Spread the love

ஜனவரி 4, 2020

ஐக்கிய தேசிய முன்னணி பா.உ. ரஞ்சன் ராமநாயக்கவின் மாடிவெல வீட்டில் காவற்துறையினர் இன்று தேடுதல் நடத்தியதன் பயனாக இன்று மாலை அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

இத் தேடுதல் நடவடிக்கான ஆணையைக் காவற்துறையினர் பெற்றிருந்த போதும், என்ன காரணத்துக்காக அத் தேடுதல் நடத்தப்படுகிறது என்பது அதில் குறிப்பிடப்படவில்லை என ரஞ்சன் கூறியிருந்தார். தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளையும் ரஞ்சன் தனது முகநூல் நேரடி ஒளிபரப்பாக வெளியுலகுக்கு அறிவித்துக் கொண்டிருந்தார்.

ரஞ்சன் ராமநாயக்கா ஒரு நடப்பு பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற படியால், அவரது வீட்டில் தேடுதல் நடத்தப்படுவதற்கு முன்னர் அவ் விடயம் பற்றி சபாநாயகர் கரு ஜயசூரியாவிற்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

தேடுதலின் போது அவரது மெய்ப்பாதுகாவலருக்கென வழங்கப்பட்டிருந்த கைத் துப்பாக்கியும். 118 ரவைகளும், சில டி.வி.டி. களும் காவற்துறையினரால் கைப்பற்றப்பட்டன. துப்பாக்கிக்குரிய அனுமதிப்பத்திரம் காலாவதியாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காவற்துறையினர் போதை வஸ்துக்கள் இருக்கின்றனவா எனத் தேடினார்கள் எனவும், கோப்புகளிலுள்ள பல பத்திரங்களையும் பார்த்தார்களெனவும் ராமநாயக்கா தெரிவித்தார். மடிக் கணனி, சீ.டிக்கள், டி.வி.டிக்கள் போன்றவற்றை அவர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். 2012 இல் கொலைசெய்யப்பட்டதாகக் கருதப்படும் றக்பி விளையாட்டுக்காரர் வாசிம் தாஜுடீன் சம்பந்தமான பல பத்திரங்களையும் காவற்துறையினர் எடுத்துச் சென்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

வாசிம் தாஜுடீன் கொலை விவகாரம்
ரஞ்சன் ராமநாயக்கா கைது செய்யப்பட்டார் - தாஜுடீன் விவகாரத்திற்கான பழிவாங்கலா? 1

மே 17, 2012 அன்று இலங்கை றக்பி விளையாட்டுக் குழுவின் கப்டன் வாசிம் தாஜுடீனின் உடல் கொள்ளுப்பிட்டியில் பார்க் வீதியிலுள்ள ஷாலிகா மண்டபத்திற்கருகே கார் ஒன்றினுள் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இச் சம்பவத்தின் பின்னால் பல மர்மங்கள் இருந்தாலும், அப்போதய நாரஹேன்பிட்டிய காவற்துறை அதிகாரிகள் அதை ஒரு விபத்தினால் ஏற்பட்ட மரணமெனக் கூறிக் கதையை முடித்துவிட்டார்கள் எனக் கூறப்பட்டது.

இருப்பினும், வாசிம் தாஜுடீனின் மரணம் ஒரு கொலை எனவும், அப்போது ஆட்சியிலிருந்த மஹிந்த ராஜபக்சவின் மகன்களில் ஒருவரது காதலியுடன் சம்பந்தப்பட்டதாலேயே தாஜுடீன் கொல்லப்பட்டதாக வதந்திகள் உலாவின. ராஜபக்சவின் மூன்று புதல்வர்களும் ரக்பி விளையாட்டில் சம்பந்தப்படுபவர்கள்.

பின்னர், ராஜபக்ச தேர்தலில் தோல்வியுற்றதும், தாஜுடீன் வழக்கு மீண்டும் எடுக்கப்பட்டு நீதிபதியினால் அது ஒரு கொலை எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

ரஞ்சன் ராமநாயக்கா கைது செய்யப்பட்டார் - தாஜுடீன் விவகாரத்திற்கான பழிவாங்கலா? 2

வழக்கு விசாரணைகள் தொடங்கி 4 வருடங்களின் பின்னர் அக் கொலையை மூடி மறைத்த குற்றத்திற்காக ஒருவர் மீது வழக்குப் பதியப்பட்டது. இது தொடர்பாக முன்னாள் டி.ஐ.ஜி. அனுரா சேனநாயக்கா மீது வழக்குப் பதிவிலுள்ளது. பதிவுகளை மாற்றி எழுதியதற்காக கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி பேராசிரியர் ஆனந்த சோமசேகரவும் பின்னர் கைது செய்யப்பட்டிருந்தார்.

Related:  அம்பாந்தோட்டை துறைமுகம் எமது கட்டுப்பாட்டில் இல்லை - அரசாங்கம் வருத்தம்

2015 இல் தாஜிடீனின் புதைக்கப்பட்ட உடல் மீண்டும் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட போது அதில் பல உடற் பாகங்கள் காணாமற் போயிருந்தனவென்றும் அவற்றைப் பேராசிரியர் சோமசேகர தான் பணி புரிந்த மருத்துவக் கல்லூரிக்குக் கொண்டுபோயிருந்த விடயமும் பின்னர் தெரிய வந்தது.

இரண்டாவது பிரேத பரிசோதனையின்போது தாஜுடீனின் மரணம் மிருகத்தனமான தாக்குதலினாற் ஏற்பட்டிருந்தது என நிரூபணமானது. அவர் கார்பன் மொனொக்சைட் புகையினால் மரணமடைந்தார் என பேராசிரியர் சோமசேகரவின் தீர்ப்பு பிழையெனவும் நிரூபிக்கப்பட்டது.

இக் கொலையின் பின்னால் நாமல் ராஜபக்ச, கோதபாய ராஜபக்ச ஆகியோரின் இருக்கிறாகள் எனச் சாட்சியமளிக்கும்படி தன்னை வற்புறுத்தியதாக ரஞ்சன் ராமநாயக்கா, முன்னாள் குற்ற விசாரணைப் பிரிவின் பணிப்பாளர்கள் ஷானி பெரேரா, மற்றும் பி.ஆர்.எஸ்.ஆர்.நகமுல்லா ஆகியோர் மீது, முன்னாள் நரஹேன்பிட்டிய குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தார்.

ஷானி அபயசேகரா ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலியகொட காணாமற் போன சம்பவம் தொடர்பாகவும் விசாரணைகளை மேற்கொண்டிருந்தார். புதிய் அரசாங்கம் பதவியேற்றவுடன் முதல் வேலையாக சானி அபயசேகராவைப் பணியிறக்கம் செய்து இடம் மாற்றியுமிருந்தது.

தற்போது ரஞ்சன் ராமநாயக்காவின் வீடு தேடுதல் நடத்தப்பட்டு தாஜுடீன் சம்பந்தமான பத்திரங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

“காவற்துறை என்னைக் கைது செய்தால் தான் மருத்துவ மநையில் போய்ப் படுக்கப் போவதில்லை. நேரே சிறைக்குப் போவேன்” என ரஞ்சன் கது செய்யப்படுவதற்கு முன்னர் குறிப்பிட்டதாகவும் செய்திகள் வந்திருந்தன.

Print Friendly, PDF & Email
ரஞ்சன் ராமநாயக்கா கைது செய்யப்பட்டார் – தாஜுடீன் விவகாரத்திற்கான பழிவாங்கலா?
Photo Credit: Daily Mirror LK

ரஞ்சன் ராமநாயக்கா கைது செய்யப்பட்டார் – தாஜுடீன் விவகாரத்திற்கான பழிவாங்கலா?