ரஜீவ் காந்தி கொலை: சகல குற்றவாளிகளும் விடுவிக்கப்படவேண்டும் – நீதிபதி K.T.தோமஸ்
முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தி கொலையுடன் தொடர்புடையவர்கள் எனக் குற்றஞ்சாட்டப்பட்டு சிறைத்தண்டனை அனுபவிப்பவர்கள் அனைவரும் விடுதலைசெய்யப்படவேண்டுமென 1999 இல் அக் கொலைவழக்கை விசாரித்து அவர்களுக்கு மரணதண்டனையை வழங்கிய நீதிபதி கே.ரீ.தோமஸ் தெரிவித்திருக்கிறார். பேரறிவாளனின் விடுதலை தொடர்பாகத் தமிழகமெங்கும் எதிர்ப்பலைகள் தோன்றியிருக்கும் நிலையில் அவர் ‘தி நியூஸ் மினிட்’ சஞ்சிகைக்கு அளித்த பேட்டியில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மே 11.1999 இல் உச்ச நீதிமன்ற நீதிபதி கே.ரீ.தோமஸ் தலைமையில் நீதிபதிகள் டி.பி. வத்வா மற்றும் சாயிட் ஷா மொஹாமெட் காத்றி ஆகியோர் இவ்வழக்கில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட நான்கு பேருக்கு மரணதண்டனை வழங்கியிருந்தார்கள். 23 வருடங்களுக்குப் பிறகு, இந் நால்வரில் ஒருவராகிய பேரறிவாளனை நேற்று (மே 18), உச்சநீதிமன்றம் விடுதலை செய்திருந்தது. பேரறிவாளனின் இரக்க மனு விண்ணப்பத்தைப் பின்போடுவதற்கு ஆளுனருக்கு அதிகாரம் இல்லை எனக்கண்ட உச்சநீதிமன்றம் அவரை விடுதலை செய்திருந்தது. பேரறிவாளனது விடுதலையை வரவேற்ற முன்னாள் நீதிபதி கே.ரி.தோமஸ் இவ்விடயத்தில் ஆளுனரது செயற்பாட்டைக் கண்டித்துமிருக்கிறார்.
“தமிழ்நாடு அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் ஆளுனர் நடந்துகொள்ளாமை எனக்கு ஆச்சரியமாகவுள்ளது. இந்திய அரசியலமைப்பின் பிரகாரம் மாநில ஆளுனர் என்பவர் மாநில அமைச்சரவையின் ஆலோசனைக்கிணங்கவே செயற்பட வேண்டும். அவர் தன்னிச்சையாகச் செயற்பட முடியாது” என நீதிபதி தோமஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
இக் கைதிகளின் விடுதலைக்காக நீண்டகாலமாக நீதிபதி தோமஸ் போராடி வருகிறார். இக் கைதிகள் மீது இரக்கம் காட்டி மன்னித்து விடுதலைசெய்யும்படி கோரி அக்டோபர் 2017 இல் அவர் காங்கிரஸ் தலைவி சோனியா காந்திக்குக் கடிதமொன்றையும் எழுதியிருந்தார். 19 வயதுடைய பேரறிவாளன் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடைப்படையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டதாக 2013 இல் விசாரணை அதிகாரி தியாகராஜன் எழுத்து மூலம் அறிவித்திருந்தார். இவ்வாக்குமூலத்தின்போது முக்கியமான தகவல் ஒன்றைச் சேர்க்கத் தான் தவறியிருந்ததாக அவர் குறிப்பிட்டதைத் தொடர்ந்து பேரறிவாளனது விடுதலைக்கான வேண்டுகோள்கள் பலதரப்பிடமிருந்தும் வெளிவந்திருந்தன.
பேரறிவாளனை விடூதலை செய்தது போல் நளினி, முருகன், சாந்தன் ஆகியோரும் விடுதலை செய்யப்படவேண்டுமென நீதிபதி தோமஸ் கேட்டுள்ளார். “முருகன் ஒரு விடுதலைப் புலி உறுப்பினர் என்ற வகையில் தான் அவரது மனைவியாரான நளினி மீதும் வழக்குப் பதியப்பட்டது. ஒரு பெண் என்ற ரீதியில் தமிழர் கலாச்சரப்படி கணவனின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க முடியாது. அதற்காக அவர் இக்கொலைக்கு உதவினார் அல்லது திட்டமிட்டர் எனக் குற்றஞ்சாட்டிவிட முடியாது. இக் காரணங்களுக்காக அவருக்கு நான் முதலிலேயே ஆயுள் தண்டனை வழங்கியிருந்தேன். ஆனால் மற்ற இரு நீதிபதிகளும் அவருக்கும் மரணதண்டனை வழங்கவேண்டுமென்பதில் உறுதியாக இருந்தார்கள். 2000 ஆம் ஆண்டில் இது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. மற்றவர்களை விடுதலை செய்ய முடியாவிட்டால் அதற்கான காரணங்களை சிறைச்சாலை நிர்வாகம் கூறியிருக்க வேண்டும். அக் காரணங்களைக் கொண்டு அவர்களும் உச்ச நீதிமன்றத்தில் மனுச் செய்யலாம். தமிழ்நாடு அரசு 7 கைதிகளையும் விடுதலை செய்யும்படி பணித்திருந்தது. எனவே மீதி ஆறு பேரும் உச்சநீதிமன்றத்தில் மனுச்செய்ய முடியும்” என நீதிபதி தோமஸ் மேலும் தெரிவித்தார்.
நளினி, சாந்தன், முருகன் (நளினியின் கணவர்), றொபேர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகியோர் இன்னமும் ஆயுள் தண்டனைக் கைதிகளாகச் சிறைகளில் வைக்கப்பட்டுள்ளனர்.
“இக் கைதிகள் மீது கருணை காட்டி அவர்களை விடுதலை செய்யும்படி நான் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியிருந்தேன். அதற்கு அவர் பதில்கூடப் போடாதது எனக்கு வருத்தமளிக்கிறது. மகாத்மா காந்தியின் கொலைக்குக் காரணமான நாதுராம் கோட்சேயின் சகோதரர் கோபால் கோட்சேயிறு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை பின்னர் 14 வருடங்களாகக் குறைக்கப்பட்டது என நான் அக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன். அவர் அதற்குப் பதில் கூடத் தரவில்லை” என நீதிபதி தோமஸ் தெரிவித்துள்ளார். (தி நியூஸ் மினிட்)