World

யூக்கிரெய்ன் போர் – ஒரு வருட நிறைவு | மீள் பார்வை

சிவதாசன்

ரஷ்ய-யூக்கிரெய்ன் போர் ஆரம்பித்து இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைகிறது. மனித அவலங்கள் என்ற தராசில் இட்டுப் பார்க்கும்போது யூக்கிரெய்ன் நிறைய இழப்புக்களைச் சந்தித்திருக்கிறது. மேற்குலக அபிப்பிராயம் என்ற தராசு யூக்கிரெய்னுக்கு சாதகமாவே தீர்ப்பளிக்கிறது. அதற்குக் காரணம் அமெரிக்க பிரச்சாரம். தெற்குலகு இதைக் கண்டுகொள்ளவேயில்லை.

இரண்டு தரப்புமே உண்மையைக் கூறாவிடினும் இதுவரை 100,000 பேர் வரையில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 5.3 மில்லியன் உள்ளக அகதிகளாகவும் அதைவிட இரண்டு மடங்கு வெளியக அகதிகளாகவும் இருக்கிறார்கள். உள்ளக அகதிகளில் பெரும்பாலானோர் ரோமா எனப்படும் (இந்திய பூர்வீக) ஜிப்சிகள். ஐரோப்பா எங்கும் மிகவும் கேவலமாக நடத்தப்படும் இனம். அண்டை நாடுகளால் புறக்கணிக்கப்பட்ட நிலையில் அவர்கள் யூக்கிரெய்னுள்ளே அகதிகளாகவேண்டிய நிலை.

யூக்கிரெய்ன் அதிபர் செலென்ஸ்கி ஒரு கோமாளி என்பதில் பலரும் உடன்படுவர். அவர் ஒரு நடிகரும் கூட. மக்களை உசுப்பேத்துவதில் வல்லவர். அவரது வீர வசனங்களுக்கு மேற்கத்தைய ஊடகங்கள் மேலும் சோடனை செய்து படம் கட்டுவதைப் பார்த்து அவரே உணர்ச்சிவசப்படுபவர். இன்று அவரது வீரவசனம் இப்படி இருக்கிறது. ” ஒரு வருடத்துக்கு முன்னால், இதே இடத்தில் காலை ஏழு மணிக்கு நான் உங்களுக்கு ஒரு உரையாற்றினேன். 67 செக்கண்டுகளுக்கு அவ்வுரை இருந்தது. இன்றைய உரை 15 நிமிடங்கள். நாங்கள் அனைவரையும் முறியடித்து வெற்றியீட்டுவோம்”.

இப்படியான வசனங்களை நாம் நேரிலும், பல தடவைகள் சினிமாக்களிலும் கேட்டிருக்கிறோம். பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பிலிருந்தோ அல்லது அவர்கள் சார்பிலோ எந்தவித அறிவிப்பும் இல்லை. முகாம்களில் குளிரில் வாடும் மக்கள் பற்றி எந்தவித அக்கறையுமில்லாத அரசியல் தலைவரது வீர வசனத்துக்கு பெரிதளவு முக்கியத்துவத்தை நாம் கொடுக்கத் தேவையில்லை.

போரை ஆரம்பித்தது ரஷ்யாவாக இருந்தாலும் அதற்குக் காரணமானவை அமெரிக்கா, நேட்டோ ஆகியன என்பதும் யூக்கிரெய்ன் இதில் பாவிக்கப்படுகிறது என்பதும் உண்மை. “ஒரு விசேட இராணுவ நடவடிக்கை” என்ற பெயரில் ரஸ்யா இப் போரை ஆரம்பித்திருந்தது. ஆனால் ரஸ்யா எதிர்பார்த்ததைவிட யூக்கிரெய்னின் தற்காப்புத் திறன் அதிகமாக இருந்தது என்பதும் உண்மை. ஆனால் இப்போரில் மனித இழப்புக்களைக் குறைத்து உட்கட்டுமான, வழங்கல் சேவைகளைக் குறிவைத்து ரஸ்ய தாக்குதல்கள் இருந்தன. இதற்கு ஒரு காரணம் கிரீமியா உடபட ரஸ்யாவின் தென் கிழக்கு, தென் மேற்கு பிரதேசங்களில் வாழும் மக்கள் ரஸ்ய பூர்வீகத்தைக் கொண்டவர்கள் (Slavic) அத்தோடு ஓத்தோடொக்ஸ் (orthodox) மதத்தைச் சேர்ந்தவர்கள். பலநூறு ஆண்டுகளுக்கு முன் இவர்கள் ரஸ்ய தேசத்தவர்கள். இவர்களை மீட்டெடுத்து தன்னுடன் இணைத்துக்கொள்வதே ரஸ்ய அதிபர் புட்டினின் நோக்கம். எனவே அவர்களைக் கொல்வதன் மூலம் ரஸ்ய அதிபர் தனது நாட்டு மக்களாலேயே அந்நியப்படுத்தப்படுவார்.

இப் போர் “நாகரிகத்தைக் காப்பாற்றுவதற்கான போர்” என அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், அவரது பரிவாரங்களும் ஊதுவதற்கு ஒரு காரணம் உண்டு. இரண்டாம் உலகப் போருக்கு அடுத்ததாக “வெள்ளை இன மக்கள்” வாழும் இடத்தில் நடக்கும் முதலாவது போர் இது. மத்திய கிழக்கு, ஆப்கானிஸ்தான், தென்னமெரிக்கா, ஆபிரிக்கா போன்ற இடங்களில் நடைபெற்ற போர்கள் “நாகரீகத்தைக் காப்பாற்றுவதற்கான” போர்கள் அல்ல. அது காட்டுமிராண்டிகளுக்கு ஜனநாயகம் கற்பிப்பதற்கான போர். எனவே இப் போருக்காக அனைத்து “நாகரீகமடைந்த நாடுகளும்” அன்பளிப்புச் செய்யவேண்டுமென கட்டாயப்படுத்தப்பட்டனர். இந்தியா, சீனா, தென்னாபிரிக்கா போன்றவை அதற்கு முரண்டு பிடிப்பதற்குக் காரணம் அவை இன்னும் நாகரீகமடையாதவை என்பதனால் தான் என இலகுவாகப் புரிந்து கொள்ளலாம்.

ரஸ்யாவின் நியாயம்

சோவியத் குடியரசின் உடைவை “20ம் நூற்றாண்டின் மிகப்பெரிய பூகோள அரசியல் விபத்து” என ரஸ்ய அதிபர் புட்டின் கூறுவது மிகவும் புரிந்துகொள்ளப்பட வேண்டிய ஒன்று. சோவியத் குடியரசின் உடைவிற்கான முக்கிய எதிரியாக கோர்பச்சேவ் பார்க்கப்படுகிறார் எனினும் அதில் உண்மை இல்லை. உடைவிற்கு முன் அது பலமான அணுவாயுத வல்லரசாகவும், இரு துருவ உலக ஒழுங்கின் சமநிலையைப் பேணும் ஒரு குடியரசாகவும் இருந்தது. எனினும் மேற்கு நாடுகளில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை அது பேணவில்லை. ஒரு நியாயமான மனிதர் என்ற நிலையில் கோர்பச்சேவிற்கு இது வேதனையைத் தந்த ஒன்று என்பது வரலாறு கூறும். இதனால் குடியரசிலிருந்த வார்சோ ஒப்பந்த நாடுகளை அவர்களது விருப்பம் போல் பிரிந்து போக அவர் அனுமதித்தார். அதற்காக அவர் இட்ட நிபந்தனை சோவியத் குடியரசு இல்லாமல் ஆக்கப்படுவது போல் நேட்டோவும் கலைக்கப்படவேண்டும். உடனடி நிகழ்வாக கிழக்கு ஜேர்மனிக்கு கிழக்கே நேட்டோ விரிவாக்கம் இருக்கக்கூடாது என்பது. இதற்கு அப்போது அமெரிக்காவும், நேட்டோவும் இணக்கம் தெரிவித்திருந்தன. இப்போது அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தைப் பற்றிப் பேசுவதில்லை. நேட்டோ ரஸ்ய எல்லைகளில் சென்றமர்ந்துவிட்டது.

குடியரசின் உடைவிற்குப் பின் ரஸ்யா பலமிழந்து போன நிலையில் அடுத்த அதிபராக வந்த,யெல்ஸ்டினின் ஆலோசகராக இருந்த புட்டின் ரஸ்யாவும் நேட்டோ அங்கத்தவராக இணையவேண்டுமெனவும் ஐரோப்பிய ஒன்றியத்தில் அது அங்கம் வகிக்க வேண்டுமெனவும் விரும்பியிருந்தார். அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அக் கோரிக்கையைப் புறந்தள்ளியது மட்டுமல்லாது ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதையும் எதிர்த்தது. இதன் காரணமாகவே புட்டின் சிலேவிக், ஓர்தோடொக்ஸ் குணாதிசயங்களைப் பேணும் மக்களை ஒன்றிணைத்த ரஸ்ய வல்லரசு ஒன்றைக் கட்டியெழுப்ப முடிவு செய்தார்.

சோவியத் குடியரசு காலத்தில் ஸ்ராலின், குருச்சேவ் போன்ற தலைவர்களால் பல ரஸ்ய பிரதேசங்கள் யூக்கிரெய்னுடன் இணைக்கப்பட்டன. இதனாலேயே யூக்கிரெய்னில் தென் கிழக்கு பிரதேசங்களில் வாழும் மக்கள் ரஸ்யாவுக்குச் சாதகமாக இருக்கின்றனர். இவ்விணைப்பில் இறுதியாக, குருச்சேவினால் தாரைவார்க்கப்பட்டது கிரிமியா. அதையேதான் 2014 இல் புட்டின் தனது திட்டத்தின் முதல் நடவடிக்கையாகக் கைப்பற்றினார். அடுத்து அவரது இலக்கு டொன்பாஸ், டொணெஸ்க் போன்ற ரஸ்ய மொழி பேசும் பிரதேசங்கள்.

இதற்கு முன் புட்டின் யூக்கிரெய்னோடு ஒரு சமரசத்திற்கு வந்திருந்தார். யூக்கிரெய்ன் ரஸ்ய எல்லையில் இருப்பதால் ரஸ்யாவின் பாதுகாப்பு கருதி அம்மண்ணில் நேட்டோ வந்தமர இடம் கொடுக்கக்கூடாது. அதே வேளை யூக்கிரெய்ன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது குறித்து தனக்கு ஆட்சேபணை இல்லை என அவர் தெரிவித்திருந்தார். இது மின்ஸ்கி ஒப்பந்தம் என்ற பெயரில் ஜேர்மனி அதிபர் அங்கெலா மேர்க்கிள், பிரஞ்சு அதிபர் மக்குறோன் ஆகியோருடைய உடன்பாட்டுடன் செய்யப்பட்டது. அப்போது யூக்கிரெய்ன் அதிபராகவிருந்த யனுகோவிச் இவ்விடயத்தில் இணக்கம் கண்டிருந்தார். ஆனால் அதற்குப் பின்னால் அமெரிக்க சதியுடன் நடைபெற்ற தேர்தலில் யனுகோவிச் அகற்றப்பட்டு அமெரிக்க ஆதரவாளரான செலென்ஸ்கி அதிபாராக்கப்பட்டார். இதன் விளைவுதான் கிரீமியாவை ரஸ்யா கைப்பற்றியதும், யூக்கிரெய்ன் மீதான படையெடுப்பும்.

இதே வேளை எஸ்ரோணியா, ஃபின்லாந்து போன்ற ரஸ்ய எல்லை நாடுகளில் நேட்டோ குடிகொள்வதைப்பற்றி ரஸ்யா எதுவித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. காரணம் யூக்கிரெய்ன் ரஸ்யாவின் பொருளாதாரத்துக்கு மிகவும் முக்கியமான நாடு. ஐரோப்பாவுக்கு எரிவாயுவை வழங்கும் முக்கிய குழாய்கள் இதனூடாகவே போகின்றன. எனவே யூக்கிரெய்ன் அமெரிக்காவின் கைகளில் வீழ்வது ரஸ்யாவின் இருப்புக்கே ஆபத்தானது. அதை நிரூபிக்கும் வகையில் ஐரோப்பாவுக்கு எரிவாயு வழங்கும் இரு நீரடிக் குழாய்களை அமெரிக்கா தலைமையிலான நாடுகள் வெடிவைத்துத் தகர்த்திருந்தன. இதன் மூலம் ரஸ்ய பொருளாதாரத்தை முடக்கி தோற்றோட வைத்துவிடலாம் என்ற அமெரிக்காவின் நம்பிக்கை கைகூடவில்லை. அதே வேளை உலகின் தானிய ஏற்றுமதியில் 30% த்தைத் தன்னகத்தே வைத்திருக்கும் யூக்கிரெய்ன் ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்வது போக மீதியை ரஸ்ய கட்டுப்பாட்டிலுள்ள துறைமுகங்களினாலேதான் அனுப்ப முடியும். இத்துறைமுகங்கள் மீது ரஸ்யா விரும்பினால் தக்குதல்களை நடத்தி யூக்கிரெய்னின் வர்த்தகத்தை முறியடிக்க முடியும். மனிதாபிமானம் கருதி புட்டின் அதைச் செய்யவில்லை. இக் காரணங்களுக்காக மேற்கு ஐரோப்பிய நாடுகளைத் தவிர ஏனைய உலக நாடுகள் இப் போரில் நடுநிலையாகவோ அல்லது ரஸ்ய சார்பாகவோதான் இருக்கின்றன.

கனடா போன்ற நாடுகளுக்கு இப் போரினால் நிறைய நன்மைகள் உண்டு. சோவியத் குடியரசின் உடைவின் பின்னர் கனடாவுக்கு வருகை தரும் வெள்ளைக் குடிவரவாளர் தொகை வெகுவாகக் குறைந்துவிட்டது. இதனால் அது வெள்ளையரல்லாதவர்கள் மூலம் தனது சனத்தொகைப் பற்றாக்குறையைத் தீர்த்து வந்தது. இது கனடாவின் ‘வெள்ளைத் தனமையை’ மாற்றுகிறது என்ற அச்சம் நீண்டகாலமாக இருந்துவந்தது. யூக்கிரெய்ன் போரைத் தொடர்ந்து ஏறத்தாழ 130,000 பேர் துரிதப்படுத்தப்பட்ட வகையில் குடிவரவாளர்களாக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கான வேலை வாய்ப்புக்களும் மிகவும் இரகசியமான முறையில் துரித கதியில் வழங்கப்பட்டன. ஏற்கெனவே 1.5 மில்லியன் குடிவரவாளர்களது விண்ணப்பங்கள் (பெரும்பாலும் வெள்ளையரல்லாதோர்) நிலுவையில் இருக்கும்போது இது நடைபெற்றிருக்கிறது.

முடிவு

இப்பிரச்சினைக்குச் சமாதானமான தீர்வொன்றைப் பெற்றுத்தர அமெரிக்கா விரும்பவில்லை. துருக்கி, ஜேர்மனி, பிரான்ஸ், ஹங்கேரி போன்ற நாடுகள் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளுக்கு ரஸ்யா இணங்கிச் செயற்பட்டாலும் அவற்றை அமெரிக்கா குழப்பி விட்டது. மேலும் ரஸ்யா மீதும், ரஸ்யர்கள் மீதும் பொருளாதாரத் தடைகளை விதித்தும், ரஸ்யாவுக்கு எதிராக யூக்கிரெய்னுக்கு ஆயுதங்களையும் போர் உத்திகளை வழங்குவதன் மூலமும் இப் போரில் ரஸ்யாவைத் தோற்கடிக்க அமெரிக்கா முனைப்புடன் செயற்படுகிறது. இதன் மூலம் தன்னிடமிருக்கும் மிதமிஞ்சிய எரிவாயுவை ஐரோப்பாவிற்கு விற்றுப் பணம் பண்ணும் நோக்கமே அமெரிக்காவினுடையது என்பது தெரிகிறது. ஆனால் இப்போரை இழுத்தடிப்பதன் மூலம் ஐரோப்பிய மக்களிடையே யூக்கிரெய்ன் எதிர்ப்பை வலுப்படுத்தி நேட்டோ / ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றுமையை உடைப்பது ரஸ்யாவின் நோக்கமாக இருக்கலாம். ஆனால் இதனால் ரஸ்யாவின் பொருளாதாரமும் இராணுவ பலமும் பாதிக்கப்பட்டாது பார்த்துக்கொள்வதும் ரஸ்யாவுக்கு அவசியம். இதன் பொருட்டு அது பின்னணியில் தனது ராஜதந்திர அலுவல்களையும் மிகவும் சாமர்த்தியமாகச் செய்து வருகிறது. சீனா, இந்தியா, வட கொரியா, மத்திய கிழக்கு போன்ற நாடுகளுடன் பலமான உறவுகளைக் கட்டியெழுப்பி வருகிறது. இதனால் யூக்கிரெய்ன் போர் தனியே ஒரு ஐரோப்பிய போராக மாற்றப்பட்டு விட்டது. ஒரு வருட நிறைவில் உலகம் தன்னுடன் நிற்கிறது என செலென்ஸ்கி காட்டுகின்ற வாய்ச்சவடால் வெறும் புஷ்வாணமாகவே பார்க்கப்படுகிறது. மேற்குலகின் தலைநகரங்களில் நடைபெற்ற யூக்கிரெய்ன் ஆதரவு ஊர்வலங்களில் வெள்ளையர்களை மட்டுமே பார்க்கக்கூடியதாக உள்ளது. தெற்குலகு இதைக் கண்டுகொள்ளவேயில்லை. எனவே செலென்ஸ்கி கூறுவது போல் உலகம் அதன் பின்னால் இல்லை.

இப்போர் இரண்டு வழிகளில் முடிவுக்குக் கொண்டுவரப்படலாம். முதலாவது: பேச்சுவார்த்தை. இப்போரை விரைவில் முடிவிற்குக் கொண்டுவருவதற்கான அழுத்தங்கள் விரைவில் ஐரோப்பிய நாடுகளுக்கிடையேதான் வெளிப்படும். பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் மக்களின் வாழ்க்கைத்தரம் மிக மோசமாக ஆகிவிட்டது. மக்கள் புகைய ஆரம்பித்திருக்கிறார்கள். இத்தாலி, ஹங்கேரி போன்ற நாடுகள் வெளிப்படையாகவே எதிர்ப்பைக் காட்டவாரம்பித்திருக்கின்றன. எனவே ஜேர்மனி அல்லது பிரான்ஸ் தலைமையில் பேச்சுவார்த்தைக்கான முனைப்புகள் முன்னெடுக்கப்பட வாய்ப்புண்டு. இரண்டாவது: மட்டுப்படுத்தப்பட்ட ரஸ்ய அணுவாயுதப் பிரயோகம். அமெரிக்காவின் பொறுப்பற்ற நடவடிக்கை ஒன்றினைத் தொடர்ந்து இது நடைபெறலாம். அடுத்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பைடன் எதையும் செய்வார் என்பது சீன பலூன் தகர்ப்பின் மூலம் தெரியவந்துவிட்டது. ஈராக் மீதான போரை முன்னெடுப்பதில் ஜனநாயகக் கட்சியில் முனைப்பாகச் செயற்பட்ட செனட்டர் அவர். போர் வெறியர் எனப் பொதுவாக அறியப்பட்டவர். எனவே தனது வெற்றிக்காக அவர் எதையும் செய்வார். இந் நிலையில் ரஸ்யா அணுவாயுதத்தில் கைவைக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்படும். இதில் சீனாவும், வட கொரியாவும் ரஸ்யாவுடன் இணைந்து கொண்டால் மூன்றாம் உலகப் போர் நிச்சயம்.

பாவம் உலகம்.

(Image Credit: Al Jazeera)