ரணில் விக்கிரமசிங்க அடுத்த பிரதமர்?
நாளை (மே 13) ஜனாதிபதி அறிவிப்பார்?
நாளை (மே 13), ரணில் விக்கிரமசிங்கவை நாட்டின் புதிய பிரதமராக நியமிக்க ஜனாதிபதி முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் பதவி விலகலைத் தொடர்ந்து சரத் ஃபொன்சேகா, சஜித் பிரேமதாச உட்படப் பலரையும் பிரதமர் பதவியை ஏற்கும்படி ஜனாதிபதி கேட்டிருந்ததாகவும் அதே வேளை, நேற்று முதல் ரணில் விக்கிரமசிங்கா ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பொன்றை நிகழ்த்தி வருவதாகவும் செய்திகள் வெளிவந்திருந்தன. இந்த நிலையில் ரணில் விக்கிரமசிங்கவையே பிரதமராக நியமிக்க ஜனாதிபதி முடிவெடுத்துள்ளதாகச் செய்திகள் கசிந்துள்ளன.
பிரதமர் பதைவியை ஏற்பதானால் தான் முன்வைக்கும் பல நிபந்தனைகளுக்கு ஜனாதிபதி இணங்க வேண்டுமென சஜித் பிரேமதாச கேட்டுவந்தார். அதில் முக்கியமான ஒன்று ஜனாதிபதியின் உடனடியான பதவி விலகல். இதே வேளை நாட்டின் பொருளாதார அவசரகால நிலையைக் கருத்தில் கொண்டு நிபந்தனைகளைத் திணிக்காமல் பதவியை ஏற்கும்படி அவரது கட்சியின் பல உறுப்பினர்கள் வற்புறுத்தியிருந்தும் அவர் அதற்குச் சம்மதிக்கவில்லை. ஜனாதிபதி பதஹ்வி விலகினாலேயன்றித் தான் பிரதமர் பதஹ்வியை ஏற்கப் போவதில்லை என சரத் பொன்சேகாவும் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இக் குழப்ப நிலையில் பா.உ. ஹரிண் ஃபெர்ணாண்டோ உட்படப் பல உறுப்பினர்கள் தாம் கட்சியிலிருந்து விலகப்போவதாகவும் அறிவித்திருந்தனர்.
தற்போது தனது நிபந்தனைகளைத் தளர்த்தி, முக்கியமான நான்கு நிபந்தனைகளுடன் தான் பிரதமர் பதவியை ஏற்கத் தயார் என சஜித் பிரேமதாச அறிவித்திருக்கிறார். அவை:
- ஒரு குறிக்கப்பட்ட கால அவகாசத்தில் ஜனாதிபதி பதவி விலக வேண்டும்
- அமையப்போகும் அனைத்துக் கட்சி இடைக்கால அரசில் ஜனாதிபதியின் தலையீடு இருக்கக்கூடாது
- நிறைவேற்று அதிகாரங்களைக்கொண்ட ஜனதிபதி முறைமை அகற்றப்பட வேண்டும்
- பொருளாதார நிலைமை ஸ்திரமாகியதும் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்
இதே வேளை அமையப் போகும் புதிய பாராளுமன்றத்தில் 5 அமைச்சுக்களை மட்டுமே சமாகி ஜனபலவேகய கட்சிக்கும் சுமார் 15 அமைச்சுக்களை மொட்டுக் கட்சிக்கும் கொடுக்கவேண்டுமென ஜனாதிபதி வற்புறுத்தி வருவதாகவும் தெரிகிறது. இதற்காகவே ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக்க ஜனாதிபதி உத்தேசித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தற்போதுள்ள நெருக்கடியான நிலையில் ராஜபக்ச குடும்பத்துக்கு மிக நெருக்கமான ரணில் விக்கிரமசிங்க பிரதமரானால் அக்குடும்ப அங்கத்தவர்களுக்கு உடனடியாக எந்தவித ஆபத்தும் ஏற்படாது என்பதுவே முக்கிய காரணம் எனவும் அதே வேளை நாட்டின் பொருளாதார நிலையைச் சீர் செய்ய சர்வதேச உறவுகளைப்பேணிவரும் ரணில் விக்கிரமசிங்கவினால் மட்டுமே முடியுமெனவும் ஜனாதிபதி நம்புவதாகக் கூறப்படுகிறது.
மே 13 அறிவிக்கப்படவிருக்கும் விக்கிரமசிங்கவின் நியமனத்துக்கு பெரும்பாலான சிங்கள, தமிழ், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக லங்கா தீப செய்தி வெளியிட்டுள்ளது. பிரதமர் பதவியை ஏற்கும்படி ஜனாதிபதி விடுத்த கோரிக்கையை ஏற்க இதர கட்சித் தலைவர்கள் மறுத்ததையடுத்து, ஏற்கெனவே ஆளும்கட்சிக் கூட்டணியில் இருக்கும் உறுப்பினர்களின் உதவியோடு ரணிலின் தலைமையில் மீண்டும் ஆட்சியை அமைக்க ஜனாதிபதி தயாராகுவதாகக் கூறப்படுகிறது.
ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது, நாட்டின் பிரச்சினையைத் தீர்க்கத் தன்னிடம் திட்டமொன்று இருப்பதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்ததாகவும் இதனால் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணிலைப் பிரதமராக ஏற்க இணங்கியுள்ளார்கள் எனவும், உள்ளக, நம்பகரமான மூலங்களை மேற்கோள்காட்டி லங்கா தீப செய்தி வெளியிட்டுள்ளது.