யூக்கிரெய்ன் பிரச்சினையை வைத்து இலாபம் சம்பாதிக்க முனைகிறது அமெரிக்கா – பிரான்ஸ்
யூக்கிர்ய்ன் பிரச்சினையால் தடைபட்டுப்போன ஐரோப்பாவின் எரிவாயு வழங்கலை அமெரிக்கா தனக்குச் சாதகமாகப் பாவித்து இலாபமீட்டுகிறது என பிரெஞ்ச் நிதியமைச்சர் புரூனோ லெ மெயர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
போர் ஆரம்பிப்பதற்கு முதல ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் பல நாடுகளும் தமது எரிவாயு, பெற்றோல் தேவைகளுக்கு ரஸ்யாவையே நம்பியிருந்தன. சுமார் 45% மான எரிவாயுவை ரஸ்யாவே வழங்கி வந்தது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ நாடுகள் ரஸ்யா மீது பொருளாதாரத் தடையை விதித்ததும் இந் நாடுகள் மிக மோசமான பொருளாதார நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து அமெரிக்கா தனது எரிவாயுவை ஐரோப்பிய நாடுகளுக்கு நான்கு மடங்கு அதிக விலையில் விற்று இலாபம் சம்பாதிக்கிறது என பிரான்ஸ் குற்றம்சாட்டுகிறது.
“யூக்கிரெய்ன் பிரச்சினை ஐரோப்பிய ஒன்றியத்தைப் பலவீனப்படுத்தி அமெரிக்காவின் பொருளாதார ஏகாதிபத்தியத்தை வளர்த்துவிட நாம் அனுமதிக்கக்கூடாது. அது தமது தொழில் நிறுவனங்களுக்கு விற்பதை விட நான்கு மடங்கு அதிக விலையில் எரிவாயுவை எமக்கு விற்கிறது” என லெ மெயர் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியம் வாங்கும் எரிவாயுவுக்கு உச்ச விலையொன்றை நிர்ணயிக்க ஒன்றியம் முயன்றபோது அதற்கு நோர்வே போன்ற நாடுகள் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தன. ஐரோப்பாவுக்கு எரிவாயு வழங்கும் நாடுகள் தமது இலாபத்தை அதிகரிக்க வேறு நாடுகளை நோக்கிச் செல்லவேண்டி ஏற்படும் என அது எச்சரித்திருந்தது. இதே வேளை ஜேர்மனிக்கு எரிவாயு வழங்கும் ஒரே ஒரு ரஸ்ய எரிவாயுக் குழாயான நோர்ட்ஸ்ட்றீம் 1 ஐக் குண்டுத் தாக்குதல் மூலம் தாக்கியழிக்க சிலர் முயன்றிருந்தனர். இதன் பின்னால் நோர்வே, அமெரிக்கா இருக்கலாமென்ற சந்தேகம் பரவலாக எழுப்பப்பட்டது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து போலந்து முன்னாள் அரசியல்வாதி ஒருவர் தனது ருவீட்டில் அமெரிக்காவைப் புகழ்ந்திருந்தார்.