NewsWorld

யேமன் | தவிர்க்க முடியாத பிரிவினை

வரலாறு

யேமன், அரபுலகத்தின் மிகவும் ஏழ்மையான நாடு. யேமனின் வடக்குப் பிரதேசத்திலுள்ள ஹூதிஸ் மக்கள் 2004 இலிருந்து பிரிவினை கேட்டு சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்ப்ட்ட அரசுக்கு எதிராகப் போராடிவருகிறார்கள். அரசாங்கத்துக்கு ஆதரவாக சவூதி அரேபியாவும், ஐக்கிய அரபுக் கூட்டாட்சியும் (UAE) ஆயுத, பொருளாதார உதவிகளைச் செய்து வருகின்றன. போர் நடைபெறும் ஹூதிஸ் வாழும் சாடா மாகாணம் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பிரதேசம். இங்கு கடந்த 3 வருடங்களாக போர் மிகவும் உக்கிரமாக நடந்து வருகிறது.

செப்டம்பர் 2014 இல், ஹூதிஸ் யேமன் நாட்டின் தலைநகரான சானாவைக் கைப்பர்றியிருந்தனர். படிப்படியாக அவர்களது நகர்வு அடுத்த மிகப் பெரிய நகரமான ஏடனை நோக்கி இருந்தது. ஹூதிஸ் இன் நகர்வை எதிர்த்து 2015 இல் அரபு நாடுகளின் கூட்டு, அங்கீகரிக்கப்பட்ட யேமன் அரசை மீளமர்த்துவதற்காக, இராணுவத் தாக்குதல்களில் ஈடுபட்டது.

யேமன் பிரிவினைவாதிகள்

யேமன் அரசுக்கு ஆதரவாக, சவூதி- ஐ.அ.கு. மற்றும் தென் மாகாண பிரிவினைவாதிகளான சதேர்ண் ட் ரான்சிசனல் கவுன்சில் (Southern Transitional Council (STC)) ஆகியோர் ஹூதிஸ் இற்கு எதிராகக் களமிறங்கின.

இந்த மாத ஆரம்பத்தில், யேமனின் இரண்டாவது பெரிய நகரமான ஏடனைக் கைப்பற்றின. தலை நகர் சானாவை ஹூதிஸ் இடம் இழந்த நிலையில் நாட்டின் ஜனாதிபதி அப்றாபு மன்சூர் ஹாடி, தனது ஆட்சியை இங்கிருந்துதான் நடத்திக் கொண்டிருந்தார்.

கடந்த புதன் கிழமை, அரசாங்கத்தின் படைகள் ஏடனைத் திரும்பவும் கைப்பற்றிவிட்டதாக அறிவித்தது. ஆனால் அது நிலைக்கவில்லை. ஐ.அ.கு (UAE) படைகளின் உதவியுடன் STC திரும்பவும் ஏடனைக் கைப்பற்றி விட்டது. இருப்பினும் இரண்டு தரப்பும் ஏடனைத் தாமே கட்டுப்பாட்டுக்குள் வைதிருப்பதாக அறிவித்திருக்கின்றனர்.

சவூதி – ஐ.அ.கு. கூட்டில் பிளவு

ஆனால் ஏடனுக்கான போர் இரண்டு பிரதான கூட்டாளிகளையும் பிரித்து விட்டது. இது ஐ.நா. சபைக்கும் சர்வதேசங்களுக்கும் தற்போது பெரிய தலையிடியைக் கொடுத்திருக்கிறது.

ஏடனின் பிரச்சினை 2017 இல் ஜனாதிபதி ஹாடி, ஏடனின் ஆளுனர் ஐடாறஸ் அல்-சுபேய்டி யை நீக்கியதிலிருந்து ஆரம்பமானது. ஆளுனருக்கு ஆதரவாக STC பிரிவினைவாதிகள் உதவிக்கு வந்தனர். தென் யேமன் 1967 முதல் 1990 வரை தனிநாடாகவே இருந்தது. 1990 இல் இரண்டும் இணைக்கப்பட்டு ‘யேமன்’ நாடானது. STC பிரிவினைவாதிகள் ஏடனைக் கைப்பற்றியதன் பிறகு ஹாடி தனது அரசை சவூதி அரேபியாவிற்க்கு நகர்த்த வேண்டி வந்துவிட்டது. இப்பொழுது ஐ.அ.கு. ஆதரவில் அல்-சுபீடி யின் தலைமையில் STC இன் ஆட்சி ஏடனில் நடக்கிறது.

ஏடனின் வீழ்ச்சி

ஜனவர் 2018 இல் அரச ஆதரவுப் படைகளுக்கும் STC படைகளுக்குமிடையில் சண்டை மூண்டது ஆனால் சவூதி-ஐ.அ.கு. தலையீட்டில் சமாதானப்படுத்தப்பட்டது. திரும்பவும் ஆகஸ்ட் 7, 2019 இல் மோதல்கள் மீண்டும் ஆரம்பித்தது. ஆகஸ்ட் 10 இல் ஜனாதிபதி மாளிகை STC கையில் விழுந்தது. ஹாடியின் அரசு ஐ.அ.கு. STC இற்கு ஆதரவாகச் செயற்படுவதாகக் குற்றஞ்சாட்டுகிறது.

சவூதி அரேபியாவும் ஐ.அ. குடியரசும் மீண்டுமொரு இரு தரப்பு இணக்கப்பட்டுக்காக முயற்சித்தாலும் மோதல்கள் தொடர்வதாகவும் உயிரிழப்புக்கள் அதிகரித்த வண்ணமுள்ளன என்றும் அரசு சார்பற்ற அமைப்புகள் கூறுகின்றன.

தற்போது, ஐ.அ.கு. யேமனிலிருந்து தனது படைகளைத் திருப்பி அழைப்பதாக அறிவித்துள்ளது.

இருப்பினும் யேமன் உடைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்த வண்ணமே உள்ளன என்று ஐ.நா. வின் யேமனுக்கான தூதுவர் மார்ட்டின் கிறிபித்ஸ் பாதுகாப்புச் சபையை எச்சரித்திருக்கிறார்.