NewsWorld

யூக்கிரெய்ன் போர்: சீனாவிடம் ரஷ்யா ஆயுத உதவி எதையும் கேட்கவில்லை – சீனா, ரஷ்யா மறுப்பு

யூக்கிரெய்ன் போர் தொடர்பாக இரு தரப்புக்கிடையேயும் சமாதானப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் முயற்சிகளில் சீனா தனது சுய பாதையை வரித்துக்கொண்டுள்ளது என சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார். போரிடும் தரப்புக்களிடையே மத்தியட்சத்தை மேற்கொள்ளுமாறு பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் சீனாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. அந்த வகையில் தற்போது ஸ்பெயின் நாட்டின் ராஜதந்திரி ஒருவர் சீன வெளிவிவகார அமைச்சருடன் உரையாடல்களை நடத்தியுள்ளார்.

“யூக்கிரேனிய போர் ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே ஐ.நா. பாதுகாப்புச் சபையின் ஐந்து நிரந்தர அங்கத்துவ நாடுகளில் ஒன்று என்ற முறையில் , எங்கள் வழியில், நாங்கள் இருதரப்பினரிடையேயும் பேசி சமாதானத்தைக் கொண்டுவர முயற்சி செய்துவருகிறோம்” என ஸ்பானிய வெளிவிவகார அமைச்சர் ஹோசே மனுவேல் அல்பாரெஸுக்கு சீன அமைச்சர் வாங் யி தொலைபேசி உரௌயாடலின்போது தெரிவித்துள்ளார்.

இப் போர் பேச்சுவார்த்தைகள் மற்றும் ராஜதந்திர முயற்சிகள் மூலம் விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டுமெனத் தாம் விரும்புவதாக ஸ்பானிய தரப்பு தெரிவித்துள்ளது. இவ்வுரையாடலைத் தொடர்ந்து ஸ்பானிய தரப்பு வெளியிட்டுள்ள ஒரு வரி அறிவிப்பில் ” போரினால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் அதை முடித்துவைக்க வேண்டிய அவசியம் பற்றியும் நான் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி யுடன் பேசினேன்” என அல்பாரெஸ் தெரிவித்துள்ளார். ஆனால் இது குறித்து சீன தரப்பு வெளியிட்ட அறிக்கையில் மேற்கு நாடுகளின் பொருளாதாரத் தடைகள் தொடர்பாக சீனா தனது கடும் எதிர்ப்பை ஸ்பானிய தரப்புக்குத் தெரிவித்ததாகக் கூறியிருக்கிறது.

“சீனா இப் பிரச்சினையில் சம்பந்தப்படவில்லை அதனால் மேற்கு நாடுகள் விதிக்கும் பொருளாதாரத் தடைகளால் நாம் பாதிக்க்பபட விரும்பவில்லை. தனது தேவைகளைப் பாதுகாக்கும் உரிமை சீனாவுக்கு உண்டு. யூக்கிரேனியப் பிரச்சினை புரையோடிப்போன ஐரோப்பிய பாதுகாப்பு பூசல்களின் சேர்க்கையின் வெளிப்பாடு. ரஷ்யாவும் யூக்கிரெயினும் போர்நிறுத்தம் செய்யவேண்டுமென சீனா விரும்பினாலும் ஐரோப்பாவுக்கும் ரஷ்யாவுக்குமிடையேயான நேர்மையான பேச்சுவார்த்தை நடைபெறுவதையே அது விரும்புகிறது. இவ் விடயத்தில் ஸ்பெயின் தனது பங்களைப்பை வழங்குமென நாம் எதிர்பார்க்கிறோம்” என வாங் யி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சீனாவிடம் ஆயுத உதவி எதையும் கேட்கவில்லை – இரு தரப்பும் மறுப்பு

அதே வேளை சீனாவிடம் ரஷ்யா ஆயுத உதவிகளைக் கேட்டதாகவும் இது தொடர்பாக அமெரிக்கா சீனாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது எனவும் வெளிவந்த செய்திகள் குறித்து சீனாவும் ரஷ்யாவும் தமது மறுப்புக்களைத் தெரிவித்துள்ளன. யூக்கிரெய்ன் பிரச்சினையில் சரியானதென்று தான் நினைக்கும் நிலைப்பாட்டைச் சீனா எடுத்துவருவதாகவும் அதைச் சில சக்திகள் வேண்டுமென்றே அவப் பெயரைத் தரும் வகையில் பொய்யான செய்திகளை வெளியிட்டு வருகின்றன எனவும் பெயர் குறிப்பிடாமல் வாங் யி குற்றஞ்சாட்டியிருக்கிறார்.

இப் போருக்குக் காரணமாக மேற்கைக் குறைசொல்வதன் மூலம் சீனா வெளிப்படையாக ரஷ்ய ஆதரவைக் காட்டி வந்தாலும் இப் பிரச்சினை குறித்து சீன அதிபர் சி ஜின்பிங் பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து செயற்பட விரும்புவதாகவும் அதே வேளை ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் உலக பொருளாதாரத்தையே இழுத்து விழுத்தப் போகிறது எனவும் தெரிவித்துள்ளாரெனத் தெரிகிறது.