Sri Lanka

ரணிலே தலைவர் – செயற்குழு உறுதி செய்தது!

சஜித் பிரேமதாச ரணிலின் தலைமையில் செயற்பட இணக்கம்

ஜனவரி 31, 2020

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவிக்கான இழுபறி ஒருவாறு முடிவுக்கு வந்துள்ளது. கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தின் முடிவில் ரணில் விக்கிரமசிங்கவே கட்சியின் தலைவராகத் தொடர்ந்தும் இருப்பார் என த் தீர்மானிக்கப்பட்டது.

கட்சியின் உப தலைவரான சஜித் பிரேமதாச ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவராக இருந்து எதிர்வரும் தேர்தலில் முதலமைச்சர் பதவிக்காகப் போட்டியிடுவார் எனவும் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவாசம் தெரிவித்தார்.

எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஒற்றுமையாகக் கட்சியை வழிநடத்துவதே செயற்குழுவின் நோக்கமெனவும் தெரிவித்தார்.

கட்சியின் செயற்குழுவில் 59 பேர் இருந்தாலும் அவர்களில் 37 பேர் கூட்டத்தில் சமூகமளித்திருந்தார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஐ.தே.கட்சியின் சாசனத்தின்படி, கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகினால் மட்டுமே புதிய தலைவரைச் செயற்குழு தேர்ந்தெடுக்கலாம். அல்லது கட்சியின் பொதுக்குழுவின் வருடாந்தக் கூட்டத்திலேயே கட்சித் தலைவர் பதவியில் மாற்றத்தைக் கொண்டுவர முடியும்.

தற்போதய தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமைப் பதவியைத் துறக்க மறுப்புத் தெரிவித்துவரும் நிலையில் சஜித் பிரேமதாச பதவி மாற்றத்திற்கான அழுத்ததைக் கொடுக்கமாட்டேன் எனவும் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவராக இருந்து தேர்தலை எதிர்கொள்ளப் பணியாற்றுவேன் எனவும் உறுதி பூண்டுள்ளதாக ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

சஜித் பிரேமதாச விரைவில் ஐக்கிய தேசிய முன்னணியின் பொதுச் செயலாளரை நியமிப்பதோடு, வேட்பாளர் நியமனக் குழுவுக்கும் தலைவராக இருந்து செயற்படுவார் எனவும் செயற்குழு முடிவு செய்துள்ளது.