ரணிலும் களத்தில் குதிக்கிறார்?
செப்டம்பர் 6, 2019
ஜானதிபதி தேர்தலில் தானும் போட்டியிடவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்ததாக அறியப்படுகிறது. ஐ.தே.கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சமூகமளித்திருந்த கூட்டமொன்றில் அவர் இதைத் தெரிவித்ததாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
இதே வேளை கட்சியின் உப தலைவர் சஜித் பிரேமதாச தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவிருப்பதாகப் பகிரங்கமாக அறிவித்திருந்ததுடன் பிரசாரக் கூட்டங்களையும் நடத்தி வருகிறார். கட்சி இதுவரை உத்தியோகபூர்வமாக எவரையும் வேட்பாளாராக அறிவிக்காத நிலையில் தந்னையே வேட்பாளராக நியமிக்கும்படி சஜித் கட்சி அங்கத்தவர்களையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும் கட்சிக்கு அழுத்தம் கொடுக்கும்படி இக்கூட்டங்களை நடத்தி வருகிறார். அடுத்த கூட்டம் குருநாகலில் நடைபெறவிருக்கும் நிலையில் ரணில் இந்த திடீர் அறிவிப்பைச் செய்திருக்கிறார்.
இக் கூட்டத்தில் அமைச்சர்கள் காபிர் ஹஷிம், லக்ஸ்மன் கிரியெல்ல, கட்சிச் செயலாளர் அகிலா விராஜ் காரியவாசம், மாலிக் சமரவிக்கிரம, ஜோன் அமரதுங்க, காமினி ஜயவிக்கிரம பெரேரா, ரவி கருணானயக்கா , சரத் பொன்சேகா, தயா கமகே, நவின் திசனாயக்கா, ரஞ்சித் மட்டும பண்டார, அஜித் பெரேரா மற்றும் மங்கள சமரவீரா ஆகியோர் சமூகமளித்திருந்தனர்.
“நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன். நானே கட்சியின் தலைவர். போட்டியிட எல்லா உரிமையும் எனக்குண்டு. நான் எனது விண்ணப்பத்தை அங்கீகாரத்துக்காக செயற்குழுவிடம் சமர்ப்பிப்பேன். யாராவது எனது விண்ணப்பத்தை எதிர்த்தால் அவர்கள் அங்கேயே அதைச் செய்யட்டும்” என அக்கூட்டத்தில் பிரதமர் தெரிவித்ததாக அப் பத்திரிகை மேலும் தெரிவித்திருக்கிறது.
இது கட்சியைப் பிளவடையச் செய்யப்போகிறது என பிரேமதாசவின் ஆதரவாளர்களான ஹஷிம், சமரவிக்கிரம ஆகியோர் தெரிவித்திருக்கின்றனர். அதற்கு, கட்சியின் தலைவராகத் தான் போட்டியிடத் தீர்மானித்துவிட்டதாகத் தெரிந்தால் எல்லோரும் தனக்கே ஆதரவளிக்க வேண்டும் என்று விக்கிரமசிங்க பதிலளித்ததாகத் தெரிகிறது.
இக் கூட்டத்துக்கு அமைச்சர் சஜித் பிரேமதாச சமூகமளிக்கவில்லை என்றும் அவரை ஆதரிக்கும் கட்சியின் மூத்த தலைவர்கள் விக்கிரமசிங்கவின் இந்த முடிவை விரும்பவில்லை எனவும் தெரியவருகிறது. எனவே விக்கிரமசிங்கவும், பிரேமதாசவும் சந்தித்து பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்ப்பதாகவும் அறியப்படுகிறது.