Columnsசிவதாசன்

யூக்கிரெய்ன்: அமெரிக்காவின் தோல்வி

உலகின் மீளொழுங்கு ஆரம்பித்துவிட்டதா?

சிவதாசன்

யூக்கிரெய்ன் மீதான ரஷ்யப் படையெடுப்பு மும்முரமாகிக் கொண்டுவரும் நிலையில் அதன் விளைவுகள் எப்ப்டியிருக்கும், இதனால் உலகநாடுகளில் எப்படியான பாதிப்புகள் ஏற்படக்கூடுமென்ற பலதரப்பட்ட வாதப் பிரதிவாதங்களும் எழுந்தவண்ணமுள்ளன. போர் ஆரம்பித்து இரண்டு வாரங்கள் முடிவடைகின்ற நிலையில் ரஷ்யா எதிர்பார்த்த வேகத்தில் போர் நகரவில்லை எனவும், இதில் ரஷ்யா பயங்கரமான தோல்வியைச் சந்திக்கப்போகிறது எனவும் பல ஆரூடங்கள் கூறப்பட்டு வருகின்றன. யூக்கிரெய்ன் அதிபர் செலென்ஸ்கி முதல் கனடிய பிரதமர் வரை பார்வையாளர்களைக் குஷிப்படுத்தும் மேடை நாயகர்களது பேச்சுக்கள் அப்படித்தான் இருக்கின்றன.

சமநிலைப்படுத்தப்பட்ட செய்திகளுக்கு இடம் தராமல் பிரச்சாரப் பாணியிலான பிரசங்கச் செய்திகளை மேற்கத்தைய ஊடகங்கள் இடைவிடாது கடைந்து வருகின்றன (ரஷ்ய ஊடகங்களுக்கு அச் சந்தர்ப்பம் மறுக்கப்பட்டு விட்டது). சிரியப் போரில் கல்ந்துகொள்ளும்படி எப்படி ஐசிஸ் தனது பிரச்சாரத்தை சமூக ஊடகங்கள் மூலம் மேற்கொண்டிருந்தனவோ அதே ‘ஆட்சேர்ப்பு’ சரக்கைத் தான் இப்போரின் ஆரம்பத்திலும் மேற்கு ஊடகங்கள் தமது வெகுஜன ஊடகங்கள் மூலம் செய்து வந்தன. அதில் அவை எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்கவில்லையா அல்லது அதையும் மீறி ரஷ்ய ஆக்கிரமிப்பு உக்கிரப்படுத்தப்படுத்தப்பட்டு வெற்றியைக் கண்டு வருகிறதா தெரியாது ஆனால் இவ்வூடகங்களின் பிரச்சாரம் இப்போது ‘குய்யோ முறையோ, இது தகுமோ’ கணக்கிற்கு ‘இக் காட்சிகள் சில பார்வையாளர்களைக் கதி கலங்க வைக்கும்’ என்ற எச்சரிக்கைகளுடன் போர்க்களப் பாதிப்புகளைக் காட்டி நேயர்களின் இரக்கத்தைச் சமபாதிக்க முயல்கின்றன.

இப் போரை நியாயப்படுத்துவதற்கு அரசியல்வாதிகள் தமது துவார பாலகிகள் / பாலகர்கள் சகிதம் ஊடகங்களின் முன்னிலையில் காட்டிவரும் படங்கள் சில வேளைகளில் கோமாளித்தனமாக இருப்பதுண்டு. தலைவர்கள் இரு மருங்கிலும் தலையாட்டிகள், கைதட்டிகள் புடைசூழ நடத்திவரும் தினச்சடங்குகள் அருவருப்பாகவும் இருப்பதுண்டு. உண்மையைச் சொல்வதற்குப் போர்க்களக் காட்சிகள் மட்டுமே போதுமானவை. அந்த விடயத்தில் முள்ளிவாய்க்காலை மிஞ்சி எதுவும் எவரையும் உலுப்பிவிடப் போவதில்லை. ஆனால் அதில் நீலக்கண், பொன்முடி கொண்ட ‘நாகரீகமடைந்த’ மக்கள் அகப்படவில்லையாதலால் மேற்கு ஊடகங்கள் அதில் அதிகம் அக்கறை காட்டியிருக்கவில்லை.

மேற்கத்தய ஊடகங்கள் ஒருதலைப் பட்சமான செய்திகளையே சொல்கின்றன என்பதை அறிவுபூர்வமானோர் ஏற்றுக் கொள்வர். அதற்காக அவர்கள் தரும் செய்திகள் பொய்யென்பதில்லை. அவர்கள் முழு உண்மைகளையும் தருவதில்லை எனவே சொல்ல வருகிறேன். ஈழப் போராட்டத்தில் குழந்தைப் போராளிகளைக் காட்டுவதற்கும், சிரியாவில் வெளிநாட்டுப் போராளிகளைக் காட்டுவதற்கும் யூக்கிரெய்னில் துப்பாக்கிப் பயிற்சிகளுக்காகவும் இதர போர்க் கடமைகளில் ஈடுபடுவதற்காகவும் குடும்பப் பெண்களும் குழந்தைகளும் ஈடுபடுவதைப் பெருமையாகக் காட்டுவதற்கும் வித்தியாசமிருக்கிறது என நான் நினைக்கிறேன்.

இதுவரை 2 மில்லியன் யூக்கிரெய்ன் மக்கள் அண்டைய நாடுகளில் அகதிகளாகத் தஞ்சமடைந்திருக்கிறார்கள். கார்க்கிவ் மாகாணத்திலிருந்து அகதிகளாக்கப்பட்ட 400,000 இற்கும் மேற்பட்ட ரோமா இனத்திற்கு அந்த அதிர்ஷ்டம் கிட்டவில்லை. பல நூற்றாண்டுகளாக ஐரோப்பிய நீலக்கண், பொன்முடி இனங்களால் ஒதுக்கப்பட்டுவரும் இவ்வினம் ஒரு காலத்தில் இந்தியாவிலிருந்து நாடோடிகளாக ஐரோப்பா சென்றதாக வரலாறு கூறும். அவர்களது கறுப்பு முடிகளும், சாயல்களும் இன்னும் அவர்களது பூர்வீகத்தைப் பறைசாற்றுகின்றன. அத்தோடு அவர்களது கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையும் அவர்களது புலம்பெயர்வுக்கு தனியான பரிமாணத்தைக் கொடுத்துள்ளன.

யூக்கிரெய்ன் பிரச்சினையில் இவர்களை யூக்கிரெய்ன் அகதிகளாக அண்டை நாடுகள் கருதுவதில்லை. பல குடும்பங்கள் குழந்தைகளுடன் நான்கு / ஐந்து நாட்கள் குளிரில் பட்டினியுடன் வாடி இறுதியில் கூடாரம் ஒன்றை அமைத்து அதில் தங்கியபோது அக் கூடாரத்தைப் பிடுங்கி அவர்களைக் கலைத்துவிட்டிருக்கிறார்கள் யூக்கிரெய்ன் காவலாளிகள். யூக்கிரெயின் கல்விகற்கச் சென்றிருந்த கறுப்பின இளைஞர்களை எல்லை தாண்ட விடாது தடுத்து நீங்கள் யூக்கிரெயினுக்காக ஆயுதமெடுத்துப் போராடவேண்டுமெனத் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவங்களுமுண்டு. இதையெல்லாம் ‘எங்களது’ மேற்கத்தய ஊடகங்கள் கண்டுகொள்வதில்லை. அச்செய்திகளை அல் ஜசீராவும் இந்திய ஊடகங்களுமே வெளிக்கொணர்ந்திருந்தன.

தவிர்த்திருக்கக்கூடிய போர்

போர் அநாகரிகமானது. அதைத் தீர்மானிப்பவர்கள் மனிதர்களாக இருக்கமூடியாது என்பது சொல்வதற்கு இலகுவானது. ஆனால் உயிரினம் இவ்வுலகில் தோன்றியதிலிருந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமது குழுவினதும், சமூகத்தினதும், இனத்தினதும் பாதுகாப்பு, நல்வாழ்விற்காக இப் போர்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அவற்றைத் தீர்மானிப்பதும், தவிர்ப்பதும் எப்போதுமே குழுத்தலைவர்களிடமே இருந்து வரும் பொறுப்பாகும். எதிரியின் பலம், மக்களின் அழிவு ஆகியன தலைவர்கள் எடுக்கும் முடிவுகளைத் தீர்மானிக்கின்றன. அந்த வகையில் யூக்கிரெய்ன் போர் இலகுவாகத் தவிர்க்கப்பட்டிருக்கவேண்டிய ஒன்று.

இரண்டாம் உலகப் போரில் சிங்கப்பூரில் சுமார் 85,000 நேசநாடுகளின் படையினர் – அதாவது பிரித்தானிய காலனி ஆதிக்கத்தின்கீழிருந்த நாடுகளின் கட்டாயச் சேர்ப்பின் காரணமாக ஆயுதங்களை ஏந்திய இந்திய, பாகிஸ்தானிய, பிரித்தானிய படையினர் – களமமைத்திருந்தனர். இதில் ஆயுத பலமற்ற, முறையான பயிற்சிகளைப் பெறாத இப் படையணிக்குத் தலைமை தாங்கியவர் ஆர்தர் பேர்சிவல் என்ற பிரித்தானிய ஜெனெரல். அப்போது சிங்கப்பூரில் 1 மில்லியன் மக்கள் வாழ்ந்தார்கள். இச் சூழ்நிலையில் யப்பானியரோடு சண்டையிட்டு மக்கள், படையினரின் பேரழிவுக்குக் காரணமாக அமைவதா அல்லது அவர்களது உயிர்களைக் காப்பாற்றுவதற்காகச் சரணடைவதா என்ற முடிவை அவர் எடுக்கவேண்டும். சிங்கப்பூரின் கேந்திர முக்கியத்துவம் காரணமாக எப்படியாயினும் போரிட்டு அதைக் காப்பாற்றும்படி அப்போதைய பிரித்தானிய பிரதமர் வின்ஸ்ரன் சேர்ச்சில் ஜெனெரல் பேர்சிவலுக்குக் கட்டளையிட்டார். ஆனால் பேரழிவைக் காப்பாற்றுவதற்காக, சேர்ச்சிலின் உத்தரவைப் புறந்தள்ளிவிட்டு மலாயாவிலுள்ள 50, 000 படையினரையும் சேர்த்துக்கொண்டு தனது படையினருடன் சரணடையும் முடிவை எடுத்தார் பேர்சிவல். பல்லாயிரக் கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டன. போரின் இறுதியில் பங்கரிலிருந்த நாயகர் சேர்ச்சிலின் உயிரையும் மானத்தையும் காப்பாற்றியவர் ஸ்டாலின்.

யூக்கிரெய்ன் போரில் இப்படி ஒரு தேர்வு அதன் அதிபர் விலோமிடிர் செலென்ஸ்கிக்கும் இருந்தது. மேற்கினால் கைவிடப்பட்டுவிட்டோம் என்ற நிலையும் அவருக்குத் தெரிகிறது. ஆனாலும் சினிமாக்களில் வரும் ஹீரோக்கள் போல அவர் நடந்துகொள்கிறார். மக்களிடையே அவரது ஆதரவுப் புள்ளி 93% வீதம் என்கின்றன ஊடகங்கள். அது உண்மையா அல்லது அவரை ஊக்குவிப்பதற்காக ஊதப்பட்ட ஒன்றா என்பது தெரியாது. அவர் தனது ‘வெற்றியில்’ சுய இன்பம் காண்கிறாரா தெரியாது. ஆனால் நிலைமை அதுவல்ல.

இப் போர் இன்னும் இரண்டு மூன்று வாரங்களில் முடிவுக்கு வருமென்று நான் நம்புகிறேன். அது தற்காலிகமாகவும் இருக்கலாம். மேடை நாயகர்கள் கர்ச்சிப்பதைப் போலல்லாமல் யூக்கிரெய்ன் தமது ஆயுதங்களை ‘மெளனிப்பதோடு’ அது இந் நிலையை எய்தும்.

இப் போரில் ரஷ்யா வென்றாலும் அது தோற்றதாகவே வரலாறு பார்க்கும் என்ற சில மேற்கத்தைய நிபுணர்கள் கூறுவது இப்போது அதிகரித்து வருகிறது. அகதிகளின் எண்ணிக்கை 2.5 மில்லியனை எட்டியிருக்கிறது. இச் செய்திகளைப் பிரித்துப் பகுத்துப் பார்த்தால் யூக்கிரெய்ன் தோல்வி நிச்சயமெனப் பார்க்கலாம்.

இப் போரில் ரஷ்யப் படை நகர்வுகள் தாமதமாகவே நடந்தவை என்பதும் உண்மை. அதற்கு உக்கிரமான யூக்கிரெய்ன் போராளிகளின் போராட்டமே காரணமெனக் கூறப்பட்டது. போதுமான ஆயுதங்கள் இல்லாத நிலையிலும், பயிற்றப்பட்ட போராளிகள் இல்லாத நிலையிலும் யூக்கிரெய்னால் ரஷ்ய ஆயுத வலுவை எதிர்கொள்ள முடியவில்லை. ஆனால் தெருவோரங்களில் ஆங்காங்கு சரிந்து எரிந்து கிடக்கும் டாங்கிகளையும், கனரக வாகனங்களையும் காட்டி அவை போராளிகளால் தகர்க்கப்பட்டவை எனக் கூறப்பட்டது. அது வெவ்வேறு போர்க்களங்களில் எடுக்கப்பட்ட படங்களிந் தொகுப்பு எனச் சில அமெரிக்க பத்தி எழுத்தாளர்கள் கூறியுள்ளனர்.

ரஷ்யாவின் இந் நகர்வுகளில் அது கோட்டைவிட்ட ஒன்றாகப் பார்க்கப்படுவது முன்னேறும் படையினருக்கு வழங்கப்படும் ஆதாரங்கள். உணவு முதல் வாகனங்களுக்கான எரிபொருட்கள் வரை படையினருக்கு உரிய நேரத்தில் வழங்கப்படாமையால் பலநூற்றுக்கணக்கான படையினர் குளிரில் தமது வாகனங்களை விட்டுவிட்டு யூக்கிரேனியக் கிராமங்களில் தஞ்சம் புகுந்ததாகவும் கூறப்பட்டது. இப்படிக் கைவிடப்பட்ட வாகனங்கள் எரியூட்டப்பட்டன எனவும் கூறப்படுகிறது. எப்படியாயினும் ரஷ்யாவின் தாமதமான முன்னேற்றம் யூக்கிரெய்ன் மக்களை அப்புறப்படுத்துவதற்குக் கால அவகாசம் கொடுப்பது எனவும் கூறப்பட்டது. புட்டின் ஏற்கெனவே அறிவித்ததுபோல் “யூக்கிரெய்ன் நிலம் ரஷ்யாவுக்குச் சொந்தமானது ஆனால் மக்களல்ல” என்பதை வைத்துப் பார்க்கும்போது மக்கள் இல்லாத எரித்துப் பொசுக்கப்பட்ட யூக்கிரெய்னையே அவர் விரும்புகிறார் போலத் தெரிகிறது. யூக்கிரெய்ன் ஒரு காலத்தில் ரஷ்யப் பேரரசின் பாரம்பரிய நிலமாக இருந்தது என்பதை அவர் தீர்க்கமாக நம்புகிறார். எனவே ரஷ்ய பூர்விகமல்லாத மக்கள் வெளியேறுவதை அவர் விரும்பி ஏற்கலாம். அவர்கள் வெளியேறியதும் அந்நாட்டை அவர் நிர்மூலமாக்கவும் சாத்தியமுண்டு.

புட்டினின் போர்த் தந்திரம்

இப் போரில் ரஷ்யாவின் படையெடுப்புக்கு எதிராக மேற்கினால் பல்லாயிரக் கணக்கான விமான எதிர்ப்பு பீரங்கிகளும், ஸ்டிங்கெர் ஏவுகணகளும் யூக்கிரெய்ன் போராளிகளுக்கு வழங்கப்பட்டிருந்தன. இதில் மேற்கு விட்ட பாரிய தவறு என்னவென்றால் புட்டினின் போர்த் தந்திரத்தை எடைபோட முடியாமல் போனதுதான். ஆப்கானிஸ்தானில் முஜாஹிடீன் முதல் தடவையாக ஸ்டிங்கெர் ஏவுகணைகளைப் பாவித்துப் பல சோவியத் போர்விமானங்களை வீழ்த்தியிருந்தார்கள். ஆப்கானிஸ்தானின் தரையமைப்பு தரைப்படைகளின் முன்னேற்றத்துக்கு உகந்த ஒன்றல்ல. சோவியத் தனது படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து மீளப்பெற இதுவே மூலகாரணம். சோவியத் குடியரசு உடைக்கப்பட்டபின்னர் நடைபெற்ற நான்கு போர்களிலும் – செச்னியா (2), ஜோர்ஜியா, ஆஜர்பஜான் – ரஷ்யா தனது தரைப்படையின் ஏவுகணைத் தாக்குதல்களைப் பாவித்து சுற்றிவளைப்பின் மூலமே வெற்றியைப் பெற்றிருந்தது. யூக்கிரெயினிலும் மேற்கு எல்லையைத் தவிர ஏறத்தாள மூன்று திசைகளிலும் ரஷ்யா பல மாதங்களாகப் படைகளைக் குவித்துவந்திருந்தது. விமானப் படைகளைத் தயார் நிலையில் வைத்திருந்தாலும் ஏவுகணைகளையே அது பெரும்பாலும் பாவித்தது. ஆனால் ரஷ்யாவின் விமானத் தாக்குதல்களை எதிர்பார்த்து, மேற்கு நாடுகள் யூக்கிரெய்ன் போராளிகளுக்கு ஆயிரக் கணக்கான விமான எதிர்ப்பு ஏவுகணைகளையே வழங்கியிருந்தன.

இப் போரில் ரஷ்யப்படைகள் மிகவும் மெதுவாகவே நகர்கின்றன. இதற்குக் காரணம் யூக்கிரெய்ன் போராளிகளின் கடும் எதிர்ப்பு எனக் கூறப்படுகிறது. ரஷ்யப் பீரங்கிகளின் ஷெல் தாக்குதல்கள் நடைபெற்றாலும் அவை பெரும்பாலும் குறிக்கப்பட்ட கட்டிடங்களையும், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலையங்களையும் நோக்கி எறியப்படுகின்றன. சில மக்கள் வாழிடங்களை நோக்கி எறியப்பட்டாலும் மக்கள் அழிவுகள் மிகவும் குறைவாகவே இருக்கின்றது என்பதைப் பலரும் ஒத்துக் கொள்கிறார்கள். இதற்குக் காரணம் பெரும்பாலான மக்கள் அகதிகளாக போலந்து, மோல்டோவா, ரோமானியா போன்ற எல்லை நாடுகளுக்குச் சென்றுவிட்டார்கள். இவர்கள் யூக்கிரெய்னை விட்டுப் போவதை ரஷ்யா வேண்டுமென்றெ அனுமதிக்கிறது. இதில் கணிசமான எண்ணிக்கையினர் ரஷ்ய மொழி பேசுபவர்களாகவும் இருக்கலாம். எனவே இப் போரில் நாட்டைக் கைப்பற்றுவது ரஷ்யாவின் நோக்கமாக இருப்பினும் மக்களைக் கொல்லக்கூடாது என்பதில் அது மிகவும் கவனமாக இருக்கிறது. எனவே மக்கள் வெளியேற்றம் அதிகரிக்க அதிகரிக்க அதன் ஏவுகணைத் தாக்குதல் அதிகரிக்கும் என்பதுடன் ரஷ்யாவின் படை நகர்வும் துரிதப்படுத்தப்படும் எனவே நான் கருதுகிறேன்.

அகதிகளின் வெளியேற்றத்தை ரஷ்யா துரிதப்படுத்துவதில் அதற்கு இன்னுமொரு நன்மையும் உண்டு. எல்லை நாடுகளில் புகுந்துள்ள அகதிகளால் அந் நாடுகள் மட்டுமல்லாது இப்போரை ஊக்குவிக்கும் இதர நாடுகளும் பாரிய அரசியல், பொருளாதாரப் பிரச்சினைக்குள் தள்ளப்படும். திடீரென்று தம் மடிகள் மீது தள்ளப்பட்ட இவ்வகதிகளை ஏற்றுப் பராமரிக்க வேண்டிய கடமை அவற்றுக்கு உண்டு. ஏற்கெனவே கோவிட் பெருந்தொற்றினால் சவால் தரும் பொருளாதாரச் சுமைகளைச் சுமந்துகொண்டிருக்கும் அந் நாடுகளின் மக்களிடையே இது உரசலைத் தோற்றுவிக்கும் எனவே எதிர்பார்க்கவேண்டும். கொஞ்சக் காலம் போக அகதிகளுக்கும் சுதேசிகளுக்குமிடையே பிரச்சினைகள் ஆரம்பிக்கும்.

ஏற்கெனவே வேறொரு கட்டுரையில் நான் குறிப்பிட்டிருந்தபடி, சோவியத் யூனியனின் உடைப்பின்போது ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையில் செய்யப்பட்ட எழுதாத உடன்படிக்கையின்படி ரஷ்யா வார்சோ ஒப்பந்தக் கூட்டரசைக் கலைத்ததுபோல் நேட்டோவையும் மேற்கு நாடுகள் கலைத்துவிடவேண்டும் என்பதும் அத்தோடு பேர்லின் சுவருக்கு அப்பால் நேட்டோ ஒருபோதும் நகரக்கூட்டது என்பதுமாகும். இந்த இரண்டு வாக்குறுதிகளையும் மேற்கு நாடுகளோ அல்லது நேட்டோவோ காப்பாற்றவில்லை. அது மட்டுமல்லாது ரஷ்ய எல்லைகளை அண்டிய பல சிறிய முன்னாள் சோவியத் குடியரசு நாடுகளில் நேட்டோ படைகளை நிலைகொள்ளச் செய்துமிருந்தன. இது தொடர்பான புட்டினின் பல கோரிக்கைகளும், எச்சரிக்கைகளும் உதாசீனம் செய்யப்பட்டன. ட்றம்ப் நிர்வாகம் புட்டினுடன் ஒருவகையில் சமரசத்தை ஏற்படுத்தி அவரது கோபத்தைத் தணித்திருந்தாலும், பைடன் நிர்வாகம் யூக்கிரெய்னை நேட்டோவுக்கு அழைத்ததன் மூலம் புட்டினை மீண்டும் சீண்டியது என்பது பலராலும் ஏற்றுக்கொள்ளப்படும் உண்மை. பைடனின் இந்த நடவடிக்கை உலகப் போருக்கு வித்திடலாம் எனப் பல மேற்கத்தய கல்வியாளர்களும் இராணுவ நிபுணர்களும் பைடன் நிர்வாகத்தை எச்சரித்துமிருந்தார்கள். யூக்கிரெய்ன் தலைவர் செலென்ஸ்கி மட்டுமல்ல பல ஐரோப்பிய நாடுகளும் ஆரம்பத்தில் பைடனின் நகர்வுகளுக்கு ஆதரவாக இல்லாவிட்டாலும் பின்னர் பைடனின் உடுக்கடிக்கு இவர்கள் எல்லோரும் உருக்கொண்டு ஆடவேண்டி ஏற்பட்டுவிட்டது. அப்போதுதான் புட்டினின் ‘அணுவாயுத எச்சரிக்கை’ உடுக்கடித்தவரை உலுப்பிவிட்டிருந்தது. மீண்டுமொரு தடவை யூக்கிரெய்ன் தலைவர் மட்டுமல்ல ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவால் ஏமாற்றப்பட்டன. ஈழப் போரிலும் இறுதி கட்டத்தில் அமெரிக்காவின் இப்படியான சில்மிசங்கள் நடைபெற்றன எனவும் ஒபாமா / பைடன் நிர்வாகம் பொறுத்த நேரத்தில் தமிழர்களைக் கைவிட்டிருந்தது எனவும் விடயம் தெரிந்தவர்கள் கூறுகின்றனர்.

போர் ஆரம்பித்துச் சில நாட்களில் “ரஷ்யாவின் அணுவாயுதங்களை ஏவு நிலைக்குத் தயார்ப்படுத்துங்கள்” எனப் புட்டின் ஆணையிட்டதும் அமெரிக்கா உட்பட அதனால் உருக்கொண்ட அனைத்து நாடுகளும் உறைந்து போய்விட்டன. அணுவாயுதத்தினால் அழியப்போவது யூக்கிரெய்ன் மட்டுமல்ல அயல் நாடுகளும் தான். ஏற்கெனவே புட்டின் மனநிலை பாதிப்புக்குள்ளாயிருக்கிறார் என்ற அமெரிக்கப் பிரச்சாரத்தை நம்பிய யூக்கிரெய்ன் மக்களும் தப்பியோட முற்பட்டார்கள். அதுவும் புட்டினுக்குச் சாதகமாகவே அமைந்தது.

இந்த நிலையில் சிதைக்கப்பட்ட கட்டிடங்களோடு யூக்கிரெய்னை ரஷ்யா இன்னும் இரண்டொரு வாரங்களில் கைப்பற்றுமெனவே நான் நம்புகிறேன். செலென்ஸ்கி எதிர்பார்த்ததுபோல் நேட்டோவோ அல்லது அமெரிக்காவோ துணைக்கு வரப் போவதில்லை. எனவே அவர் ரஷ்யாவோடு ஒரு சமரசத்துக்கு வருவதற்குத் தள்ளப்படுவார். நேட்டோ அங்கத்துவத்தை நான் கோரப் போவதில்லை என்ற உத்தரவாதத்தோடு அவர் ஆட்சியைத் தொடர அனுமதிக்கப்படலாம். அதற்கு அவர் மறுத்து ‘மக்கள் மனதில் இடம்பெற்ற ஹீரோவாகவே’ இருக்க விரும்பினால் அவர் வெளிநாடொன்றில் தஞ்சம் புகுந்துகொண்டு தனது வீரப் பிரதாபங்களை கொரில்லா முறையில் காட்ட முயற்சிக்கலாம். என்ன இருந்தாலும் யூக்கிரெய்னைக் கைப்பற்றும் முயற்சியிலிருந்து விக்கிரமாதித்த புட்டின் தனது மனதை மாற்றிக்கொள்ளப் போவதில்லை.

யூக்கிரெய்ன் வெற்றி புட்டினின் இன்னுமொரு தேவையையும் நிவர்த்திக்கும் சாத்தியமிருக்கிறது. உடைக்கப்பட்ட சோவியத் குடியரசின் மிகப்பெரிய நிலப்பரப்பை யூக்கிரெய்ன் கொண்டிருக்கிறது. ஏனைய நாடுகளெல்லாம் பரப்பளவில் சிறியவை. தமது பாதுகாப்புக்காக நேட்டோவையும், அமெரிக்கப் படைகளையும் அவை தமது நிலங்களில் நிலைகொள்ள வைத்துள்ளன. ஆனால் இவை அனைத்தும் மொழி, மத, கலாச்சார ரீதியில் ரஷ்யாவையே பின்பற்றும் நாடுகள். இந் நாடுகள் ஜனநாயகமயப்படுத்தப்பட்டிருந்தாலும் அமெரிக்கா எதிர்பார்க்கும் நவதாராளவாதக் கொள்கைகள் காலூன்றுவதற்கு அவை அனுமதிக்கப் போவதில்லை. நவதாராளவாதத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றான கலாச்சார உடைப்பினால் வரக்கூடிய தீங்குகளை மத ஸ்தாபனங்கள் உணர்ந்துவைத்துள்ளன. ஆனால் பூகோள கேந்திர முக்கியத்துவம் மிகுந்த யூக்கிரெய்னின் பொருளாதார வளம் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு மிகவும் அவசியம். ஆனால் அமெரிக்காவுக்கு அது அவசியமல்ல. யூக்கிரெயினில் செழிக்கும் நவதாராள பொருளாதார அரசியல் மூலம் ரஷ்யாவையும் உடைத்துவிடமுடியும் என அமெரிக்கா நம்பியதன் வெளிப்பாடே இப்போர். இதில் ரஷ்யா வெந்றால் ரஷ்யக் குடியரசின் மீளெழுச்சியைப் புட்டின் ஆரம்பித்து வைத்திருக்கிறார் எனவே கருதவேண்டும்.

உலக ஒழுங்கில் மாற்றம்

இப் போர் யூக்கிரெய்னில் மட்டுமல்லாது உலகம் முழுவதையும் புதியதொரு ஒழுங்கிற்குள் தள்ளிவிட்டது என்பது நிதர்சனம். இப் புதிய ஒழுங்கில் ஷங்காய் கோர்ப்பொறேஷன் ஓர்கனைசேஷன் (Shanghai Corporation Organization (SCO)) என்ற அமைப்பு ஐரோப்பிய-ஆசிய நாடுகளில் பலவற்றை இணைத்து வடக்குப் பூகோள ஆதிக்கத்திலிருந்து விடுபடும் ஒரு பொறிமுறையை உருவாக்கியுள்ளது. சீனா, ரஷ்யா, இந்தியா, ஈரான் மற்றும் பல மத்திய ஆசிய நாடுகள் தற்போது இதில் அங்கத்துவம் வகிக்கின்றன. உலகின் மூன்றிலொரு தரைப் பகுதியைத் தற்போது தன்னகத்தே கொண்டிருக்கும் இவ்வமைப்பு உலகுடனான பல ட்றில்லியன் ஏற்றுமதிக்கும் காரணமாக இருக்கிறது.

யூக்கிரெய்ன் போரைக் காரணம் காட்டி மேற்குலகு ரஷ்யாவின் மீது விதித்த பலவகையான பொருளாதாரத் தடை காரணமாக ரஷ்யா தனிமைப்படுத்தப்பட்டு சீரழியப்போகிறது என அமெரிக்கா தனது சகபாடிகளை நம்ப வைத்துள்ளது. அதற்குக் காரணம் தற்போதுள்ள ஐ.நா. , சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி போன்ற உலகப் பொது ஸ்தாபனங்கள் அமெரிக்காவின் கைப்பொம்மைகளாக இயங்குவதும் இவற்றினால் பல வறிய நாடுகளின் பொருளாதாரங்கள் நசுக்கப்படுவதும் ஒரு காரணம். ஒரு நாட்டிலுள்ள தங்கத்தின் இருப்பை அடிப்படையாகக் கொண்டு அளக்கப்பட்ட பெறுமதி இப்போது அந்நாடு எவ்வளவு அமெரிக்க டொலர்கள்களை வைத்திருக்கிறது (Forex reserve) என்பதைக் கொண்டு அளவிடப்படுகிறது.

உலக வர்த்தகம் அமெரிக்க டொலரில் தங்கியிருப்பதை எதிர்த்துக் குரலெழுப்பியதனால் அமெரிக்காவால் கொல்லப்பட்டவர்களில் லிபியாவின் கடாபியும், ஈராக்கின் ஹூசேனும் முக்கியமானவர்கள். அடுத்தது புட்டின். அணுவாயுதத்தை வைத்திராத இருவரும் மாண்டு போனார்கள். இருவரும் அழிக்கப்படுவதற்கு முன்னர் அமெரிக்கா, பிரித்தானியா போன்றவற்றால் கட்டியணைக்கப்பட்டவர்கள். பனங்காட்டு நரியான புட்டின் அந்தவிதத்தில் ஏமாறவில்லை. அவருக்குப் பதிலாக கோர்பச்சேவ், யெல்ஸ்டின் ஆகியோர் ஏமாற்றப்பட்டார்கள். அணுவாயுதம் புட்டினைக் காப்பார்றியிருக்கிறது.

மேற்கு நாடுகள் ரஷ்யா மீது கொண்டுவந்திருக்கும் பொருளாதாரத் தடை ரஷ்யாவின் பொருளாதாரத்தை அதிகம் பாதிக்காது என்கிறார்கள். அதற்குக் காரணம் தனது சேமிப்பின் 60% த்தை (reserve) ரஷ்யா ஏற்கெனவே ‘றென்மின்பி’ (Renminbi) என்ற சீன நாணயத்துக்கு மாற்றிவிட்டது. ரஷ்யாவின் பெரும்பாலான வர்த்தகம் சீனாவுடனும் இந்தியாவுடனும் நடைபெறுகிறது. அத்தோடு சீனாவினால் அங்கீகரிக்கப்பட்ட கிரிப்டோ நாணயத்தில் ரஷ்யா ஏற்கெனவே வர்த்தகம் செய்ய ஆரம்பித்துவிட்டது. தற்போது ஐரோப்பிய ஒன்றியதுடனான எரிபொருள், எண்ணை மற்றும் கனிம வர்த்தகத்துக்கான கொடுப்பனவுகளை ஒன்றியம் உடனடியாக நிறுத்த முடியாது. அமெரிக்காவின் எரிவாயு இறக்குமதியைப் பெறுவதற்கான துறைமுக வசதிகள் இன்னும் ஐரோப்பாவில் கட்டப்படவில்லை. அதற்கு சுமார் 6 வருடங்கள் பிடிக்கும் என்கிறார்கள். எனவே தற்போதைக்கு ஐரோப்பாவினால் ரஷ்யாவை விட்டு ஒதுங்கிவிட முடியாது. சீனாவுடனும் இதே நிலைதான். புதிய உலக ஒழுங்கில் இதுவெல்லாம் மாற்றப்படலாம். அது நிறைவேறினால் அமெரிக்காவின் உலக முக்கியத்துவத்தின் வீழ்ச்சி ஆரம்பித்துவிட்டிருக்கும்.

உலகின் தொழிற்சாலை என வர்ணிக்கப்படும் சீனாவும், இந்தியாவும் இணைவதன் மூலம் உருவாகும் பொருளாதார சந்தையுடன், ரஷ்யாவின் தொழில்நுட்ப வல்லமையும் இணையும்போது அதன் பலம் இலகுவாக அமெரிக்காவின் சந்தைகளையும், அவற்றின் நுகரும் பலத்தையும் தகர்த்துவிடுமெனக் கூறப்படுகிறது. இப்போரின் இன்னுமொரு பக்க விளைவு சவூதி அரேபியா, ஐக்கிய அரபு ராச்சியம் போன்ற நாடுகளும் யூக்கிரெய்ன் விடயத்தில் அமெரிக்கா பக்கம் சாராமல் நடுநிலையை எடுத்தமை. உலகில் ஏற்படவிருக்கும் இரு துருவ ஒழுங்கிற்கான முன்னறிவிப்பாகவே இதை நான் பார்க்கிறேன்.

இப் போரின் இன்னுமொரு பக்க விளைவாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஏற்படவிருக்கும் பொருளாதார நெருக்கடியையும்ம்பார்க்க வேண்டும். ரஷ்யாவின் எரிவாயு உற்பத்தியில் 40% மேற்கு ஐரோப்பாவிற்குப் போகிறது. எண்ணை உற்பத்தியில் 25% ஐரோப்பாவிற்குப் போகிறது. அதை இதுவரை ரஷ்யா நிற்பாட்டவில்லை. ஆனால் அதற்கான பணம் SWIFT எனப்படும் சர்வதேச பணமாற்றுப் பொறிமுறையினால் செலுத்தப்படுகிறது. இப் பொறிமுறையை முடக்கியதன் மூலம் ரஷ்யாவின் வருமானம் பாதிக்கப்படும் என அமெரிக்கா நினைக்கிறது. ஏற்கெனவே டொலரில் சேமிக்கப்பட்டிருந்த ஆப்கானிஸ்தான், வெனிசுவேலா ஆகிய நாடுகளின் வெளிநாட்டு வருமானங்களை அமெரிக்கா தடுத்துவைத்திருப்பதன் மூலம் அந்நாடுகளைப் பட்டினி போட்டுவைத்திருக்கிறது. இதைத் தெரிந்துவைத்திருக்கும் ரஷ்யா, தனது வருமானத்தை ‘கிரிப்டோ’ நாணயப் பரிமாற்றம் மூலம் SWIFT இன் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு சீனா போன்ற நாடுகளில் சேமித்து வைத்திருக்கிறது. சுமார் $700 பில்லியன் டாலர்களை அது சேமித்து வைத்திருக்கிறது. எனவே மேற்கு நாடுகளின் பொருளாதாரத் தடை ரஷ்யாவை இப்போதைக்கு எதையும் செய்யப் போவதில்லை.

செலென்ஸ்கியின் ஏமாற்றத்துடனான முடிவுடன் யூக்ரெய்ன் போர் விரைவில் முடிவுக்கு வரும். யூக்கிரெய்னை இந்த நிலைக்கு இட்டுச் சென்றதற்கு அவர் முக்கியமான பொறுப்பை எடுக்கவேண்டி வரும். கடாபி, ஹுசேன், அலண்டே, பினோச்சே போன்று புட்டின் ஒரு சர்வாதிகாரி (dictator) அல்ல. அவர் ஒரு எதேச்சாதிகாரி (autocrat). யூக்கிரெய்ன் விடயத்தில் அவர் செய்தது சரியானதல்ல. ஆனால் இப் படையெடுப்பைத் தவிர்த்திருக்கக்கூடிய சாத்தியங்கள் யூக்கிரெய்னுக்கு இருந்தது. துர்ப்பாக்கியமாக அரசியல் அனுபவமில்லாத மேடை நாயகரை அந்நாடு தலைவராகக் கொண்டிருந்தது அந்நாட்டின் தவறு. அமெரிக்காவின் உடுக்கடிக்கு உருக்கொண்டாடிய அவர் உடுக்கு நிற்பாட்டப்பட்டதும் ஆட்டத்தை நிற்பாட்டியே ஆகவேண்டும். உலகத்துக்கு இது புதிதல்ல. இதில் பாதிக்கப்பட்ட மக்கள் நாகரீகமடைந்த ‘நீலக்கண், பொன்முடிப்’ பெருமக்களாக இருந்த காரணத்தால் உயிரிழப்புகள் வெகுவாகக் குறைக்கப்பட்டிருப்பதற்கு ரஷ்யாவுக்கு அவர்கள் நன்றி சொல்ல வேண்டும்.