India

ரஜீவ் காந்தி கொலைக்குற்றவாளிகளின் விடுதலை எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது – நீதிபதி கே.ரீ.தோமஸ்

நளினி சிறீதரன் இந்தியாவின் அதி நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்த பெண் கைதி

30 வருட சிறைவாசத்தின் பின்னர் ராஜீவ் காந்தி கொலைக்குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டமை தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக நீதிபதி கே.ரீ.தோமஸ் தெரிவித்துள்ளார். ஆரம்ப வழக்கு விசாரணைகளின்போது இவர்களில்அறுவருக்கு மரணதண்டனை அளித்துத் தீர்ப்பளித்திருந்த நீதிபதி தோமஸ் பின்னர் அனைத்துக் குற்றவாளிகளினதும் விடுதலைக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார்.

ஏ.ஜி.பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டு 6 மாதங்களுக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தின் கட்டளைக்கிணங்க நவம்பர் 11 இல் முருகன், நளினி,சாந்தன், ஜெயகுமார், றொபேர்ட் பயஸ் மற்றும் பி.ரவிச்சந்திரன் ஆகியோர் விதலை செய்யப்பட்டிருந்தார்கள்.

பேரறிவாளன் 19 வயதுடையவராக இருக்கும்போது கைதுசெய்யப்பட்டு அவரது வாக்குமூலமொன்றை மட்டுமே காரணமாகக் கொண்டு சிறைக்குள் தள்ளப்பட்டவர். அப்போது இவ்வழக்கை விசாரணை செய்த சீ.பி.ஐ. அதிகாரியான தியாகராஜன் 2013 இல் எழுதிய நூலில் “பேரறிவாளன் கொடுத்த வாக்குமூலத்தில் கொலைக்குப் பாவிக்கப்பட்ட மின்கலங்களை தானே வாங்கிக்கொடுத்ததாக ஒப்புக்கொண்டிருந்தார் எனவும் ஆனால் அவை எதற்குப் பாவிக்கப்படப் போகிறது என்பது பற்றித் தனக்கு எதுவுமே தெரிந்திருக்கவில்லை எனவும் கூறியிருந்தார். ஆனால் “எதற்குப் பாவிக்கப்படப் போகிறது என்பது பற்றித் தனக்கு எதுவுமே தெரிந்திருக்கவில்லை” என்ற கூற்றை சீ.பீ.ஐ. அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காது தவிர்த்திருந்தார்கள்” கூறியிருந்தார். இந்நூல் வெளிவந்ததன் பின்னர் நீதிபதி தோமஸ் இகுற்றவாளிகளின் விடுதலைக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இக்குற்றவாளிகளைப் பெருந்தன்மையுடன் மன்னித்து விடுதலை செய்யும்படி சோனியா காந்திக்கு 2017 இல் நீதிபதி தோமஸ் கடிதமொன்றையும் எழுதியிருந்தார். வழக்கு விசாரணைகளின்போது பேரறிவாளனின் சாட்சியம் ஒரு கருதுகோளுக்கு ஆதாரமெனவே எடுத்துக்கொள்ளப்படவேண்டுமென நீதிபதி தோமஸ் கேட்டிருந்தபோதும் இதர இரண்டு நீதிபதிகளும் அதற்கு இணங்க மறுத்துவிட்டார்கள்.

பேரறிவாளனின் விடுதலையின்போது தமிழ்நாடு அரசாங்கத்தின் ஆலோசனைக்கிணங்க இதர குற்றவாளிகளையும் விடுதலை செய்யும்படி முன்வைத்த கோரிக்கையை தமிழ்நாடு ஆளுனர் உதாசீனம் செய்தமை குறித்தும் நீதிபதி தோமஸ் தனது அதிருப்தியைத் தெரிவித்திருந்தார்.

இக் கைதிகள் விடயத்தில் நளினி சிறீதரன் இந்தியாவில் மிக நீண்டகால சிறைவாசத்தை அனுபவித்த பெண் கைதி எனப் பெயர் பெறுகிறார். கைது செய்யப்படும்போது அவருக்கு 24 வயது. ஐந்துபேர் கொண்ட தற்கொலை குண்டுதாரிகள் குழுவில் இவர் ஒருவரே உயிர் தப்பியவராவார். 2000 ஆம் ஆண்டு அவரது மரணதண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டிருந்தது. சிறைக்குள் இருக்கும்போதே அவர் கணனிக் கல்வியில் ‘மாஸ்ரெர்ஸ் இன் கொம்பியூட்டர் அப்ப்ளிகேஷன் (Masters in Computer Application (MCA) பட்டத்தை 2009 இல் பெற்றிருந்தார்.

காங்கிரஸ், பா.ஜ.க. கடும் எதிர்ப்பு

இக் கைதிகளின் விடுதலை தொடர்பாக இந்தியாவின் தேசியக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சி ஆகியன கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருக்கின்றன. “உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. இது நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் அதிர்ச்சிதரும் முடிவு” என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மேல்சபை உறுப்பினரும் மூத்த அரசியல் தலைவருமாகிய டாக்டர் அபிஷேக் மனு சிங்வி தெரிவித்துள்ளார்.

அதே வேளை இந்த ஆறு பேர்களினதும் விடுதலை குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்திருக்கிறார். (தி நியூஸ்மினிட்)