US & Canada

யூத எதிர்ப்பு: பென்சில்வேனியா பல்கலைக்கழக அதிபர் பதவி விலகினார்

ஹார்வார்ட், எம்.ஐ.ரி., பென்சில்வேனியா பல்கலைக்கழகங்களின் அதிபர்கள் (படம்: Fox News)

பாலஸ்தீன -இஸ்ரேலிய போர் மத்திய கிழக்கிலிருந்து உலகம் முழுவதும் வியாபித்து வருகிறது. கடந்த வாரம் அமெரிக்க காங்கிரஸ் குழுவினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டதன் பின்னர் எழுந்த அழுத்தத்தின் காரணமாக பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் தலைவர் எலிசபெத் மகில் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார்.

போரில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வருவதும், ஐ.நா. சபையில் போர் நிறுத்த முயற்சிகள் எடுக்கப்படும் போதெல்லாம் அவற்றைத் தனது வீட்டோ வாக்கைப் பாவித்து அமெரிக்கா முறியடித்து வந்தது. இப்போரில் பெண்கள், குழந்தைகள் உட்படப்ப் பெருவாரியான பாலஸ்தீனமக்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து அமெரிக்கா உட்பட உலகின் பல்வேறு நகரங்களில் போர்நிறுத்தம் கோரி ஊர்வலங்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. அமெரிக்காவில், ஹார்வார்ட், பென்சில்வேனியா, மசச்சூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்லூரி போன்ற பல பிரபல பல்கலைக்கழகங்களில் இவ்வகையான பல ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டன. ஆனாலும் போர் நிறுத்தம் கோரும் ஆர்ப்பாட்டங்களை யூத எதிர்ப்பு ஊர்வலங்களெனக் கூறி அவற்றைத் தடுத்து நிறுத்தும்படி அமெரிக்கா வாழ் யூதர்களும் அவர்களது ஆதரவாளர்களான அரசியல்வாதிகளும் பல்கலைக்கழக நிர்வாகங்கள் மீது அழுத்தங்களைக் கொடுத்து வந்தன.

இப்படியான அழுத்தங்களில் ஒன்றாக பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் பெயர்களைத் தரும்படியும் “அவர்கள் தமது வாழ்க்கையில் எங்கேயும் வேலைகளை எடுக்கமுடியாது நாம் பார்த்துக்கொள்வோம்” எனவும் கூறியதோடு பல்கலைக்கழகத்திற்கு தாம் வழங்கும் நன்கொடைகளை நிறுத்திவிடுவோம் எனவும் யூத அமைப்புகளும் தனியாரும் எச்சரித்திருந்தனர். இதே போன்ற ஆர்ப்பாட்டங்கள் ஹார்வார்ட், எம்.ஐ.ரி. பல்கலைக்கழகங்களில் நடைபெற்றிருந்தன ஆகையால் அப்பல்கலைக்கழக நிர்வாகங்களுக்கும் இதே போன்ற எச்சரிக்கைகள் விடப்பட்டிருந்தன. இருப்பினும் இப்பல்கலைக் கழக நிர்வாகங்கள் பேச்சு, எழுத்துச் சுதந்திரங்களுக்கு இடம் கொடுக்கும் வரலாற்றைக் கொண்டவை என்பதைச் சுட்டிக்காட்டி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதைத் தவிர்த்து வந்தன. இந் நிலையில் இம் மூன்று பலகலைக்கழகங்களின் தலைவர்களும் கடந்த வாரம் காங்கிரஸ் குழுவினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்தனர்.

இவ்விசாரணையின் போது “யூதர்கள் படுகொலை செய்யப்படவேண்டும் எனக் கோருவது பல்கலைக்கழகத்தின் விதிமுறைகளை மீறுவதாகாதா?” என்ற கேள்வி விசாரணையாளர்களால் திரும்பத் திரும்பக் கேட்கப்பட்டது. இதற்கு பேரா. மகில் அவர்களது பதில் “தனது பேச்சு சுதந்திர வரலாற்றைப் பேணவேண்டிய கடப்பாடு பல்கலைக்கழகத்துக்கு உண்டு” என்ற சாரத்தில் இருந்தது. விசாரணை முடிந்த பின்னரும் அவர் பதவி விலகவேண்டுமென்ற அழுத்தம் தொடர்ச்சியாகப் பிரயோகிக்கப்பட்டு வந்தது. இதைத் தொடர்ந்து நேற்று (டிசம்பர் 09) அவர் தனது தலைவர் பதவியிலிருந்து விலகுவாதாக அறிவித்திருக்கிறார். தலைமைப் பதவியிலிருந்து விலகினாலும் அவர் பல்கலைக்கழகத்தின் கரே சட்டக் கல்லூரியில் தொடர்ந்தும் பேராசிரியராகக் கடமையாற்றுவார் எனக்கூறப்படுகிறது.

இப்படியான பல்கலைக்கழகங்களின் கற்பவர்கள் பெரு வசதி படைத்தவர்களின், செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகளின், பழையமாணவர்களின் பிள்ளைகளாக அல்லது அவர்களால் பரிந்துரைக்கப்பட்டவர்களாக இருப்பதுண்டு. வருடமொன்றுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களில் சுமார் 85% இப்படியான மாணவர்களே. இதனால் இப்பல்கலைக்கழகங்களுக்கு இப்படியானவர்களால் பெருந்தொகையான நன்கொடைகள் கிடைப்பதுண்டு. இவர்களில் பெரும்பாலோர் யூத சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பது வழக்கம்.

சென்ற வாரம் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்திற்கு வழக்கமாக 100 மில்லியன் நன்கொடை கொடுத்து வரும் பழையமாணவர் சங்கம் வெறும் 1 டொலருக்கு காசோலை அனுப்பித் தனது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தது.

இதே வேளை உலகம் முழுவதிலும் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாகத் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் வலுப்பெற்றுவரும் நிலையில் அவற்றைத் திசை திருப்பவோ அல்லது நிறுத்தவோ அவ்வவ் நாடுகளின் அரசுகளுக்கு யூத அமைப்புக்களாலும் தனியாராலும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் முக்கியமான அடிநாதமாக அவர்கள் முன்வைப்பது “பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவான கருத்துக்கள் யூதர்களுக்கு எதிரான கருத்துக்கள்” என்பதுவே. இதைப் பல மேற்குநாடுகளின் அரசுகள் ஏற்றுக்கொண்டு ஆர்ப்பட்டம் செய்பவர்கள் மீது நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆனால் பல்கலைக்கழகங்களுக்கு இப்படியான நிர்ப்பந்தங்கள் இல்லை. குறிப்பாக “பாலஸ்தீன ஆதரவு யூத எதிர்ப்பு” என வரையறுக்கப்பட முடியாது என்பதே பல்கலைக்கழக நிர்வாகங்களின் ஏகோபித்த முடிவு.

காங்கிரஸ் விராணைகுழுவினால் லிஸ் மகில் உட்பட மூவர்மீதும் திரும்பத் திரும்ப கேட்கப்பட்ட கேள்வி “யூத படுகொலையை ஆர்ப்பாட்டக்காரர்கள் வ்லையுறுத்தியதை ஏற்றுக்கொள்கிறீர்களா?” என்பதே. நியூ யோர்க் மாநிலத்தின் குடியரசுக் கட்சியின் பிரதிநிதியான எலிஸ் ஸ்டெஃபானிக் என்ற பெண்ணே இக்கேவியைக் கேட்டவர். இதில் ஆச்சரியம் என்னவென்றால் எந்தவொரு இடத்திலும் ஆர்ப்பாட்டக் காரர்கள் ‘யூதப் படுகொலை’ பற்றிப் பேசியிருக்கவில்லை என்பதை யூத ஆதரவு அமைப்புகளும், பாலஸ்தீனிய ஆதரவு அமைப்புகளும் ஏற்றுக்கொள்கின்றன.

இவ்விசாரணையின் போது மூன்று பல்கலைக்கழக நிர்வாகிகளது பதில்களும் வழக்கறிஞர்கள், கற்றோருக்குரியவையாக இருந்தமை சாமானிய அரசியல்வாதிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருந்தன. “ஆர்ப்பாட்டக்காரர்களின் பேச்சு நடவடிக்கையாக மாறியிருந்தால் அது கண்டிக்கப்படவேண்டியதே” என்பதுவே பேரா. மகிலின் பதிலாக இருந்தது.

பேரா. மகிலின் மீது கடந்த சில மாதங்களாக யூத அமைப்புகளாலும் அவற்றின் ஆதரவாளர்களினாலும் அழுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்குக் காரணம் கடந்த செப்டம்பர் மாதம் பல்கலைக்கழக வளாகத்தில் பாலஸ்தீனிய இலக்கிய விழாவொன்று நடைபெற அனுமதித்திருந்தமையே காரணம். இதில் பேசிய பேச்சாளர்கள் இஸ்ரேல் நாட்டுக்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர் எனக் கூறப்படுகிறது.

ஆனாலும் பல்கலைக்கழக மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்ட ஊர்வலங்களில் ” இஸ்ரேல், இனப்படுகொலைக்காக நாங்கள் உங்களை நீதிமன்றத்தில் நிறுத்துவோம்” என்னும் சுலோகங்களே கூறப்பட்டன என்பதையும் “யூதர்களை படுகொலை செய்வோம்” என்ற சுலோகங்கள் பாவிக்கப்படவில்லை எனவும் நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.