யூக்கிரெய்ன் | மூன்றாம் போருக்குத் தயாராகும் உலகம்
பெப்ரவரி 19 இல் அமெரிக்கத் தலையீட்டுக்கு எதிராக வாஷிங்டனில் பேரணி தயாராகிறது
சிவதாசன்
வரலாறு சுழலும் என்று சொல்வார்கள். நம்பவேண்டியிருக்கிறது. இரண்டாம் உலகப் போர் நடந்து 78 வருடங்கள் ஆகின்றன. யூக்கிரெய்னில் அது மூன்றாவது பிறப்பை எடுக்கலாமெனும் அளவுக்கு காரியங்கள் நடைபெறுகின்றன.
பல வருடங்கள் நீடித்த அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளினால் பாதிக்கப்பட்ட யப்பான் ஹவாயின் பேர்ள் துறைமுகத்தில் குண்டுவீசியதைக் காரணமாக வைத்து அமெரிக்கா போரில் இறங்கியதால் அது இரண்டாம் உலகப் போராக மாறியிருந்தது. டிசம்பர் 07, 1941 அன்று யப்பானிய விமானப்படையின் 29 விமானங்கள் பேர்ள் துறைமுகத்தில் தரித்திருந்த அமெரிக்காவின் பசிபிக் பிராந்திய கடற்படைக் கப்பல்களைத் தாக்கி அழித்தன. 2400 அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டும், 1200 பேர் காயமடைந்தும் போயினர்.
யப்பான் ஏன் இந்தக் காரியத்தைச் செய்தது என்பதற்கும் ரஸ்யாவின் நிகழ்காலப் போக்கிற்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன். எப்படி தோல்வியின் உச்சத்தில் அமெரிக்கா யப்பானிய நகரங்கள் மீது அணுக்குண்டுகளை வீசியதோ அப்ப்டியொரு நிலைமைக்கு இந்தத் தடவை ரஸ்யா தள்ளப்படுமோ என்பதுவே எனது அச்சம்.
1931 இல் பசுபிக் சமுத்திரத்தில் யப்பான் ஆட்சி செய்தது. அதன் கடற்படை உலகின் மூன்றாவது பலமுள்ள ஒன்றாகக் கருதப்பட்டது. பசுபிக் பிராந்தியத்தில் மட்டும் அது முதலாவதாக இருந்தது. அமெரிக்க, பிரித்தானிய கடற்படைகளின் கூட்டுப் பலத்தைவிட யப்பானின் பலம் அதிகமாக இருந்தது. இதனால் பசுபிக் பிராந்தியத்தில் அது சண்டியனாக இருந்தது. பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் தலையீடுகள் அதிகரித்த காலத்தில் சீனாவை அமெரிக்கா தனது கைக்குள் போட்டுக்கொண்டது. இந்த வேளையில் சீனா வசமிடமிருந்த மஞ்சூரியாவை யப்பான் தன்னகப்படுத்தி அங்கு தனக்கு ஆதரவான அரசை நிறுவியிருந்தது. இதே போலவே 2014 இலும் ரஸ்ய சார்பான யூக்கிரெய்ன் அரசைச் சதி மூலம் கவிழ்த்து தற்போதைய செலென்ஸ்கியின் பொம்மை அரசை அமெரிக்கா நிறுவியிருக்கிறது.
மஞ்சூரியாவைக் கையகப்படுத்தியதைத் தொடர்ந்து அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக ‘லீக் ஒஃப் நேஷன்ஸ்’ (அப்போதைய ஐ.நா.) யப்பான் மீது பொருளாதாரத் தடையை விதித்தது. உலகின் பல நாடுகளும் யப்பானை ஓரம் கட்டின. தற்போது ரஸ்யாவுக்கு நடப்பதைப் போல. இதனால் ஆத்திரமுற்ற யப்பான் பேர்ள் துறைமுகத்தில் தாக்குதலைத் தொடங்கியது. இதில் யப்பான் வெற்றியீட்டியதை ஹிட்லர் வரவேற்றுப் பாராட்டியிருந்தார். இக்காலத்தில் யப்பான், ஜேர்மனி, இத்தாலி ஆகிய மூன்று நாடுகள் ஒன்றாகவும் மீதி மேற்குலகம் ஒன்றாகவும் குழுக்களாகப் பிரிந்திருந்தன. இதே வேளை பேர்ள் துறைமுகத் தாக்குதலுக்காக யப்பானிய்ய விமானங்கள் வந்துகொண்டிருப்பது அமெரிக்க பசுபிக் கடற்படை அறிந்திருந்தது எனவும் ஆனாலும் அதைத் தடுக்க அமெரிக்கா எந்தவித முயற்சிகளும் எடுக்கவில்லை எனவும் இன்னுமொரு செய்தியும் உள்ளது. இதற்குக் காரணம் அமெரிக்க மக்கள் தமது நாடு மூன்றாவது நாட்டின் போரில் தலையிடக்கூடாது என்ற என்ற அபிப்பிராயத்தை அப்போது கொண்டிருந்தார்கள் எனவும் அவர்களது மனங்களை மாற்றுவதற்கு பேர்ள் துறைமுகத் தாக்குதல் போன்ற ஒன்று அவசியம் என அப்போதைய அமெரிக்க நிர்வாகம் விரும்பியது எனவும் கூறப்படுகிறது. எனவே அதுவரை ஹிட்லரின் ஐரோப்பிய ஆக்கிரமிப்புக்கு எதிராகத் தலையிடாக் கொள்கையைக் கடைப்பிடித்துவந்த அமெரிக்கா பேர்ள் துறைமுகத் தாக்குதலையும், ஹிட்லரின் பாராட்டையும் காரணமாக வைத்து போரில் தலையிட்டதும் அதுவே இரண்டாம் உலகப் போராகப் பரிணமித்ததும் வரலாறு. இதில் யப்பானுக்கு எதிராக எப்படி சீனா proxy வேடத்தைத் தாங்கியதோ அதே போன்று அமெரிக்க-ரஸ்ய போருக்காக யூக்கிரெய்ன் இப்போது proxy ஆகச் செயற்படுகிறது.
1931 இல் இருந்த யப்பானைப் போலவே இப்போது ரஸ்யாவும் அப்பிராந்தியத்தில் சண்டியனாக வர முற்படுகிறது எனச் சிலர் கூறலாம். அதில் உண்மை இல்லாமலும் இல்லை. அப்போது யப்பானுக்கு இருந்த கடற்படைப் பலம் போல இப்போது ரஸ்யாவுக்கு பொருளாதாரப் பலம் (எரிபொருள்) இருப்பதும் ஐரோப்பா அதற்கு அடிமையாகப் போனதும் கதைக்கு சமாந்தரமாக இருக்கிறது. ஆனாலும் பசுபிக் சமுத்திர சண்டியனாகிய யப்பான் தனது எல்லைகளுக்குள் வல்லரசுகள் வந்தமர்வதை எதிர்த்து தமது நடவடிக்கைகளை முன்னெடுத்ததுபோல் தற்போது ரஸ்யாவின் எல்லைகளுக்கு அண்மையில் நேட்டோ வந்தமர்வதை ரஸ்யா எதிர்ப்பதில் தவறில்லை எனவும் கூறமுடியும். 1997 இல் கோர்பச்சேவ் ஆட்சிக்கு வந்ததும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் உடைந்து கழன்றுபோனபோது செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி கிழக்கு ஜேர்மனிக்குக் கிழக்கே நேட்டோவின் விரிவாக்கம் இருக்காது என்று அமெரிக்க தரப்பினால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. இந்த விடயத்தில் நடுநிலையாக இருந்த யூக்கிரெய்னில் ஆட்சியை மாற்றியதுமல்லாது அதை நேட்டோவில் இணைக்க எடுத்த முயற்சியே இப்போர். அது மட்டுமல்ல 2014 செப்டம்பரில் ஃபிரான்ஸ், ஜேர்மனி போன்ற நாடுகளின் முயற்சியால் எழுந்த ‘மின்ஸ்க் ஒப்பந்தம்’ யூக்கிரெய்னுக்கு கால அவகாசம் பெற்றுத்தர முனைந்தபோது அதைக் குழப்பி யூக்கிரெய்னைப் போருக்குள் தள்ளியதும் அமெரிக்கா தான்.
வருகின்ற பெப்ரவரி 22 இல் ஒரு வருடத்தைப் பூர்த்திசெய்யப் போகும் இப் போர் மூன்றாவது உலகப் போராகப் பரிணமிக்கக்கூடிய அத்தனை அம்சங்களையும் காட்டி வருகிறது. இதுவரை நடைபெற்ற போரில் ரஸ்யா வழமையான போராயுதங்களையே (conventional) பாவித்து வருகிறது. இதர போர்களைப் போல அல்லாது இப் போரின்போது மக்கள் அழிவுகள் மிகவும் குறைவு. மின்னிணைப்புகள், கட்டிடங்கள், ஆயுதக் கிடங்குகள் போன்றவையே தாக்கப்படுகின்றன. அதே வேளை பேச்சுவார்த்தைக்குத் தான் எப்போதும் தயார் எனவும் ரஸ்யா அறிவித்து வருகிறது. ரஸ்ய மொழி பேசும், ஓர்த்தோடக்ஸ் மதத்தைப் பின்பற்றும் பல யூக்கிரேனிய மக்கள் ரஸ்யா சார்பாக இருப்பதும் இதற்குக் காரணமாக இருக்கலாம். எனவே தாம் கையகப்படுத்திய பிரதேசங்களில் தமக்குச் சார்பான ஆட்சியை நிறுவுவதையே ரஸ்யா விரும்புகிறது. அதற்கு செலென்ஸ்கி தயாராக இல்லை என்பதும் ரஸ்யாவைத் தோற்கடித்ததன் பின்னரே பேச்சுவார்த்தை என்று அவர் முழங்குவதும் வேடிக்கை.
இந்நிலையில் மேற்குலகம் தனக்கு ஆயுதங்களை வழங்கவேண்டும் என செலென்ஸ்கி அடம் பிடிக்கிறார். ‘ஐஸ் கிரீம் வாங்கித் தருவேன்” என்று அப்பா எப்போ சொன்னதைக் கேட்டு மகன் அடம்பிடிப்பதைப் போன்றதே இதுவும். அமெரிக்கவிற்காகவே தான் இப்போரை நிகழ்த்துவதாகவும் இதனால் உலகில் ஜனநாயகம் தழைத்தோங்கப் போகிறது எனவும் அவர் நாடக வசனங்கள் பேசுவது இந்த ‘ஐஸ் கிரீம்’ விளையாட்டுத் தான். இதன் விளைவாக வேறு வழியில்லாமல் அமெரிக்காவின் ‘வேண்டுகோளுக்கு’ இசைந்து சில நாடுகள் தம்மிடமுள்ள பிரயோசனமற்ற ஆயுதங்களை வேண்டா வெறுப்போடு தானம் செய்ய முன்வந்துள்ளன. நேட்டோ நாடுகளில் இது உள்ளக மக்கள் எழுச்சியை விரைவில் கொண்டுவந்துவிடும். ஐரோப்பிய நாடுகள் ‘போர்ப் பொருளாதாரத்துக்கு’ மாறவேண்டுமென நேட்டோ தலைவர்கள் கேட்டுள்ளது இம்மக்களிடம் எதிர்ப்பை விரைவில் சம்பாதிக்கும்.
இந்நிலையில் எதிர்வரும் பெப்ரவரி 19 இல் அமெரிக்த் தலைநகரில் ‘தலையிடாக் கொள்கையை’ அமெரிக்கா கடைப்பிடிக்கவேண்டுமெனக் கோரி மாபெரும் பேரணி ஒன்று நடக்கவுள்ளது. இதை ஒழுங்கு செய்யும் அமைப்புகள் கொள்கை ரீதியில் எதிரும் புதிருமானவை என்பதே இப்பேரணி பெறுவெற்றியைச் சம்பாதிக்கப்போகிறது என்பதைக் கட்டியம் கூறுகிறது. “Not One More Penny for War in Ukraine” என்ற சுலோகத்துடன் நடக்கவிருக்கும் இப் பேரணியின் இரு முக்கிய புரவல அமைப்புக்களில் ஒன்று “The Peoples Party” எனப்படும் இடதுசாரிக் கொள்கையுடைய புதிய அமைப்பு. இதன் தலைவர் பேர்ணி சாண்டர்ஸின் முன்னாள் தேர்தல் அமைப்பாளர். மற்றது அமெரிக்காவில் நீண்டகாலமாக இயங்கிவரும் Libertarian அமைப்பு. இது அமெரிக்கா பிற நாடுகள் விடயத்தில் தலையிடக்கூடாது எனக்கூறும் தீவிர வலதுசாரி அமைப்பு. றொண் போல் போன்ற பிரபல வலதுசாரிகள் இதன் பின்னாலுள்ளவர்கள்.
இப்போரை முன்னெடுப்பதனால் அமெரிக்க ஆயுதத் தயாரிப்பாளர்களுக்கு அள்ளு கொள்ளையாகப் பணம் கொட்டப் போகிறது என்பது தெரிந்த விடயம். அதற்காக ஊழலுக்குப் பேர்போன யூக்கிரெய்ன் அரசியல்வாதிகளின் வங்கிக்கணக்குகள் திடீரென்று வீங்க ஆரம்பித்திருக்கின்றன. செலென்ஸ்கியின் கட்சி உபதலைவர் ஒருவர் போரின் மத்தியிலும் கீவ் நகர் மத்தியில் பெரிய பண்ணை ஒன்றை வாங்கியதை ஊடகங்கள் முகர்ந்து பிடித்துப் துப்பியிருக்கின்றன. செலென்ஸ்கியும் ‘பனாமா பேப்பர்’ ஊழலில் சிக்கியிருந்தவர். எனவே இப் போர் அமெரிக்க ஆயுத விற்பனையாளரின் proxy war என்பதில் சந்தேகமில்லை. இதற்கு ஜனாதிபதி ஜோ பைடன் முழுமையான ஆதரவைத் தருகிறார். அவரது மகன் ஹண்டர் பைடனுக்கு யூக்கிர்ய்னில் நிறைய ‘வியாபாரங்கள்’ உண்டு. இதை அறிந்துவைத்திருப்பவர்கள் அமெரிக்க மக்கள். எனவே பெப்ரவரி 19 ‘மக்கள் எழுச்சி’ மிகவும் பாரதூரமான ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். அதே வேளை இது இதர உலகத் தலைநகர்களுக்கும் விரைவாகத் தொற்றிக்கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது. ஜேர்மனி போன்ற நாடுகளில் தலைவர்கள் தொடைநடுங்க ஆரம்பித்திருக்கிறார்கள். பிரித்தானியா ஆயுதம் வழங்குவதில் மெளனமாக இருக்கிறது. கனடா துருப்பிடித்த இரண்டு தாங்கிகளை அனுப்புகிறது.
நேட்டோவின் நேரடித் தலையீடு யூக்கிரெய்னில் புலப்படும் பட்சத்தில் ரஸ்யாவின் தாக்குதல்கள் உக்கிரமடையும். யூக்கிரெய்னின் மின்வழங்கலில் 21% அணு உலைகளில் இருந்து வருகிறது. இவ்வணுவுலைத் தளங்களில் யூக்கிரெய்ன் தனது போராயுதங்களை மறைத்து வைத்திருப்பதாக சமீபத்தில் ரஸ்யா எச்சரித்திருந்தது. இத்தளங்களை ரஸ்யா தாக்கும் பட்சத்தில் கதிரியக்கக் கசிவுகளால் பேராபத்து ஏற்படலாம். இப்போரில் நேட்டோ நேரடியாக இறங்கி அதனால் ரஸ்யா தோல்வியை எதிர்கொள்ளுமானால், அமெரிக்கா யப்பானில் மேற்கொண்டது போல, அது தனது அணூவாயுதங்களை யூக்கிரெய்ன் மீதோ அல்லது அதன் அண்டை நேட்டோ நாடுகளான போலாந்து போன்றவற்றின் மீதோ வீசத் தலைப்படலாம். இரண்டாம் உலகப் போர் காட்டிய பாதையில் மூன்றாவதும் அடியெடுத்து வைத்திருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை. அமெரிக்க மக்களால் மட்டுமே இப்போரை நிறுத்த முடியும்.
மனிதத்தின் மீது இன்னும் நம்பிக்கை இருக்கிறது. (Image Courtesy: Nationala Archives of Records)