NewsSri Lanka

ரணிலும் கோதாபயவும் இரகசியப் பேச்சுவார்த்தை?

மறுக்கிறது ஐ.தே.கட்சி

அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கான கூட்டணியொன்றை அமைப்பதற்கான பேச்சுவார்த்தையில் ரணில் விக்கிரமசிங்க தரப்பு ஈடுபட்டு வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் அதிக பாராளுமன்ற ஆசனங்களைப் பெறமுடியுமென ஐ.தே.க. நம்புவதாகக் கூறப்படுகிறது.

இஷினி விக்கிரமசிங்க

இப் பேச்சுவார்த்தைகளை ரணில் விக்கிரமசிங்கவின் மருமகளான இஷினி விக்கிரமசிங்க ஈடுபட்டுவருவதாகக் கூறப்படுகிறது. நல்லாட்சிக் காலத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலக நிர்வாகப் பொறுப்பாளராகக் கடமையாற்றிய இவர் ஜனாதிபதி தேர்தலின்போது கோதாபய ராஜபக்சவைப் பகிரங்கமாக ஆதரித்திருந்ததுடன், அவரது வெற்றிவிழாக் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டிருந்தாரெனவும் கூறப்பட்டது. அதுமட்டுமல்லாது ரணிலின் ஆட்சிக் காலத்தில் கோதாபய ராஜபக்சவின் அமெரிக்கக் குடியுரிமை துறக்கப்படுவதற்கு முன்னரே அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏற்றதாக குடிவரவுத் திணக்கள பத்திரங்களில் மாற்றங்கள் செய்யப்பட இஷினி காரணமாக இருந்திருந்தார் எனத் தகவல்கள் கசிந்திருந்தன. இந் நிலையில் அவர் மீண்டும் ரணில்-கோதாபய இணைப்பை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கிறார் எனக் கொழும்பு பத்திரிகைகள் தெரிவித்துள்ளன.

ஆனாலும் இச் செய்திகளில் உண்மை இல்லை எனவும் கட்சியைப் பலப்படுத்தும் முயற்சிகளில் அதன் உப தலைவரான ரூவான் விக்கிரமசிங்க ஈடுபட்டு வருவதாகவும் இது தொடர்பாக அவர் சமாகி ஜன பலவேகய கட்சி முக்கியஸ்தர்களான சம்பிக்க ரணவக்க மற்றும் குமார வெல்கம ஆகியோருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாகவும் ஐ.தே.க. வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஐ.தே.க. அனைத்து ஆசனங்களை இழந்த நிலையிலும் கட்சித் தலைமையை விட்டுக்கொடுக்க மறுத்தும் அக்கட்சிக்கு கிடைத்த தேசீயப் பட்டியல் ஆசனத்தைத் தானே எடுத்துக்கொண்டதும் கட்சிக்குள்ளும் வெளியிலும் ரணில் விக்கிரமசிங்க மீதான அதிருப்தியை உறுப்பினர் மற்றும் ஆதரவாளர் மத்தியில் ஏற்படுத்தியிருந்தது.

இதே வேளை கட்சியின் உபதலைவர் பதவியைத் தன்ன்குத் தருமாறு சம்பிக்க ரணவக்க கேட்டிருந்ததற்கு சஜித் பிரேமதாச இன்னும் பதிலளிக்கவில்லை என்பது சமாகி ஜன பலவேகய கட்சிக்குள்ளும் முரண்பாடுகள் அதிகரித்துள்ளது என்பதையே காட்டுவதாகவும் இதனால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணவக்க சுயாதீனமாகப் போட்டியிடக்கூடுமென்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளதாகவும் தெரியவருகிறது.