யூக்கிரெய்ன்: அமெரிக்காவின் கியூபாவாகிறதா?
இரண்டாவது B&B செய்யும் கூட்டு சதி
அலசல் – சிவதாசன்
இரண்டாம் வளைகுடாப் போரின்போது ஜனாதிபதி Bush ‘அ’ என்று சொன்னவுடன் அதை’ஆ’ வெனக்கூறி அட்டகாசப்படுத்தியவர் அப்போதைய பிரித்தானிய பிரதமர் ரோணி பிளையர். அதர்மம் என்று தெரிந்தும்கூட, ஈராக்கின் மீது அபாண்டமான பழிகளைச் சுமத்தி – பொருளாதாரத் தடையினால் 5 இலட்சம் குழந்தைகளின் மரணத்துக்குக் காரணமான அமெரிக்காவின்- பிரச்சாரப் பீரங்கியாகச் செயற்பட்டவர் பிளையர். இதற்காக அவரை புஷ்ஷின் கையில் பட்டியுடன் இழுத்துக்கொண்டு கடிப்பதற்குப் பாயும் ஒரு நாயாக கார்ட்டூன் மூலம் சித்தரிக்கப்பட்டவர். அப்போது இருந்த B&B (Bush and Blair) போலவே இப்போது இன்னுமொரு B&B (Biden and Boris) கூட்டு வந்திருக்கிறது. (credit goes to Dr.Kumar David for coining this acronym, B&B). புஷ்ஷின் நாய், ‘நானும் ரவுடி தான்’ கணக்கில் போட்ட சவுண்டோடு ஒப்பிடும்போது பைடனின் பட்டியில் இருக்கும் நாய் அவ்வளவு மோசமான ஒன்றில்லை எனினும் எசமானைக் கண்டதும் வாலை ஆட்ட வேண்டிய தேவை அதற்கு இருக்கிறது.
இதைச் சொன்னதற்காக என்னை ஒரு புட்டின் தாசனகவோ அல்லது பைடன் நீசனாகவோ கருதிக்கொள்ள வேண்டாம். காரணம் கீழே வருகிறது.
கடந்த யூன் மாதத்திலிருந்து ரஷ்யப் படைகள் யூக்கிரெயினின் எல்லைப் பிரதேசங்களான கிரீமியாவிலும் பெலறூசிலும் நிலைகொண்டிருக்கின்றன. ஆனாலும் யூக்கிரெய்ன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கான போதுமான அறிகுறிகளில்லை என பல ஐரோப்பிய, நேட்டோ நாடுகள் மட்டுமல்ல யூக்கிரெய்ன் மற்றும் ரஷ்யாவுமே திரும்பத் திரும்பச் சொல்கின்றன. அப்படியிருக்க பைடன் மட்டும் போர்ச்சங்கை இடைவிடாது ஊதி வருகிறார். யூக்கிரெயினிலிருந்து தமது நாட்டுக்காரர்களை வெளியேறும்படி பைடன் விடுத்த சங்கூதலை இப்போ பல அடிமைநாடுகளும் எதிரொலித்துக்கொண்டிருக்கின்றன.
யூக்கிரெய்ன் விடயத்தில் பைடனின் அரசியல் வேறு விதமாக இருக்கிறது. நடுநிலைமையோடு சந்தோசமாக இருக்கும் யூக்கிரெய்னை நேட்டோவுக்குள் கொண்டுவந்தால் அமெரிக்கா ரஷ்ய எல்லையில் போய் குந்திவிடலாம். ஆனால் கியூபாவில் ரஷ்யாவந்து குந்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அமெரிக்காவிற்கு இது ஒரு பெரிய பிரச்சினையாகப் படவில்லை.
ஈராக்கில் பேரழிவுக்கான ஆயுதங்கள் மறைத்துவைக்கப்பட்டுள்ளன என்ற பொய்க்கதையைக் கட்டிவிட்டதற்கு ஒப்பாக இப்போது யூக்கிரெய்ன் மீது ரஷ்யா படையெடுக்கத் தயாராகிவிட்டது என முழங்கும் பைடனை யார் உதவிக்கு அழைத்தது? யூக்கிரெய்ன் ஜனாதிபதியே ரஷ்யாவால் தனக்கு ஆபத்து எதுவுமில்லை என்கிற போது பைடனுக்கு அங்கே என்ன வேலை?
சிறு குறிப்பு
1200 வருடங்களுக்கு முன்னர் இருந்தே ரஷ்யாவின் ஒரு பிரதேசமாக இருந்துவரும் யூக்கிரெய்ன் சோவியத் யூனியன் உடைக்கப்படும்வரை அதன் கூட்டரசு நாடுகளில் ஒன்றாக இருந்துவந்தது. கலாச்சார, பண்பாட்டு ரீதியில் ரஷ்யாவுடன் ஒரு சேயுறவைக் கொண்டிருக்கவேண்டிய தகுதி அத்தனையும் அதற்கு உண்டு. சோவியத் குடியரசின் உடைவிற்குப் பின்னரும் இந்த உறவைப் பேணிவந்தமையால் ஐரோப்பாவுக்கோ அல்லது ரஷ்யாவுக்கோ எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாமல் ரஷ்யாவுக்கும் ஐரோப்பாவிற்கும் ஒரு இணைபாலமாகவும் பரஸ்பர நன்மைகளை இருதரப்பிற்கும் வழங்கும் ஒரு நடுநிலை நாடாகவும் இருந்துவந்தது.
சோவியத் யூனியனின் உடைவிற்குப் பின்னர் ரஷ்யாவின் எல்லை நாடுகளான ரூமேனியா, போலந்து நாடுகளில் அமெரிக்கா (நேட்டோ) தனது படைவீடுகளை அமைத்திருந்தது. யூக்கிரெயின் நேட்டோ அங்கத்தவர் ஆகவில்லை என்ற வகையில் அதைத் தனது வலையில் வீழ்த்த அமெரிக்கா எடுத்துவந்த பல முயற்சிகள் வீணாகிப் போயிருந்தன. இதற்குக் காரணம் யூக்கிரெய்ன் மக்களில் கணிசமானவர்கள் தமது பொருளாதார மேம்பாடுக்கு முன்னர் கலாச்சார விழுமியங்களைத் தக்கவைப்பதிலேயே அதிக கவனம் செலுத்திவருகின்றனர். இதனால் அவர்களது அரசியல் தலைமைகளின் தேர்வுகளும் ரஷ்ய சார்பாகவே இருந்துவந்தன. இப்படியாக இருந்த ஜனாதிபதி விக்டர் யனுகோவிச் 2014 இல் அமெரிக்கப் பின்னணியுடனான புரட்சியொன்றின் மூலம் பதவியிறக்கப்பட்டார். இக் காலகட்டத்தில்- ட்றம்பின் அமெரிக்கா புளூ ஃபிலிம் பார்த்துக்கொண்டிருந்த வேளை – ரஷ்யா கிரிமியாவைத் தன்வசம் எடுத்துக்கொண்டது. முன்னொரு காலத்தில் ரஷ்யாவின் அங்கமாக இருந்த கிரிமியாவை, கச்சதீவை இலங்கைக்கு தானம் கொடுத்ததுபோல, சோவியத் யூனியனின் அதிபர் குருஷ்சேவ் மதுவெறியில் யூக்கிரெயினுக்கு எழுதிக்கொடுத்துவிட்டார் எனவும் அதையே புட்டின் திருப்பி எடுத்துக்கொண்டார் எனவும் ரஷ்யர்கள் அப்போது சந்தோஷப்பட்டார்கள் எனக் கூறப்பட்டது.
இதன் பிறகு அமெரிக்கா விழித்துக்கொண்டாலும் ஜனாதிபதி ட்றம்ப், Make America Great Again என்ற சுலோகத்தின்கீழ் “அமெரிக்கா உலகின் பொலிஸ்காரனாக இருக்க முடியாது, அவரவர் அவரவர் நலன்களைப் பார்த்துக்கொள்ளட்டும்; எமது படையினர் இன்னொரு நாட்டுக்காக மரணமடையத் தேவையில்லை” என்ற அவரது ஆலோசகர்களின் நிலைப்பாட்டை நடைமுறைப்படுத்திக்கொண்டு வந்தார். இதனால் அவர் நேட்டோவை மாற்றாந்தாய்ப் பிள்ளையாக நடத்ததொடங்கியதும் அதற்கு அமெரிக்கா வழங்கிவந்த ஆதரவைக் குறைத்துக்கொண்டதும் செய்திகள். எனவே யூக்கிரெய்ன் நேட்டோவில் இணைவது பற்றி அவர் அதிகம் அக்கறை காட்டவில்லை. இது புட்டினின் நட்போடு நிகழ்ந்த ஒன்றா அல்லது ஆலோசகர்களின் திட்டப்படி நடந்த ஒன்றா என்பது இன்னும் விவாதிக்கபடும் விடயம்.
ஆனால் பைடனுக்கு யூக்கிரெய்ன் விடயத்தில் வேறுபல தொடர்புகளும் உண்டு. ஆனாலும் தற்போது அவருக்கு அமெரிக்க மக்கள் மத்தியில் ஆதரவு பெருமளவு சரிந்துவிட்டதால் அவர் “நானும் சண்டியன் தான்” என்ற கணக்கில் கையைக் காலை விசிறிக்காட்டவேண்டிய வேளை வந்திருக்கிறது. யூக்கிரெய்ன் அவருக்குக் கிடைத்த அரிய சந்தர்ப்பம்.
இந்த கையைக் காலை விசிறும் ‘நானும் ரவுடி’ வடிவேலு கலாச்சாரமும் இன்னுமொரு அமெரிக்க இறக்குமதிதான். 1962 இல் ஜனாதிபதி ஜோன் எஃப் கென்னடியும் இப்படி ஒரு தடவை கையைக் காலை விசிறியிருந்தார். ஆனால் அதற்கு அவர் முழுமுதற் காரணியல்ல என்பதும் அவர் முழு மனதோடு அவ் விடயத்தில் பங்குபற்றியிருக்கவுமில்லை என்பதும் வரலாறு. நடந்தது இதுதான்.
அமெரிக்க / கியூபா அணுவாயுத ஏவுகணைப் பிரச்சினை (Cuban Missile Crisis-1962)
கியூபாவின் அதிபர் ஃபிடெல் காஸ்ட்றோவை அகற்றுவதற்கு, ஏப்ரல் 1961 இல், கியூபாவின் புலம்பெயர்ந்தவர்களைப் பாவித்து அமெரிக்க சீ.ஐ.ஏ. மேற்கொண்ட சிறு படையெடுப்பு (வெறும் 1400 பேர்) படு தோல்வியைச் சந்தித்தது மட்டுமல்லாது சர்வ வல்லமை பொருந்திய மேற்குலகக் கடவுளான கென்னடியின் முகத்தில் கரியையும் பூசியிருந்தது. Bay of Pigs படையெடுப்பு எனக் கூறப்படும் இத் திட்டத்துக்கு கென்னடி இணங்கவில்லையாயினும் இளம் புரட்சியாளர் ஃபிடல் கஸ்ட்றோவின் புரட்சித் தீ எல்லை கடந்து பரவாமல் தடுத்து நிறுத்துவதற்காக அவரைக் களையெடுக்க ஜனாதிபதி ஐசன்ஹோவர் போட்ட திட்டத்தை சீ.ஐ.ஏ. நடைமுறைப்படுத்தியிருந்தது. திட்டம் தோல்வியடைந்ததும் கென்னடியின் சரிவடைந்த செல்வாக்கை நிமித்திக் கொள்வதற்கு அவர் எடுத்த நடவடிக்கையின் விளைவுதான் இன்றுவரை அமெரிக்காவின் கோடிக்குள் கடந்த அறுபது வருடங்களாகக் குழிவிழுந்த வயிறானாலும் புடைத்த நெஞ்சுடன் நிற்கும் கியூபா.
1961 இல் அமெரிக்காவை வெற்றிகரமாகப் பின்வாங்கச் செய்த பெருமிதத்தில் தனது பாதுகாப்பை உறுதிசெய்துகொள்ள ஃபிடல் காஸ்ட்றோ சோவியத் யூனியனின் உதவியை நாடியிருந்தார். அதன் பெறுபேறாக, கியூபாவில் சோவியத் குடியரசு பல அணுவாயுத ஏவுகணைகளை நிறுவியது. அமெரிக்காவைக் குறிவைக்கும் இவ்வேவுகணைகளை அக்டோபர் 1962 இல் அமெரிக்க U-2 வேவு விமானம் அடையாளம் கண்டுவிட்டது. இதை நிறுத்துவதற்காக கியூபாவைச் சுற்றி அமெரிக்க கடற்படைச் சுற்றிவளைப்புக்கு கென்னடி உத்தரவிட்டார். இதனால் சோவியத் இரானுவத் தளபாடங்கள் கியூபா வருவது தடுக்கப்பட்டது. அது மாத்திரமல்லாது, நிறுவப்பட்ட அத்தனை ஏவுகணைகளையும் அகற்றுவதோடு அத் தளங்களை எல்லாம் அழித்துவிடவேண்டுமென கென்னடி கட்டளை பிறப்பித்தார். அப்போது சோவியத் அதிபராகவிருந்த நிக்கிற்றா குருஸ்ஷேவ் ‘அடிபணிந்து போனதாக’ அறிவிக்கப்பட்டது. தொலைக்காட்சிகளில் ஒளித்த கென்னடியின் இந்த சாகசம் சரிந்திருந்த அவரது செல்வாக்கை நிமிர்த்தி விட்டது.
உண்மையில் மூன்றாவது உலகப் போரொன்றை உருவாக்கும் எண்ணம் கென்னடிக்கு இல்லை எனவும் இது குறித்து அவர் குருஸ்ஷேவுடன் – பைடன் புட்டினுடன் (ஆரம்பத்தில்) பேச மறுத்ததைப் போலல்லாது – மனமார்ந்த உரையாடலொன்றை மேற்கொண்டாரெனவும் இதன் விளைவாக கியூபா மீது அமெரிக்கா ஒருபோதும் படையெடுப்பை நிகழ்த்தாது என்ற உத்தரவாதத்தை கென்னடி வழங்கியதுமல்லாது துருக்கியில் ரஷ்யா நோக்கி நிறுவப்பட்டிருந்த அமெரிக்க ஏவுகணைகளை அகற்றவும் அவர் இணங்கினார் எனவும் கூறப்படுகிறது. ஒரு உலகப் போரைத் தவிர்தத இரு தலைவர்களுக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படவில்லை என்பது வேறு விடயம்.
திரும்பவும் யூக்கிரெய்னுக்கு..
யூக்கிரெய்னைப் பொறுத்த வரையில், அது அமெரிக்காவின் கியூபா என்பது உங்களுக்கு விளங்கியிருக்கும். ரஷ்யாவின் எல்லையிலுள்ள, கேந்திர முக்கியத்துவம் மிக்க ஒரு நாட்டில் அமெரிக்க இராணுவம் நிலைகொள்வதை ஒரு அணுவாயுத வல்லரசு பார்த்துக்கொண்டு இருக்கவேண்டுமென்பதில்லை என்ற சிற்றறிவுகூட பைடனுக்கு இல்லாமல் போனது பரிதாபம். நேட்டோ அங்கத்துவம் கிடைத்ததும் யூக்கிரெயினில் அமெரிக்கப் படைகள் நிலைகொள்ள ஆரம்பிக்கும். அங்கு ஏவுகணைகள் நிறுவப்பட்டால அது ரஷ்யாவுக்கு ஆபத்தாகவே முடியும். சோவியத் யூனியனின் உடைவிலிருந்து இன்றுவரை யூக்கிரெய்ன் தன்னை ஒரு மேற்கு ஐரோப்பிய நாடெனவே எண்ணிக்கொண்டிருக்கிறது. ஆனால் அதன் பொருளாதார நிலை இன்னமும் ஐரோப்பிய தரத்தை எட்டவில்லை. நேட்டோ அங்கத்துவத்தை துருப்புச் சீட்டாக வைத்து அமெரிக்காவும், மேற்கு ஐரோப்பாவும் யூக்கிரெயினுக்கு பிஸ்கெட்டைக் காட்டிவந்தனவேயல்லாது கொடுக்கவில்லை. ஆனாலும் புட்டினின் கழுகுப் பார்வையில் அது நடைபெறமுடியாதிருந்தது. கிரிமியாவைக் கைப்பற்றியது மட்டுமல்லாது மேலும் இரண்டு எல்லை மாகாணங்களையும் தனக்கு சார்பாக புட்டின் வைத்திருக்கிறார். இதனால் யூக்கிரெய்ன் இருதலைக் கொள்ளி எறும்பின் நிலையில் இருக்கிறது. “நேட்டோவில் இணைவது எங்களுக்கு ஒன்றும் முக்கியமான விடயமல்ல எங்களைப் பேசாமல் விடுங்கள்” எனப் பல தலைவர்களும் பைடனுடன் மன்றாடுகிறார்கள். “இல்லை உங்களுக்கு நிறையப் பிரச்சினை இருக்கிறது. நாங்கள் உங்களுக்குப் பாதுகாப்புத் தரப் புறப்பட்டு விட்டோம்” என பைடன் கை கால்களை விசிற ஆரம்பித்து விட்டார். தனது 8,000 படைகளை மேற்கு ஐரோப்பாவுக்கு நகர்த்தியதுடன், ஜேர்மனியிலிருந்த 2,000 படைகளை ரூமேனியாவுக்கு நகர்த்துகிறார். யூக்கிரெய்னிலிருந்து வெளிநாட்டுக்காரர்களை வெளியேறுமாறு உத்தரவு பிறப்பித்திருக்கிறார். போருக்கான சங்கு ஊதப்பட்டு விட்டது.
போர் மூண்டால்..
யூக்கிரெய்னைக் கைப்பற்றுவதற்கு ரஷ்யாவுக்கு அதிக நேரம் பிடிக்காது. பெலாருஸ், கிரீமியா, ரஷ்யா என்று மூன்று திசைகளிலிருந்து தாக்குதலைத் தொடுக்க முடியும். அது மட்டுமல்லாது யூக்கிரெயினுக்குள்ளேயே ரஷ்ய சார்பு பிரிவினைவாதிகள் மூலம் ரஷ்யா ஏற்கெனவே ஊடுருவியிருக்கிறது. ஆனால் அது இன்னும் படையெடுக்கவில்லை. இந்தா, அந்தா என்று பைடன் ஆடும் கூத்து புட்டினை உசுப்பேத்தவில்லை. போரொன்றைத் தன்னிச்சையாக ஆரம்பிப்பதற்கு அமெரிக்காவுக்கு போதுமான காரணங்கள் இல்லை. இந் நிலையில் அதுவே அழைக்காமல் யூக்கிரெயினுள் நுழைய அவரால் இயலாது. எனவே அவர் ரஷ்ய படையெடுப்பொன்றை விரும்புகிறார். புட்டின் ஒரு பனங்காட்டு நரி. பைடனின் பருப்பு அவரிடம் இன்னும் அவியவில்லை.
புட்டின் எதிர்பார்ப்பது, யூக்கிரெயினைப் பேசாமல் விட்டுவிடுங்கள். அது ஐரோப்பிய நாடாகவே இருக்கட்டும். ஆனால் நேட்டோ அங்கத்துவத்தை மட்டும் திணிக்காதீர்கள். யூக்கிரெயினும் அதையேதான் விரும்புகிறது. ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளும் அதையேதான் கேட்கிறார்கள். யூக்கிரெய்னின் பெரும்பாலான விவசாய, இரும்பு உற்பத்திகள் ஐரோப்பாவிற்கே செல்கின்றன. பெரும்பாலான படித்த இளையோர் ஐரோப்பாவிற்குப் படையெடுக்கின்றனர். ரஷ்யாவின் திரவ வாயு (Liquid Natural Gas (LNG)) ஏற்றுமதியின் 40% யூக்கிரெயினூடாகவே ஐரோப்பா செல்கிறது. இதன் பெரும் பாவனையாளர்கள் ஜேர்மனி, பிரான்ஸ் போன்றவை. எனவே போர் ஒன்று வந்தால் இவ்விரு நாடுகளும் அதிகம் பாதிப்புக்குள்ளாகும். இரு நாட்டின் தலைவர்களும் புட்டினைச் சந்தித்து பேசியிருக்கிறார்கள். போர் ஆரம்பிக்கப்பட்டால் இவ்விரு நாடுகளும் அதில் பங்குபற்றாமல் விட்டாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை.
போர் என்று ஒன்று வந்தால் மேற்கு ஐரோப்பிய நாடுகளே அதிகம் பாதிக்கப்படும். பெரும்பாலான ஐரோப்பியர்கள் உறைந்தே மரணித்துவிடுவார்கள். அவர்களது வீடுகளை ரஷ்ய எரிவாயுவே சூடாக்கி வருகிறது. இதுபற்றி அமெரிக்காவுக்குக் கவலையில்லை. சோழியன் குடும்பி சும்மா ஆடாது என்பதைப் போல் அமெரிக்கா தனது தேவைக்கும் அதிகமாக எரிவாயுவை (LNG) உற்பத்தி செய்கிறது. ஒபாமா ஆரம்பித்துவைத்த, நிலத்தடியில் சிறைப்பட்டிருக்கும் இயற்கை வாயுவை வெளியில் எடுத்துச் சேகரிக்கும் (fracking) இந்த முறையினால் அமெரிக்கா இப்போது எரிவாயுத் தேவையில் தன்னிறைவு பெற்றுவிட்டது. மீதமான வாயுவை ஐரோப்பாவின் தலையிலும், இலங்கையின் தலையிலும் கட்டி அவிக்க பைடன் நிர்வாகம் கங்கணம் கட்டிவிட்டது. ஐரோப்பாவைப் பொறுத்தவரையில் ரஷ்ய எரிவாயுவின் விலை அமெரிக்க வாயுவைவிட மிகவும் மலிவானது. ஆனாலும் பைடனுக்கு அதுவல்ல பிரச்சினை.
இது மட்டுமல்ல சூழல் பாதுகாப்பு பற்றி கண்ணீர் விடும் பைடன் நிர்வாகம், fracking என்ற நடைமுறையின்போது சூழலுக்கு ஏற்படும் தாக்கங்களைக் கண்டுகொள்வதில்லை. கெட்டவர்களை விட நல்லவர்கள் என்று நடிப்பவர்களால் தான் அதிகம் தீமைகள் விளைகின்றன என்ற கூற்றுக்கு ஒபாமா, பைடன் போன்றவர்கள் சிறந்த உதாரணம். அதுபற்றி இன்னுமொரு தருணத்தில் பார்க்கலாம்.
இப் போரைத் தவிர்க்க பிரான்ஸ் அதிபர் மக்றோன் ஒரு ஆலோசனை கூறியுள்ளதாகத் தெரிகிறது. அதாவது நேட்டோவில் புதிய அங்கத்தவர் ஒருவரை உள்வாங்குவதை 5 அல்லது 10 வருடங்களுக்கு மேற்கொள்ள முடியாது என்ற தடையொன்றைப் பிரேரிப்பதுவே அது. அதற்கான சட்டப் பின்னணி இருக்குமானால் அதை செய்ய மக்றோன் தயங்கமாட்டார் எனக் கூறப்படுகிறது. இத் தடை சாத்தியமாகும் பட்சத்தில் பைடனின் கூத்து அர்த்தமற்றதாகிவிடும். புட்டின் தனது வெருட்டலை நிறுத்தித் தனது படைகளைப் பின்னே நகர்த்தலாம். யூக்கிரெய்ன் தப்பிப் பிழைத்து ரஷ்யாவின் கோடிக்குள் கியூபாவாக நீணகாலம் வாழும். 1962 இல் கென்னடியின் கியூப கடற்படை முற்றுகை, 60 வருடங்களுக்குப் பிறகு 2022 இல் புட்டினால் யூக்கிரெய்னில் அரங்கேற்றப்படுகிறது.
60 வருடங்களுக்கு ஒரு தடவை ஒருவரது பிறந்த நேரத்தில் இருக்கும் கிரக நிலைகள் மீண்டும் சம்பவிக்கிறது என்று நம்ம சோதிடர்கள் கூறுவார்கள். பாவம் பைடன்.