ரணில் விக்கிரமசிங்க இலங்கையின் அடுத்த ஜனாதிபதி!
134 வாக்குகளால் வெற்றி
கோதாபய ராஜபக்ச நாட்டை விட்டுத் தப்பியோடியதைத் தொடர்ந்து ஜூலி 20 (இன்று) நடத்தப்பட்ட பாராளுமன்ற வாக்கெடுப்பில் பதில் ஜனாதிபதியாகக் கடமையாற்றும் ரணில் விக்கிரமசிங்க 134 வாக்குகளைப் பெற்று புதிய ஜனாதிபதியாகத் தெரிவாகியிருக்கிறார்.
இவரோடு போட்டியிட்ட மொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த டலஸ் அளகப்பெருமாவுக்கு 82 வாக்குகளும், ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திசநாயக்காவுக்கு 3 வாக்குகளும் கிடைத்திருக்கின்றன.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு முன்னணி, முஸ்லிம் கட்சிகள், வாசுதேவ-வீரவன்ச-கம்மன்பில கூட்டணி மற்றும் சில பொதுஜன பெரமுன உதிரிகள் டலஸ் அளகப்பெருமாவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தன. இரகசிய வாக்கெடுப்பாக நடைபெற்ற இத் தேர்தலில் எவர் எவருக்கு வாக்களித்திருந்தநர் எனக் கூறமுடியாது. மொத்தம் 225 உறுப்பினர்களில் இருவர் வாக்களிக்காமலும், 4 வாக்குகள் செல்லுபடியாமல் ஆக்கப்பட்டும் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா ஆரம்பத்தில் வேட்பாளராகத் தன்னை அறிமுகப்படுத்தியிருந்தாலும் நாட்டின் நன்மை கருதி தான் டலஸ் அளகப்பெருமாவுக்கு ஆதரவளித்து போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டாமென அரகாலயா ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரச்சாரம் செய்திருந்தனர்.
இவ் வெற்றியின் காரணமாக அரகாலயா மக்கள் எழுச்சி தொடர்ந்தும் உக்கிரமாக முன்னெடுக்கப்படுவதற்கான சாத்தியங்கள் உண்டு. வன்முறைகள் ஏதும் நடந்துவிடாதிருக்க கொழும்பு முழுவதையும் ஏற்கெனவே முப்படையினர் முற்றுகையிட்டுள்ளனர்.