ரவீந்திரநாத் தாகூர் | பன்முகம் கொண்ட மேதாவி – இன்று அவர் மறைந்து 80 வருடங்கள்
இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்ற முதலாவது ஐரோப்பியரல்லாதவர்
ஆகஸ்ட் 7 தாகூர் மறைந்த தினம்.
வங்காள இசை, இலக்கியம் மற்றும் இதர கலைவடிவங்களை நவீன உத்திகளுடன் மீளுருச் செய்தவரும், இந்தியாவின் பன்முகம் கொண்ட மேதாவியும், ஐரோப்பாவுக்கு வெளியே, இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்ற முதலாவது ஆளுமையுமாகிய ரவீந்திரநாத் தாகூர் மறைந்து இந்றுடன் 80 ஆண்டுகள் ஆகின்றன.
அதற்கப்பால், நாம் இலங்கையர்கள் உட்பட, இந்தியரும் வங்க தேசத்தினரும் அடிக்கடி பாராயணம் செய்யும் தேசீய கீதம் – ‘ஜந கண மந’ (இந்தியா), ‘அமார் ஷோனார் பங்ளா’ (வங்க தேசம்), ‘நமோ நமோ மாதா’ (இலங்கை) – தாகூரினால் இயற்றப்பட்டவை அல்லது அவரது கவிதையிலிருந்து மறுவடிவமெடுத்தவை என்பதற்காகவும் நாம் அவரை நினைவுகூரக் கடமைப்பட்டவர்கள்.
பிறப்பு, வரலாறு:
தேவேந்திரநாத் தாகூர், சாரதா தேவி தம்பதிகளுக்கு, மே 7, 1861 இல் கல்கத்தாவில் பிறந்தவர் ரவீந்திரநாத் தாகூர். வசிதியான குடும்பத்தில் பிறந்த அவர் 14 வயதில் தாயை இழந்ததும் தந்தையுடன் இந்தியாவைச் சுற்றிப் பார்த்துவிட்டுத் திரும்பினார். திரும்பிய கையோடு, 1877 இல் நீண்ட கவிதை ஒன்றை எழுதி முடித்தார். வங்காள இலக்கியத்தின் தந்தை என வர்ணிக்கப்படும் (1352 – 1448)) வித்யாபதியின் மைதிலி மொழியில் எழுதப்பட்ட கவிதை நடையை ஒத்த தாகூரின் இக் கவிதையே அவரது முதலாவது இலக்கியப் படைப்பு.
17 வயதில் அவர் கல்வியைத் தொடர்வதற்காக, இங்கிலாந்தின் பிறைட்டன், கிழக்கு சசெக்ஸ், நகரிலுள்ள பாடசால ஒன்றில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சேக்ஸ்பியர் மற்றும் ஆங்கில, ஐரிஷ் மற்றும் ஸ்கொட்டிஷ் நாட்டார் பாடல்களினால் ஈர்க்கப்பட்டு அவற்றைக் கற்கிறார். அங்கு கற்ற ஐரோப்பிய கலை இலக்கியத்தின் நவீன நகர்வுகளை வங்காள இலக்கியத்தில் புகுத்திப்பார்க்க எண்ணம் கொண்டு 1880 இல் இந்தியாவுக்குத் திரும்பி வந்த அவர் வங்காள இலக்கியத்தில் தன் முயற்சிகளைத் தொடர்கிறார்.
1912 இல் அவர் வெளியிட்டுப் பின்னர் மொழிமாற்றம் செய்யப்பட்டிருந்த ‘கீதாஞ்சலி’ கவிதைத் தொகுப்பிற்ககாக 1913 இல் அவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைக்கிறது. அத்தோடு, 1915 இல் அவருக்கு இங்கிலாந்தின் ஐந்தாம் ஜோர்ஜ் மன்னரால் ‘பிரபு’ அந்தஸ்தும் வழங்கப்படுகிறது. ஆனால் பின்னர் சுதந்திரப் போராட்ட காலத்தில் நடைபெற்ற ஜாலியன் வாலா படுகொலையை எதிர்த்து அவர் தனது பிரபு பட்டத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறார்.
ரவீந்திரநாத் தாகூரின் வாழ்க்கை அநுபவங்களும், கவிதை, உரைநடை, கலை வடிவங்களில் அவர் கொண்டிருந்த அளப்பரிய திறமையும் அவற்றை தேசத்தின் மீதான காதலாக வெளிப்படுத்துவதில் அவை கையாண்ட உத்திகளும் அவரை மேதாவி எந்ற ஸ்தானத்தில் வைத்துப் போற்றுவதற்குப் போதுமானவை.
Related posts:
- இந்நூற்றாண்டின் தலைசிறந்த ஓவியர் இளையராஜா கோவிட் தொற்றினால் மரணம்
- தமிழ் மொழிக்குத் தனியான அமைச்சு வேண்டும் – கமல் ஹாசன் முதலமைச்சருக்குக் கடிதம்
- தமிழ் ஒரு இனிமையான மொழி, அதைக் கற்காதது குறித்து வருத்தமடைகிறேன் – பிரதமர் மோடி
- இந்தியன் 2 | லைகா, சங்கர் பிணக்கைப் பேசித் தீர்த்துக்கொள்ளும்படி உயர்நீதிமன்றம் உத்தரவு