ரணில்-சம்பந்தன் ஒப்பந்தமொன்றை உருவாக்குங்கள் – பா.உ. சாணக்கியன்

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வைப் பற்றுத் தருவதற்காக ரணில்-சம்பந்தன் ஒப்பந்தமொன்றை உருவாக்கும்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் ராசமாணிக்கம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.

“75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வொன்று நிறைவேற்றப்படுமென ஜனாதிபதி கூறியிருந்தார். இதை நிறைவேற்றும் பொருட்டு விக்கிரமசிங்க – சமபந்தன் ஒப்பந்தமொன்றை நிறைவேற்றுங்கள்.” என பா.உ. ராசமாணிக்கம் பாராளுமன்றத்தில் பேசும்போது கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார். உள்நாட்டு சமூகங்களையும் சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றும் வகையில் வாக்குறுதிகளை வெறுமனே அறிவிக்காமல் காத்திரமாக ஏதாவது செய்யுங்கள். கடந்த 75 வருடங்களாக நாங்கள் எமது அரசியல் உரிமைகளுக்காகப் போராடி வருகின்றோம், அடுத்த 100 வருடங்களுக்கு அதை நீட்டிச் செல்லவும் நாங்கள் தயார். பீனிக்ஸ் பறவைகள் போல நாங்கள் மீண்டும் மீண்டும் எழுவோம். சமஷ்டி முறையிலான தீர்வொன்றைப் பெறுவதற்காக அனைத்து தமிழர் கட்சிகளும் ஒன்றிணையவும் தயாராகவிருக்கிறோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

“சகோதரர்களான முன்னாள் ஜனாதிபதி கோதாபயவிற்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்குமிடையிலேயே அபிப்பிராய பேதங்கள் இருக்கும்போது தமிழர் கட்சிகளிடையே பேதங்கள் இருக்கக்கூடாதா? எமது மக்களின் அடிப்படை உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காக நாங்கள் எமது வேறுபாடுகளைக் களைந்து ஒன்றுபடவும் தயார்” என அவர் தெரிவித்தார்.

ராசமாணிக்கம் தனது பாராளுமன்ற உரையின்போது மாவீரர் நாளை நினைவுகூரும் வகையில் தமது மக்களுக்கான அவர்களது அர்ப்பணிப்புகளைக் குறிப்பிட்டும் பேசியிருந்தார்.

அடுத்த வாரம் நடைபெறவுள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின்போது 75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்பாக தமிழர் பிரச்சினைக்கு தீர்வொன்றைக் காணும் வகையிலான உரையாடல் ஒன்றை மேற்கொள்ள விக்கிரமசிங்க அறிவித்திருந்தார்.

காணொளி: தி ரமில்ஜேர்ணல்

“வடக்கிலுள்ள தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றித் தற்போது யோசிப்போம். சில அரசியல் கைதிகளை நாங்கள் விடுதலை செய்திருக்கிறோம். மேலும் பலரை விடுதலை செய்வோம். வடக்கின் அபிவிருத்திக்கான திட்டமொன்றை நாம் தீட்டியுள்ளோம். மீளாக்க ஆற்றல் (renewable energy) சம்பந்தமாக வடக்கில் ஐதரசன் ஆற்றலைப் பாவிக்கமுடியுமா என வள ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம். இதனால் வடக்கு வளம் பெறும். மீளாக்க ஆற்றலிம் பெரும்பங்கு புத்தளத்திலிருந்து திருகோணமலை வரை புதைந்து கிடக்கிறது. திருகோணமலையை ஒரு சுற்றுலாப் பிரதேசமாக அபிவிருத்தி செய்யும் திட்டங்களையும் நாம் தீட்டியுள்ளோம். நாம் அனைவரும் இலங்கையர்கள். நாம் எல்லோரும் இணைந்து 75 ஆவது சுதந்திர தினத்தின் முன் எமது பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சிப்போம்” என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கிறார்.