Sri Lanka

ரணில் விக்கிரமசிங்க, எமக்குக் கிடைக்கத் தவறிய சிறந்த ஜனாதிபதி – மங்கள சமரவீர


ஈஸ்வரன் றட்ணத்துடன் ஒரு உரையாடல்

நன்றி: டெய்லி மிரர் லங்கா


உரையாடலின் சாராம்சம்

  • சஜித் பிரேமதாசவின் ஜனாதிபதி தேர்தல் தோல்விக்கு நான் பொறுப்பல்ல. எனக்குத் தெரிந்த தேர்தல்களில் மிகவும் ஒழுங்கற்ற முறையில் அவரது தேர்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
  • ஆகஸ்ட் 5 தேர்தல்களின் பின்னர் மக்கள் தாம் விட்ட பிழைகளை உணர்வார்கள். அதன் பிறகுதான் என் போன்றோரது தேவை அதிகம் இருக்கும். நான் இந்நாட்டை நேசிக்கும் ஒருவன். நான் இதை விட்டு எங்கும் ஓடிவிடப் போவதில்லை.
  • டி.எஸ். சேநநாயக்கா முதல் கோதாபய வரை எல்லோரும் நல்ல நோக்கத்துடனேதான் அக் கதிரையில் அமர்கிறார்கள். ஆட்களைக் கடத்த வேண்டும், கொல்ல வேண்டும், திறைசேரியில் களவெடுக்கவேண்டுமென்று நினைத்து அவர்கள் அப்பதவிக்கு வருவதிலை. ஆனால் அந்த ‘முடி’ அவர்களுக்குக் கொஞ்சம் பாரமாகப் போய்விடுகிறது. சிலருக்குப் பைத்தியம் பிடித்து தாம் தான் இந் நாட்டின் அரசர்கள் என்று நினைக்கவாரம்பித்து விடுகிறார்கள்.
  • எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கா ஒரு அப்பழுக்கற்ற மனிதர். ஆனாலும் தனது வீட்டிற்கு முன் சத்தியாக்கிரகம் செய்த சில புத்த பிக்குகளைத் திருப்திப்படுத்துவதற்காக பண்டா-செல்வா ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்தார். “உங்களது நிர்ப்பந்தத்துக்காகாக நான் இதை இப்போது செய்கிறேன். 30-40 வருடங்களுக்குப் பிறகு இதன் விளைவுகளை நீங்கள் உணர்வீர்கள்”என்றவர் சொல்லியிருக்க வேண்டும். அவர் போத்தலில் இருந்து திறந்துவிட்ட பூதத்தைத் திருப்பியடைக்க முடியாமல் நாம் எல்லோரும் திண்டாடுகிறோம்.
  • ஆரம்பத்தில் தமிழர்கள் தனிநாடு கேட்கவில்லை. மொழிக்கான சம அந்தஸ்தை மட்டுமே கேட்டார்கள். அதை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களாக நாம் இருந்திருக்கிறோம். இதனால் தான் உலகிலேயே அதி பயங்கரவாத இயக்கம் எங்கள் மண்ணில் தோன்றியது.
  • 2009 இல் போர் முடிந்த கையோடு மஹிந்த ராஜபக்சவுக்கு அரியதொரு சந்தர்ப்பம் கிடைத்தது. வெற்றிக் களிப்பில் மஹாவம்ச நாடகத்தை ஆடியதை விட்டுவிட்டு நாட்டை ஒற்றுமையாக்க அச்சந்தர்ப்பத்தை அவர் பாவித்திருக்கலாம். அது நடந்திருந்தால் இன்று இலங்கையின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவராக அவர் கொண்டாடப்பட்டிருப்பார். துரதிர்ஷ்டவசமாக அவரும் தான் ஒரு துட்டகெமுனுவாக நினைத்து சகதிக்குள் அமிழ்ந்து போனார். அவர் ஆரம்பித்த பயணத்தை கோதாபய இன்னுமொரு படி மேலே எடுத்துச் செல்கிறார்.


  • எனது கருத்துக்களோடு உடன்படக்கூடிய ஒருவர், ரணில் விக்கிரமசிங்க மட்டுமே. ஆனால் அவர் ஒரு மக்கள் விருப்பத்துக்குரிய (populist) அரசியல்வாதியல்லர். நாம் தவறவிட்ட ஒரு சிறந்த ஜனாதிபதியென்றால் அது ரணில் விக்கிரமசிங்கதான்.
  • சஜித் பிரேமதாசவுக்குத் தேர்தலில் நான் ஆதரவளித்ததற்குக் காரணம், அப்போதிருந்த அமைச்சர்களில் அவர் கை சுத்தமானவர் என்பதால்.
  • வெளியுறவு விடயங்களில் எமது அரசு பல முன்னேற்றஙகளைக் கண்டிருந்தது. அமெரிக்காவுடன் நல்லுறவை வளர்த்திருந்தோம். ஜோன் கெரி, சாமந்தா பவர் போந்ற உயரதிகாரிகள் முதன் முதலாக இலங்கைக்கு வந்திருந்தார்கள். வியட்நாமுக்கு செந்றிருந்த ஜனாதிபதி ஒபாமாஇலங்கைக்கு வர விரும்பியிருந்தார். எங்கள் நாட்டை அவர் “Good news country” என அழைப்பதுண்டு. எப்போதும் இலங்கையைப் பற்றிக் கேள்விப்படுவது நல்ல செய்தி என்பதால் அவர் அப்படி அழைப்பார். அவர் வர விரும்பிய நாளன்று இலங்கையில் வெசாக் என்பதால் அவரால் வர முடியவில்லை.


  • மனித உரிமைகள் சபை விவகாரம் ஒரு தனிக் கதை. போர் முடிந்து இரண்டு நாட்களின் பின்னர் பான் கி மூன் இலங்கைக்கு வந்திருந்தார். அப்போது நடந்த பேச்சுவார்த்தைகளில் சர்வதேச விசாரணை ஒன்றுக்கு மஹிந்த ராஜபக்ச உறுதி வழங்கியிருந்தார். இதைத் தொடர்ந்து ஜெனிவாலில் இரு தரப்பும் நல்லிணக்க முயற்சிகளை மேற்கொள்வதாக ஒப்பந்தமும் செய்திருந்தார்கள். வழக்கம்போல, அப்போதைய தடைகளை மீறுவதற்காக வழஙகப்பட்ட பொய்களே அவை. இறுதியாக, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா.மனித உரிமைகள் சபை ஆகியன இணைந்து, இலங்கையின் பங்களிப்பு இல்லாமலேயே, இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை ஒன்றுக்கான பிரேரணை ஒன்றை மார்ச் 2015 இல் கொண்டுவந்தன. அதுவே இறுதியான அறிக்கை, அதுவும் இலங்கைக்கு மிகவும் பாதகமானதான அறிக்கை. அதன் அடுத்த கட்டமாக, இலங்கை மீதான பொருளாதாரத் தடை, அத்தோடு ராஜபக்ச குடும்பத்தினர் மீதான பயணத்தடையும் கொண்டுவரப்பட்டிருக்கலாம். மஹிந்தஹ்வினதும், நாட்டினதும் அதிர்ஷ்ட்டத்தால் ஜனவரி 8ம் திகதி ஆட்சி மாறியது. நான் வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்றதும், ஜெனிவாவுக்குச் சென்று அப்போதைய ஆணையாளர் செயிட்டுடன் பேசி, தற்போது இலங்கையில் புதிய அரசு பொறுப்பேற்றிருக்கிறது, அங்கு சுயாதீன நீதிமன்றம் இயங்கவிருக்கிறது. நாங்களே எங்கள் போர்க்குற்றங்கள் மீதான விசாரணைகளை மேற்கொள்வோம் எனக் கூறி சர்வதேச விசாரணையை நிறுத்தியிருந்தோம். இது அப்போது எங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. அமெரிக்கா, பிரித்தானியா, ஜெர்மனி, ஐ.நா. என்று சகலரையும் இணங்கவைத்து விசாரணைகளை எமது கைகளில் எடுத்துக்கொண்டோம்.

ஆங்கில மொழியிலான முழுமையான நேர்காணலைப் பார்க்க இந்த இணைப்பின்வழி செல்லுங்கள்