யூக்கிரெய்ன்: தலைநகரத்தை நெருங்கியது ரஷ்யப் படைகள்

நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு அமெரிக்காவின் உதவியை மறுத்தார் அதிபர் செலென்ஸ்கி

சண்டை இங்குதான் நடக்கிறது. எனக்குத் தேவை தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளே தவிர என்னை ஏற்றிப் போவதற்கான வாகனமல்ல.

யூக்கிரெய்ன் அதிபர் வொலோமிடிர் செலென்ஸ்கி

நேற்று இரவு முழுவதும் வடக்கு, தெற்கு, மேற்கு திசைகளிலிருந்து ஏவுகணைத் தாக்குதல்களுடன் முன்னேறிய ரஷ்யப் படைகள் தலைநகர் கியிவை அண்மித்துள்ளதாகவும் ஆனாலும் இன்று அதிகாலை யூக்கிரெய்ன் நேரம் 8 மணி போல் நகரம் அமைதிநிலையை அடைந்திருக்கிறதெனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா மற்றும் நேச நாடுகளின் உதவி எதுவும் கிடைக்காமையால் யூக்கிரெய்ன் இராணுவம் தனித்து விடப்பட்டுள்ள நிலையிலும் அது ஆக்கிரமிப்புப் படைகளை எதிர்த்து போராடி வருகிறது எனவும் யூக்கிரெய்ன் அதிபர் இன்னும் தலைநகரிலேயே உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுவரை சுமார் 50,000 பொதுமக்கள் அயல் நாடுகளில் தஞ்சமடைந்திருக்கிறார்கள் எனவும் அப்படித் தப்பியோடுபவர்களில் போராடும் வல்லமையுள்ளவர்களை இராணுவத்தினர் தடுத்து நிறுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் அவர்களுக்குப் போதுமான ஆயுதங்களும் வெடிமருந்துகளும் இல்லாமையால் சர்வ வல்லமையுள்ள ரஷ்யப் படைகளின் வான், தரை, கடல் ஏவுகணை வீச்சுக்களுக்கு எதிராகத் தாக்குப் பிடிக்க முடியாது எனத் தெரிய வருகிறது.

இதே வேளை, அமெரிக்காவும் நேச நாடுகளும் உறுதியளித்த அளவுக்கு அந்நாடுகளிடமிருந்து உதவி கிடைக்காதது யூக்கிரெய்ன் அதிபர் செலென்ஸ்கிக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்திருந்ததெனவும் அவரை நாட்ட விட்டு வெளியேற்ற அமெரிக்கா முன்வந்தபோது அதற்கு மறுத்துவிட்டாரெனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. “சண்டை இங்குதான் நடக்கிறது. எனக்குத் தேவை தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளே தவிர என்னை ஏற்றிப் போவதற்கான வாகனமல்ல” என அதிபர் செலென்ஸ்கி கூறியதாக்த் தெரிவிக்கப்படுகிறது. அதே வேளை, யூக்கிரெய்ன் அரசாங்கத்தை வீழ்த்திவிட்டு ஆட்சியைக் கைப்பற்றுமாறு யூக்கிரெய்ன் இராணுவத்திற்கு ரஷ்ய அதிபர் புட்டின் அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிகிறது.

அமெரிக்காவுடனான ஏமாற்றத்தின் காரணமாக அதிபர் செலென்ஸ்கி ரஷ்யாவுடன் போர்நிறுத்தமொன்றிற்குத் தயாராகுவதாக இன்னுமொரு செய்தி தெரிவிக்கின்றது.

[இப் போர் பற்றிய பல போலிச் செய்திகளை ரஷ்ய தரப்பும் மேற்குநாடுகள் தரப்பும் மேற்கொண்டு வருவதால் உண்மையான நிலையை வாசகர்கள் உய்த்துணர்ந்து அறிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்]