NewsSri Lanka

ரத்வத்த விவகாரம் | அனுராதபுரம் தமிழ்க் கைதிகள் அடிப்படை உரிமை மனு தாக்கல்


செப்டம்பர் 12, மாலை 6 மணிக்கு அனுராதபுரம் சிறைச்சாலைக்குள் மதுபோதையில் அத்துமீறி நுழைந்து அங்கு பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்ப்ட்டுள்ள தமிழ்க் கைதிகளைத் துப்பாக்கி கொண்டு கொலை மிரட்டல் செய்தமை தொடர்பாக ராஜாங்க அமைச்சர் லோஹன் ரத்வத்த மீது நேற்று (30) உயர்நீதி மன்றத்தில் கைதிகள் சார்பில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ரத்வத்தவுடன் கூடவே, நீதியமைச்சர், சட்டமா அதிபர், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர் ஆகியோர் இம் மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

பூபாலசிங்கம் சூரியபாலன் உள்ளிட்ட எட்டு தமிழ்க் கைதிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஆகியோர் இவ்வழக்கை முன்னெடுக்கிறார்கள்.

சிறைச்சாலையில் நடைபெற்ற சம்பவத்தின்போது, மாலை 6 மணியளவில் அமைச்சர் ரத்வத்தயும் அவரோடு கூடவந்த, மதுபோதையிலிருந்த அவரது நண்பர்களும், சிறைச்சாலைக்குள் சென்று சிறைக் கைதிகளை வெளியே வருவித்து, அவர்களை முழந்தாளில் நிற்கவைத்து அவர்களது தலையில் கைத்துப்பாக்கியை வைத்து மிரட்டியதாகவும் இதன் மூலம் தமது அடிப்படை உரிமைககள் மீறப்பட்டுள்ளதாகவும் கைதிகள் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக் கைதிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதி தனக்கு பூரண அதிகாரத்தைத் தந்துள்ளதாக அமைச்சர் ரத்வத்த இச் சம்பவத்தின்போது கைதிகளை மிரட்டியிருந்தார் எனவும் இதனால் தம் உயிருக்கு ஆபத்து விளையலாம் எனத் தாம் அஞ்சுவதாகவும் இக் காரணங்களுக்காகத் தம்மை விடுவிக்கும்படியும் அல்லாதுபோனால் யாழ்ப்பாணச் சிறைச்சாலைக்கு மாற்றிவிடும்படியும் இக் கைதிகள் தமது விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளனர்.