகாரங்கள் மற்றும் பாதுகாப்பு கொள்கைகளுக்குப் பொறுப்பான உயரதிகாரியான ஜோசெப் பொரெல் தெரிவித்துள்ளார்.

“பல தடவைகள் நாம் தேவையற்ற வாக்குறுதிகளைக் கொடுத்தும் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாதவர்களாகவும் இருந்திருக்கிறோம். சோவியத் கூட்டரசின் உடைவினால் ரஷ்யர்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது. அதன் விளைவுதான் புட்டினின் இந்த எழுச்சியும் வன்மமும்” என பிரான்ஸின் TF1 செய்திச் சேவைக்கு வழங்கிய பேட்டியில் அவர் மேலும் தெரிவித்தார்.

யூக்கிரெய்ன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு சிறிதேனும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்று எனவும் இது ஐரோப்பாவின் வரலாற்றில் புதிய அத்தியாத்தை எழுதப் போகிறது எனவும் இப் போருக்குப் பின்னர் உலக ஒழுங்கில் ரஷ்யா மிகவும் வித்தியாசமான ஒன்றாக இருக்கப் போகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யூக்கிரெய்ன் நகரங்களில் குடியிருப்புகள் மீது தாக்குதல்களை மேற்கொள்வதன் மூலம் மக்களின் உயிர்களை ரஷ்யா உதாசீனம் செய்கிறது என அவர் குற்றம் சுமத்தினார். ஆனால் இப்படியான குற்றச்சாட்டுகளை ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு தொடர்ந்தும் மறுத்து வருகிறது. யூக்கிரெய்ன் இராணுவமும், துணைப்படைகளும் மக்கள் குடியிருப்புகளில் நிலைகொண்டு தமது தாக்குதல்களைத் தொடுக்கிறார்கள்; மக்களை அவர்கள் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துகிறார்கள் என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவிக்கிறது. பிரசவ மருத்துவமனை மீதான தாக்குதல் பற்றிச் சமீபத்தில் வெளிவந்த செய்தி பொய்யானது என அது மேலும் தெரிவித்தது.

2014 இல் கையெழுத்திடப்பட்ட மின்ஸ்க் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தாமல் கடந்த 7 வருடங்களாக யூக்கிரெய்ன் தாமதப்படூத்தி வந்தமையினால் தான் இப் போரை ஆர்ம்பிக்கவேண்டி ஏற்பட்டது என ரஷ்யத் தரப்பு கூறுகிறது. ரஷ்யா, ஜேர்மனி, யூக்கிரெய்ன் ஆகிய நாடுகளிடையே மேற்கொள்ளப்பட்ட முத்தரப்பு ஒப்பந்தத்தின்படி டொஎட்ஸ்க், லுகான்ஸ்க் ஆகிய பிரதேசங்களிலுள்ள டொன்பாஸ் குடியரசுகளை யூக்கிரெய்ன் அங்கீகரிக்குமென ஏற்றுக்கொள்ள்ப்பட்டிருந்தது. இருந்தும் கடந்த 7 வருடங்களில் யூக்கிரெய்ன் அரசு அதை நடைமுறைப்படுத்தாமல் அதன் வலதுசாரி அவ்சோ நாஜி தீவிரவாதப் படையணிகள் மூலம் இப் பிரதேசங்களில் பயங்கரவாத நடவடிக்கைகளைத் தூண்டியும் வந்தது. இதைக் கட்டுப்படுத்தவே தாம் இக் குடியரசுகளை அங்கீகரித்தோம் என ரஷ்ய தரப்பு கூறுகிறது. அது மட்டுமல்லாது தாம் ஒரு நடுநிலை நாடு என்பதையும், அமெரிக்க, நேட்டோ இராணுவக் கூட்டுடன் சேரமாட்டோமென்தையும் யூக்கிரெய்ன் உறுதிசெய்தால் தமது ஆக்கிரமிப்பை மீளப்பெறுவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.