மாயமான்

ரணில் – கூட்டமைப்பு பேச்சுவார்த்தை – முக்காடு யார் தலைகளில்?

மாயமான்

அப்போ செவ்வாயன்று (18) ஜனாதிபதி விக்கிரமசிங்க த.தே.கூ.ட்டமைப்பைப் பேச்சுவார்த்தைக்கு என்ன நடந்தது என்று உங்களில் சிலர் அப்பாவித்தனமாகக் கேட்கலாம். “சொன்னோம் பார்த்தீர்களா?” என இன்னும் சிலர் சட்டைக் கொலர்களை உயர்த்திவிட்டு நமுட்டுச் சிரிப்புகளை உதிர்க்கலாம். இரண்டு பேருக்கும் மறுமொழி கடைசியில்.

So, கூட்டமைப்பை அவசரம் அவசரமாகச் சந்திக்கவென ரணில் அழைத்திருந்ததாக PTI மூலம் இந்திய காதுகளுக்குக் கேட்கக்கூடியதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தண்டோரா போட்டிருந்தது. 20-21 இல் (நாளை, மறுதினம்) ரணில் பரிவாரங்களுடன் தனது முதலாவது உத்தியோகபூர்வ இந்திய பயணத்தை மேற்கொள்ளவிருப்பதால் இந்தியாவுக்குத் தட்டில் வைத்துக் கொடுப்பதற்கு ஏதாவது வேண்டுமே என்பதற்காக இத் திடீர் அறிவிப்பை அவர் செய்திருக்கலாம். டெல்ஹியின் உத்தியோகபூர்வ தமிழர் பிரதிநிதிகள் – இவர்களில் சிலர் கோமாளிகளாக இருந்தாலும்கூட – கூட்டமைப்பினர் என்ற விடயம் ரணிலுக்குத் தெரியும். எனவேதான் அந்த பரபரப்பான தண்டோரா. தனது நகர்வுகளை அடுத்தவர் அறியாமல் இப்படியான ‘அதிரடி’ நடவடிக்கைகள் மூலம் செய்துகாட்டுவது சிங்கனின் பண்பு என்பது தெரிந்த விடயம். 2002 இல் தீர்வுப் பொதியுடன் ஜனாதிபதி சந்திரிகாவுக்கே சொல்லாமல் தலைவரைச் சந்திக்கப் போய்வந்தவர். “தெரிந்தால் குழப்பிவிடுவார்கள்” என்பது அப்போது அவரது பதிலாக இருந்தது எனவும் பின்னர் தெரிந்ததும் சந்திரிகா அதைக் குழப்பியதும் வரலாறு. எனவே சிங்கன் இப்படித்தான் வேலை செய்வார் என்பதை நாம் எதிர்பார்த்திருக்கவே வேண்டும்.

ஆனால் இந்த தண்டோரா மூலம் கூட்டமைப்பின் தலையிலும், இந்தியாவின் தலையிலும் சிங்கன் முட்டாக்குப் போட முயற்சித்தாரா என்பதே இப்போது நம்முன்னாலுள்ள கேள்வி. (யாராவது அரசியல் ஆய்வாளர்கள் இவ்விடத்தில் குறுக்கிடலாம்). பி.டி.ஐ. செய்தியின்படி “த.தே.கூட்டமைப்பினரைச் சந்திப்பது” என்பதுவே நிகழ்ச்சி நிரல். ஆனால் சந்தித்தது அனைத்துத் தமிழ்த் தலைவர்களையும் – மன்னிக்க வேண்டும் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளையும். என்ன நடந்திருக்கலாம்? இந்த சடு-குடு விளையாட்டில் கூட்டமைப்பு உச்சிவிட்டதா? அல்லது சிங்கன் உச்சி விட்டாரா? இச்சந்திப்பில் என்ன நடந்திருக்கிறது என்பதைப் பொறுத்தே அதற்கான மறுமொழி இருக்கும்.

இறுதிச் செய்திகளின்படி நடந்தது ஒரு சந்திப்பே அல்ல. ஒரு வகுப்பு. ஏற்கெனவே சிங்களத் தீவிரவாதிகளோடு கலந்தாலோசித்து எடுத்த முடிவை மேசையில் போட்டு “இதை எடுப்பதும் எடுக்காததும் உங்கட முடிவு” என்று சிங்கன் சொல்லிவிட்டார். அதற்கு வியாக்கியானம் பலமணிகள் நடந்திருக்குமென்பதையும் அடித்துச் சொல்ல முடியும். வகுப்பில் இருந்தவர்கள் எவரும் இதுவரை விடயங்களை ‘லீக்’ பண்ணவில்லை என்பதால் ஒருவரும் இதுவரை அதிர்ச்சியிலிருந்து மீளவில்லைப் போலிருக்கிறது.

“வடக்கு கிழக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான முழுமையான தீர்வுத் திட்டமொன்றை நான் முன்வைத்திருக்கிறேன். அதை முன்னெடுத்துச் செல்வதா இல்லையா என்பதை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானிக்கட்டும்” எனச் சிங்கன் தண்டோரா போட்டு பந்தையும் தமிழர் தரப்பிடம் உருட்டி விட்டிருக்கிறார். ஜே.ஆரின் அதே தந்திரம்.

அதெப்படித் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போது தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களாக மாறியது? கூட்டமைப்பே தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் இல்லை என்பதை அவர்கள் முகங்களில் அறைந்து சொல்ல வேண்டாமா? ஆனால் இப்போது – மற்றவர்களை விடுங்கள் – சுமந்திரன் கொடுப்புக்குள் சிரித்துக்கொண்டிருப்பார். ஏனென்று நினைக்கிறீர்களா?

சிங்கன் முன்வைத்த பொதி (பொறி) இதுதான். “பொலிஸ் அதிகாரங்கள் இல்லாத முழுமையான 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவேன். ஆனால் பாராளுமன்றத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் முழுமையாக இணங்கினால் மட்டுமே அது சாத்தியமாகும்”. இதைவிட சர்வதேச கோமாளிகளைச் சமாளிக்க மேலும் பசப்பு வார்த்தைகளுமுண்டு. அது பின்னர்.

பந்து இப்போது தமிழர் தரப்பின் கால்களுக்குள் கிடக்கிறது. கப்டன் என்று ஒருவரும் முன்வந்தமாதிரியுமில்லை. இதை எப்படி சுமந்திரன் கோஷ்டி கையாளப் போகிறது? அதற்காக மற்றவர்கள் பற்றிக் குறைவாக மதிப்பிடக் கூடாது. எல்லோரையும் அழைத்து இத் தீர்வுப் பொதியைக் கொடுத்ததன் மூலம் சிங்கன் சர்வதேசங்களுக்கு செய்தியொன்றைச் சொல்லிவிட்டார். சர்வதேச கோமாளிகளின் தலைவர், அமெரிக்க தூதுவர், “எல்லாவற்றுக்கும் சர்வதேசங்களின் கைகளை எதிர்பார்க்காமல் நீங்களும் சில முடிவுகளை எடுக்க வேண்டும்” என்று தமிழ்த் தலைவர்களுக்கு வகுப்பு வேறு எடுத்திருக்கிறார். எனவே சிங்கனின் இந்த அழைப்புக்கும், வகுப்புக்கும், பொதி வழங்கலுக்கும் பின்னால் சிங்கி (அமெரிக்க தூதுவர்) இல்லையென்று அடித்துக் கூறமுடியாது. தமிழ்த் தலைவர்கள் தலைகளில் ரணில் நிச்சயமாக முட்டாக்குப் போட்டு அனுப்பியிருக்கிறார். ஆனால் அவர்களுக்கும் வேறு வழியில்லை. அவர்கள் பாவம்.

கூட்டத்தில் (வகுப்பில்) சில முக்கிய புள்ளிகள் மிஸ்ஸிங். சில வேளைகளில் மறைந்து இருந்தார்களோ அல்ல்து பிந்தி வந்தார்களோ தெரியாது. அல்லது போய்ப் பிரயோசனமில்லை என நினைத்தார்களோ தெரியாது. அவர்கள் பாக்கியசாலிகள். தேர்தல் வரும்போது முக்காடு போடப்பட்டவர்களைச் சாடுவதற்கு நிறைய இருக்கிறது. சம்பந்தர் ஐயா, சாணக்கியன், கஜேந்திரகுமார் போன்றவர்கள் இங்கு மிஸ்ஸிங்க்.

பிரச்சினை இப்போது இந்தப் பந்தை சிங்கன் தரப்பிடம் எப்படி திருப்பிக் கொடுப்பது? குறிப்பாக காப்டன் இல்லாத குழு இதை எப்படிக் கையாளப் போகிறது. இந்தியாவின் நிலைப்பாடு இதில் எப்படி இருக்கப் போகிறது. அல்லது சிங்கன் இந்த முக்காட்டை இந்தியாவுக்கும் சேர்த்தே போட்டாரா? கேள்விகள் பல.

சிங்கன் எடுத்த வகுப்பில் பலவற்றைச் சொல்லியிருக்கிறார். தமிழ் மக்களின் நீண்டகால அபிலாட்சைகளைத் தீர்த்துவைக்க தான் மனப்பூர்வமாகத் தீர்மானித்துவிட்டதாகவும். மாகாண சபைகளைச் செயற்படவைப்பதில் தான் எடுத்த முயற்சிகள் என்ன?; தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம், உண்மையைக் கண்டறியும் பொறிமுறை, காணாமற் போனவர்களுக்கான அலுவலகம், வடக்கு-கிழக்கு அபிவிருத்தி எனத் தனது ‘முயற்சிகளைப்’ பட்டியலிட்டிருக்கிறார். அபிவிருத்தி விடயங்களில் சுழற்சி வலு, நீர் வழங்கல், உட்கட்டுமானம், முதலீட்டு ஊக்குவிப்பு, சுற்றுலாத் துறை என்பன அவரது பட்டியலில் இருக்கின்றன. இவரது ‘பொதியை’த் தமிழ்த் தலைவர்கள் சுமந்து சென்று வடக்கு-கிழக்கில் விற்பார்கள் என்றால் மட்டுமே இவையெல்லாம் சாத்தியமாகும். எனவே இந்த முக்காடு தலைவர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்துக்குமே தான்.

“வடக்கு – கிழக்கு மக்களுக்கு நீதியை வழங்கவேண்டுமென்ற எனது தாகத்தை தீர்க்கவேண்டுமானால் அது பாராளுமன்றத்தின் முழு ஆதரவுடனேதான் முடியும்” – அடாடா என்ன ஆப்பு?

சரி இதைக் கேளுங்கள். ” அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பாக மிக நீண்ட கலந்துரையாடல்களை நாம் மேற்கொண்டிருந்தோம். (தமிழர்களோடு கலந்துரையாடல்களை மேற்கொண்டதாக அவர் எங்கும் குறிப்பிடவில்லை). இதில் பொலிஸ் அதிகாரம் தவிர்ந்த அனைத்து அதிகாரங்களையும் மாகாணசபைகளுக்குத் தருவதற்கு நாம் இணங்கினாலும் பாராளுமன்றத்தில் அனைத்துக்கட்சித் தலைவர்களின் இணக்கத்துடனே தான் அது சாத்தியமாகும். அப்படியான தீர்மானங்களை எடுப்பதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டும்” என அவர் கூறியிருக்கிறார்.

இதைவிட வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பாக பூநகரிக்குளம், இரணைமடுக்குளம் மற்றும் சிறு குளங்களின் விரிவாக்கம், யாழ்ப்பாணத்துக்கு ஆற்று நீரைக் கொண்டுவருதல், சுழற்சி வலுத் திட்டத்தின்படி அமோனியா, ஐதரசன், காற்றாடி மூலங்களைக் கொண்ட வலுக்களை உருவாக்குதல் போன்ற திட்டங்கள் பற்றிப் பேசியிருக்கிறார். அத்தோடு சுற்றுலாத்துறை விரிவாக்கம், காங்கேசன்துறை, பலாலி, மன்னார் துறைகளின் அபிவிருத்தி பற்றியும் பேசியிருக்கிறார். இது நிச்சயமாக இந்திய காதுகளை எட்டவேண்டுமென்பதற்காகவே கூறப்பட்டிருக்கலாம். பதிலாக நம்மாட்கள் திருப்பிக் கேட்டது வடக்கு-கிழக்கு இணைப்பு, காணாமற் போனோர் பற்றிய விசாரணைகள், சர்வதேச பொறிமுறை ஆகியவை பற்றி. அதற்கு வழமையான சளாப்பல்கள் தான் மறுமொழியாகக் கிடைத்தன. சுமந்திரன், விக்கியர் போன்றோர் இக்கேள்விகளைக் கேட்டிருக்கலாம் என நினைக்கிறேன்.

புதிய பயங்கரவாதத் தடைச் சட்டம் பற்றியும் பேசப்பட்டது. ஆனால் அது இப்போது சிங்களவரை நோக்கித் திரும்பியிருப்பதால் சுமந்திரன் போன்றோருக்கு வேலைப்பழு குறைந்துவிட்டது.

ஒட்டுமொத்தமாக இதில் அதிர்ஷ்டசாலிகள் கூட்டமைப்பினரே தான். சிங்கனின் தீர்வுப் பொதியை ஏற்றுக்கொண்டால் 13- (மைனஸ்) என்று சொல்லி சைக்கிள் காரர் கூட்டமைப்பினரைக் கரியரில் கட்டிக் காட்சிப்படுத்திவிடுவார்கள். எனவே இது ‘கூட்டமைப்பிற்கான அழைப்பு’ என்பதிலிருந்து ‘தமிழ்த் தலைவர்களுக்கான அழைப்பு’ என மாற்றப்பட்டதன் மூலம் சுமை எல்லோர் தலையிலும் சுமத்தப்பட்டிருக்கிறது. அதனால் கூட்டமைப்புக்கு வெற்றி. சிலவேளை இப்பொதி பற்றிச் சுமந்திரன் முன்கூட்டியே அறிந்திருந்ததால் மற்றவர்களையும் இதில் இழுத்துவிட்டிருக்கலாமோ என்றொரு விசர்த்தனமான யோசனையும் எனக்கு வந்து போனது. நமக்கேன் வம்பு.

இத் தீர்வுப் பொதியை ஏற்றுக்கொள்ளாவிட்டால் ‘அட அநியாயமாக அவங்கள் தந்த ‘காணி அதிகாரத்தை’யாவது எங்கட ஆக்கள் எடுத்திருக்கலாம் என்று வரப்போகும் தேர்தலில் சனம் குழம்பத் தொடங்கலாம். எதற்கும் பந்தை இந்தியாவிடம் தட்டிவிட்டு ‘நைசாகத்’ தமிழர் தரப்பு கழரவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் சிங்களவர் காணி பிடிக்கிற வேகத்தைப் பார்த்தால் காணி அதிகாரத்தோடு கூடிய அதிகாரப் பகிர்வை ஏற்றுக்கொண்டு நிலங்களைப் பாதுகாத்துக்கொள்வது தமிழருக்கு நன்மை பயக்குமா என்ற யோசனையும் எழுகிறது.

ஆனால் சிங்கனின் இந்த வகுப்பெடுப்பில் எனக்கு விளங்காத ஒன்று – 13 ஆவது திருத்தம் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டு முற்றாக நடைமுறைப்படுத்தப்படாமல் இழுபட்டுவரும் ஒன்று. வடக்கு கிழக்கு இணைப்பு அதைத் தொடரும் சர்வஜன வாக்கெடுப்பு என்பதைத் தவிர இதில் பாராளுமன்றம் தீர்மானிப்பதற்கு எதுவுமில்லை. எனவே இது சிங்கனின் ஒரு அரசியல் நாடகம் என்பது எனது முடிவு. தான் அடுத்த தடவையும் ஜனாதிபதியாக வருமட்டும் அவர் பந்தை உருட்டி விளையாட விரும்புகிறார். தமிழருக்கான தீர்வு எதுவானாலும் அது அவருக்குப் பாதகமாகவே முடியும்.

விரைவில் நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் சிங்கன் போட்டியிடுவார் என்பது உறுதி. அதற்கு முன்னர் தமிழர் விடயத்தில் எதையும் பிடுங்க முடியாது. எனவே இந்த ‘அவசர’ தண்டோரா இந்திய செவிகளுக்கானது. டெல்ஹியில் வைத்து ஜெய்சங்கர் கோஷ்டியும் இப்படியொரு வகுப்பையே எடுக்க முனைவார்கள். அதற்கு ஒரு pre-emptive ஆகவே சிங்கனின் இந்த தண்டோரா. கூட்டமைப்பு தப்பிக்கொண்டது. 13 மைனஸை ஏற்றுக்கொள்ளாவிட்டால் கூட்டமைப்பை மட்டும் குறைகூற முடியாது.

இதில் சிங்கியின் role என்னவென அறியும் ஆவல் இருப்பவர்கள் வீரவன்சவின் அடுத்த புத்தகம் வரும்வரை பொறுத்திருக்கவும்.