Health

யூறிக் அமிலத்தைக் குறைக்கும் வழிகள்

நாம் சிறுநீர் கழிக்கும்போது வெளியேறும் கழிவுப் பொருட்களிலொன்று யூறிக் அமிலம். உணவு சமிபாடடைந்த பின்னர் மீதமாகும் இக்கழிவை சிறுநீரகங்கள் சிறூநீருடன் வெளியேற்றுகின்றன. சிறுநீரகங்கள் தமது தொழிற்பாட்டைச் செவ்வனே செய்யாதபோது மேலதீக யூறிக் அமிலம் குருதியில் தங்கிவிடுகிறது. இது குருதியையும், சிறுநீரையும் அமிலத்தன்மையாக்கி விடுவதால் சிறுநீரகக் கற்கள் (hyperuricemia), கீல் வாதம் (gout) உள்ளிட்ட பல வியாதிகள் பீடிக்கின்றன. அதே வேளை குருதியில் அதிகம் சர்க்கரை (சீனி) இருப்பதும் இவ்விளைவுகள் ஏற்படுவதற்குக் காரணமாகின்றது.

யூறிக் அமிலத்திலுள்ள கூரிய படிகங்கள் (crystals) ஒன்றிணைந்து கற்களாக மாறும்போது அவை சிறுநீரகங்களில் (சிறுநீரகக் கற்கள்) தாங்கமுடியாத வலியை ஏற்படுத்துகின்றன. மாறாக இவை மூட்டுகளிலும் பாதங்களிலும் தேங்க நேரிடும்போது அது மூட்டுவாதம் (arthritis) மற்றும் கீல்வாதமாக (gout) பரிணமிக்கிறது.

ஒரு கலத்தில் (cell) நடைபெறும் சக்தி உருவாக்கத்திற்கான நடைமுறையை வளர்சிதை மாற்றம் (metabolic activity) என்பார்கள். இந்த நடைமுறைக்கான சமிக்ஞைகளை அனுப்புவதே பூரின்கள் தான். அதைவிட கல வளர்ச்சி, சர்க்கரை கடத்தல், ஃபொஸ்பேட் வழங்கல் போன்ற இதர செயற்பாடுகளுக்கும் பூரின்கள் தேவை. இச்செயற்பாட்டின்போது பூரின் உடைக்கப்பட்டு அதன் கழிவுப்பொருளாக சிறுநீர் (யூரின்) உண்டாகிறது. எனவே பூரின்களின் தேவை நமது உடலுக்கு மிகவும் அவசியமானது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக நமது உடலினால் பூரின்களை உற்பத்தி செய்ய முடியாது. எனவே அவற்றை சாப்பிடும் அல்லது குடிக்கும் பதார்த்தங்களிலிருந்தே அது பெறுகிறது. இப்படியான பதார்த்தங்கள் சமிபாடடையும்போது அதன் விளைபொருளாக யூரிக் அமிலம் குருதியில் சேர்க்கப்படுகிறது. அமெரிக்க நியமத்தின்படி குருதியில் ஒரு டெசிலீட்டருக்கு 6.8 மில்லிகிராம் யூறிக் அமிலத்திற்கு மேலதிகமாக இருப்பின் குருதி அமிலத்தன்மையாக மாறிவிடும். இதன் விளைவாக நீரிழிவு நோய் ஆரம்பிப்பதற்கான சாத்தியமுமுண்டு.

பூறின் பதார்த்தம் உடலினால் தயாரிக்கப்படமுடியாத ஒன்று. எனவே இயற்கையான உணவுப் பொருட்கள் மூலமே இது உடலினுள் சேர்க்கப்படுகிறது. சிவப்பு இறைச்சி, மீன், கடலுணவு, கோழி இறைச்சி, ஸ்பினாச், கோலி ஃப்ளவர், செலெறி, மல்லி போன்ற உணவுகளில் அதிகம் பூறின் இருக்கிறது. மூட்டு, கீல் வாதங்களின் உபாதைகள் குறையும்வரை இவற்றைத் தவிர்த்துப் பார்க்கலாம்.

எமது உடலில் உருவாகும் யூறிக் அமிலத்தின் 70% வீதமானது சிறுநீரகங்களினால் அகற்றப்படுகிறது. நாளொன்றுக்கு இரண்டு அல்லது மூன்று லீட்டர்கள் நீரை அருந்துவதனால் நிறுநீரகங்களின் செயற்பாட்டைத் துரிதப்படுத்தி இவ்வுபாதைகளைக் குறைத்துக்கொள்ள முடியும்.

உடலில் சேர்க்கையாகும் யூறிக் அமிலத்தின் அளவைக் குறைக்க சில வகையான உணவுகளைத் தவிர்க்கும்படியும் சிலவற்றை அதிகரிக்கும்படியும் நலவாழ்வு ஆலோசகர்கள் பரிந்துரைக்கிறார்கள். தவிர்க்கப்படவேண்டிய உணவுகளில் முக்கியமானவை சில பழவகைகள், தேன் ஆகியவை. சில பழங்களில் காணப்படும் ஃபிறக்டோஸ் (fructose) எனப்படும் சர்க்கரை இலகுவாக சமிபாடடையும் வகையானது. ஒப்பீட்டளவில் சுக்குரோஸ் (sucrose) எனப்படும் சர்க்கரை வகை (சீனி) தாமதித்தே கலங்களில் சேர்க்கப்படுகிறது. எனவே கனிந்த பழங்களைத் தவிர்ப்பது நல்லது. இனிப்புள்ள பானங்களிலிருந்தும் அதிகளவு பூறின் உடலுக்குள் சேர்கிறது. எனவே அவற்றைத் தவிர்த்து நீரை அல்லது சர்க்கரை சேர்க்காத தேனீர் அல்லது கோப்பியை அருந்துவது நல்லது.

செரி பழங்களும் யூறிக் அமிலத்தைக் குறைப்பதறு நல்லது. இதிலிருக்கும் அந்தோசயனின்கள் அழற்சியைக் (inflammation) குறைப்பதில் வல்லவை. அத்தோடு செரி பழங்களிலிருக்கும் வைட்டமின் c மற்றும் நார்ச்சத்துக்கள் ஆகியவையும் யூறிக் அமிலத்தைக் குறைப்பதற்கு உதவுகின்றன. இப்பழததைச் சாப்பிடுவதனாலோ அல்லது அவற்றின் சாற்றைக் குடிப்பதனாலோ கீல் வாதமுள்ளவர்கள் நிவாரணம் பெறலாம்,

அமெரிக்க தேசிய மருத்தவ நூலக (National Library of Medicine) வெளியீட்டில் மிதமான கோப்பி பாவனை ஆண்களிலும் பெண்களிலும் யூரிக் அமிலத்தின் அளவைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது. சிறுநீரில் யூறிக் அமிலம் வெளியேற்றப்படும் வேகத்தைக் கோப்பி அதிகரிக்கும் அதே வேளை, பூறீன்களை உடைக்கும் தொழிற்பாட்டைத் தாமதிக்கச் செய்கிறது எனவும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உடல் எடை அதிகரிப்பின் காரணமாகவும் சிறுநீரகங்களின் தொழிற்பாடு குறைவடைகிறது இதனால் குருதியில் யூறிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கிறது. எனவே வாழ்வியல் மாற்றங்களைச் செய்து உடற் பருமனைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது நல்லது.

வைட்டமின் C உடலில் யூறிக் அமிலத்தின் அளவைக் குறைக்கிறது. ஒறேஞ் பழங்கள், ஸ்றோபெறி, கிவி, புறோக்கொலி, மிளகு, பிளாக்கறண்டட், உருளைக்கிழங்கும் பப்பாசிப்பழம் ஆகியன குருதியிலுள்ள யூறிக் அமைலத்தின் அளவைக் குறைக்கின்றன எனக் கூறப்படுகிறது.

நாளுக்கு நாள் எடுக்கும் சில மருந்து வகைகளும் குருதியில் யூறிக் அமிலத்தின் அதிகரிப்பிற்குக் காரணமாகின்றன. அஸ்பிரின், டையூறெட்டிக்ஸ் (உடலில் அதிக நீர் தேங்கினால் சிறுநீரகங்களை ஊக்குவித்து நீரை வெளியேற்றச் செய்யும் மருந்து வகை), வைட்டமின் B-3, சிஅக்கிளோஸ்பொறீன் எனப்படும் நிர்ப்பீடன ஆற்றலைக் குறைக்கும் மருந்துகள், ஏஸ் இன்ஹிபிற்றர்ஸ் எனப்படும் உயரழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் போன்றவையும் குருதியில் யூறிக் அமிலச் சேர்க்கையை ஊக்குவிக்கின்றன.

யூறிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த சில மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். கொல்ச்சிசீன், சாந்தீன் ஒக்ஸிடேஸ் இன்ஹிபிற்றர்ஸ், புறோபாலன் போன்றவை இவற்றில் சில.

Disclaimer: இக்கட்டுரை வழிகாட்டளூக்கத்திற்கான தகவலைத் தருவதற்காக மட்டுமே எழுதப்பட்டது. இதை மருத்துவ ஆலோசனையாக எடுத்துக்கொள்ளவேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிரது. உங்களுக்கு இப்படியான உபாதைகள் இருப்பின் உங்கள் மருத்துவரை நாடி ஆலோசனை பெறுங்கள். (Image Credit: Care Hospitals)