Sri Lanka

ரவிராஜ் கொலையின் பின்னால் கருணாவா? – மஹிந்த தரப்பு மறைத்த கருணாவின் ரகசியங்கள்

ஜூன் 29, 2020: ‘நான் கொறோணாவை விட மோசமானவன்’ என்ற கருணாவின் பேச்சு தொடர்பாக குற்ற விசாரணைப் பிரிவு கருணாவிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்திருக்கிறது எனினும் அதிலுள்ள விடயங்கள் முழுமையாக வெளியிடப்படுமா என்பதில் எதிர்க்கட்சிகளும், ஊடகங்களும் நம்பிக்கை கொண்டுள்ளதாகத் தெரியவில்லை.

இதற்கு முன்னர், மஹிந்த ராஜபக்ச ஆட்சியின்போது, கருணா கும்பல் பற்றிய பல விடயங்களை, உயர் பீடத்து உத்தரவு காரணமாக, குற்ற விசாரணைப் பிரிவு மறைத்துவிட்டது என்பதைக் காரணம் காட்டுகின்றனர் அதிருப்தியாளர். அத்தோடு மஹிந்த ஆட்சியின்போது கருணாவை மஹிந்த தரப்பு பாவித்து நிகழ்த்திய பல குற்றச்செயல்களின் பின்னால் குற்ற விசாரணைப் பிரிவும் சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதனால் இவ் விசாரணைகள் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என்கிறார்கள் அவர்கள்.‘கள்ளப் பாஸ்போட்டில்’ கருணா லண்டனுக்கு அனுப்பப்பட்டமை

முந்தைய ராஜபக்ச ஆட்சியின்போது கருணா பிரித்தானியாவுக்கு அனுப்பப்பட்டார். இலங்கை சூழல் நிர்வாகம் (Sri Lanka Environmental Authority) என்ற அரச நிறுவனத்தின் பணிப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்ட அவர், புலனாய்வுப் பிரிவினால் தயாரித்து வழங்கப்பட்ட ‘கள்ள பாஸ்போட்டின்’ மூலம், அழைக்கப்பட்ட நிகழ்வொன்றில் அரச சார்பில் கலந்துகொள்ள லண்டனுக்கு அனுப்பப்பட்டிருந்தார்.

போரில் கருணாவின் உதவிகளுக்குப் பிரதியுபகாரமாக, அவரது குடும்பத்தினரைப் பாதுகாப்பாக வெளிநாடொன்றுக்கு அனுப்புவதுதான் இதன் நோக்கம் என அப்போது புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டது. லண்டனில் வாழ்ந்த முன்னாள் இயக்கப் பிரமுகர் ஒருவர் கருணாவின் லண்டன் வருகையின்போது உதவிகளைச் செய்திருந்தார் எனவும் அப்போது பேசப்பட்டது.

ஆனாலும், கருணா கள்ள பாஸ்போர்ட்டில் நாட்டுக்குள் நுழைந்தார் என்ற குற்றச்சாட்டில் பிரித்தானிய அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு அதற்காக அவருக்கு இரண்டு வருட சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டது. இதன் பின்னர்தான் பிரித்தானியா தனது விசா வழங்கும் அலுவலகத்தை இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு மாற்றியது.

கருணாவின் கள்ள பாஸ்போர்ட் விடயம் பற்றி பிரித்தானியா இலங்கை குற்றப்பிரிவுத் திணைகளத்துக்கு அறிவித்திருந்தும், மேலிடத்து உத்தரவின் பேரில் அது கருணா மீது விசாரணைகளை மேற்கொள்ளவில்லை.


ரவிராஜ் கொலை


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பா.உ. நடராஜா ரவிராஜைக் கொலைசெய்வதற்குப் பாவிக்கப்பட்ட கைத்துப்பாக்கியை புலனாய்வுப் பிரிவினரே கருணாவுக்கு வழங்கியிருந்தார்கள் என குற்ற விசாரணைப் பிரிவினரின் விசாரணைகளின்போது தெரியவந்திருந்தது.

கருணா குழுவுக்கு 400 தானியங்கித் துப்பாக்கிகள் வழங்கப்பட்டன

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா வெளியேற்றப்பட்ட பின்னர் இரண்டு குழுக்களிடையேயும் மோதல்களை ஊக்குவிப்பதற்காக, கருணா குழுவிற்கு 400 தானியங்கித் துப்பாக்கிகளைப் புலனாய்வுப் பிரிவு வழங்கியிருந்ததாகவும், கந்தளையிலுள்ள ரகசிய இராணுவத் தளத்தில் வைத்து 2007 ம் ஆண்டு இது நடைபெற்றதாகவும் இதன்போது வழங்கப்பட்ட ஒரு துப்பாக்கியே ரவிராஜைக் கொல்லப் பாவிக்கப்பட்டதெனவும் தகவல்கள் கசிந்துள்ளன.

ஆனாலும் இவ் விசாரணைகள் மேலிடத்திலுள்ள இரும்புக் கரங்களால் நிறுத்தப்பட்டன எனப்படுகிறது.

இக் காரணங்களுக்காக, தற்போது கருணா மீது நடத்தப்படும் ‘விசாரணை’ மேலும் தென்னிலங்கை வாக்காளரைக் கிளறிவிடும் ஒரு முயற்சியாகப் பாவிக்கப்படுமெனவே நம்பலாம்.