யூக்கிரெய்ன்: எப்படி முடியப் போகிறது போர்?
மாயமான்
போர் மட்டுமல்ல போர் பற்றிய கட்டுரைகளும், விமர்சனங்களும் இப்போது வாசகர்களுக்கு வெறுப்பைத் தரும் நிலையில் ‘அட, நீங்க இன்னும் இருக்கிறீங்களா என்ற நக்கலோடு, சுறுக்கா இந்தக் கட்டுரையை வாசிக்க முற்படலாம். (சுறுக்கா? பாவனையற்று வரும் இச் சொல்லைப் புதுப்பிக்கவே இது!)
சரி, சரி.. ஒரு சத்தியம். போர் முடிஞ்சப் பிறகுதான் யூக்கிரெய்னைப் பற்றிய அடுத்த எனது கட்டுரை.
யூக்கிரெய்ன் மீது புட்டின் ஏன் படையெடுத்தார் என்பதற்குப் பல விண்ணர்களும் (நானுட்பட) பலவிதமான வியாக்கியானங்களைச் சொல்லி எல்லோரையும் குழப்பி விட்டிருக்கலாம். போர் மட்டுமல்ல எல்லா விடயங்களிலும் பலம் அதிகரிக்கும் போதும், குன்றும்போதும் அவரவர் தமது எதிர்பார்ப்புகளை மாற்றிக்கொள்வது வழக்கம் என்ற ஒரு அற்புதமான சாட்டைச் சொல்லி அப்புறம் போவோம்.
போரை ஆரம்பிப்பவன், தன்னிடம் பலமிருக்கிறது அல்லது தனது எதிரி பலம் குன்றியிருக்கிறான் என்ற இரண்டு சூழ்நிலைகளில் தான் அதை ஆரம்பிக்கிறான் என்பதைப் பலரும் ஏற்றுக்கொள்வார்கள். இந்தப் போரில் ரஷ்யா தான் பலத்துடன் இருக்கிறது என்பதோடு இப் போரை ஆரம்பிப்பதற்கு தனது நியாயங்களை எதிரியான யூக்கிரெய்னுடன் தெரிவித்திருந்ததுடன் பேச்சுவார்த்தைக்கு வரும்படி கேட்டபின்னர் தான் ஆரம்பித்ததாகக் கூறுகிறது. ஆனால் யூக்கிரெய்ன் தான் பலவீனமாக இருப்பது தெரிந்திருந்தும், அமெரிக்காவும், நேற்றொவும் கொடுத்த உற்சாகத்தில், பேச்சுவார்த்தையைப் புறந்தள்ளி எதிரியை எதிர்கொள்ளத் தயாராகியது. அதில் தவறேதும் இல்லை. போர் யூக்கிரெய்ன்மீது திணிக்கப்பட்டதென்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.
பாவம் அனுபவமில்லாத இளம் தலைவர் செலென்ஸ்கியும் அமெரிக்காவின் உடுக்கடிக்கு உருக்கொண்டுவிட்டார். ஆனால் அமெரிக்காவும் நேற்றோவும் அடித்த உடுக்கின் சத்தத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் அவற்றின் செயல்முறை போதுமானதாக இருக்கவில்லை. இந்த விடயத்தில் யூக்கிரெய்ன் ஏமாற்றப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை. இந்த நிலையில், போரின் தூசி நிலத்தில் அமைதிகொள்ளும்போது, ஆயிரக்கணக்கான இறந்த அப்பாவி மக்களுக்கும், அழிக்கப்பட்ட நகரங்களுக்கும் பொறுப்புச்சொல்லும் பழி அதன் ஜனாதிபதி செலென்ஸ்கி தலையில் அதன் மக்களால் விரைவில் தூக்கி வைக்கப்படும். அப்போது அமெரிக்காவினால் பாவிக்கப்பட்டு உமிழப்பட்ட, ஈரான் மன்னர் ஷா, சதாம் ஹுசேன், முஆம்மார் கடாபி, பனாமாவின் நோரியேகா, பிலிப்பைன்ஸ் மார்க்கோஸ், ஆப்கானிஸ்தானின் அஷ்ராஃப் கானி, ஸ்டாலினின் மகள் சுவெட்லானா என்ற நீண்ட வரிசையில் யூக்கிரெய்னின் செலென்ஸ்கியும் சேர்க்கப்பட்டிருப்பார்.
சீன போரியல் நிபுணர் சுங் சூ (Sung Tzu) தனது “போரியல் கலை” (Art of War) என்ற நூலில் கூறுவது போல ஒரு போரிடும் தரப்புக்கு தப்புவதற்கான பாதையை அமைத்துக் கொடுப்பதுவும் வெற்றியைப் பெறுவதற்கான ஒரு பாதை தான். மூலைக்குள் முடக்கப்பட்டு தப்ப வழியில்லை மரணமே முடிவு என்ற நிலை ஏற்படும்போது ஒருவன் தனது பலமெல்லாவற்றையும் பாவித்து இறுதியாகப் போராடி அழியவே முற்படுவான். அப்போது சில வேளைகளில் கள நிலவரம் அவனுக்குச் சாதகாமாகவும் மாறிவிடும் சாத்தியமுண்டு. மறுபக்கத்தில், தப்பியோட அவனுக்குப் பாதையைத் திறந்துவிடுவதன் மூலம் பலமுள்ளவன் இலகுவாக வெற்றியை ஈட்டுவதுடன், இரு தரப்பிலும் அழிவுகளையும் குறைத்துக் கொள்ளலாம். யூக்கிரெய்ன் போரில் அது பலவீனமான தரப்பு. சண்டியன் ரஷ்யா யூக்கிரெய்னுக்கு தப்பியோட ஒரு பாதையை அமைத்துக் கொடுக்கவேண்டிய சூழல் இப்போது ஏற்பட்டிருக்கிறது.
சமீப கால போர்களில் யூக்கிரெய்ன் போர் நீண்டகாலத்தை எடுத்து வருகிறது. இதனால் இரு தரப்புகளும் பலவீனமடையும் சந்தர்ப்பம் ஏற்பட்டாலும், ரஷ்யா தனது இரண்டாம் களத் திட்டங்களாக (contingency plans) சிரியாவிலிருந்து, நகர்ப்புறப் போர்க்கலையில் அனுபவம் கொண்ட 15,000 படைகளையும், பெலாருஸ் நாட்டுப் படைகளையும் தயார் நிலையில் வைத்திருக்கிறது. சீனாவும் தனது பொருளாதார வண்டியில் பண்டங்களை ஏற்றித் தயாராக வைத்திருக்கிறது. ஆயுத வழங்கல் விடயத்தில் அதற்குப் பஞ்சமில்லை. போதாததற்கு அணுவாயுதம் வேறு இருக்கிறது. ரஷ்யாவைப் பொறுத்த வரையில், மேற்கு நாடுகளில் சொல்வது போல, all bases are covered.
ஆனால் யூக்கிரெய்ன் படைகள் இந்த நீண்ட காலப் போருக்குத் தயாராகவிருக்கவில்லை. எவ்வளவுதான் அரசியல்வாதிகளும், தொண்டர்களும் தோள்களில் ஸ்டிங்கர் ஏவுகளைகளை வைத்திருந்தாலும் ரஷ்யாவின் ‘ஹைப்பெர்சோனிக்’ ஏவுகணைகள் இலக்கைத் தாக்கி புகை எழும்போதுதான் இவர்களால் பார்க்கவே முடிகிறது. ஒலியின் வேகத்திலும் ஐந்து மடங்கு வேகத்தில் செல்லும் இந் நவீன ஏவுகணைகளை ரஷ்யா இங்கு தான் பரீட்சித்துப் பார்த்திருக்கிறது. இன்னும் பரீட்சிக்காத எத்தனை ஆயுதங்களை அது வைத்திருக்கிறதோ தெரியாது. இவ்விடயத்தில் புட்டினின் எச்சரிக்கை ஒரு பகிடிக் கதையில்லை என்பதை அமெரிக்கா எப்போதோ உணர்ந்துவிட்டது. ஆனால் பாவம் செலென்ஸ்கி தான் இப்போதும் மேடையில் நகைச்சுவை நிகழ்ச்சியில் பேசுவது போல் களநிலவரங்களையும் கூறிவருகிறார்.
யூக்கிரெய்னின் தாகுதலை எதிர்கொல்ளமுடியாது ரஷ்யா திணறுகிறது என்ற தோற்றப்பாட்டை ஊடகங்கள் தொடர்ச்சியாகக் காட்ட முனைகின்றன. ஆனால் ரஷ்யாவின் இக் கால இழுத்தடிப்பு வேண்டுமென்றே செய்யப்படும் ஒன்றாகவே நான் பார்க்கிறேன். அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். (1) தப்பியோடிய 3.5 மில்லியன் அகதிகளினால் திண்டாடும் போலந்து போன்ற நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கை. உங்கள் நாடுகளில் இருக்கும் நேற்றோ மர்றும் அமெரிக்கப் படைகளைப் பேசாமல் கம்மென்று இருக்கச் சொல்லுங்கள். இல்லாதுபோனால் நீங்கள் அண்ணாந்து பார்க்கவே சந்தர்ப்பம் இருக்காது. (2) இழுத்தடிக்கும் இப் போரினால் ஐரோப்பாவின் பொருளாதாரம் வெகு விரைவாகச் சரிவடைந்துபோனால் அந்நாடுகளின் மக்கள் அவரவர் அரசாங்கங்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுவார்கள். இதனால் அமெரிக்காவின் அதிகாரம் உலகெங்கும் சரிவடைந்து சீனா, ரஷ்யாவின் கீழான அதிகாரம் உலக ஒழுங்கைச் சமநிலைக்குக் கொண்டுவரும். எவ்வளவுக்கு எவ்வளவு அகதிகளை உயிரோடு ஓடித்தப்ப அனுமதிக்க முடியுமோ அதை ரஷ்யா செய்கிறது. இதனால் உள்நாட்டில் (ரஷ்யா) ‘வியட்நாம் போரெதிர்ப்பு’ போன்ற சூழல் ஒன்று உருவாகாது அதே வேளை வெறுமையான கட்டிடங்களைத் தகர்த்தெறிவதன் மூலம் யூக்ரெய்ன் தன்னை மீள்நிர்மாணம் செய்ய பலவருடங்கள் எடுக்குமென்ற நம்பிக்கை. எனவே ஒட்டுமொத்தமாக இதில் மோசமாக ஏமாறப் போவது யூக்கிரெய்ன் அதிபரும் அதன் மக்களும் தான்.

ஒரு மாதமாக நடைபெற்று வரும் இப் போரில் ரஷ்ய ஊடகங்கள் என்ன சொல்கின்றன என்பது தெரியாத நிலையில் அமெரிக்க ஜனாதிபதி பைடன், மற்றும் யூக்கிரெய்ன் அதிபர் செலென்ஸ்கி இருவரது வெற்றுக் கூச்சல்களும் (rhetoric) நிலைமையை மேலும் மோசமாக்கி வருகின்றன என நான் நினைக்கிறேன். குறிப்பாக பைடன் தனது மாயக் கோட்டைக்குள் இருந்துகொண்டு ‘புட்டின் ஒரு போர்க்குற்றவாளி’ எனத் தீர்ப்பளிப்பது மிக மட்டமான ஒரு விடயம். உலகின் முடிசூடாத தலைவர் என்ற ஆசனத்தில் இருக்கும் அவர் ஒரு ஸ்டேட்ஸ்மன் (statesman) ஆக நடந்துகொள்வது, இக் காலகட்டத்தில், மிக மிக அவசியம். உலகம் சொல்வது போல குரங்கின் கையில் கிரெனேட்டைக் கொடுத்துவிட்டு அதற்குக் கல்லெறியும் சேட்டைக்குச் சமமானது இது. தனது கோட்டைக்குள் இருந்து பைடன் இக் கல்லை எறியலாம். ஆனால் குரங்குக்கு யூக்கிரெய்ன் தான் அருகிலிருக்கிறது என்பதை செலென்ஸ்கி உணர்ந்து பைடனை மீறித் தானும் கூச்சல் போடுவதை நிறுத்த வேண்டும். அவரது கூச்சலுக்கேற்ப அனைத்து இயலுமான யூக்கிரெனியர்களும் போரில் இணைந்துவிட்டார்கள். மீதமானோர் ஓடித் தப்பி விட்டார்கள். நேற்றோ பயத்தில் வெளியே முகாமடித்திருக்கிறது. இந்த நிலையில் புட்டினை எரிச்சலுக்குள்ளாக்கும் கூச்சலை செலென்ஸ்கி நிறுத்த வேண்டும். குரங்குகளோடு பழகிய எவரும் இதையேதான் சொல்வார்கள்.
சரி பல பேர் மத்தியட்சம் பேசிப் போயும் மாப்பிளை வீட்டுக்காரர் அசைவதாக இல்லை. இப்போது மாப்பிள்ளையைத் தூக்கி வளர்த்த தாய் மாமனார், துருக்கி, கடைசி முயற்சியை எடுத்திருக்கிறார். மாப்பிள்ளை வீட்டுக்காரரும் 6 நிபந்தனைகளோடு சம்மதித்திருக்கிறார்கள். அவற்றில் முக்கியமான ஒன்று யூக்கிரெய்ன் நடுநிலையைப் பேணுவதுடன் அம்மண்ணில் நேற்றோ களமமைக்க அனுமதி கொடுக்கக்கூடாது. இம் முக்கியமான நிபந்தனைக்கு செலென்ஸ்கி இணங்கிவிட்டார். அதையும் மேற்கு ஊடகங்களே சொல்வதனால் நீங்கள் அதை நம்ப மறுக்கலாம். ஆனால் உண்மை. அதே வேளை மரியூபோல் பிரதேசம் எந்நேரமும் ரஷ்யப்படைகளின் வசம் விழலாம் என்பது தெரிந்ததும், அமெரிக்க உதவிகள் கிடைக்கப் போவதில்லை என்பதை உணர்ந்ததும் செலென்ஸ்கி தனது உற்சாகத்தை இழந்துவிட்டதாகத் தெரிகிறது. இப்போ அவருக்கான தப்பியோடும் பாதையைத் திறந்துவிட ரஷ்யா எடுத்துள்ள முயற்சிதான் துருக்கியின் முன்னெடுப்பில் நடக்கும் இப் பேச்சுவார்த்தை.
மரியூபோலில் இருக்கும் யூக்கிரெய்ன் படைகள் சரணடைய வேண்டுமென்பது ரஷ்யாவின் இன்னுமொரு நிபந்தனை. அதற்குத் தேவையில்லாத வகையில் இக் கடற்கரை நகரம் ஏறத்தாழ ரஷ்யாவின் கைகளில் விழுந்துவிட்டது. இதற்கிடையில் இந்நகரிலுள்ள தியேட்டர் ஒன்று ரஷ்யாவின் தாக்குதலுக்குள்ளாகியது எனவும் இதில் மக்கள் தஞ்சமடைந்திருந்தார்கள் எனவும் ஊடகங்களில் வந்த செய்தி பொய்யானது எனவும் அது அசோவ் தீவிரவாதிகளால் வேண்டுமென்றே காட்சிப்படுத்தவெனச் செய்யப்பட்ட ஒன்று என்றும் ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் தெரிவித்த விடயம் இப்போது பரபரப்பாகி வருகிறது. இதே வேளை தலைநகர் கீவைக் கைப்பற்றும் விடயத்தில் ரஷ்யா அதிக அக்கறை காட்டவில்லை என்பதும் அவதானத்துக்குரிய இன்னுமொரு விடயம்.
இவையெல்லாவற்றையும் வைத்துப் பார்க்கும்போது யூக்கிரெய்ன் முழுவதையும் தன்னகப் படுத்தாமல் அதைத் துண்டாடும் நோக்கம் ரஷ்யாவுக்கு இருக்கிறதோ எனவும் கருதவேண்டியிருக்கிறது. கிழக்கு, தென் கிழக்கு பிரதேற்சங்களை உள்ளடக்கிய தற்போதுள்ள யூக்கிரெய்னின் ஏறத்தாழ மூன்றிலொரு பகுதியை ரஷ்யாவுடன் இணைத்து ‘புதிய ரஷ்யா’ ஒன்றை உருவாக்க புட்டின் முனைகிறார் (plan A) என்ற சந்தேகமும் உருவாகிறது. அதன் மாற்றீடாக டொன்பாஸ் பிரதேசங்கள், கிரைமியா, ஒடெசா போன்ற பிரதேசங்கள் தனியாகப் பிரிந்துபோக யூக்கிரெய்ன் சம்மதிக்க வேண்டுமென்பது புட்டினின் plan B ஆக இருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுகிறது.

இந்நிலையில் யூக்கிரெய்ன் வரலாற்றில் 1654 இல் யூக்கிரெய்ன் கொண்டிருந்த நிலப்பரப்பும் பின்னர் ரஷ்ய அரசர்கள், அதன் பின்னர் வந்த சோவியத் தலைவர்களான லெனின், ஸ்டாலின், குருஷ்சேவ் ஆகியோரால் யூக்கிரெய்னுடன் இணைக்கப்பட்டு தற்போதுள்ள யூக்கிரெய்னின் நிலப்பரப்பும் கொண்ட வரைபடம் இங்கு இணைக்கப்பட்டுள்ளது. 1990 களில் சோவியத் உடைவின் பின்னர் தொடர்ச்சியாக ரஷ்யா வஞ்சிக்கப்பட்டதன் விளைவே புட்டினின் உருவாக்கம் எனவும் 2014 இல் கிரைமியாவைக் கைப்பற்றியதன் பிறகு புட்டினின் உள்நாட்டுச் செல்வாக்கு 93% த்துக்கு உயர்ந்ததும் புட்டின் ‘காட்சிப்படுத்திய’ கடந்தவார ‘ஆதரவுக் கூட்டம்’ இப் போருக்கான ரஷ்ய மக்களின் ஆதரவில் சரிவேதும் ஏற்பட்டதாகக் காட்டவில்லை. எனவே கைகளை முறுக்கி செலென்ஸ்கியை Plan B யை நிறைவேற்றுவதா அல்லது அவர் முரண்டுபிடிக்கும் பட்சத்தில் Plan A ஐ நிறைவேற்றி யூக்கிரெய்னைத் துண்டாடுவதா என்பதைத் தீர்மானிக்கும் நிலைக்கு புட்டின் தள்ளப்பட்டிருக்கிறார். யூக்கிரெய்னுக்குத் தாரைவார்க்கப்பட்ட பிரதேசங்களையே நான் திருப்பி எடுக்கிறேன் என்று புட்டின் முன்வைக்கும் வாதத்தை ரஷ்ய மக்கள் கைதட்டி வரவேற்பது போல் இப் பிரதேசங்களில் வாழும் ரஷ்ய மொழி பேசும் மக்களும் வரவேற்கிறார்கள் என்பதே புட்டின் இந்நிலைப்பாட்டை எடுப்பதற்குக் காரணம்.
இவ்விரண்டு முடிவுகளில் எதை எடுத்தாலும் செலென்ஸ்கியின் ‘ஹீரோ வேடம்’ நீண்டகாலத்துக்கு நிலைக்கப் போவதில்லை. அவரும் தனது முகத்தைக் காப்பாற்றிக்கொள்ள புட்டின் ஒரு சந்தர்ப்பம் கொடுப்பதோடு அவருக்கும் அமெரிக்கா / மேற்குநாடுகளுக்குமிடையிலான ஏமாற்றப்பட்ட உறவை அவர் உணர்ந்துகொள்ளச் செய்வதே ரஷ்யாவின் நீண்டகாலச் சமாதானத்துக்கு நல்லது. இதன் மூலம் தற்போது ரஷ்ய எல்லையில் நடுங்கிக் கொண்டிருக்கும் இதர நாடுகளும் அமெரிக்காவுடனான தமது உறவைப் பற்றி இருதடவைகள் யோசிக்கும் என நான் நினைக்கிறேன்.
என்ன இருந்தாலும் உலக ஒழுங்கு இரு துருவ நிலைக்கு மாற்றப்படுவதும் ஆசியா, ஆபிரிக்கா, கிழக்கு ஐரோப்பா ஒரு பக்கமாக சீனாவின் கீழ் அணிதிரள்வதும், மீதமானவை அமெரிக்காவின் கீழ் அணிதிரள்வதும் தவிர்க்கமுடியாததாகிவிட்டது. இப்போரின் விளைவாக அமெரிக்கா தனது நட்சத்திர அந்தஸ்தை இழந்துபோவதும், ஆசிய ஆபிரிக்க நாடுகள் ஐரோப்பிய நாடுகளின் நிலைக்கு உயர்த்தப்படுவதும் தவிர்க்கமுடியாத ஒன்றாக இருக்கும் என நான் நம்புகிறேன்.
இறுதியாக, உலகின் நன்மைக்காகவும், போரிடும் தரப்பினரின் நன்மைக்காகவும் இப் போர் இன்னும் ஓரிரு வாரங்களில் முடிவுக்குக் கொண்டுவரப்படும். துர்ப்பாக்கியமாக அதில் யூக்கிரெய்ன் மக்களே தோல்வியடைந்தவர்களாவார்கள். அதன் பக்க விளைவாக இப் போரைத் தூண்டியமைக்காக அமெரிக்கா, கனடா, மேற்கு ஐரோப்பா ஆகியன மிக நீண்ட காலத்துக்கு துன்பத்தை அனுபவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும்.
பைடன் தன்னிடம் இருக்கும் கல்லை எறியாதவரைக்கும் இதுவே போரின் முடிவெனவே நான் நம்புகிறேன்.