NewsSri Lanka

யாழ், மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களில் கடும் மழை – சுமார் 40,000 பேர்வரை பாதிப்பு!


கடந்த இரண்டு வாரங்களாகப் பெய்யும் அடை மழை காரணமாக யாழ், மன்னார், கிளிநொச்சி மாவட்டங்கள் உட்பட இலங்கையின் பல பகுதிகள் வெள்ளத்தாலும் மண்சரிவுகளாலும் பாதிக்கப்பட்டுள்ளன.

யாழ், மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களிலுள்ள பிரதேச சபைகளின் தரவுகளின்படி இதுவரை 11,112 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 37,900 மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் எனவும் இவர்கள் அனைவரும் 8 இடைத்தங்கல் முகாம்களில் வைத்துப் பராமரிக்கப்பட்டு வருவதாகவும் அறியப்படுகிறது.

வங்கக்கடலில், தென்கிழக்குத் திசையில் காணப்படும் தாழ்முக்கம் காரணமாக கடந்த 24 மணித்தியாலத்தில் இப் பிரதேசங்களில் 150 மி.மீ. மழைப்பொழிவு இருந்ததாகவும் இத் தாழமுக்கம் இப்போது தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்துவருகிறது எனவும் காலநிலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மன்னார் மாவட்டத்தில் 1500 குடும்பங்களைச் சேர்ந்த 12,350 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், கிளிநொச்சி மாவட்டத்தில் 196 குடும்பங்களைச் சேர்ந்த 772 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன. கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கனகாம்பிகை மற்றும் வன்னேரி குளங்கள் நிரம்பி வழிகின்றன எனவும் தெரியவந்துள்ளது.

இம் மாவட்டங்களில் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளதால் மூன்று மாவ்ட்டப் பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

கடல் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் வெள்ளம் வடிவது தாமதமாகவே நிகழ்கிறது எனவும் இதனால் நாடு சீர் நிலைக்கு வர சில நாட்களாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் தென்பகுதிகளும் வெள்ளத்தினால் முடக்கப்பட்டுள்ளன எனவும் இதுவரை நாட்டில் மொத்தம் 15 பேர் வெள்ள அனர்த்தத்துக்குப் பலியாகியுல்ளதாகவும் கூறப்படுகிறது.