ரஷ்யாவுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் பதிவுகளை இனி முகநூல் அனுமதிக்கும்
யூக்கிரெய்ன் ஆகிரமிப்பின் எதிரொலியாக, ரஷ்ய இராணுவத்தினருக்கும், ரஷ்ய மக்களுக்கும் எதிரான வன்முறைகளைத் தூண்டும் பதிவுகளை முகநூல் இனி அனுமதிக்குமென அதன் தாய் நிறுவனமான மெற்றா பிளாட்ஃபோர்ம்ஸ் நிறுவனத்தின் உள்ளக மின்னஞ்சல்களை மேற்கோள் காட்டி ராய்ட்டர் நிறுவனம் செய்தி வெளியிட்டிருக்கிறது.
வன்முறையைத் தூண்டும் பதிவுகளை, அவை எங்கிருந்து வந்தாலும், அனுமதிப்பதில்லை என்பது முகநூல் நிறுவனத்தின் கொள்கையாக இதுவரை இருந்து வருகிறது. ஆனாலும் இதற்குத் தற்காலிக விலக்கை அளித்து ரஷ்யர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் பதிவுகளை அனுமதிக்க முகநூல் தற்போது அனுமதித்துள்ளது.
குறிப்பாக, ரஷ்ய அதிபர் விளாமிடிர் புட்டின் மற்றும் பெலாருஸ் அதிபர் அலெக்சாண்டர் லூக்கஷென்கோ ஆகியோரைக் கொலைசெய்யத் தூண்டும் பதிவுகளைத் தணிக்கை செய்யாது விடும்படி கோரும் உள்ளக மின்னஞ்சல்கள் பரிமாறப்பட்டுள்ளதாக ராய்ட்டர் தெரிவித்துள்ளது.
“யூக்கிரெய்னின் ரஷ்யா மேற்கொண்டுள்ள ஆகிரமிப்பு காரணமாக வன்முறையைத் தூண்டும் பதிவுகளுக்கு எதிரான சட்டங்களைத் தற்காலிகமாகத் தளர்த்துகிறோம். இதனால் “ரஷ்ய ஆக்கிரமிப்பாளரைக் கொலை செய்யுங்கள்” என்பதையொத்த வாசகங்களைக் கொண்ட பதிவுகளை அனுமதிக்கத் தீர்மானித்துள்ளோம். ஆனாலும் ரஷ்ய பொதுமக்களுக்கு எதிராகத் தெரிவிக்கப்படும் கருத்துக்களைக் கொண்ட பதிவுகளை நாம் அனுமதிக்கப் போவதில்லை” என மெற்றா பிளாட்ஃபோர்ம்ஸ் நிறுவனத்தின் பேச்சாளர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
முகநூல் நிறுவனத்தின் இக் கொள்கையால் எரிச்சலுற்ற அமெரிக்காவுக்கான ரஷ்ய தூதர் “முகநூலின் இத் தீவிரவாத நடவடிக்கைகளை அரசாங்கம் தலையிட்டு நிறுத்த வேண்டும். உண்மை எது என வரையறுக்கும் பொறுப்பை முகநூல் மற்றும் இன்ஸ்டாகிரம் பாவனையாளர்கள அவற்றுக்குக் கொடுக்கவில்லை; ஒரு நாட்டுக்கு எதிராக இன்னுமொரு நாட்டைத் தூண்டிவிடும் வேலைகளைச் செய்யக்கூடாது” என ரஷ்யத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
முகநூலின் இக் கொள்கை மாற்றம், ஆர்மீனியா, ஆஜெர்பஜான், எஸ்டோனியா, ஜோர்ஜியா, ஹங்கேரி, லட்வியா, லிதுவேனியா, போலந்து, ரோமேனியா, ரஷ்யா, சிலோவேக்கியா, யூக்கிரெய்ன் ஆகிய நாடுகளில் நடைமுறைக்கு வருகிறது.
முகநூல் பதிவுகளைக் கண்காணித்து அனுமதிக்கும் பணியிலுள்ளவர்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல்களில் ‘ஆக்கிரமிப்பில் ஈடுபட்டிருக்கும் ரஷ்யர்கள், ரஷ்ய இராணுவத்தினர் ஆகியோரைக் குறிவைத்து மேற்கொள்ளப்படும் மிரட்டல் மற்றும் வெறுப்புரைக்கும் பதிவுகளை அனுமதிக்கும்படி மெற்றா நிறுவனம் பணித்துள்ளது.
முகநூல் தளத்தில் ரஷ்ய ஊடகங்களின் செய்திகள் வெளிவருவதை முகநூல் தடைசெய்ததைத் தொடர்ந்து கடந்த வாரம் ரஷ்யா முகநூலைத் தடைசெய்திருந்தது. ருவிட்டர் நிறுவனத்தின் செயற்பாடுகளும் ரஷ்யாவில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. பல சமூக வலைத் தளங்கள் ரஷ்ய ஊடகமான RT மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளிவரும் ஸ்புட்னிக் ஆகிய செய்தித்தளங்களின் செய்திகளைப் பிரசுரிப்பதைத் தடை செய்துள்ளன.
அதே வேளை ரஷ்ய ஆக்கிரமிப்பு ஆரம்பிப்பதற்கு முன்பாக, 2014 இலிருந்து டொன்பாஸ் பிரதேசத்தில் ரஷ்ய-யூக்கிரெனியர்களுக்கு எதிராகப் போராடிவரும் ‘அசோவ் படையணி’ (Azov Battalion) எனப்படும் தீவிர வலதுசாரி நாஜி தீவிரவாதிகளைப் புகழும் பதிவுகளைத் தடைசெய்யாமல் அனுமதிக்கும்படியும் இம் மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது.