யாழ் வரும் பிரதமருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கச் சென்ற காணாமலாக்கப்பட்டோரின் உறவினரைப் பொலிசார் தடுப்பு

இன்று (21) யாழ் வரும் பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் நீதிகேட்கவென பஸ் ஒன்றில் சென்றுகொண்டிருந்த காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களை மட்டுவில் அம்மன் கோவிலருகில் பொலிசார் வழிமறுத்ததுடன் அவர்களை பஸ்ஸிலிருந்து இறங்கவிடாமல் பலவந்தமாக உள்ளே வைத்துக் கதவப் பூட்ட முயற்சித்துள்ள சம்பவம் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்துக்கு இரண்டுநாள் வருகை தரும் பிரதமர் ராஜபக்ச கலந்துகொள்ளும் நிகழ்வொன்று யாழ். பொருளாதார மையத்தில் இடம்பெறவிருந்தது எனவும் அதற்கு முன்னால் நீதி கேட்கும் போராட்டமொன்றை நடத்துவதற்கென காணாமலாக்கப்பட்டோரின் உறவினர் பஸ் ஒன்றில் யாழ்ப்பாணம் சென்றுகொண்டிருந்தபோதே இச் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

நீதிகேட்டுப் போராடவெனச் சென்றுகொண்டிருந்த இவ்வுறவினரது பஸ்ஸை பெருந்தொகையான பொலிசார் இடைமறித்ததுடன் பஸ்ஸை விட்டு இறங்கித் தமது எதிர்ப்புகளைத் தெரிவிக்க முயன்ற பல தாய்மாரைப் பலவந்தமாகப் பிடித்து பஸ்ஸினுள்ளே தள்ளி ஏற்றுவதற்கு முயன்றிருக்கிறார்கள். இப் போராட்டத்துக்கென பிறிதொரு வாகனத்தில் யாழ் சென்றுகொண்டிருந்த சிவில் சமூகத் தலைவர் வேலன் சுவாமியையும் பொலிசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

2009 இல் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதிலிருந்து வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினரும், சிவில் சமூகத் தலைவர்களும் இறுதிப்போரின்போது இராணுவத்தினரிடம் நேரடியாகக் கையளிக்கப்பட்டவர்கள் மற்றும் பாதுகாப்புப் படையனரால் கைதுசெய்யப்பட்டர்கள் ஆகியோருக்கு என்ன நடைபெற்றது என்பதைக் கண்டுபிடித்து அதற்குக் காரணமான படையினரைத் தண்டிக்கவேண்டுமென்று கேட்டுப் பல அமைதியான் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். ஆனாலும் இன்றுவரை அரசாங்கம் அது தொடர்பாக எவர் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ 100,000 கொடுப்பதாக அறிவித்துள்ளதுடன் குற்றவாளிகளென ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்ட இராணுவ அதிகாரிகளுக்கு உயர் பதவிகளையும் கொடுத்து அவர்களைப் பாதுகாத்து வைத்திருக்கிறது.

(நன்றி: படங்கள், காணொளி தமிழ் கார்டியன்)