World

யூக்கிரெய்ன்: இலான் மஸ்க்கின் மத்தியஸ்தம்

ரஸ்யா-யூக்கிரெய்ன் போரில் ரெஸ்லா நிறுவன ஸ்தாபகர் இலான் மஸ்க் ஒரு புதிய கலகத்தைத் தொடங்கியிருக்கிறார். அதாவது போரைச் சமாதானமாக முடிவுக்குக் கொண்டுவர அவர் கூறும் ஆலோசனை: 1. கிரிமியாவை நிரந்தரமாக ரஸ்யாவுக்கே கொடுத்துவிட வேண்டும். 2: ரஸ்யா இறுதியாக இணைத்த நான்கு பிரதேசங்களிலும் ஐ.நா.வின் மேற்பார்வையில் தேர்தல்கள் நடத்தப்பட்டு அதன் பெறுபேறுகளின்படி முடிவுகளை எடுக்க வேண்டும். 3. யூக்கிரெய்ன் நேட்டோவில் இணையாமல் நடுநிலையாக இருக்க வேண்டும்.

மஸ்கின் இந்த ஆலோசனையை ருவிட்டர் மூலம் வெளியிட்டிருந்தார். இதற்கு பதிலாக யூக்கிரெய்ன் அதிபர் செலென்ஸ்கி ருவிட்டரில் ஒரு கருத்துக்கணிப்பை ஆரம்பித்தார். அதில் மஸ்க் யூக்கிரெய்னுக்கு ஆதரவாக இருக்க வேண்டுமா அல்லது ரஸ்யாவுக்கு ஆதரவாக இருக்க வேண்டுமா? என அக்கருத்துக்கணிப்பில் கேள்விகள் கேட்கப்பட்டது. இப்பதிவு வந்து சிலமணி நேரத்தில் அவர் யூக்கிரெய்னுக்கு ஆதரவாகவே இருக்கவேண்டுமென்பதற்கு 85 % ஆதரவு கிடைத்திருந்தது. ஆனால் அது நிஜமானதல்ல bot போன்ற தானியங்கி வாக்களிப்பினால் நடைபெற்றது என மஸ்க் இப்போது கூறிவருகின்றார்.

கிரிமியா விடயத்தில் அது 1783 இலிருந்து ரஸ்ய பிரதேசமாகவே இருந்துவந்தது. 1954 இல் ரஸ்ய அதிபர் நிக்கிட்டா குருஷ்சேவ் அதை யூக்கிரெய்னுக்குத் தானமாகக் கொடுத்திருந்தார். இவ்விடயத்தில் குருஷ்சேவ் மாபெரும் தவறை இழைத்திருக்கிறார். எனவே அதை ரஸ்யாவிடம் விட்டுவிடுவதே நல்லது என மஸ்க் தெரிவித்திருக்கிறார்.

2014 இல் கிரிமியாவை ரஸ்யா இணைத்ததும் அதற்கு வழங்கிக்கொண்டிருந்த நீரைத் திடீரென யூக்கிரெய்ன் நிறுத்திவிட்டது. அதைத் திறந்துவிடும்படி ரஸ்ய அதிபர் கேட்டிருந்தும் அதற்கு யூக்கிரெய்ன் மறுததுவிட்டது. இதைத் தொடர்ந்து பிணக்கு அதிகரித்து பெப் 2022 இல் ரஸ்யா யூக்கிரெய்ன் மீது படையெடுத்தது. இப்படையெடுப்பைத் தொடர்ந்து யூக்கிரெய்ன் கிரிமியாவுக்கான நீர் வழங்கலை மீண்டும் ஆரம்பித்தது.

“எனது இந்த ஆலோசனையே இறுதியில் பின்பற்றப்படப் போவது. அதற்கு முன் எத்தனை உயிர்கள் அனியாயமாகச் சாகவேண்டும்” என மஸ்க் கேட்டிருக்கிறார்.

இருப்பினும் ரஸ்யாவுடன் பேச்சுவார்த்தைக்குப் போக யூக்கிரெய்ன் தயாராகவில்லை என செலென்ஸ்கி சூளுரைத்திருக்கிறார். கிரிமியா உடபட டொன்பாஸ் குடியரசுகள் அனைத்தையும் தான் கைப்பற்றுவேன் என அவர் சவால் விட்டிருக்கிறார். அத்தோடு நேட்டோவில் அங்கத்தவராகுவதற்கான விண்ணப்பத்தை அவர் அனுப்பியிருப்பதுடன் அதை விரைவாக நடைமுறைப்படுத்தும்படியும் கேட்டிருக்கிறார்.

மஸ்க்கின் இந்த ஆலோசனைக்கு இதுவரை 60% மான ருவிட்டர் பாவனையாளர்கள் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். அதை மாற்றுவதற்கு யூக்கிரெய்ன் ஆதரவாளர்கள் பகீரத முயற்சிகளை எடுத்து வருகிறார்கள்.

ஆரம்பத்தில் இலான் மஸ்க் தனது ஆதரவை செலென்ஸ்கிக்கு வழங்கியிருந்தாலும் தற்போது பெரும்பாலான அமெரிக்க வலதுசாரி அமைப்புக்களும் ஆதரவாளர்களும் இப்போரை முடிவுக்குக் கொண்டுவரவே விரும்புகிறார்கள். ஐரோப்பாவின் வலதுசாரித் தலைவர்களும் இதையே விரும்புகிறார்கள்.