Worldசிவதாசன்

யூக்கிரெய்ன்: நேட்டோவின் ‘ரஸ்யன் ரூலெட்’?

சிவதாசன்

சிலருக்கு ‘ரஸ்யன் ரூலெட்’ விளையாட்டு பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களுக்காக இந்த விளக்கம். ‘ரஸ்யன் ரூலெட்’ என்பது ஒரு சூதாட்ட விளையாட்டு. ஒரு ரிவோல்வரில் ஒரே ஒரு ரவையை மட்டும் உள்வைத்து சுழற்றி விடுவார்கள். அந்த ரவை எங்கு இருக்குமென்பது யாருக்கும் தெரியாது. பின்னர் துப்பாக்கியின் குழலை ஒருவரது நெற்றியில் வைத்து துப்பாக்கியை இயக்குவார்கள். சரியான இடத்தில் குண்டு இருந்தால் முன் இருப்பவரின் மண்டை சிதறி உயிரிழந்து போவார். ரவை சரியான இடத்தில் இல்லாமலிருந்தால் அவர் தப்பி விடுவார். வியட்நாம் போரின்போது பல சூதாட்ட நிலையங்களில் இவ்விளையாட்டு நடைபெற்றது. வறுமையில் வாடிய பல இளைஞர்கள் இங்கு கிடைக்கும் பெருந்தொகையான பணத்துக்காகத் தமது உயிர்களைப் பணயம் வைத்தார்கள்.

ரஸ்ய – உக்கிரெய்ன் போரில் ரஸ்யாவின் துப்பாக்கியை நேட்டோ தன் நெற்றியில் எதிர்கொள்கிறது. ரவை எங்கிருக்கிறது என்பது ரஸ்யாவுக்கே தெரியாத நிலையில் இச்சூதாட்டத்தில் யார் வெல்லப் போகிறார்கள் என்று தெரியாது.

யூக்கிரெய்ன் – ரஸ்யா போர் வலயத்தில் கடந்த மூன்று வாரங்களாக யூக்கிரெய்ன் வெற்றியீட்டி வருவதாகச் செய்திகள் வந்தவண்ணமுள்ளன. கார்க்கீவ் பிரதேசத்தில் சுமார் 1,000 சதுரமைல் பிரதேசத்திலிருந்து ரஸ்யா பினாவாங்கியுள்ளதாகவும் ஏராளமான ரஸ்ய இராணுவத்தினர் சரணடைந்து வருவதாகவும் யூக்கிரெய்ன் அதிபர் விளாடிமியர் செலென்ஸ்கி கூறி வருகிறார். இப் பின்புலத்தில் ரஸ்யாவின் அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும்?

யூக்கிரெய்னின் வட்-கிழக்குப் பிரதேசமான கார்க்கீவ் இன்னுமொரு வகையிலும் வரலாற்றுப் புகழ் பெற்றது. இரண்டாம் உலகப் போரில் இங்குதான் (அப்போது இப்பிரதேசம் கார்க்கோவ் என அழைக்கப்பட்டது) 90,000 சோவியட் படையினர் ஜேர்மனியின் அதிரடித் தக்குதலுக்குப் பலியானார்கள். அப்போதும் கூட லெனின்கிராட்டில் ஜேர்மானிய படைகளைச் சுற்றிவழைத்து வெற்றிகொண்ட கெளிமதத்தில் சோவியத் படைகள் கார்க்கோவில் அகலக் கால் வைத்திருந்தனர். இதனால் இப்போரும் பல மாதங்களுக்கு நீடித்தது. இறுதியில் 90,000 உயிர்ப்பலிகளுடன் சோவியத் குடியரசு கார்க்கோவை இழந்தது. இப்போதும் ஏறத்தாழ அதே நிலைதான். இந் நிலையில் ரஸ்ய அதிபர் புட்டினுக்கு உள்ளும் புறமும் அதிக எதிர்ப்பு வலுத்து வருகிறது.

யூக்கிரெய்ன் மீதான படையெடுப்பில் செச்னியா மற்றும் பெலாருஸ் குடியரசுகள் புட்டினுக்கு ஆதரவாக உள்ளன. அவற்றின் படைகள் நேரடியாகப் போரில் கலந்துகொள்ளாவிடினும் புட்டினுக்கு தொடர்ந்தும் ஊக்கத்தை அளித்து வருகின்றன. கார்க்கீவ் தோல்வி இவ்வபிப்பிராயத்தை மாற்றிவருகிறது. ரஸ்ய இராணுவத் தலைவர்களை இக் குடியரசுகளின் தலைவர்கள் பகிரங்கமாக விமர்சித்து வருகின்றனர்.

கார்க்கீவில் ரஸ்ய இராணுவம் தோல்விகளைச் சந்தித்துக்கொண்ட வேளை தலைநகரில் ரஸ்ய அதிபர் வருடாந்த விழாக் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டிருந்தார். கார்க்கீவ் நிலைமையைக் கருத்தில் கொண்டு விழாவைப் பின்போடும்படி விடப்பட்ட கோரிக்கையை புட்டின் நிராகரித்திருந்தார். பட்டாசு வெடிப்புக்களுடன் பெருமெடுப்பில் கொண்டாடப்பட்ட இவ்விழாவில் பேசிய புட்டின் கர்க்கிவ் இழப்பு பற்றி எதுவும் பேசவில்லை. இது மக்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பலத்த விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. பல அரசியல், சமூக ஊடக விமர்சகர்கள் தமது காட்டமான விமர்சங்களை இராணுவத் தலைமையில் வைத்தாலும் அது புட்டின் மீது வைக்கப்பட்டவையாகவே பார்க்கப்படும். செச்னிய அதிபர் ரம்ழான் கடிரோவ் உடபடப் பலர் கார்க்கீவ் மீது தாக்குதல்கள் உக்கிரப்படுத்தப்படவேண்டுமெனவும் வேண்டுமானால் தனது படைகளைத் தந்துதவத் தான் தயாகவுள்ளதாக கடிரோவ் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இவ்விமர்சனங்களைத் தொடர்ந்து ரஸ்ய இராணுவத் தலைமை மற்றும் புட்டின் தரப்பு இராணுவத் தாக்குதல்களை முடுக்கிவிடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. பெரும்பாலான ரஸ்யர்கள் மத்தியில் மேலும் உக்கிரமான போருக்கான ஆதரவு அதிகரித்துள்ளதாகவும் தெரிகிறது.

இதே வேளை, அமெரிக்கா மற்றும் நேசநாடுகளின் உதவிகளுடன் யூக்கிரெய்ன் ஈட்டி வரும் வெற்றிகள் அந்நாட்டு இராணுவத்தை மேலும் ஊக்கப்படுத்தி வருவதும் 2014 இல் ரஸ்யா கைப்பற்றிய கிரீமியாவை மீண்டும் கைப்பற்றாமல் தான் ரஸ்யாவுடன் பேச்சுவார்த்தைக்குப் போகப் போவதில்லை என செலென்ஸ்கி கூறி வருவதும் ரஸ்யர்களை மேலும் எரிச்சலுக்கு உள்ளாக்கி வருகிறது.

இதே வேளை யூக்கிரெய்னின் இராணுவ வெற்றி அந்நாடு நேட்டோவில் இணைவதைத் துரிதப்படுத்திவிடுமென்பதாலும் இதன் விளைவாக நேட்டோ ரஸ்யாவைச் சூழ்ந்துகொள்ள இப்போர் காரணமாக அமைந்துவிடும் என்பதாலும் எந்த வகையிலும் அதைத் தடுப்பது புட்டினின் அவசிய கடமைகளில் ஒன்றாகியிருக்கிறது. எனவே அடுத்த கட்ட தாக்குதல்களில் ரஸ்யா தடைசெய்யப்பட்ட ஆயுதங்களைப் பாவித்தாலும் ஆச்சரியப்படுவத்ற்கில்லை.

இதுவரை நடைபெற்ற போரில் ரஸ்யாவின் கால இழுத்தடிப்பின் பின்னால் ஐரோப்பிய நாடுகளிடையே பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களாகவே யூக்கிரெய்னைச் சமாதானப்படுத்தி நேட்டோவில் இணையாது நிறுத்திவிடுவார்கள் என்ற எண்ணமும் இருந்திருக்கலாம். ஐரோப்பாவை எரிபொருள் நெருக்கடிக்குள் தள்ளியது முதல் உலகத்தில் எரிபொருள் மற்றும் தானிய விலைகளை அதிகரிக்கச் செய்ததன் மூலம் ரஸ்யா தனது திட்டங்களை ஓரளவு நிறைவேற்றியிருக்கிறது. வரப்போகும் குளிர்காலம் ஐரோப்பிய மக்களை தத்தம் நாடுகளில் குழப்பங்களை உருவாக்கத் தூண்டிவிடும் என்ற கணிப்பு புட்டினிடம் இருந்திருக்கலாம். அவர் எதிர்பார்த்தது போலவே ஹங்கேரி ஓரளவுக்கு நடுநிலையை வகிக்கிறது. செக் குடியரசில் ஆட்சி மாற்றம் கோரி மக்கள் போராட ஆரம்பித்திருக்கிறார்கள். ஜேர்மனியிலும் அரசாங்கத்துக்கு எதிரான குரல்கள் வலுக்க ஆரம்பித்துள்ளன. பின்லாந்தில் 68,000 குடும்பங்கள் வறுமைக்குள் தள்ளப்பட்ட்டிருப்பதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. நேட்டோ அங்கத்தவரான துருக்கி பகிரங்கமாக ஐரோப்பிய நாடுகளை விமர்சிக்கிறது. எனவே அதிக மனித உயிர்களைக் கொல்லாம்ல் தனது நோக்கங்களை நிறைவேற்ற புட்டின் எடுத்த முயற்சி ஓரளவு பலனளித்து வந்ததென்றே சொல்லலாம். இது நிறைவுபெற்றால் அது அமெரிக்கா தலைமையிலான மேற்குலகுக்கு பாரதூரமான தோல்வியாக முடியும். இதைத் தடுக்க அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் மறைமுகத் தலையீடு கடந்த சில வாரங்களாக அதிகரித்தது. அமெரிக்க உதவியுடனேயே யூக்கிரெய்னால் கார்க்கீவில் வெற்றியீட்ட முடிந்தது என ரஸ்ய திட்டமிடலாளர்கள் கருதுகின்றனர்.

இந் நிலையில் ரஸ்யாவுக்கு ஒரே ஒரு வழிதானுண்டு. யூக்கிரெய்னின் வெற்றிகளைத் தடுத்து நிறுத்த வேண்டும். அதற்கான படைபலம் போதுமானதாக இல்லாமையால் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களின் பாவனை பற்றி ரஸ்யா யோசிக்கலாம். ரஸ்யாவிடம் பெருந்தொகையான அணுவாயுதங்களும் அவற்றை ஏவுவதற்குத் தேவையான போதுமான ஏவுகளைகளும் கைவசம் இருக்கிறது. இது தொடர்பாகச் சமீபத்தில் வட கொரியாவிலிருந்து பல இராணுவ தளபாடங்களையும் சமீபத்தில் ரஸ்யா கொள்வனவு செய்திருந்தது. எனவே விரைவில் யூக்கிரெய்ன் மீது பாரிய இராணுவத் தாக்குதல்களை ரஸ்யா ஏவுவது தடுக்க முடியாத ஒன்றாகவே இருக்கும். இப்போர் புட்டினால் தொடங்கப்பட்டது. மங்கிய பெயருடன் அவர் பதவியைத் துறக்க விரும்பமாட்டார். எனவே பல்லாயிரக்கணக்கான மனித அழிவுகளுடன் இப் போர் இரண்டாவது கட்டத்தில் நுழையுமெனவே எதிர்பார்க்கலாம்.