Spread the love

எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்சியொன்றை ஆரம்பிக்கவிருந்த நடிகர் ரஜினிகாந்த் தன எண்ணத்தைத் திடீரென ஒத்திப்போட்டதற்கு அவரது உடல்நிலை மட்டும் காரணமில்லை எனத் தற்போது வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

‘அண்ணாத்தே’ படப்படிப்பின்போது திடீரெனச் சுகவீனமுற்றார் எனக்கூறி ரஜினி மருதுவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது இரத்த அழுத்தம் நிலையற்றதாக இருந்தமையே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்குக் காரணம் எனக் கூறப்பட்டது. அதில் உண்மையிருந்தாலும், சிறுநீரக மாற்றுச் சிகிச்சைக்குட்பட்டவர்களுக்கு இவ்வறிகுறி ஆச்சரியப்படும் ஒரு விடயமல்லவெனவும், இப்படியான பிரச்சினைகளை அறிந்திருந்தும் ரஜினி தனது கட்சி ஆரம்பத்திற்கான நாளாக டிசம்பர் 31 ம் திகதியை நிர்ணயித்திருந்தார் என்பதையும் அவரது திடீர் அறிவிப்பின் மீதான சந்தேகத்தை எழுப்புபவர்கள் தெரிவிக்கிறார்கள். எனவே அவரது பின்வாங்கலுக்கான முடிவுக்கு வேறு காரணங்கள் இருக்கிறதென அவர்கள் வலுவாக நம்புகிறார்கள்.

ரஜினிகாந்த் பின்வாங்கியதற்கான உண்மையான காரணம் என்ன? 1
எச்சரிக்கை: இது வட்சப்பில் வந்த படம். செயற்கையாக மாற்றப்பட்டிருக்கலாம்

இது பற்றி ‘தராசு’ ஷியாம் எனும் பத்திரிகையாளர் தெரிவித்த கருத்தில் ரஜினிகாந்தின் முடிவுக்குப் பல காரணங்கள் இருக்கின்றன எனக் கூறுகிறார். ஒன்று: தேர்தலில் நின்றால் கட்டாயமாக வெற்றிபெறவேண்டுமென்பது அவரது விருப்பம். அதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு எனபதை அவர் உணர்ந்து கொண்டார். இரண்டு: பாஜ.க. வும், ஆர்.எஸ்.எஸ்.சும் ரஜினி கட்சியைத் தொடங்கவேண்டுமென்று பாரதூரமான அழுத்தத்தைக் கொடுத்து வந்தன. தன்னைக் காவியால் போர்த்திக்கொள்ள அவருக்கு விருப்பமில்லை. அவரது இரண்டு ஆலோசகர்களில் ஒருவரான அர்ஜுன் மூர்த்தி பிரதமர் மோடியின் மிக நெருங்கிய நண்பராகவும், தமிழ்நாடு பா.ஜ.க. வின் முக்கிய ஆலோசகராகவும் இருக்கும் ஒருவர். அவரைத் தன் கட்சிக்கு ஆலோசகராக நியமிப்பது தன்னையும் சங்கிகளில் ஒருவராக்கும் முயற்சி என்பதை அவர் பின்னரே உணர்ந்தார். மூன்று: ரஜினி கட்சியுடன் கூட்டு சேர்வது என்ற பாசாங்கின் மூலம் பா.ஜ.க., அ.இ.அ.தி.மு.க. விடனான தொகுதிப் பங்கீட்டில் பேரம் பேசுகிறது என்பதும் அவருக்கு எட்டியிருந்தது. நான்கு: அவருக்கு இதுவரை கிடைத்த ஆலோசகர்களில் அவர் நம்புவது கமல் ஹாசனை மட்டும்தான். அவரது கட்சியும் தேர்தலில் இறங்குகிறது. அப்படியிருக்க அழுத்தத்தின் காரணமாக பா.ஜ.க. வுடனான கூட்டு சேர்வது அவருக்கு இயலாமலிருந்தது.

ரஜினிகாந்தை மிக நெருக்கமாகப் பின்தொடர்ந்துவரும் பெயர் குறிப்பிடப்பட விரும்பாத ஊடகவியலாளர் ஒருவர் கூறியதாக வெளியிட்ட செய்தியில் ‘தி நியூஸ் மினிட்’ இணையத்தளம் இப்படிக் குறிப்பிடுகிறது.டிசம்பர் மாதம் தனது ரசிகர்களையும், ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களையும் சந்தித்தபோது அவர் கேட்டுக்கொண்ட ஒரு விடயம் அரசியலில் இறங்குவதாக இருந்தால் கட்டாயம் வெற்றி பெற வேண்டும், அது தோல்வியில் முடியக்கூடாது என்பது. படத்தில் என்றாலும் நிஜவாழ்வில் என்றாலும் அவரால் தோல்வியைச் சகித்துக்கொள்ள முடியாது என்கிறார் அந்த ஊடகவியலாளர்.

Related:  'வா தலைவா' | முடிவை மாற்றும்படி ரஜினியைக் கோரி ரசிகர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம்

அது மட்டுமல்லாது, அரசியலில் ஈடுபடுபவர்கள் பல அவச்சொற்களைக் கேட்கவேண்டி வரும். கருணாநிதி, ஜயலலிதா போன்றவர்கள் அவற்றை இலகுவாக உதாசீனம் செய்துகொண்டு போய்விடுபவர்கள். ரஜினிகாந்தினால் அப்படியானவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார் அவர்.

ரஜினிகாந்தின் இயல்பை நன்கறிந்த இந்த ஊடகவியலாளரின் கருத்துப்படி, ரஜினி எப்போதுமே முடிவெடுப்பதில் தயக்கம் காட்டுபவர். அரசியல் கட்சி ஆரம்பிக்கும் எண்ணம் கடந்த 25 வருடங்களாக அவரிடம் இருந்து வருகிறது, ஆனால் அவரால் அதைச் செய்ய முடியவில்லை.

அது மட்டுமல்லாது ரஜினியின் கட்சியைக் கட்டியெழுப்பக்கூடிய வளங்கள் அவரிடம் மிக அரிதாகவே இருக்கிறது. தமிழ்நாட்டின் தற்போதுள்ள சூழ்நிலையில் அவரிடம் இருக்கும் வளங்களை மட்டும் வைத்துக்கொண்டு வெற்றியை ஈட்டிக்கொள்ள முடியாது என்பதை அவர் உணர்ந்திருந்தார்.

‘தராசு’ ஷியாமின் கருத்துப்படி, ரஜினியின் இறுதி முடிவுக்கு பா.ஜ.க. வுடன் அவருக்கு ஏற்பட்ட கருத்து முரண்பாடு எனவே காரணம் என அறியப்படுகிறது. தமிழ்நாட்டில் அதிக ஆசனங்களைத் தக்கவைத்துக்கொள்ள பா.ஜ.க. ரஜினியையும், அ.தி.மு.க. வையும் ஏக காலத்தில் பாவித்து பேரம் பேசுவதில் ஈடுபட்டிருந்தது எனவும் இவ் விடயத்தில் எடப்பாடி பழனிச்சாமி மிகவும் இறுக்கமாக இருந்தாரெனவும் அதனால் கட்சியை விரைவில் ஆரம்பிக்கும்படி ரஜினி மீது பா.ஜ.க. அதிக அழுத்தத்தைப் பிரயோகித்தது எனவும் அதன் காரணமாகவே, ரஜினி ரசிகர்கள், ஆதரவாளர்களே அதிர்ச்சியடையும் வகையில், கட்சி ஆரம்பிக்கப் போகிறேன் என்ற அறிவித்தலைச் சமீபத்தில் அவர் செய்திருந்தார் எனவும் பரவலாகப் பேசப்படுகிறது.ரஜினி தனது முடிவைப்பற்றி கடந்த சில தினங்களாகப் பா.ஜ.க. விடன் பேசிவந்துள்ளார் எனவும் அதனால் தான் தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் “பா.ஜ.க. – அ.தி.மு.க. ஒப்பந்தத்தில் எந்தவித மாற்றுமும் இருக்காது” என அறிவித்துள்ளார் எனவும் ஷியாம் கருதுகிறார்.

இது பற்றி என்.டி.ரி.வி. யின் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த ‘இந்து’ குழுமத்தின் பணிப்பாளர் ராம் அவர்கள் ” கட்சியைத் தொடங்கும்படி ரஜினிகாந்திற்கு ஏகப்பட்ட அழுத்தம் கொடுக்கப்பட்டது எனவும் அதற்குப் பணியாது இந்த முடிவை எடுத்தமைக்காக அவரைப் பாராட்ட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

ரஜினியின் இந்த முடிவைத் தொடர்ந்து அவரது ஆதரவை வேண்டி அ.இ.அ.தி.மு.க., பா.ஜ.க. மற்றும் மக்கள் நீதி மன்றம் ஆகிய கட்சிகள் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன எனவும் அறியப்படுகிறது.


Print Friendly, PDF & Email