யூக்கிரெய்ன்: நடுநிலை பேணுவதை ஏற்க அமெரிக்கா தயார் – ராஜாங்கச் செயலாளர்
யூக்கிரெய்ன் நடுநிலையைப் பேண விரும்புவதாகப் பிரகடனம் செய்ய விரும்பினால் தாம் அதற்குக் குறுக்கே நிற்கப் போவதில்லை என அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் அந்தோனி பிளிங்கென் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 26 அன்று வாஷிங்டனில் நடைபெற்ற செனெட் வெளிவிவகாரக் குழுவினுடனான சந்திப்பின்போது பிளிங்கன் இதைத் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தையின்போது யூக்கிரெய்ன் தரப்பு பலமாக இருக்கவேண்டுமென்பதற்காக அதற்குத் தாம் ஆயுதங்களை வழங்குகிறோமே தவிர இறுதி முடிவை யூக்கிரெய்னிடமே தங்கியுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார். கென்ரக்கி செனட்டர் ராண்ட் போல் கருத்துத் தெரிவிக்கையில், யூக்கிரெய்ன் நடுநிலைமையைப் பேண விரும்பினாலும் செனட் சபையில் அரைவாசிப்பேர் அது நேட்டோவில் இணையவேண்டுமென வற்புறுத்துகிறார்கள் எனத் தனது அதிருப்தியைத் தெரிவித்தபோது அதற்குப் பதிலளித்த பிளிங்கன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“யூக்கிரேனியர்களை விட செனட்டர்களாகிய நாங்கள் அதிகம் யூக்கிரேனியர்களாக இருக்கப் போவதில்லை. இந்த முடிவை அவர்கள் தான் எடுக்க வேண்டும்” என போல் தெரித்திருந்தார். இதற்குப் பதிலளித்த பிளிங்கன் ” இன்றுவரை ஒரு காத்திரமான பேச்சுவார்த்தைக்கு புட்டின் தயாராக இருப்பது போல் தெரியவில்லை. ரஷ்யாவின் ஆகிரமிப்புப் படைகளைச் சமாளிப்பதன் மூலம் சமாதானப் பேச்சுவார்த்தை என்று வரும்போது யூக்கிரெய்னுக்கு அதிக வலு இருக்குமென்ற காரணத்துக்காகவே நாம் ஆயுதங்களை வழங்குகின்றோம். புட்டினும், யூக்கிரெய்னும் பேசத் தயார் என்றால் நாம் அதற்கு முழுமையான ஆதரவை வழங்குவோம்” எனத் தெரிவித்தார்.
“அமெரிக்காவும பிரித்தானியாவும் ஆதரவு வழங்குவோம் என்று உறுதியளித்த காரணத்தினாலேயே யூக்கிரெய்ன் அமைதிப் பேச்சுவார்த்தைகளிலிருந்து பின்வாங்கியது. அமெரிக்காவுடனும் நேட்டோவுடனும் நேரடியாகப் பேச எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. ரஷ்ய தரப்பின் பாதுகாப்பு குறித்த கரிசனைகளை அவர்கள் தூக்கியெறிந்ததுடன் ரஷ்யாவின் பாதுகாப்பு ரஷ்யாவின் கைகளில் இல்லை என்பது போல நடந்துகொண்டனர். மேற்கு நாடுகள் யூக்கிரெய்னுக்கு ஆயுதங்களைத் தொடர்ந்து அள்ளி வழங்கிக்கொண்டிருக்குமானால் சமாதானப் பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறுவது அரிதாகவே இருக்கும்” என சமீபத்தில் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் லவ்றோவ் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய பேட்டியொன்றின்போது தெரிவித்திருந்தார்.
அதே வேளை, ரஷ்யாவின் பாதுகாப்புக் கரிசனைகளை அமெரிக்கா மிகவும் முக்கியமான ஒன்றாகக் கருதுவதாகவும் இது குறித்து ரஷ்யாவுடன் பேசுவதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும் யூக்கிரெய்னில் தாக்குதல்கள் அதிகரித்தமைக்கும் நேட்டோவில் இணைவதற்கும் எந்தவித சம்பந்தமுமில்லை எனவும் செவ்வாயன்று பிளிங்கன் தெரிவித்திருக்கிறார்.