OpinionWorldமாயமான்

யூக்கிரெய்னில் அமெரிக்க நுண்ணுயிராயுத ஆய்வுகூடங்கள்?

அமெரிக்க நிதியுடன் யூக்கிரெய்னில் மட்டும் 25 உயிரியல் ஆய்வுகூடங்கள் இயங்குகின்றன – செனட்டர் துளசி கப்பர்ட்

மாயமான்

அமெரிக்காவின் நிதி ஆதரவுடன் யூக்கிரெயினில் மனிதக் கொல்லி நுண்ணுயிர்கள் மீது ஆய்வுகளை மேற்கொண்டுவரும் ஆய்வுகூடங்கள் பற்றி சமீபத்தில் Fox News நிகழ்ச்சித் தரவாளர் Tuck Carlson தெரிவித்த விடயங்கள் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. ஃபொக்ஸ் நியூஸ் பெரும்பாலும் குடியரசுக் கட்சியின், அதிலும் ட்றம்ப் தரப்பு ஊடகமாகவும் இருந்து வருவதால் இச் செய்தியை ரஷ்யாவின் பிரச்சாரங்களில் ஒன்றாக ரஷ்ய எதிர்ப்பாளர்கள் ஊதி வருகின்றனர். இக் காரணங்களுக்காக கார்ள்சனின் இச் செய்திக்கு ரஷ்ய ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கவேண்டுமென கிரெம்ளின் பணித்துள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.

செனட்டர் துளசி கப்பார்ட்

“யூக்கிரெய்னின் இரகசிய உயிரியல் ஆய்வுகூடங்களில் அவர்கள்என்னதான் செய்கிறார்கள்?” என்ற கேள்வியுடன் ரக் கார்ள்சன, சமீபத்தில், ஃபொக்ஸ் தொலைக்காட்சியில் தனது நிகழ்ச்சியை ஆரம்பித்தார். ” ஐரோப்பாவிலேயே மிகவும் ஏழ்மையான நாடு யூக்கிரெய்ன். உயிரியல் ஆய்வுகளை நிகழ்த்தவேண்டிய தேவை அதற்கு இருக்கவேண்டியதில்லை. லூக்கேமியாவுக்கு மருந்துகளைத் தயாரிக்கும் ஆராய்ச்சிகளை இங்கு மருந்தக நிறுவனங்கள் நடத்துகின்றன என நாம் நம்பத் தேவையில்லை” எனக்கூறிய அவர் இவ்வாய்வு கூடங்கள் அமெரிக்காவுக்குரியன என்ற தோரணையில் செய்தியை இட்டுச் சென்றிருந்தார். இச் செய்தியை மறுத்த பைடன் நிர்வாகம் தற்போது தனது மறுப்புப் பிரச்சார இயந்திரங்களை முடுக்கி விட்டிருக்கிறது.

பேரழிவை ஏற்படுத்தக்கூடிய உயிரியல் ஆய்வுகளை அமெரிக்க நிறுவனங்கள் தமது மண்ணில் செய்வதில்லை. ஊழல் மிக்க அரசியல்வாதிகளால் ஆளப்படும் வறிய நாடுகளில் இவற்றை நடத்துவது ‘நாகரிகமடைந்த’ நாடுகளின் வழக்கம். 2019 இல் சீனாவிலிருந்து தப்பியோடி உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான ஏழை மக்களைக் கொன்ற கொறோணாவைரஸின் பிறப்பிடமான வூஹான் ஆய்வுகூடத்திற்கும் அமெரிக்க நிதியுதவி கிடைத்திருந்தது என அப்போது பேசப்பட்டது.

The National Academies of Sciences, Engineering, Medicine என்னும் அமைப்பின் வெளியீடான The National Academies Press பிரசுரத்தின் E7 பதிப்பின்படி யூக்கிரெய்னில் மட்டும் 4,000 த்துக்கும் மேலான பதிவு செய்யப்பட்ட ஆயுவுகூடங்கள் இருக்கின்றன எனவும் ஆனால் அவற்றில் இரண்டு மட்டுமே முதலாம் வகை உயிர்கொல்லி நுண்கிருமிகளை (first pathogenic group) ஆராய்வதற்கான உத்தரவைப் பெற்றவை இரணடாம் வகை நுண்கிருமிகளை ஆராய்வதற்கான உத்தரவு 402 ஆய்வுகூடங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன எனவும் மிகுதியானவை மூன்றாம், நான்காம் வகை நுண்ணுயிர் ஆராய்ச்சிகளைச் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன எனக் கூறுகிறது. இவ்வமைப்பு அரசாங்கங்களின் பரபரப்பு பிரச்சார ஊடகங்களுக்கு செய்தி வழங்காதது என்பதனால் உணர்ச்சிவசப்படுபவர்களை இது எட்டாமல் இருக்கலாம். ஆனால் இந்த 4,000 ஆய்வுகூடங்களில் எத்தனை அமெரிக்க நிதியில் இயங்குகின்றன என்பது தெரியாது. ஆனால் இக் கட்டுரையின் தலையங்கம் குறிப்பிடுவது போல அமெரிக்க ஜனநாயகக் கட்சி செனட்டர் துளசி கப்பார்ட்டிடம் இது தொடர்பான தகவல்கள் இருக்கலாம்.

கொரோணாவைரஸ் தொடர்பாக ட்றம்ப் நிர்வாகம் சீனாவைக் குற்றஞ்சாட்டும்போது சீனாவும் ரஷ்யாவும் சேர்ந்து யூக்கிரெய்னில் அமெரிக்கா நடத்திவரும் உயிர்கொல்லி நுண்ணுயிர் ஆய்வுகள் பற்றி 2020 இல் அமெரிக்கா மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தன. ஆனால் அந் நாடுகளின் கருத்துக்களும் செய்திகளும் நம்பகத்தன்மையற்றவை என உலகப் பெருமக்களால் முடிவுகட்டப்பட்டுவிட்டவை ஆதலால் சாதாரண மக்களின் புலன்களுக்கு அவ்வதிர்ஷ்டம் கிட்டியிருக்கவில்லை. இப்போது அதிசக்திவாய்ந்த ஊடகமான ஃபொக்ஸ் இச் செய்தியைச் சந்தியில் நின்று ஊதியிருக்கிறது. இதை ஒரு ட்றம்ப் ஊடகமாகப் புறந்தள்ள உலகப்பெருமக்கள் பெருமுயற்சி எடுக்கலாம். ஆனாலும் குதிரைகள் லயத்தைவிட்டுப் புறப்பட்டுவிட்டன.

இப்படிச் சொல்வதால் ரஷ்யா யூக்கிரெய்னைத் தாக்குவதோ, ஆய்வுகூடங்கள் தாக்கப்பட்டு இப்படியான உயிர்கொல்லிகளைத் தப்பவிட்டு உலகை அழிக்கவேண்டுமென்றுமென்றோ நான் விரும்புவதாகவோ நினைக்க வேண்டாம். ரஷ்யாவின் குண்டுத் தாக்குதல்களின் தாமதப்படுத்தப்பட்ட முன்னேற்றத்துக்கு துணிகரம் மிக்க யூக்கிரேனிய துருப்புக்கள் மற்றும் வெளிநாட்டுப் போராளிகளின் சாகசங்களே காரணமென நம்மில் பலர் நம்புகிறார்கள். இப் போரின் ஆரம்பத்தில் ரஷ்யா முதலில் கைப்பற்றிய செணோபில் அணு மின்பிறப்பாக்கி நிலையம் அதைத் தொடர்ந்து கார்கீவில் கைப்பற்றிய உலகைல் அதிபெரிய அணுமின்பிறப்பாக்கி நிலையம் ஆகியன மிகவும் சாதுரியமாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதற்கு மக்கள் பாதுகாப்பு காரணமில்லை எனக் கூறமுடியாது. அதே போல யூக்கிரெய்னில் எங்கெங்கு உயிர்கொல்லி ஆய்வுகூடங்கள் இருக்கின்றனவென ரஷ்யாவுக்குத் தெரியாமலிருக்குமெனவும் கூற முடியாது. எனவே தான் உலகில் அதி பெரிய விமானப்படையை வைத்திருக்கும் ரஷ்யா, அமெரிக்கா ஈராக்கில் ‘இல்லாத பேரழிவு ஆயுதங்களைக்’ குண்டுகளால் தோண்டியெடுக்க முயன்று மில்லியன் கணக்கான மக்களைக் கொன்றதுபோல யூக்கிரெய்னிலும் செய்ய முயலவில்லை.

Fox News – Tucker Carlson

போர் என்றதும், அது நாகரிகமடைந்தவர்களினால் மேற்கொள்ளப்படும்போது செய்தித் தொழிற்சாலைகளின் கதவுகளுக்கு வெளியே முன்னாள் இராணுவ நட்சத்திர ஜெனெரல்கள் நிபுணத்துவ ஆலோசனைகளைத் தருவதற்குத் தவம் கிடப்பார்கள். பொதுவாக எல்லோருமே, நாகரீகமடைந்த மக்கள் கேட்கப் பார்க்க விரும்பும் செய்திகளையே, ரசிக்க விரும்புவார்கள். இங்கு தலைப்பில் குறிப்பிட்டதுபோல அமெரிக்க நுன்ணுயிர் ஆயுத ஆராய்ச்சிகள் பற்றி, அதுவும் பைடன் கட்சியைச் சேர்ந்த செனட்டர் துளசி கப்பார்ட்டின் சில நாட்களுக்கு முன்னர் வந்த செய்தி, நாகரீக மக்களின் ஊடகங்களினால் பெரிதும் கண்டுகொள்ளப்படவில்லை. செனட்டர் கப்பார்ட் தனது செய்தியை சுய காணொளி மூலம் சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்தார். ஆனால் அதே செய்தியை ஒரு ஃபொக்ஸ் ஊடகக்காரர் பரபரப்பாகப் பிரகாச ஒளிமண்டபத்தில் இருந்து வெளியிட்டதை ரஷ்யா கூட மறு ஒளிபரப்புச் செய்துவருகிறது. ஆனால் செனட்டர் கப்பார்ட்டின் செய்தி அமுக்கப்பட்டுவிட்டது. (ஒரு தகவலுக்கு: செனட்டர் துளசி கப்பார்ட் ஹவாயைப் பிரதிநிதிப்படுத்தும் செனட்டர். சமோவன் பெற்றோருக்குப் பிறந்து அவரது தாயாரைப் போலவே கத்தோலிக்க மதத்திலிருந்து இந்து மதத்துக்கு மாறியவர்). அவரது பூர்வீகத்துக்கும் இச்செய்தி அமுக்கப்பட்டதற்கும் தொடர்பை நீங்கள் ஏற்படுத்தினால் அதற்கு நான் பொறுப்பல்ல.

ரஷ்யாவின் குற்றச்சாட்டுகளை நியாயப்படுத்துவதுபோல அவரது காணொளிச் செய்தி இருக்கிறது. தமது எல்லைக்கு மிக அருகிலிருக்கும் யூக்கிரெய்னில் இப்படியான உயிர்கொல்லி ஆராய்ச்சிகளை அமெரிக்கா மேற்கொள்வதற்கு யூக்கிரெய்ன் இடம் கொடுக்கிறது என்பதுவும் ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு ஒரு காரணமென ரஷ்யாவும் கூறிவருகிறது. அதே வேளை இப்படியான ஆய்வுகூடங்கள் தற்செயலாகக் குண்டுத்தாக்குதல்களுக்கு உள்ளாகினால் உயிர்கொல்லிக் கிருமிகள் தப்பாமல் இருப்பதற்காக அக் கிருமிகளை அழித்துவிடும்படி யூக்கிரெய்னுக்கு சிலநாட்களின் முன்னர் உலக சுகாதார நிறுவனமும் எச்சரித்திருந்தது. ஆனாலும் பைடன் நிர்வாகம் இக்குற்றச்சாட்டுகளைத் தொடர்ச்சியாக மறுத்து வருகிறது.

அது மட்டுமல்லாது இப் பொய்க் குற்றச்சாட்டுகளைக் காரணம் காட்டி ரஷ்யா தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்துகிறது என வெள்ளை மாளிகை தொடர்ச்சியாக ஊதி வருகிறது. அதே வேளை உலகின் ‘மர்மக் கதைகளைக் கிண்டியெடுத்துப் புடுங்கிப் போடும் மன்னனான’ அலெக்ஸ் ஜோன்ஸ் ‘இன்ஃபோ வார்ஸ்’ (Info Wars) என்ற தனது சமூகவலைத்தள வண்டியில் பைடன் நிர்வாகத்தால் மூடிவைக்கப்பட்ட பல சரக்குகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டிருக்கிறார். சீனாவும் ரஷ்யாவும் இவ்வண்டியைத் தற்போது தீவிரமாகப் பின்தொடர்ந்து வருகின்றன. வூஹான் வைரஸ் என ட்றம்ப் அடித்து அடித்துப் பிரசாரம் செய்த கொரோணாவைரஸ் வூஹான் ஆய்வுகூடமொன்றிலிருந்து தப்பியது என்று பிரித்தானிய உளவு நிறுவனமான MI6 உடபடப் பல ‘நாகரீகமடைந்த நாடுகளின்’ உளவு நிறுவனங்கள் செய்துவரும் பிரச்சாரத்துக்கு எதிர்ப்பிரசாரத்தை மேற்கொள்ள யூக்கிரெய்ன் ஆய்வுகூட விவகாரம் அடியெடுத்துக் கொடுத்திருக்கிறது.

நிலைமை இப்படியிருக்க “நாங்கள் தொடர்ச்சியாகச் சொல்லி வருவதுபோல் யூக்கிரெய்ன் தாக்குதலை நியாயப்படுத்துவதற்காக ரஷ்யா புதுப் பதுக் காரணங்களைக் கண்டுபிடித்து வருகிறது. யூக்கிரெய்னில் அமெரிக்கா எந்தவித இரசாயன, நுண்ணுயிர் ஆய்வுகூடங்களையும் வைத்திருக்கவோ அல்லவோ நடத்தவோ இல்லை” எனக் கடந்த வாரம் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் நெட் பிரைஸ் கூறியிருக்கிறார். பேர்ள் ஹார்பர் மீதான யப்பானிய தாக்குதலுக்கு முன்னரிலிருந்து ஈராக், ஆப்கானிஸ்தான் படையெடுப்புக்கள் என இப்படியான உபதேசங்களை அமெரிக்கா தொடர்ச்சியாகச் செய்துவருகிறது. ரஷ்யா, சீனாவில் போலல்லாது ஹொலிவூட், மற்றும் தனியார் ஊடகங்கள் இவ்விடயத்தில் அமெரிக்க அரசின் நிலைப்பாட்டை எடுப்பதைச் சுதந்திரம் என நாம் நினைத்துப் புளகாங்கிதம் அடையத் தேவையில்லை.

அமெரிக்கா எப்போதுமே மக்களின் பின்னால் நிற்கும் என்பதை நான் உண்மையாகவே நம்புபவன். அதற்கு காரணம் என்னவென்பதை அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து வஞ்சிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட மல்கம் எக்ஸின் கதையை அறிந்தாலே போதும். ரஷ்யாவும், சீனாவும் அதையே முன்னால் நின்று மிரட்டும் உத்தரவுகளுடன் செய்கின்றன. இரண்டு வழிகளுமே எனக்கு உவப்பில்லாதவையாக இருப்பினும் எதிரியால் தண்டிக்கப்படுவது உடலுக்கு மட்டுமே வேதனை ஆனால் நண்பனால் தண்டிக்கப்படுவது உடலுக்கும் மனதுக்கும் வேதனை. முள்ளிவாய்க்கால் குண்டுபொழிவின்போது கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு மறுபக்கம் திரும்பிநின்ற அமெரிக்காவை நன்பனாகக் கருத மனம் இடம் தரவில்லை. எல்லோரும் எமக்கு எதிரிகளே.

மார்ச் 8ம் திகதி ரஷ்யாவின் ‘ஏஜண்ட்’ என்ற குற்றச்சாட்டில் அமெரிக்காவில் கைதுசெய்யப்பட்ட அமெரிக்கரான எலெனா பிரான்சன் செய்த குற்றம்? முன்னாள் ஜனாதிபதி வேட்பாளரும் தற்போதைய செனட்டருமான துளசி கப்பார்ட்டின் தேர்தலுக்கு நிதியுதவி செய்தது. தற்போது அமெரிக்காவிலிருக்கும் ரஷ்ய பற்றாளர்கள், ட்றம்பைத் தவிர்த்து, இரண்டு பேர் – ஒன்று செனட்டர் துளசி கப்பார்ட் மற்றது ஃபொக்ஸ் நியூஸ் ரக் கார்ள்சன்.

இத்தனைக்கும் ரஷ்ய தொலைக்காட்சியில் நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது போருக்கு எதிரான, ரஷ்யாவுக்கு எதிரான வாசகங்களைக் கொண்ட பதாகையைப் பிடித்த பெண்ணின் பாதுகாப்பு குறித்து தாம் மிகவும் கவலைப்படுவதாக அமெரிக்க நிர்வாகமும் ஊடகங்களும் கண்ணிர் வடித்திருந்தன. அப்பெண்ணுக்கு அபராதம் விதித்ததன் மூலம் ரஷ்யா அக்கண்ணீரைத் துடைத்துவிட்டிருக்கிறது.

வாழ்க ஜனநாயகம்.