யூக்கிரெய்ன் | யாருக்காக அழுவது?

சிவதாசன்

யாருக்காக அழுவது? / யார்மீது கோபப்படுவது? / யார வைவது? / யாரைத் தூஷிப்பது? / யார் மீது சாபம் போடுவது?. இதில் ஒன்றையோ பலதையோ நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். ரஷ்யா யூக்கிரேயினுக்குள் படையெடுத்ததிலிருந்து மக்கள் மன்றங்கள் வழக்கமான சோலிகளை விட்டுவிட்டு இதையேதான் விவாதித்துக்கொண்டிருக்கின்றன. சில வொட்காவுடன் சில பிளெயின் ரீயுடன். ஓவர்டைம் வேறு. வழக்கம் போலவே இரண்டு முகாம்கள். முகநூல், வட்ஸப் தளங்கள் அதிர்கின்றன.

சும்மா வாயை வைத்துக்கொண்டிருக்க (கையையும் தான்) முடியாத பிறவியாகிய எனக்கு இவற்றில் ஏதோ ஒரு முகாமிற்குள் சேரவேண்டி வந்துவிட்டது. உண்மையில் உணர்ச்சிவசப்பட்டா அல்லது எனக்கும் கொஞ்சம் தெரியுமெனக் காட்டுவதற்கா தெரியாது. சேர்ந்துவிட்டேன்.

முள்ளிவாய்க்கால் – கவனிக்கப்படாத போர்

Bias எனப்படும் முற்சாய்வுடனே நான் இவ்விவாதத்தில் கலந்துகொண்டேன். அதாவது ரஷ்யா-யூக்கிரெய்ன் இரண்டையுமே எனக்கு அதிகம் பிடிப்பதில்லை. ஈழத்தமிழர் போராட்டத்தில் இந்த இரு நாடுகளுமே தமிழருக்கு எதிரிகள். இறுதிப் போரில் எமது மக்கள் இரக்கமில்லாது கொன்றொழிக்கப்பட்ட காட்சிகளைத் தாண்டி எந்தப் போராலும் என் மனதை உருக்கிவிடமுடியாது. சுனாமியால் மர உச்சியில் தூக்கி வைக்கப்பட்ட ரயர் போன்று முள்ளிவாய்க்கால் எனது கோபத்தை, கவலையை, சாபத்தைத் தூக்கிவைத்திருக்கும் உச்சத்தை இனி எந்த நிகழ்வுகளாலும் தொடமுடியாது. எமது மக்களின் தொடரும் இன்னல்களின் கண்ணாடியூடு பார்க்கையில் யூக்கிரெய்ன் போர் – எனக்கு – ஒரு வெறும் சம்பவமே. போரை நிறுத்து என்று கூச்சல் போடவோ, கொடி பிடிக்கவோ சமூக ஊடகங்களில் படம் காட்டவோ என்னால் முடியாது. அதற்காக அப்படிச் செய்வோரைக் குறைத்து மதிப்பிடுவதாக தயவுசெய்து நினைக்க வேண்டாம். My pain tollerance is just different, thats all.

இந்தப் போரில் நான் மேற்கு நாடுகளின் நிலைப்பாட்டை எதிர்க்கும் முகாமிற்குள் இருக்கிறேன். அதற்குக் காரணம், மீண்டும் நமது போராட்டம் தான். எமது போராட்டத்தில் ரஷ்யா vs அமெரிக்கா என்ற இரு காரணிகளையும் ஒப்பிடும்போது எதிரியான ரஷ்யா எமக்கு முன்னே நின்றது அமெரிக்கா எமக்குப் பின்னே நின்றது. துணைக்குத்தான் நிற்கிறது என்பதை நம்பினோம். ஆனால் நடந்தது வேறு. அமெரிக்கா புதிதாக ஒன்றும் செய்யவில்லை. அது தன் இயல்பான குணாம்சத்தை விட்டு விலகவில்லை. நம்மில்தான் தவறு. அமெரிக்கா உருவாகியதிலிருந்து அது அப்படித்தான்.

“அப்ப ஏன் நீங்கள் இங்க (அமெரிக்கா, கனடா, மேற்கு நாடுகள்) வந்தனீங்க? ரஷ்யா, சீனாவுக்கு அகதியாகச் சென்றிருக்கலாமே” என்ற குரல்கள் எதிர் முகாலிலிருந்து உரத்துக் கேட்கப்படுகின்றன. உணர்வுபூர்வமாக நியாயமான கேள்வியாக இருக்கலாம் ஆனால் அது தர்க்க ரீதியானதாக இல்லை என்பது எனது கருத்து. அயலில் தமிழ்நாடு – எங்கள் தொப்புள் கொடி – இருக்க நாமெல்லாம் மேற்கு நாடுகளுக்கு ஓடியது மேற்கு நாடுகளின் கருணையினால் அல்ல, எங்களின் சுயநலத்தினால், எங்களிடம் வசதி இருந்ததால். அல்லாவிட்டால் தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு இலட்சம் அகதிகளைப் போல் சிறப்பு முகாம்களில் உழன்றிருப்போம்.

பிரித்தானியா, ஸ்பெயின், போர்த்துக்கல், ஃபிரான்ஸ், ஒல்லாந்து, டென்மார்க் என்று மேற்கு நாடுகள் எனக்கூறிக்கொள்ளும் நாடுகள் அமெரிக்கக் கண்டங்களையும், ஆசிய, ஆபிரிக்க, அவுஸ்திரேலியாக் கண்டங்களையும் வாரிச்சுருட்டிக் கட்டியெழுப்பிய கோட்டைகளில் சுருட்டப்பட்ட நாடுகளின் மக்களுக்கான இடம் எப்போதுமே இருக்கிறது. அந்த வகையில் நான் எனது தேர்வில் கனடாவுக்கு வந்த ஒரு latterday settler. அவ்வளவுதான்.

ரஷ்யா தனது அயல் பிரதேசங்களை, நாடுகளைத் தம்மோடு இணைத்துக்கொண்ட ஒரு சாம்ராஜ்யம். இந்த சோவியத் குடியரசில் எந்தவொரு நாடும் இன்னொரு நாட்டின் அடிமையாக இருந்ததில்லை. ரஷ்யாவோ அல்லது சோவியத் குடியரசின் எந்தவொரு நாடோ ஆசிய, ஆபிரிக்க நாடுகளின் வளங்களைக் கொள்ளையடிக்கவில்லை, சக மனிதர்களை அடிமைகளாகக் கொண்டு வரவில்லை. அப்படி நடந்திருந்தால் நாமும் அவர்களது மொழிகளைப் பேசி அவர்களது நாடுகளிலும் ‘அகதிகளாகப்’ போய் வாழ்ந்திருப்போம். சீனாவின் நிலையும் இதுதான். இந்த இரண்டு நாடுகளுமே எம்மீது தமது மேலாண்மைத் தனத்தைக் (superiority) காட்டவில்லை. இனம், கலாச்சாரம் ஆகியவற்றில் கலப்பு ஏதும் இல்லாது தனித்துவத்தைப் பேண விரும்பும் உலகின் பல இனங்களில் இவையும் அடங்கலாம். பிற நாடுகளில் சென்று அக் கலாச்சாரங்களை நாசம் பண்ணாமல் இருக்கும்வரை அந்நாடுகளோடு எனக்குப் பிரச்சினை இல்லை.

பெரும்பாலான உலகப் போர்களுக்குப் பின்னர் வழமையாக நடைபெறும் மக்கள் இடப்பெயர்வுகளின்போது மேற்கு நாடுகள் தமது கதவுகளைத் திறந்தது போல ரஷ்யா போன்றவை தமது கதவுகளைத் திறக்கவில்லை என்பது எதிர் முகாமின் வாதம். அதில் முற்றிலும் உண்மை இல்லை. அப்படி இருந்திருந்தால் இஸ்ரேல் உருவாகியிருக்க முடியாது. இருப்பினும் அக்கேள்விக்கு ஒரே மறுமொழி, இப் போர்களுக்குக் காரணமாக ரஷ்யா போன்ற நாடுகள் இருக்கவில்லை என்பதே.

முதலாவது உலகப் போர் ஆஸ்த்திரியாவில் ஆரம்பித்தது. அப்போது ரஷ்யாவின் நட்பு நாடான சேர்பியா மீது ஆஸ்திரியா-ஹங்கேரி படையெடுக்க முயன்றபோதே ரஷ்யா அதில் தலையிட நேர்ந்தது. இரண்டாவது உலகப் போரின்போது, மேற்குநாடுகளின் கோரிக்கைக்காக இறங்கி ஜேர்மனியைத் தோற்கடித்ததன் மூலம் இன்றைய மேற்கு ஐரோப்பாவைத் தக்கவைத்தது. அதற்காக அது 20 மில்லியன் போர்வீரர்களை சோவியத் குடியரசு இழந்தது. வழக்கம்போல போர் முடிந்ததும் ஸ்டாலின், சேர்ச்சிலாலும், அமெரிக்காவினாலும் முதுகில் குத்தப்பட்டார். இருந்தும் சோவியத் குடியரசு பழிவாங்கவில்லை. பாதுகாப்பை முன்நிறுத்தி தனது குடியரசுக்கு அப்பால் சென்று வேறு நிலப்பரப்புகளை அபகரிக்க முனையவில்லை.

1979 இல் ஆப்கானிஸ்தானில் படையெடுத்ததன் மூலம் புரட்சியை ஏற்படுத்தி மார்க்சீய கட்சித் தலைவரான பாப்ராக் கர்மல் என்பவரைப் பதவியில் இருத்தியபோதும் அந்நாட்டைத் தமது குடியரசுடன் சேர்த்துக்கொள்ளவில்லை. ஆனால் அவ்வாட்சி நீண்ட காலம் நீடிப்பதற்கு அமெரிக்கா அனுமதிக்கவில்லை. அமைதியாக இருந்த இஸ்லாமின் கைகளில் ஆயுதங்களைத் திணித்து ‘ஆளும் கட்சி உங்கள் மதத்துக்கு எதிரானது’ என்ற போர்வையில் ரஷ்யர்களை அடித்துக் கலைக்க முஜாஹிதீன் என்ற கொரில்லா அமைப்பை உருவாக்கியது. அப்போதுதான் அமெரிக்காவின் புதிய கண்டுபிடிப்பான விமான எதிர்ப்பு ஏவுகணைகளை (Stinger) அமெரிக்காவால் அறிமுகப்படுத்தப்பட்டன. முஜாஹிதீன் ரஷ்யா விமானங்களை வானத்திலிருந்து வீழ்த்தத் தொடங்கியபோது ஆப்கானிஸ்தான் பிரச்சினை மேலெழுந்தது. அப்போதுதான் கோர்பர்ச்சேவ் அமெரிக்க வலைக்குள் வீழ்த்தப்பட்டார். பைடன் ஆப்கானியர்களை அம்போவென்று கைவிட்டுவிட்டு ஓடித்தப்பும்வரை அமெரிக்க ஆக்கிரமிப்பு தொடர்ந்தது. அப்போதும் அமெரிக்காவைக் கலைக்க ரஷ்யா முனையவில்லை.

1991 இல் கோர்பச்சேவ் என்ற ஒரு பலவீனமான (நல்ல மனிதர் என்பதில் ஐயமில்லை) ஒரு மனிதரை ஏமாற்றி மேற்குலகம் சோவியத் குடியரசை உடைத்தது. அப்போது அவருக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதி கிழக்கு பேர்லினைத் தாண்டி நேட்டோ கிழக்குநோக்கி நகராது என்பது. வார்சோ ஒப்பந்தம் உடைக்கப்படும்போது நேட்டோவின் தேவை இனிமேல் இருக்காது என்ற வாக்குறுதி அப்போது கொடுக்கப்பட்டது. அதைத் திருப்பிக் கேட்குமளவுக்குப் பலமான மனிதராக கோர்பச்சேவோ அவரின் பின்னால் வந்த யெல்ஸ்ரினோ இருக்கவில்லை. இப்போ பெலாருஸ், ஃபின்லாந்து போன்ற சில நாடுகளைத் தவிர ரஷ்யாவின் எல்லையிலுள்ள அனைத்து நாடுகளிலும் நேட்டோ படைகளும் கூடவே அமெரிக்க படைகளும் குடிவந்துவிட்டன. பலவீனமாக இருந்தபோது ஐரோப்பிய ஒன்றியத்திலும், நேட்டோவிலும் அங்கத்துவம் கேட்டு ரஷ்ய அதிபர் புட்டின் விண்ணப்பித்தார். ஆனால் அதை மேற்கு எள்ளி நகையாடிவிட்டது. நேட்டோ விரிவாக்கத்தைக் குறித்து தனது அதிருப்தியைப் பலதடவைகள் வெளியிட்டார். ஜனாதிபதி ட்றம்ப் காலத்தில் நேட்டோ விரிவாக்கம் கிடப்பில் போடப்பட்டது. அவருக்கு நேட்டோவின் தேவை மீது நம்பிக்கை இருக்கவில்லை. ஜனாதிபதி பைடன் ஆட்சிக்கு வந்ததும் பழைய பல்லவி மீண்டும் இசைக்கத் தொடங்கிவிட்டது.

பல தடவைகள் மேற்கு நாடுகளால் ஏமாற்றப்பட்டு முதுகில் குத்தப்பட்ட பின்னர் ரஷ்யாவை மீண்டும் ஸ்திரமாகக் கட்டியெழுப்ப அதிபர் புட்டின் தீர்மானித்தார். ஆனாலும் சோவியத் குடியரசை மீள உருவாக்க அவர் முனையவில்லை. ரஷ்யாவுக்கு ஆபத்து இல்லாதவரைக்கும் அயல்நாடுகள் எப்படி இருந்தாலும் பரவாயில்லை என்பது அவரது எதிர்பார்ப்பு. ரஷ்ய மக்கள் தமது மொழி, மதம் (orthodox), கலாச்சாரம் ஆகியவற்றில் மிதமிஞ்சிய பற்றுக்கொண்டவர்கள். யூக்கிரெய்ன் உட்பட, சோவியத் குடியரசிலிருந்த பல எல்லை நாடுகளும் இக் கலாச்சாரப் பொதுமையைக் கொண்டவை. எனவே அவை நேட்டோ அங்கத்துவம் பெற்றாலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார நன்மைகளை உள்வாங்கினாலும் கலாச்சார ரீதியில் மேற்கு ஐரோப்பாவின் நவதாராளவாத ஆக்கிரமிப்புக்கு எதிராகவே இருந்துவந்தன. அது ரஷ்யாவுக்கும் ஓரளவு ஏற்புடையதாக இருந்தது.

யூக்கிரெய்னைப் பொறுத்தவரையில் 40% மானோர் ரஷ்ய மொழி பேசுபவர்களாக இருந்த காரணத்தாலும் 200 வருடங்களுக்கு முன்னர் யூக்கிரெய்ன் பிரதேசம் ரஷ்யாவின் அங்கமாக இருந்த காரணத்தாலும், மேற்கு ஐரோப்பாவுடணான பொருளாதார பாலமாகவும், தானிய மற்றும் உருக்கு உற்பத்தியில் முக்கியமான நாடாகவும், அதன் கேந்திர முக்கியத்துவம் காரணமாகவும் அதை நேட்டோவில் இணையாமல் நடுநிலையாக இருக்குமாறு புட்டின் கேட்டுக்கொண்டிருந்தார். 2014 இல் ரஷ்யாவுக்குச் சார்பான ஒருவர் அங்கு ஜனாதிபதியாக இருந்தபோது அங்கு சதியொன்றை நிகழ்த்தி அமெரிக்கா தனக்குச் சார்பான ஜனாதிபதியை ஆட்சியில் இருத்தியது. அதன் பிறகுதான் அமெரிக்க / நேட்டோவுக்கு எதிரான நடவடிக்கைகளை புட்டின் முடுக்கிவிட்டார். கிரைமியா பறிப்பு அதன் விளைவு. இதே வேளை ரஷ்ய பூர்வீகக் குடிகளைக் கொண்ட டொன்பாஸ் பிரதேச மாகாணங்களில் பிரிவினையை ரஷ்யா தூண்டியதோடு ஆதரவையும் கொடுத்துவந்தது. பிரிவினைவாதிகள் மீது யூக்கிரெய்ன் போர் தொடுத்தது. இப்போ அதைக் காரணமாகக் கொண்டு யூக்கிரெய்னுக்குள் படையெடுத்தது. இதற்கான பாடத்தை அது அமெரிக்காவிடமிருந்து கற்றுக்கொண்டது. இதைத் தவறெனக்கண்டு ஒன்றிணையும் உலகம் அமெரிக்கா ஈராக் மீதும், பிரித்தானியா லிபியா மீதும் படையெடுத்தபோது எங்கே போனது? ஈராக்கும் லிபியாவும் எல்லை நாடுகளா அல்லது வல்லரசுகளுக்கு எதிராகச் சதி செய்தனவா? 500,000 யூக்கிரெய்ன் அகதிகளுக்காக அழுது ஊற்றுபவர்கள் ஈராக்கின் மீதான மேற்குலகின் பொருளாதாரத் தடையால் 500,000 குழந்தைகள் உட்பட 1.5 மில்லியன் உயிர்கள் பறிக்கப்பட்டன. அப்போது எங்கே இருந்தது இந்த உலகம்?

பைடன் சொல்வது போல இப்போர் வெறுமனே தூண்டப்படாத (unprovoked) போரல்ல. முற்றிலும் தூண்டப்பட்ட ஒரு போர். அதைத் தூண்டியது அமெரிக்கா. இதற்கான பரிசை முதலில் வழங்கப் போவது ஐரோப்பா. பிறகு உலகம். இப் போரின் எதிர்ப்பாராத விளைவுகள் (unintended consequences) பல. அவற்றில் சில உலகத்துக்கு நன்மை பயக்கவும் வாய்ப்புண்டு.

கனடா எனக்குக் கதவைத் திறந்துவிட்டது என்பதால் மட்டும் கண்களை மூடிக்கொண்டு அநியாயம் என்று தெரிந்ததைக் கூறாமல் இருக்க என்னால் முடியாது. எனது கருத்து இப்போரை நிறுத்துமென்று சொல்ல நான் வரவில்லை. ஆனால் இதைச் சொல்வதால், எழுதுவதால் என் மனம் ஆறுதலடைவது எனக்கு மட்டுமே தெரியும். அது ஒரு சுயநலத் தேர்வாகவும் இருக்கட்டுமே. நான் மேலே சொன்ன விடயங்களில் வரலாற்றுத் தவறுகள் இருந்தால் அதைச்சுட்டிக் காட்ட எல்லோருக்கும் அனுமதியுண்டு. ஆனால் உலகத்திடம் கையேந்தி நின்ற 40,000 உயிர்கள் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டபோது கண்ணை மூடிக்கொண்டு அனுமதி கொடுத்த பரதேசிகள் யூக்கிரெய்னில் விழுந்து புரண்டு அழுவதைப் பார்க்கும்போது சகிக்க முடியவில்லை. பிரிக்க முடியாத ஒரு ஆதங்கத்தின் வெளிப்பாடு. அவ்வளவுதான்.