Spread the love
கனடா மூர்த்தி
ரஜனியின் 'தர்பார்' | திரை அலசல் 1
கனடா மூர்த்தி

ரஜினி காந்த் நடித்துள்ள ‘தர்பார்’!. (உலகம் முழுவதும் இன்று (09-01-2020) பொங்கல்… ஆரம்பம்) “ஏன்” “எப்டி” தமிழ் திரையுலகில் ரஜினி காந்த் 1990களில் இருந்து உச்ச நடிகர் என்ற அந்தஸ்த்துடன் தொடர்ந்து இருக்கிறார் என்ற காரணம் படத்தை பார்க்கும்போது புரிகிறது. இது அவரது 167-வது படமாம்.. 69 வயது என்பது ஒரு இலக்கம்தான். முகத்தில் தெரியும் ஜாலிக்கும் குறும்புக்கும் சுறுசுறுப்பிற்கும் நிகரான வேறு தமிழ் கதாநாயக நடிகர்கள் தமிழ்த் திரையுலகில் இல்லை என்றே தோன்றுகிறது… இது இறைவன் கொடுத்த வரம். (இளமை ஊஞ்சலாடுகிறது.) இளம் நடிகர்களே போட்டி போட முடியாது. உண்மையில் இவர்தான் ‘இளைய தளபதி’.

ரஜனியின் 'தர்பார்' | திரை அலசல் 2

இம்முறை போலிஸ் வேஷம். ஆதித்யா அருணாசலம். ஒரு டீன் ஏஜ் பெண்ணிற்கு அப்பா. மும்பைக்கு கமிஷனராக மாற்றலாகி வருகிறார். போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் மோதல். (போதைப்பொருள் விற்பனையாளர்களை மண்டையில் போடுதல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகளை, இளம் பெண்களை காப்பாற்றல்… ) முகத்தில் குறும்பு மட்டுமல்ல ஆக்ரோஷமும் கொப்பளிக்கிறது. நகைச்சுவையுடன் கிண்டல் அடிக்கும்போதும் சரி, விறுவிறுப்பாக நடக்கும்போதும்சரி.. சண்டைக் காட்சிகளிலும்சரி விசில் பறந்தது. போதாக் குறைக்கு தலைவா… என்ற பின்னணி இசை வேறு. சோகக் காட்சியிலும் ரஜனி ரஜனிதான். காதல் காட்சிகள்? அதிலும் ரஜனியின் குசும்புகள்தான்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். வழக்கம்போல இந்தியாவிற்கே உரித்தான ஏதாவது சமூகப்பிரச்சனையை எடுத்துவிடாமல் இம்முறை குற்றவாளிகளை வேட்டையாடுவதுபோல கதையை அமைமத்திருக்கிறார். எந்த சுவாரஸ்யமும் இல்லாத நேர்கோட்டுப் பயணம். கதை மும்பையில் நடக்கிறது என்பதால் பரிச்சயமில்லாத வட இந்திய ஆரிய முகங்களே படம் முழுவதும் வருகின்றன. வியாபார நோக்கமாக இருக்கலாம். இயக்குனரே ரஜனி ரசிகராக இருக்கிறார் என்பதை காட்டும் அளவில் படம் இருக்கிறது. புதிய தலைமுறைக்கு ரஜனியை அமர்க்களமாக அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள் என்றுதான் சொல்லலாம்.

ரஜனியின் 'தர்பார்' | திரை அலசல் 3

இடைவேளைவரை கொம்பாக்ட் ஆக இருந்த படம் இடைவேளைக்குப் பிறகு – பரபரப்பாக இருந்தாலும் – சுமார்தான். குறிப்பாக கிளைமாக்ஸ் சாதாரணமாக சப் என முடிந்ததுபோல இருந்தது. (கதையை சொல்லேல்ல… போய் படத்தைப் பாருங்கோ.) ரஜனி காந்த் என்ற மேஜிக்கை நம்பி படம் எடுத்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
சண்டைக் காட்சிகள் இல்லாத ரஜனி படமா? அதிலும் ரஜனி ஸ்டைல்தான். குறிப்பாக ரெயில்வே (மெட்ரோ?) ஸ்ரேஷனில் திருநங்கைகள் புடைசூழ பாட ரஜனி போடுவது சண்டையா அல்லது ஸ்டைலா.. இந்தப் படம் முழுவதும் ரஜனிக்கு ஒரு டெமோதான்.

நயன்தாரா? வந்தாரா என்றே தெரியாது. ரஜனி ஸாருடன் டூயட்டும் கிடையாது. நடுத்தர வயதும் தாண்டிய கதாநாயகனுக்கு உருவத்திலும் பொருத்தமான ஜோடியாகத்தான் தெரிகிறார். படம் முழுவதும் ரஜனியின் மகளாக நிவேதா தாமஸ் வருகிறார்.

தயாரிப்பு – எங்கட ஈழத்தமிழரான சுபாஷ்கரனின் லைகா நிறுவனம்! போட்ட பணம் முழுவதும் நடிகர்களுக்கே போயிருக்கும். அதி பிரமாண்ட செலவுகள் இல்லை. வெளிநாட்டில் பாடல்கள் இல்லை. இடையே ஒரு முறை தாய்லாந்துக் காட்சி வந்தாலும் வேற்றுநாட்டு வெளிப்புறக் காட்சிகளும் இல்லை. ரஜனியே போதும் என்று நினைத்துவிட்டார்கள். ஒரு படநிறுவனத்தின் பெயருக்கும், தயாரிப்பாளரின் பெயருக்கும் தியேட்டர் முழுவதும் கைதட்டியதை முதன் முறையாக இப்போதுதான் பார்த்தேன்.

Related:  கோவிட்-19 ஐத் துவம்சம் செய்யும் தமிழ்த் திரை நட்சத்திரங்கள் - பிரபலமாகிவரும் குமரனின் 'அனிமேஷன் வீடியோ'!

இளம் இயக்குனர்கள் மட்டுமல்ல.. இளம் இசையமைப்பாளரும் படத்தில் இருக்கட்டுமே என அனிரூத். இன்றைய இளைஞர்களுக்கான இசை!. பின்னணி இசை = ஆங்கிலப் படங்களின் பிரதிபலிப்பு. ஒரே ஒரு பாடலைத் தவிர மற்றப் பாடல்கள் மனதில் நிற்கவில்லை.

ஒளிப்பதிவு – சந்தோஷ் சிவன் சர்வதேச புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர்! ரஜனியை அழகாக காட்டுவதில் மினைக்கெட்டிருப்பார்.. ஒவ்வொரு காட்சியிலும் தனிக் கவனம் எடுத்திருக்கிறார். அழகு.. அழகு… ஒளிப்பதிவின் அழகைக் காணவேண்டுமா… தியேட்டருக்குப் போகவேண்டும் .. ரஜனிக்கான உடைகளும் அவரை இளமையாக்குகின்றன. மேக்கப்? நம்ப முடியவில்லை. கம்பியூட்டர்மூலம் முகத்தை மேலும் அழகாக்கியிருக்கிறார்கள் என்றுதான் நினைக்கிறேன்.
பிற்பகுதியில் கதை இழுத்தாலும் படம் முழுவதும் எடிட்டிங் படத்தின் விறுவிறுப்பையும், ரஜனியின் அழகினையும் நேர்தியாயாக தருவதில் குறியாக இருக்கிறது.

ரொறன்ரோவின் ‘யோர்க்’ சினிமாவில் வட அமெரிக்க ரஜனி மன்றத்தினர் படத்தை கொண்டாடிய பின்னரே காட்சிகள் ஆரம்பமாயின. முதல்நாள் காட்சியில் தென்னிந்திய ரசிகர்களே குழ்ந்தை குட்டிகளுடன் குழுமியிருந்தார்கள். ஆறிலிருந்து அறுபது வரை.. ‘ தலைவா…’

இந்திய அளவிலும் அவரது புகழ் தனி. இந்திய அரசின் பத்ம பூஷன் விருது (2000) பத்ம விபூசன் விருது (2016) பெற்ற நடிகர் நடிகர் ரஜனிகாந்த். அவர் அரசியலுக்கு வருவதைவிட படங்களில் மெனக்கெடுவது மேல். (இந்தப்படத்தில் அரசியல் பஞ்ச் டயலாக், அரசியல் காரப்பேச்சு பேசாவிட்டாலும், ஒரு இடத்தில் சிறையிலிருக்கும் சசிகலாவை கிண்டலடித்து வசனம் வருகிறது.)


அதைவிடவும், பல வசனத்துளிகள் “ஒரிஜினலாவே நான் வில்லன்மா” “I am a bad cop” “வயசுங்கிறது நம்பர்தான்”ரஜனி ரசிகர்கள் ரசிப்பற்காக உண்டு. குறிப்பாக யோகிபாபுவை கலாய்க்கும்போது ரஜனியின் முகபாவங்கள்….. (எனக்கு ஏனோ யோகிபாபுவை பார்க்க சகிக்கவில்லை – மனித உரிமைப் போராளிகள் மன்னிக்க)

சுருக்கமாக சொன்னால், கதை, லொஜிக் எல்லாம் பார்க்க விரும்புபவர்கள் தயவு செய்து வேறு படங்களுக்கு போகவும். அவற்றைத் தேடி இந்தப் படத்தை பார்த்துவிட்டு வந்து பிறகு திட்டி திட்டி முகப்புத்தகத்தில் எழுதவேண்டாம். எழுதினால் “இதைவிட்டா உங்களுக்கெல்லாம் வேறு வேலை இல்லையா?” என்று யாராவது கேட்டுவிடுவார்கள்.

“தர்பார்” ரஜனியை வைத்து ரஜனி ரசிகர்களுக்காய் ரஜனி ரசிகர்களால் ரசித்து எடுக்கப்பட்ட இன்னொரு படம்.

Print Friendly, PDF & Email