OpinionWorld

யூக்கிரெய்ன்: சங்கூதும் அமெரிக்கா – ஒரு அலசல்

சிவதாசன்

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா தனது படைகளை திருப்பி அழைத்தபோது உலகில் இன்னுமொரு மூலையில் போரொன்றை ஆரம்பிப்பதற்கான திட்டம் அமெரிக்காவிடம் இருந்திருக்கும் எனப் பலர் ஊகித்தார்கள். அது பெரும்பாலும் தென் சீனக்கடலில் சீனாவின் ஆதிக்கப்பரம்பலையும், தாய்வானை அது தன்னகப்படுத்தவிருப்பதைத் தடுக்கும் போராகவே இருக்குமென எதிர்பார்க்கப்பட்டது.

சர்வதேச சட்டங்களைத் தனது அனுகூலங்களுக்கு ஏற்ப வளைத்தெடுக்கும் அமெரிக்காவுக்கு சீனாவின் கோடிக்குள் எந்தவித அலுவலும் இல்லாதிருந்தபோதும் உயிகுர் முஸ்லிகள் மீதான சீனாவின் மனிதௌரிமை மீறல்கள் என்ற சங்கை அமெரிக்கா ஊதித்திரிந்தது. ஐ.நாவினால் இயற்றப்பட்ட ஏகப்பட்ட சர்வதேச சட்டங்களை இன்னும் அனுசரிக்காத அமெரிக்காவுக்கு ஊதுவதுக்கு ஊருப்பட்ட சங்குகள் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை ஊதுவதனால பலன்கள் இல்லாவிட்டால் அது அவற்றை ஊதாது. அமெரிக்க சீனப்போர் ஆரம்பித்தால் இரண்டு பகுதியினருக்குமே பாரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் என்னுமளவுக்கு இரு நாடுகளினதும் பொருளாதாரமும் பின்னிப் பிணைந்துள்ளமையால் போர் தவிர்க்கப்பட்டது. அல்லது அமெரிக்கா தனது வெருட்டலைத் தணித்துக்கொண்டது.

அமெரிக்கா இப்போது யூக்கிரெயினில் தனது நேட்டோ பங்காளி மூலம் மீண்டும் சங்கை ஊதுகிறது. இந்தத் தடவை சமாச்சாரம் கொஞ்சம் சிக்கலானதால் சங்கு பலமாக ஊதப்படுகிறது. பொருளாதார ரீதியில் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்குமிடையில் ஒன்றையொன்று தங்கியிருக்கும் நிலையில்லை. ஆனால் மேற்கு ஐரோப்பா, குறிப்பாக ஜேர்மனி ரஷ்யாவின் எரிவாயு வழங்கலில் மிகவும் தங்கியிருக்கிறது. எனவே ஜேர்மனிக்கு இப் போரில் இஷ்டமில்லாதுவிடினும், நேட்டோவின் அங்கத்துவ நாடாக, அமரிக்காவின் கைப்பொம்மையாக அது இடப்படும் கட்டளையைப் பின்பற்றியேயாக வேண்டும். தன்நாடு, தன் நலமென்று வரும்போது அமெரிக்க ஜனாதிபதி ஒரு கொடிய, அப்பழுக்கற்ற சுயநலவாதியாக மாறுவார் என்பதை, வேண்டுமானால் கனடிய பிரதமரிடம் கேட்டு அறிந்து கொள்ளலாம்.

ரஷ்யா ஏன் யூக்கிரெயினை மிரட்டுகிறது?

1200 வருடங்களுக்கு முன்னர் இருந்த கீவான் றஸ் சாம்ராஜ்யத்தில் ரஷ்யா, யூக்கிரெய்ன், பெலாருஸ் ஆகிய நாடுகள் ஒன்றாக இருந்தன. இப்போதுள்ள அமெரிக்கா போன்று அதி பலம் வாய்ந்த இச் சாம்ராஜ்யம் பெரும்பாலான கிழக்கு ஐரோப்பாவைத் தன்னகத்தே வைத்திருந்தது. பின்னர் இம் மூன்று நாடுகளும் மொழி, அரசியல் ரீதியாகப் பிரிந்தன. ஆனாலும் சோவியத் யூனியன் என்ற கட்டமைப்புக்குள் அவை தமது தனித்துவத்தைப் பேணிக்கொண்ட அதே வேளை கூட்டரசின் பாதுகாப்பிலும் இருந்துவந்தன.

ஜனாதிபதி ரேகனின் சாணக்கியத்தாலும், ரஷ்ய அதிபர் கோர்பர்ச்சேவின் பச்சைத்தண்ணித் தனத்தாலும் சோவியத் யூனியன் கபடத் தனமாக உடைக்கப்பட்டது. இதனால் முன்னாள் சோவியத் கூட்டரசுகள் தம்மைத் தாமே சுதந்திரமாக ஆளும் வல்லமையைப் பெற்றிருந்தாலும் கிழக்கு ஜேர்மனியைத் தவிர மற்றொன்றும் உலகத்தரமுள்ள, ஜனநாயக விழுமியங்களைப் பேணும், மனித உரிமைகளை மதிக்கும் நாடுகளாக உருவாகவில்லை. தனி நாடுகளாக இருந்தாலும் அவை இன்னும் அதே சோவியத் மனநிலையோடுதான் இருக்கின்றன. அமெரிக்காவுக்கு உடைக்கத்தான் தெரியும், பொருத்தத் தெரியாது அல்லது விரும்புவதில்லை என்ற பெருந்தத்துவம் சோவியத் யூனியனின் உடைப்பில் மேலுமொரு தடவை நிரூபிக்கப்பட்டிருந்தது.

சோவியத் யூனியனின் உடைப்பின்போது ஜனாதிபதி புட்டின் ஒரு சாதாரண கே.ஜீ.பி. அதிகாரி. தன் நாட்டைச் சின்னாபின்னப்படுத்தியமைக்கு எதிராக ஒரு சிறு புயலாகக் கிழம்பிய அவர் தனது சோவியத் மனநிலையிலோ அல்லது அதற்கு முன்னர் இருந்த கீவான் ரஸ் மனநிலையிலோதான் இன்னமும் இருக்கிறார். அவரைப் பொறுத்தவரை, யூக்கிரெய்ன் மக்கள் அவரது ‘மக்கள்’. யூக்கிரெய்ன் நாகரிகம் ரஷ்ய நாகரிகம் எனத் தீர்க்கமாக அவர் நம்புகிறார். பெலாரூஸ் ஏற்கெனவே அவரது கைக்குள் இருக்கும் ஒன்று.

43 மில்லியன் மக்களைக் கொண்ட யூக்கிரெய்ன் ஏறத்தாள ஐரோப்பாவின் உணவுக்கூடையும், தொழிற்பேட்டையுமாகும். தானியமும், உருக்குமே அதன் முக்கிய ஏற்றுமதிப் பண்டங்கள். இதனால் அந்நாட்டைத் தனது பொருளாதாரக் கூட்டமைப்பில் இணைக்க 2000 இலிருந்து புட்டின் முயன்று வருகிறார். யூக்கிரெய்ன் அதற்கு மறுத்து வருகிறது. சுயநிறைவுப் பொருளாதாரத்தை உருவாக்க ஒரு நாட்டின் சனத்தொகை குறைந்தது 250 மில்லியனாவது இருக்கவேண்டுமென பொருளாதார நிபுணர் போல் குருக்மான் கூறுவார். இப்படியான ஒரு பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்கவே புட்டின் முயல்கிறார்.

நேட்டோவின் கிழக்கு நோக்கிய விரிவாக்கம் யூக்கிரெயினை விரைவில் முழுமையாகத் தன்னகப்படுத்திவிடும் நிலையில் இருக்கிறது. யூக்கிரெயினின் பெரும்பான்மையான மக்கள் மேற்கு ஐரோப்பாவுடன் இணைவதையே விரும்பினாலும், அதன் தென்கிழக்கு மாகாணங்களான டொணெட்ஸ்க், லுஹான்ஸ்க் ஆகியன ரஷ்யமொழி பேசும் மக்களைக் கொண்டவை. கிரிமியாவைப் போல அவர்களும் ரஷ்யாவ்வுடன் இணைந்துகொள்ள விரும்புகின்றன. இவர்களைக் காரணமாக வைத்து யூக்கிரெயின் தனது ஆதிக்கத்தைச் செலுத்த ரஷ்யா முயல்கிறது. கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைத்தபோது புட்டினின் செல்வாக்கு 90% த்தால் அதிகரித்ததன் பின்னர் யூக்கிரெயினில் ரஷ்யாவின் ஆதிக்கத்தை அவர் விரிவுபடுத்த விரும்புகிறார்.

இதை எதிர்த்து மேற்கு ஐரோப்பாவின் பெயரில் யூக்கிரெயினைத் தன்பக்கம் வைத்திருக்க அமெரிக்கா விரும்புகிறது. இதற்கு முக்கிய காரணம், ரஷ்யாவை மேற்கு ஐரோப்பாவுடன் இணைக்கும் பொருளாதாரப் பாலம் யூக்கிரெயின். அது மட்டுமல்லாது 2014இல் கிரிமியா ரஷ்யாவின் உடமையாக்கப்பட்டபோது அது கிரிமியாவினூடு ரயில், மோட்டர் போக்குவரத்துக்கான பாலமொன்றையும் கட்டியது. 1919 இல் முழுமையான பாவனைக்குத் திறந்துவிடப்பட்ட இப் பாலம் மேற்கு ஐரோப்பாவை இணைப்பதற்கு யூக்கிரெய்ன் அவசியம்.

இதே வேளை, சீனாவும் தனது பட்டித் தெரு முயற்சியை மேற்கு ஐரோப்பாவிற்கு விஸ்தரிக்க நுழைமுகமாக யூக்கிரெய்னைப் பாவிக்கவே விரும்புகிறது. இதற்கான ஒப்பந்தமொன்று 2021 இல் யூக்கிரெய்ன் அதிபர் செலென்ஸ்கி, சீன அதிபர் சீ ஜின்பிங்க் ஆகியோரிடையே கைச்சாத்திடப்பட்டது.

தற்போது ஐரோப்பாவின் 40% மான எரிவாயுவை ரஷ்யாவே வழங்கி வருகிறது. ஐரோப்பாவின் பொருளாதாரக் கதவுகள் சீனாவுக்கும், ரஷ்யாவுக்கும் முற்றாகத் திறந்துவிடப்படுமானால், ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவில் தங்கியிருக்கத் தேவையில்லை. எனவே ஐரோப்பா தொடர்ந்தும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டுமானால் யூக்கிரெய்ன் என்ற பொருளாதாரப் பாலம் அமெரிக்காவின் கைகளில் இருக்க வேண்டும். எனவே தான் இன்றய அமெரிக்காவின் சங்கு ஊதல்.

படைக் குவிப்பு

ரஷ்யா 100,000 படையினரைக் கிரிமிய / யூக்கிரெய்ன் எல்லையில் ஏற்கெனவே குவித்து வைத்திருக்கிறது. இது நேட்டோவுக்கான வெருட்டல் என்பதை விட அல்லது யூக்கிரெயினுக்கான வெருட்டலாகவே பார்க்கப்பட வேண்டும். இதற்கு முன்னர் இருந்த ரஷ்ய ஆதரவான யூக்கிரெய்ன் ஜனாதிபதி விடர் யனுகோவிச்சை வெற்றிகரமான அமெரிக்க சதி தூக்கியெறிந்துவிட்டு செலான்ஸ்கியைப் பதவியில் அமர்ந்த்தியது. ஆனால் தற்போதைய ரஷ்ய அழுத்தம் அவரை இக்கட்டான நிலைக்குத் தள்ளியிருக்கிறது.

அமெரிக்கா தனது 8,000 படையினரை உசார் நிலையில் வைத்திருக்கிறது. அதே வேளை நேட்டோ அணியும் போருக்கான தயாரிப்பில் ஈடுபட்டிருக்கிறது.

இப் போரினால் ஜேர்மனி உடபடப் பல ஐரோப்பிய நாடுகள் பொருளாதார பாதிப்புகளுக்கு உள்ளாகப் போகின்றன. குறிப்பாக எரிவாயுத் தட்டுப்பாடு. ஐரோப்பிய நாடுகள் தத்தம் எரிவாயுத் தயாரிப்புகளில் ஈடுபடவேண்டுமென அமெரிக்கா எச்சரித்திருக்கிறது.

இப்போரில் ஐரோப்பியர்களுக்கு அதிக நாட்டம் இருக்குமென்று கூறுவதற்கில்லை. அதே வேளை யூக்கிரெய்ன் ரஷ்ய ஆதிக்கத்தில் வருவது அமெரிக்காவுக்கு பொருளாதார ஆதிக்கத்தில் மட்டுமல்ல வறுமைப்பட்ட கிழக்கு ஐரோப்பிய நாடுகளை மீண்டும் ரஷ்ய, சீன பொருளாதார வலயத்துக்குள் தள்ளிவிடக்கூடிய ஆபத்தும் இருக்கிறது.

எனவே இப் போரைத் தணிக்க ஒரே வழி யூக்கிரெய்ன் ஒரு பக்கசார்பில்லாத போக்கை அனுசரிக்க வேண்டும். அப்ப்டியொரு முன்மொழிவை அது முன்வைத்தால் ரஷ்யா அதை ஏற்றுக்கொள்ளத் தள்ளப்படும். அதன் மூலம் ரஷ்ய, யூக்கிரெய்ன், ஐரோப்பிய பொருளாதாரங்கள் பாதுகாக்கப்படும். ரஷ்யாவின் படைக்குவிப்பு இப்படியான ஒரு உடன்பாட்டுக்கு யூக்கிரெய்னைத் தள்ளுவதற்காகவும் அமெரிக்காவைப் பேச அழைப்பதற்காகவுமே தவிர அமெரிக்காவுடம் போரொன்றை ஆரம்பிப்பதற்காக அல்ல. அமெரிக்கா இப்போது பேச ஆரம்பித்திருக்கிறது. அது புட்டினுக்கு இப்போதைக்கு வெற்றி. இன்னும் இரு தலைவர்களும் நேரில் சந்திக்கவில்லை. பைடன் இவ்விடயத்தில் அரசியல் முதிர்ச்சியில்லாதவர். எனவே முரண்டு பிடிப்பார். நேட்டோ படைகளை அங்கும் இங்கும் நகர்த்தலாம். போரில் இறங்காமல் பொருளாதாரத் தடைகளையும், பயணத் தடைகளையும் அவர் விதிக்கலாம். பலமற்ற நாடுகளையே அது பாதிக்கும். ரஷ்யாவை அது எதுவும் செய்யப்போவதில்லை.

அமெரிக்காவைப் பொறுத்த வரையில் ஜனாதிபதி பைடன் மிகவும் செல்வாக்கு இழந்த நிலையில், வாக்குரிமை சம்பந்தப்பட்ட இழுபறியில் அவரது கட்சிக்கார இரண்டுபேரே குடியரசுக் கட்சியுடன் சேர்ந்து வாக்களித்து அவரது முகத்தில் கரிபூசியுள்ள நிலையில் இச் சங்கூதல்கள் தற்காலிக நிவாரணத்தைத் தரலாம். ஆனால் போர் என்று வந்தால் இந்தத் தடவை அவருக்கு நண்பர்கள் குறைவாகவே இருக்கும். மூக்குடைபடுவதை விடக் கரிபடுவதே பரவாயில்லை.