ரணில் தலைமையில் தேசிய அரசாங்கம்?

13 ஆவது திருத்தம் முழுமையாக அமுலாகலாம்?

சிங்கள-தமிழ் புதுவருடத்துக்கு முன்னர் அரசு மாற்றம்?

சிறிலங்கா மக்கள் முன்னணி (SLPP) , ஐக்கிய தேசியக் கட்சி (UNP) ஆகியன இணைந்த தேசிய அரசாங்கம் ஒன்று எதிர்வரும் சிங்கள-தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் உருவாக்கப்படவுள்ளதாக, உள்ளகத் தகவல்களை மேற்கோள் காட்டி, லங்கா நியூஸ் வெப் செய்தி வெளியிட்டுள்ளது. இவ்வரசாங்கத்தில் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும், பசில் ராஜபக்ச தொடர்ந்தும் நிதி அமைச்சராகவும் இருப்பார்கள் எனவும் அது தெரிவிக்கிறது.

நாட்டின் மோசமடைந்துவரும் பொருளாதார நிலையைச் சீர்ப்படுத்த உடனடியாக சர்வதேச உதவிகள் தேவைப்படுகின்ற காரணத்தால் இப்படியான ஒரு ஒழுங்கு செய்யப்படுவதாகவும் இதன் பின்னால் இந்தியாவின் அழுத்தம் இருப்பதாகவும் அது கூறுகிறது.

இத் தேசிய அரசாங்கம் அமைக்கப்படும்போது பிரதான எதிர்க்கட்சியான சமாகி ஜன பலவேகயவிலிருந்து சுமார் 15 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐ.தே.கட்சிக்குத் தாவலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்தோடு மக்கள் முன்னணி கட்சிக்கு வழங்கப்பட்ட தேசியப் பட்டியலிலிருந்து 5 பா.உ. நியமனங்களை ரத்துச் செய்துவிட்டு அவ்விடங்களுக்கு ஐ.தே.க. உறுப்பினர்களை நியமிக்க பசில் ராஜபக்ச இணங்கியிருப்பதாகவும் தெரிகிறது.

இத் தேசிய அரசாங்கத்தின் உருவாக்கத்தின் பின்னால் இந்தியாவின் மிகப்பெரிய பங்கு இருக்கிறது எனவும் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் முழுமையாக அமுல்செய்யப்படுவதற்கான சாத்தியம் உண்டு எனவும் கூறப்படுகிறது. அத்தோடு இத் தேசிய அரசாங்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணையுமெனவும் அதில் மூவருக்கு பலம் வாய்ந்த அமைச்சுப் பதவிகள் வழங்கப்படலாமெனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு பல தசாப்தங்களாக இழுபடும் தமிழ் மக்களின் தேசியப்பிரச்சினை சுமுகமாகத் தீர்க்கப்படுவது அவசியம் என இந்தியா கருதுவதாகவும் கூறப்படுகிறது.

தேசிய அரசாங்கம் அமைக்கப்படுவதன் மூலம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன முன்வைக்கும் நிபந்தனைகளையும் இலகுவாகச் சமாளிக்க முடியுமெனவும் சர்வதேசத்தின் உதவியுடன் இலங்கையை மேலும் அபிவிருத்தி செய்யமுடியுமெனவும் இலங்கை நம்புவதாகவும் கூறப்படுகிறது. இப்படியான முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியவர்கள் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டது இப் புதிய நகர்வின் ஒரு அங்கமாக இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. (லங்கா நியூஸ் வெப்)