ரணிலின் சர்வதேச சூழல் ஆலோசகராக எரிக் சொல்ஹெய்ம் நியமனம்
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சர்வதேச சூழல் ஆலோசகராக நோர்வேயின் முன்னாள் சூழல் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனம் தொடர்பாகச் சுற்றுச் சூழல் செயற்பாட்டாளர்கள் பலர் விசனம் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
ஐ.நா.வின் சூழற் திட்டத்தின் (UNEP) நிறைவேற்றுப் பணிப்பாளர் பதவியிலிருந்து 2018 இல் பதவி விலகியிருந்த எரிக் சொல்ஹெய்ம் ஐ.நா. செயலாளர் நாயகம் அன்ரோனியோ குத்தேரஸ் உட்படப் பலநாடுகளின் தலைவர்களின் கடும் விமர்சனத்துக்குள்ளாகியிருந்தவர். இவரது பதவிக் காலத்தில் பல சர்வதேச விமானப் பயணங்களை மேற்கொண்டு பணவிரயம் செய்தமையால் பல நாடுகள் இத் திட்டத்க்துக்குப் பணம் தர மறுத்துவிட்டமையால் செயலாளர் நாயகத்தின் கட்டாயத்தின் பேரில் இவர் பதவி விலகியிருந்தார். 22 மாதங்கள் வகித்த இவரது பதவிக் காலத்தில் விமானப் பயணங்கள் மற்றும் ஓட்டல் செலவுகளுக்காக சுமார் $500,000 டாலர்களைச் செலவு செய்திருந்தார் என ஐ.நா. கணக்கறிக்கையில் காணப்படுவதாகத் தெரியவந்துள்ளது. 80% மான இவரது பதவிக்காலம் சுற்றுலாவில் கழிந்ததாக அது மேலும் குறிப்பிடுகிறது.
இப்படியான குற்றச்சாட்டுகளைக் கொண்ட ஒருவரை ஏன் ஜனாதிபதி தனது ஆலோசகராக நியமிக்க வேண்டுமெனத் தென்னிலங்கை ஊடகங்களும் சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.