NewsWorld

யூக்கிரெய்ன் மீது ரஷ்யா படையெடுப்பு ஆரம்பித்தது!

வெளிநாடுகளுக்கு புட்டின் கடும் எச்சரிக்கை!

உலக நாடுகளை இவ் விடயத்தில் தலையிடக் கூடாது. தலையிட்டால் வரலாற்றில் இடம்பெற்றவையைவிடப் பாரதூரமான விளைவுகள் ஏற்படுவதை நீங்கள் பார்க்க நேரிடும். இது சம்பந்தமான சகல முடிவுகளும் எடுக்கப்பட்டு விட்டன. இது உங்கள் காதுகளை எட்டுமெனெ நான் நினைக்கிறேன்

ரஷ்ய அதிபர் புட்டின்

யூக்கிரெய்ன் மீது ரஷ்ய படையெடுப்பு ஆரம்பமாகிவிட்டதெனவும் யூக்கிரெயினின் இராணுவத் தலமையகம், விமான ஓடுதளங்கள், தளபாடக் கிடங்குகள் ஆகியவற்றின்மீது ரஷ்ய ஏவுகணைகள் வீசப்படுவதாகவும் தெரியவருகிறது.

இன்று காலை யூக்கிரெய்ன் நேரம் 5 மணிக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினின் கட்டளையின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட ‘விசேட இராணுவத் தாக்குதல்’ யூக்கிரெயினின் இராணுவ விஸ்தரிப்பை நிறுத்துவதற்காகவே மேற்கொள்ளப்பட்டது எனவும் யூக்கிரேயினை ஆக்கிரமிக்கும் நோக்கம் தமக்கு இல்லயென்றும் அதிபர் புட்டின் மக்களுக்கான தொலைக்காட்சிச் செய்தியில் தெரிவித்ததாகத் தெரிகிறது. யூக்கிரெய்னின் தலைநகர் கியெவ் உள்ளிட்ட பல நகரங்களிலும் குண்டுவெடிப்புச் சத்தங்கள் கேட்பதாக மேற்கு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Video Courtesy: Al Jazeera

ரஷ்யாவின் தாக்குதலை நியாயப்படுத்துவதற்கு ” எமது பாரம்பரிய நிலங்களில் ரஷ்யாவுக்கு எதிரான கருத்து விதைக்கப்படுகிறது. இவ் விசேச நடவடிக்கை இராணுவ விஸ்தரிப்பை நிர்மூலமாக்கவும், நாஜிகளை ஒழிக்கவுமே மேற்கொள்ளப்படுகிறது” எனப் புட்டின் தனது தொலைக்காட்சிச் செய்தியில் தெரிவித்திருக்கிறார். தற்போது யூக்கிரெயினில் ஆட்சியிலுள்ளவர்கள் தீவிர வலதுசாரிகள் என்ற கருத்தும் நிலவுகிறது.

“எங்கள் அமைதியான நகரங்கள் ரஷ்ய தாக்குதல்களுக்கு உள்ளாகின்றன. உலகம் எல்லாம் ஒன்று சேர்ந்து இதை நிறுத்த வேண்டும். யூக்கிரெய்ன் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளுமென்பது மட்டுமல்லாதி இதில் நாம் வெற்றியுமடைவோம்” என யூக்கிரெய்னின் வெளிவிவகார அமைச்சர் டிமிட்றோ குலேபா தெரிவித்துள்ளார்.

இந் நிலைமை தொடருமானால் 1945 இற்குப் பிறகு ஐரோப்பாவின் மிகப் பெரிய போராக இது பரிணமிக்கலாம் என உலகத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். “உலக நாடுகளை இவ் விடயத்தில் தலையிடக் கூடாது. தலையிட்டால் வரலாற்றில் இடம்பெற்றவையைவிடப் பாரதூரமான விளைவுகள் ஏற்படுவதை நீங்கள் பார்க்க நேரிடும். இது சம்பந்தமான சகல முடிவுகளும் எடுக்கப்பட்டு விட்டன. இது உங்கள் காதுகளை எட்டுமெனெ நான் நினைக்கிறேன்” எனக் கடும் தொனியில் உலகத் தலைவர்களை புட்டின் எச்சரித்துள்ளார்.

ரஷ்ய அதிபரின் தொலைக்காட்சி அறிவிப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கும் பொழுதே குண்டுவெடிப்புகள் ஆரம்பித்துவிட்டன எனவும் இச் செய்தி கடந்த திங்களன்றே பதிவுசெய்யப்பட்டுவிட்டதெனவும் ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதே வேளை அமஎரிக்க அதிபர் ஜோ பைடன் இது குறித்து வெளியிட்ட அறிக்கையில் ” தூண்டப்படாததும், நியாயப்படுத்தப்படமுடியாததுமான இத் தாக்குதலுக்கு ரஷ்யாவே முற்று முழுதான பொறுப்பையும் எடுக்க வேண்டும். பாரதூரமான மனித அழிவுகளைத் தர்ப்போகும் இப் போருக்கான முடிவை அதிபர் புட்டின் எடுத்திருக்கிறார். அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஒருமித்ததும் தீர்க்கமானதுமான முறையில் இதற்குப் பதிலளிப்பார்கள். இதனால் வரும் விளைவுகளுக்கு ரஷ்யாவே பொறுப்பு. அதிபர் புட்டின், யூக்கிரெய்ன் மக்களைக் கொல்வதை நிறுத்துங்கள், சமாதானத்துக்கு ஒரு சந்தர்ப்பம் அளியுங்கள். ஏற்கெனவே பல்லாயிரக்கணக்கான இறப்புகள் நேர்ந்துவிட்டன” எனத் தெரிவித்துள்ளார்.

1991 இல் சோவியத் யூனியனின் உடைவுக்குப் பிறகு 2014 இல் கிரீமியாவை இணைக்கும்போது ரஷ்யா தனது இராணுவ நகர்வுகளைச் செய்திருந்தது. அதற்குப் பிறகு இதுவே அதன் பாரிய இராணுவ நடவ்டிக்கையாகும்.

தாம் பொதுமக்கள் வாழும் பிரதேசங்களைத் தாக்க மாட்டோமெனவும் முக்கியமான இராணுவ நிலைகளையும், தலைமையத்தையும் மட்டுமே தாக்குவோம் எனவும் ரஷ்ய ராணுவம் தெரிவித்திருந்த போதிலும், அப்படித் துல்லியமாகத் தாக்கும் ஏவுகணை வசதிகள் ரஷ்ய இராணுவத்திடம் இல்லை எனவும் அதனால் அது நிலப் பிரதேசங்கள் மீதான நகர்வுகளை மேற்கொண்டு தலைநகரைக் கைப்பற்ற முயற்சிக்கலாம் என மேற்கத்தைய இராணுவ ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

தொலைக்காட்சி மூலம் புட்டின் போர்ப் பிரகடனம் செய்யும்போதே யூக்கிரெய்ன் எல்லையைத் தாண்டி 20 கி.மீ தூரத்துக்கு ரஷ்ய தாங்கிகள் சென்றுவிட்டன என இன்னுமொரு தகவலும் கூறுகிறது.

யூக்கிரெய்னை நேட்டோவில் அங்கத்துவ நாடாக இணைக்க எடுத்த முயற்சியின்போது அதைக் கைவிடும்படி புட்டின் கேட்டிருந்தார் எனினும் அது குறித்து அவரோடு நேரடியாகச் சந்திப்பை ஏற்படுத்த அமெரிக்க அதிபர் பைடன் ஆரம்பத்தில் மறுத்திருந்தார். அதே போன்று யூக்கிரெய்ன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கியும் பூட்டினுடனான சந்திப்பைத் தஹ்விர்த்திருந்தார். படையெடுப்ப்புக்கான சாத்தியம் அதிகரித்தபோது பைடன் நேரடிச் சந்திப்பிற்கு இணங்கியபோது புட்டின் அதை இழுத்தடித்து இறுதியில் சந்திப்பை மறுத்துவிட்டார். அதே போன்று செலென்ஸ்கியின் இறுதி நேரச் சந்திப்பிற்கான கோரிக்கையையும் புட்டின் மறுத்து விட்டார்.

யூக்கிரெய்ன் தலைநகரைக் கைப்பற்றி ரஷ்யாவுக்கு ஆதரவான ஆட்சி மாற்றமொன்றை உருவாக்குவதே புட்டினின் நோக்கமாக இருக்கலாமென இராணுவ ஆய்வாளர் கருதுகின்றனர். 2014 இல் ஆட்சியிலிருந்த ரஷ்ய சார்பு ஜனாதிபதி அமெரிக்கத் தூண்டுதலுடனான புரட்சி ஒன்றின் மூலம் அகற்றப்பட்டிருந்தார். அவர் இப்போது ரஷ்யாவில் வாழ்ந்து வருகிறார்.

ரஷ்யப் படைகளின் நகர்வுகளுக்கு யூக்கிரெயினின் எல்லைப் படைகள் அதிக எதிர்ப்புகளைத் தெரிவிக்கவில்லை எனவும் உள்ளே வந்த ரஸ்யப் படைகளால் யூக்கிரெயினின் விமானப் படை முற்றாக அழிக்கப்பட்டுவிட்டதாகவும் இன்னுமொரு செய்தி கூறுகிறது. தலைநகர் கியெவ்வைக் கைப்பற்றுவதன் மூலம் விமானத் தளத்தைக் கைப்பற்றி தலைநகரைச் சூழ்வதற்கான படையணிகளை இறக்குவதும் அதைத் தொடர்ந்து பெலாருஸ், ரஷ்யா, கிரீமியா எல்லைகளிலிருந்து தரைப்படை நகர்வுகளை மேற்கொள்வதும் ரஷ்யாவின் திட்டம் எனவும் கூறப்படுகிறது. கிரீமியாவைக் கைபற்றியபோதும், இதே போன்று, தனது படை நகர்வுகளை ரகசியமாகவும், எதிர்பாராத விதத்திலுமே புட்டின் மேற்கொண்டிருந்தார்.

ரஷ்யாவிடம் பலமான வான்படை, கடற்படி, தரைப்படைகள் இருப்பினும் துல்லியமாகத் தாக்கும் ஏவுகணைகள் அதனிடம் போதுமான அளவு இல்லை என்பதால் அது தரைவழி ஆகிரமிப்பையே முதன்மைப்படுத்தும் என யூரேசியா திட்ட மூத்த கொள்கை வகுப்பாளர் றொப் லீ கூறுகிறார்.

அமெரிக்காவுமதன் நேச நாடுகளும் தற்போதைக்கு ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதார, பயணத் தடைகளை மேற்கொண்டாலும் அவை பெரிதளவு பலனளிக்கப் ஒவதில்லை எனவும் ர்ஷ்யா ஏற்கெனவே $635 பில்லியந் டாலர்களைத் தனது வெணிநாட்டுச் செலாவணி இருப்பில் வைத்திருக்கிறது எனவும் அதனால் இத் தடைகள் அதன் மீது உடனடியான பாதிப்பு எதையும் ஏற்படுத்திவிடப் போவதில்லை எனவும் கூறப்படடுகிறது.